வ.உ.சி. பதிப்பித்த மணக்குடவர் திருக்குறள் உரை
வ.உ.சி. பதிப்பித்த மணக்குடவர் திருக்குறள் உரை

மோடியின் மறுபிறவி... எந்தெந்த மதங்களில்..? - சுவாரஸ்ய விவாதங்கள்!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த பிரதமர் மோடி, “ என் தாய்க்குப் பிறந்ததாகவே நினைத்துக்கொண்டு இருந்தேன்; ஆனால் எதையோ செய்வதற்காக பரமாத்மாவான கடவுளே என்னை பூமிக்கு  அனுப்பிவைத்திருக்கிறார்.” என்று குறிப்பிட்டிருந்தார். அது எதிர்க்கட்சியினரிடம் கிண்டலையும் கேலியையும் உண்டாக்கும் என்பதையும் அவரே பேட்டியிலும் சுட்டிக்காட்டியிருந்தார். அது ஒரு புறம் இருக்க, அவர் கூறிய மறுபிறவி எனும் கருத்தைப் பற்றி சமயரீதியாக சமூக ஊடகங்களில் இன்னொரு பக்கம் ரொம்பவும் தீவிரமாக விவாதத்தில் இறங்கியிருக்கிறார்கள். 

பொதுவாக, தமிழ்நாட்டுத் தமிழ்ச் சமயவியல் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், ஆசீவகம் என பல வகைகளாகப் பார்க்கப்படுகிறது. இவற்றில் ஆசீவகம் என்பதை இப்போது பின்பற்றுவோர் மிகவும் அரிது அல்லது இல்லையென்றே சொல்லலாம் என்கிற நிலைதான். ஆனால், சமயவியல் ஆய்வுகளில் ஆசீவகம் என்ற நெறியைப் பற்றி பல அறிஞர்களும் நூற்றாண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். 

அதன் தொடர்ச்சியாக, சமூக ஊடகக் காலகட்டமான தற்போதும் தீவிரம் குறையாமல் சமயவியல் தொடர்பான வாதங்கள் நிகழ்ந்துவருகின்றன. முன்னர் பழைய காலங்களில் சமய அறிஞர்கள் மட்டும்தான் இப்படியான விவாதங்களில் ஈடுபடுவார்கள். அந்தந்தச் சமய ஆர்வலர்கள் உட்பட மற்றவர்கள் அதை கவனிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், இப்போதோ ஆர்வலர்களே தங்களுக்குத் தெரிந்ததை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். சமயவியல் அறிஞர்களும் இந்த ஆர்வலர்களும் கலந்த ஒன்றாகவும் பல விவாதங்கள் அமைந்துவிடுவது, ஈடுபாடு உள்ளவர்களை சுவாரசியத்துக்கு உள்ளாக்குவதாக மாறிவிடுகிறது. 

இந்த நிலையில் பிரதமர் மோடி, தன்னை பரமாத்மாவே பூமிக்கு அனுப்பிவைத்ததாக (அதாவது அவருக்கு இது இன்னொரு பிறவி என்பதாக)க் குறிப்பிட்டதால், அதைப்போல மறுபிறவி என்கிற கருத்தாக்கத்தை, வேறு என்னென்ன மதங்களும் சொல்கின்றன என்பதை வலைவாசிகள் அள்ளிவீசுகிறார்கள். 

கணித்தமிழ் வல்லுநரான அமெரிக்காவின் மணிமணிவண்ணன் முகநூலில் இதைப் பற்றிய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், ”மறுபிறவி என்ற கருத்தும், முற்பிறவியில் செய்தவற்றுக்கான பலனை மறுபிறவியில் பட்டுத்தான் தீரவேண்டும் என்ற கருத்தும் (கர்மா, ஊழ், வினை) சமணம், பௌத்தம், ஆசீவகம், வைதீகம் ஆகிய சமயங்களுக்குப் பொதுவானது. மக்களை ஏமாற்றுவதற்காக இந்தக் கருத்துகளை வைதீகம் இட்டுக்கட்டியது என்ற கூற்று உண்மையல்ல. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்தக் காப்பியம் விவரிக்கும் கர்மவினைப்பயன் கிட்டத்தட்ட "கீதாசாரம்" என்று தற்போது பரவும் கருத்தினை ஒத்திருக்கிறது.” என்று குறிப்பிட்டு,

குண்டலகேசியில் உள்ள,

“ மறிப மறியும் மலிர்ப மலிரும்

பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்

அறிவது அறிவார் அழுங்கார் உவவார்

உறுவதும் உறும் என்று உரைப்பது நன்றுள்ளார்.” என்ற பாடலையும் எடுத்துப்போட்டுள்ளார். 

மணிவண்ணனின் இந்தக் கருத்துக்கு உடன்பாடாக, சமயத் தமிழ் அறிஞரும் தமிழியல் பேராசிரியருமான கரு. ஆறுமுகத்தமிழன், “வினையைப் பற்றிய பார்வை ஒருமை, உயிரின் பிறப்புப் பன்மை இதெல்லாம் பல மரபினரும் கருதுவதுதான். எல்லோரும் கொடுக்கல் வாங்கல் செய்ததும் பிற மரபுகளின் தாக்கம் பெற்றதும் எல்லாம் சரிதான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், ”கீதாசாரம் என்று பெருவலமாக வழங்கப்படும் தொடர்கள் கீதைக்குத் தொடர்பில்லாதவை. கீதையினுடையது அல்லாததைக் கீதாசாரம் என்பது முறையில்லை.” என அவர் குறிப்பிட்டிருப்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டியது.

பேராசிரியரின் கருத்துக்குப் பதில் கூறியுள்ள மணிவண்ணன், தமிழ் இணையக் கல்விக்கழகக் கட்டுரையில் இப்படித்தான் குறிப்பிட்டுள்ளதாகவும் ஆனாலும் கீதாவுபதேசத்தின் மூலம் குறித்து தனக்குத் தெரியாது என்று விலகிவிடுகிறார்.

இது ஒரு உள் விவாதமாக உருவாகிறது. ஒருவர், இப்போது பரவலாக அறியப்படும் கீதாச்சாரம் என்பதை மறைந்த சோ இராமசாமிதான் எழுதினார் எனப் பதிவிட்டுள்ளார். 

இன்னொருவரோ பௌத்தத்துக்குப் பிறகுதான் கீதை வருகிறது என்கிறார். 

”பரிகாரம் செய்து விதியை மாற்ற முடியும் என்று சோதிடம் கூறுகின்றனவே..” என ஒருவர் கேட்க, ”பரிகார வணிகம் வேறு சில மதங்களிலும் உண்டு. கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் பரிகாரத்தால் விதியை மாற்ற முடியும் என்று உறுதி கொடுக்க மாட்டார்கள். வினையின் விளைவுகளைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலைத்தான் பரிகாரம் தரும். இடைத்தரகர்களுக்கு வருவாய் தவிர பரிகாரத்தால் பயனொன்றும் இல்லை. என்றாலும் கோயில் உண்டிகளிலும் அர்ச்சனைத் தட்டுகளிலும் பணம் கொட்டுகிறதே! அப்படியென்றால் கொடுப்பவர்களுக்குத் தங்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றன என்ற நிறைவு இருக்கிறது என்றுதானே பொருள்?” என மணிவண்ணனின் கருத்து வாதத்தை இன்னோர் இடத்துக்கு நகர்த்திச் செல்கிறது. 

ஆசீவகத்தின் தோற்றுநரான மற்கலிக் கோசலர், வடநாடு சென்று சமண மதத்தின் தீர்த்தங்கரரான மகாவீரருடன் உரையாடியதாகவும் அப்போது தாவரங்கள் மறுபிறவி எடுப்பதைப் பற்றி மற்கலி பேசி, அதில் மகாவீரர் உடன்படவில்லை என்றும் உரையாடல் நீள்கிறது. 

இது ஒரு பக்கம் இருக்க, மணிவண்ணனின் கருத்தை மீள்பதிவு செய்து, குமரேசன் சி செ என்பவர் உரையாடல் செய்கிறார். அவரின் கருத்துக்கு பதில்சொல்ல வரும் கணேசன் சந்திரசேகரன் என்பவர், “சமண, பௌத்தத்துக்கு முந்தையது ஆசீவகம்; அதில் ஊழ்வினை பற்றிதான் இருக்கிறது. மறுபிறவி பற்றி எதுவும் இல்லை.” என்று மறுத்துப் பேசுகிறார். 

அதற்கு பதிலளிக்கும் பதிவர் குமரேசன்,” ஊழ் என்பதைப் பற்றி திருக்குறளுக்கு உரை எழுதிய மணக்குடவர் சொன்னதைப் போல மறுபிறவி என்பதாகவே வ.உ.சி. குறிப்பிடுகிறார்.” என விளக்கம் தருகிறார். 

மேலோட்டமாக வ.உ.சி. பதிப்பித்திருக்க மாட்டார் என நம்புவோம் என்பதாக அந்த வாதம் தொடர்கிறது. 

எப்படியோ, பிரதமர் மோடி தொடங்கிவைத்த வாதம் தமிழில் சமயவியல் கருத்து விவாதமாக மாறியிருப்பது சமூக ஊடக வாசகர்களுக்கு சுவையானதாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!  

logo
Andhimazhai
www.andhimazhai.com