
வளர்மதி, எழுத்தாளர்
“உங்களிடம் யார் இருக்கிறார்கள்? பதினைந்து வயது நிரம்பாத பள்ளிப் பையன்களும், முகத்தில் மீசை முளைக்காத பொடியன்களும் தானே இருக்கிறார்கள்? பாவம்! யாரை நம்பி இந்த அண்ணாதுரை போட்டி போடப் போகிறாரோ தெரியவில்லை?” என்று எல்லோருமே நம்மைப் பார்த்து நையாண்டி செய்து வந்தார்கள்!
காமராஜர் தனது தூய தெள்ளு தமிழில் – “மொட்டைப் பசங்க கட்சி தேர்தலில் நிற்கப் போகிறதாம்" என்று கிண்டல் செய்து வந்தார்.
1967 ஆம் ஆண்டு தேர்தல் மலராக வெளியான “மாலை மணி” இதழின் ஆசிரியர் பி. எஸ். இளங்கோ-வின் இவ்வரிகள் அச்சமயம் நிலவிய பரவலானதொரு கருத்தோட்டத்தைப் புலப்படுத்துகிறது. காங்கிரசின் செல்வாக்கை வேரோடு அழித்து திராவிடக் கருத்தியலை முன்னிலைப்படுத்தி, தி.மு.க. ஆட்சியைப் பிடித்த தேர்தலின்போது தம்மை “மொட்டைப் பசங்க" என்றும் “பள்ளிப் பையன்கள், மீசை முளைக்காத பொடியன்கள்" என்றும் கேலி செய்தவர்களுக்கு மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரையின் ஆரம்ப வரிகள் இவை.
அரை நூற்றாண்டிற்கு முன்னர், தி.மு.க.வினரை நோக்கி காங்கிரஸ் கட்சி வீசிய “மொட்டைப் பசங்க" என்ற கேலிக்கு ஒப்பாக, இத்தேர்தலின்போது செய்தித் தொலைக்காட்சிகளிலும் சமூக ஊடகங்களிலும் தி.மு.க.விற்கு ஆதரவாகப் பேசியவர்கள் த.வெ.க.விற்கு ஆதரவாகத் திரண்ட இளைஞர்களை நோக்கி, “தற்குறிகள்" என்ற கேலியை சளைக்காமல் முன்வைத்தார்கள். தி.மு.க. தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக இத்தகைய கேலி முன்வைக்கப்படவில்லை என்றபோதிலும், இக்கருத்தை மௌனமாக அங்கீகரிக்கவே செய்தது. அன்றைய இளம் தலைமுறையின் எழுச்சியை அப்போது காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளத் தவறியதைப் போல, இன்றைய இளம் தலைமுறையின் ‘எழுச்சி’யை இப்போது தி.மு.க. புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என்பது வெள்ளிடை மலை.
ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கும் இம்மாற்றம், Gen Z என்று அழைக்கப்படுகிற இப்புதிய தலைமுறையின் ‘எழுச்சி’ யினால் மட்டும் விளைந்த ஒன்றுதானா?
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது நிகழ்ந்துள்ள மாற்றம், 1967 ஆம் ஆண்டு தேர்தலில் நிகழ்ந்த மாற்றத்துடன் பல வகைகளில் ஒப்பிடத்தக்கது என்பது எனது துணிபு. இவ்வொப்பீடு, தற்போதைய மாற்றத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
“மொட்டைப் பசங்க கட்சி” என்ற காமராசரின் கேலி இதன் தொடக்கப் புள்ளி.
சரியாகச் சொல்வதென்றால், இக்கேலியை காமராசர் 1967-ல் அல்ல, 1957 தேர்தலின்போதே முன்வைத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் அமைச்சர்களும் காங்கிரஸ் ஆதரவு இதழ்களும் இக்கேலியை பல வகைகளில் முன்வைத்திருக்கிறார்கள்.
1957 தேர்தல் பிரச்சாரத்தின்போது இத்தகைய கேலியை காங்கிரசில் இரயில்வே துணை அமைச்சராக இருந்த ஓ. வி. அழகேசன் முன்வைத்ததை தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழாக வெளிவந்த “நம் நாடு” குறிப்பிடுகிறது:
“இதுபற்றி அமைச்சர் அழகேசனார் பொன்னேரி பொதுக்கூட்டத்தில் திருவாய் மலர்ந்திருப்பதை, சென்னை தேசிய இதழான ‘நவ இந்தியா’ வெளீயிட்டுள்ளது. அது, இது:
“பள்ளியில் படிக்கும் சிறுவன் நன்றாகப் பேசலாம்-மிகவும் புத்திசாலியாகக்கூட விளங்கலாம். அதற்காக அவனிடம் எந்தத் தந்தைதான் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பார்? அனுபவம் இருந்தால்தானே-தக்க வயது வந்தால்தானே பொறுப்பைத் தர முடியும்? அதுபோலவே இன்று அரசாங்கம் என்ற குடும்பத்தின் தந்தையான ஓட்டர்கள், வயது வராத குழந்தைக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திடம் குடும்பப் பொறுப்பெனும் அரசாங்கப் பொறுப்பை ஒப்படைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.” (31-01-57)
இக்கேலிகளுக்கு தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடுகள் காட்டமான, தர்க்கபூர்வமான, தெளிவான பதிலை உடனுக்குடன் தந்திருக்கின்றன. என்றாலும், தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடுகள், முக்கிய தலைவர்கள் நடத்திய இதழ்களைக் காட்டிலும் இங்கு குறித்திருக்கும் “மாலை மணி" சற்று அலாதியானது. பி. எஸ். இளங்கோவின் கைவண்ணத்தில், அவ்வேடு தற்காலத்தைய podcast-கள் போலவே வெளியாகியுள்ளது. இதழின் பெரும்பகுதியை அண்ணா முதற்கொண்டு தி.மு.க. தலைவர்களின் சொற்பொழிவுகளே ஆக்கிரமித்துள்ளன. அச்சொற்பொழிவுகளை வாசிப்பதற்காகவே திமுக தொண்டர்கள் அவ்விதழை வாங்கியதாகவும், அக்காலத்தில் 50,000 பிரதிகள் விற்பனையானதாகவும் “இதழியல் கலை: அன்றும் இன்றும்" என்ற நூலில் என். வி. கலைமணி குறிப்பிடுகிறார். எஞ்சிய பக்கங்களில், பி. எஸ். இளங்கோவின் தொடர்கதைகளும், அரசியல் விமர்சனங்களும் துணுக்குச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
1967 தேர்தல் மலரில், காங்கிரசாரின் கேலியைக் குறிப்பிட்டுத் தொடங்கும் பி. எஸ். இளங்கோ, அதற்கான பதிலை எழுதுகிறார்:
“தமிழகத்தில் மொத்தம் ஏறத்தாழ இரண்டு கோடியே எட்டு இலட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க இருக்கின்றனர்! இந்த வாக்காளர்களில் ஒரு கோடியே 75 இலட்சம் பேர் நாற்பத்தி இரண்டு வயதிற்கும் குறைந்தவர்கள்!
அதாவது மொத்த வாக்காளர்களில் 42 வயதிற்கும் குறைந்தவர்கள் 89 சத விகிதமாகும்!
1967 தேர்தலில் முதன் முறையாக ஓட்டளிக்கப் போகின்றவர்களின் எண்ணிகை 26 இலட்சம் பேராகும்!
அதாவது மொத்த ஓட்டர்களில் எட்டில் ஒரு பங்கினர் முதன் முறையாக ஓட்டளிக்கப் போகின்றார்கள்!
இன்று முதன் முறையாக ஓட்டளிக்கப் போகிற இந்த 26 இலட்சம் ஓட்டர்களும் யார்? அன்று மீசை முளைக்காமல் இருந்த பொடியன்கள்! இன்று மீசை முளைத்த இளைஞர்கள்! இவர்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டளிப்பார்கள்?
மற்றொரு 8 சத விகிதத்தினர் இரண்டாவது முறையாக ஓட்டளிப்பவர்கள்! சுமார் பத்து சத விகிதத்தினர்தான் மூன்றாவது முறையாக ஓட்டளிப்பவர்கள்!
...
மொத்தத்தில் முப்பது சத விகிதத்தினர் மிக இளமையான வாக்காளர்களாக இருக்கிறார்கள்!
...
அந்த இளைஞர்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறார்கள், எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை! அது காங்கிரஸ்காரர்களுக்கே புரியும்!
இளைஞர்களின் வாக்குகள் போக, காங்கிரஸ் ஆட்சியின்மீது அதிருப்தியுற்றிருக்கும் முதியவர்களும் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று வாதிட்டு, அத்தேர்தலில் தி.மு.க. குறைந்தது 60 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
தேர்தலில் அமோக வெற்றி பெற்ற செய்தியை அண்ணாவே நம்பவில்லை என்ற செய்தி பரவலாக பேசப்படும் ஒன்று. தோல்வி அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத காங்கிரஸ் ஆதரவு ஏடான “எழுத்தாளன்"கூட பின்வருமாறே எழுதியது:
“ஜனநாயக சோஷியலிசம் என்னும் பெரும் லட்சியத்தின் ஆதார புருடராக விளங்கும் காமராஜ் அவர்களை அரசியல் சதுரங்கத்தில் வீழ்த்திவிட பெருந்தலைகளும், பெரிய வல்லரசுகளும் சின்னஞ்சிறு மாணவர்களை சதுரங்கக் காய்களாக வைத்து அரசியல் சூதாட்டம் ஆடிப்பார்த்தது.” (15-03-1967) (அழுத்தம் இக்கட்டுரை ஆசிரியரது)
ஆனால், மேலே விவரித்துள்ளபடி, தி.மு.க.வின் தீவிரத் தொண்டரும் பத்திரிகையாளருமான பி. எஸ். இளங்கோவின் தெளிவான கணிப்பு நிரூபமானது. திமுக 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. “சின்னஞ்சிறு மாணவர்களையும், மீசை முளைக்காத பொடியன்களையும்" கொண்ட “மொட்டைப் பசங்க" கட்சியான தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
இந்த வரலாற்றை மறந்துபோன தி.மு.க.வின் எஞ்சியிருக்கும் முந்தைய தலைமுறையினரும், இந்த வரலாற்றை அறிந்திராத தி.மு.க.வின் இன்றைய தலைமுறையினரும், காங்கிரஸ் அக்காலத்தில் தம்மை நோக்கி வீசியதைப் போன்ற கேலியில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பதை துன்பியல் நாடகமென்பதா, கேலிக்கூத்தென்பதா?!
இரண்டாவதாக, 1967 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காங்கிரஸ் கட்சியின் கரடுதட்டிப்போன உள்கட்டமைப்பிற்கும் தற்காலத்தில் தி.மு.க.வில் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.விலும் பிற கட்சிகளிலும் கூட நிலையானதாக உருவாகியிருக்கும் உள்கட்டமைப்பிற்கும் இடையிலான ஒற்றுமை.
மேற்குறித்த தேர்தல் மலரில் பி. எஸ். இளங்கோ ஒரே பக்கத்தில் காங்கிரஸ் கட்சி எத்தகைய நபர்களால் ஆட்டுவிக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார். சற்றே நீளமாக இருப்பினும், சூழலைப் புரிந்துகொள்ள அவசியமானது என்பதால் அதைப் பார்த்துவிடுவது நல்லது.
“காங்கிரஸ் கட்சியும், குறிப்பாக காமராஜரும் ஏழைகளுக்காகப் பாடுபட்டு வருவதாகப் பறைசாற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்!
...
ஆனால் அவர்கள் தேர்தலில் நிறுத்தி வைப்பதோ ராஜாக்களையும், ஆலை அதிபர்களையும், வணிகச் சீமான்களையும், மிட்டாமிராசுகளையும்தான்!
சிவகெங்கை ராஜாவையும், இராமநாதபுரம் ராஜாவையும் தேர்தலில் நிறுத்திவைத்திருக்கிறார்கள்.
செட்டிநாட்டு ராஜாவின் மைத்துனர் சி.வி.சி.டி. வெங்கடாசல செட்டியாரை காரைக்குடியிலே போட்டியிட வைத்திருக்கிறார்கள்!
டி.வி.எஸ். பஸ் அதிபரின் வாரிசு திருமதி சௌந்திரம் இராமச்சந்திரன் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்!
அருப்புக்கோட்டைத் தொகுதியிலே கடம்பவனம் என்ற ஜமீந்தார் போட்டியிடுகிறார்!
கோவையிலே பஸ் முதலாளி மகாலிங்கம் தேர்தலிலே நிற்கிறார்!
பெருந்துறையிலே பழையகோட்டை பட்டக்காரர்!
சென்னை துறைமுகத் தொகுதியிலே வணிக வேந்தர் ஹாஜா ஷெரிப்!
காங்கிரஸ் வைரியாக இருந்து காலஞ்சென்ற பண்டித நேருவுக்கு தடை உத்திரவு போட்ட புதுக்கோட்டை ராஜாவின் தம்பி புதுக்கோட்டையிலே நிற்கிறார்!
புதுக் காங்கிரஸ் சீமான் டாக்டர் கிருஷ்ணசாமி திருத்தணியிலே நிற்கிறார்!
அத்திப் பழத்தைப் புட்டால் அத்தனையும் சொத்தை என்பதைப் போல காங்கிரஸ் பட்டியலைப் புரட்டினால் அத்தனைபேரும் பணக்காரர்கள்தான்! சோஷலிசத்தின் பகைவர்கள்தான்!”
ஜமீன்தார்கள், ஆலை அதிபர்கள், பெரும் பணக்காரர்கள், ஆகியோரையே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவுத் தளமாகக் கொண்டிருக்கிறது என்பதே இங்கு குற்றச்சாட்டு. 1967 வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆதரவுத் தளத்தினர் இவர்கள்தான் என்பது பொதுவில் நிலவும் கருத்தோட்டமும் கூட. என்றாலும், இக்கருத்தை உறுதி செய்வதற்கான தரவுகளையும் பார்த்துவிடுவது நல்லது.
1957 ஆம் ஆண்டு சட்டசபை தொடங்கி, “சென்னை சட்டசபை: யார் எவர்" என்ற பதிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடத் தொடங்கியது. சட்டசபை உறுப்பினர்களின் விபரங்களை அவர்களே தந்த தகவல்களின் அடிப்படையில் சுருக்கமான குறிப்புகளாக இப்பதிப்பு தொகுத்துத் தந்தது. அவ்வரிசையில் 1962 ஆம் ஆண்டு “யார் எவர்" பதிப்பில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நமக்குக் கிட்டும் விபரங்கள்:
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 139 பேர். இவர்களில், தனித்தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் 25 உறுப்பினர்கள். மிக எளிமையான வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
தனியார் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநராக, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களாக குறித்துள்ளவர்கள் மொத்தம் 27 பேர். இவர்களுள் நிலச்சுவான்தார்கள், மிராசுதார்கள், வணிகர்களும் அடங்குவர்.
நிலச்சுவான்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளவர்கள் 22 பேர். இவர்களுள் நால்வர் தம்மை மிராசுதார் எனவும் ஒருவர் ஜமீன்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வணிகர்கள் எனக் குறித்துள்ளவர்கள் 19 பேர். இவர்களில் பலர் “பஸ் ஓனர்கள்".
ஆலை முதலாளிகள் 10 பேர்.
வழக்குரைஞர்கள் 13 பேர். இவர்களில் சிலர் கோயில் அறங்காவலர் குழுவில் இடம்பெறுவோராகவும் உள்ளனர்.
பேராசிரியர் என்ற நிலையில் கல்வியாளர்களாக இருந்தோர் 4 பேர்.
விவசாயிகள் என்று குறித்துள்ளவர்கள் 7 பேர்.
காங்கிரஸ் கட்சி ஊழியர்கள் என்று குறித்துள்ளவர்கள் 2 பேர்.
இதரர் 10 பேர். இதில் ஒருவர் ஆங்கிலோ – இந்திய நியமன உறுப்பினர். பள்ளி ஆசிரியர், ஆலைத் தொழிலாளி, கார்த்திகேயன் மோட்டார் சர்வீஸ் என்ற தனியார் போக்குவரத்து பேருந்து நிறுவனத்தின் மேலாளர், முனிசிபாலிடி கவுன்சிலர் ஆகியோர் இதில் அடங்குவர்.
இவர்களில் 24 பேர் 1962-ல் இரண்டாம் முறையாக சட்டமன்றத்தில் இடம் பெற்றவர்கள். 21 பேர் இரு முறைகளுக்கு மேல் உறுப்பினர்கள். இவர்களில் சிலர் 1952 தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுவதற்கு முன்னரே, நிலச்சுவான்தார்களுக்கான தனித் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
தனிப்பட்ட வாழ்வில் எளிமை, ஊழல் கறைபடியாத உத்தமர், ஏழைகளின் நலன்களுக்காக பாடுபட்டவர் என்று எவ்வளவுதான் பெரும் தலைவர் காமராஜரைப் பாராட்டினாலும், அது நூறு சதவீதம் உண்மையாகவே இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் பகுதியளவிலும் மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் மேற்குறித்த பிரிவினராகவே இருந்தார்கள்.
ஒரு நிறுவனம் என்ற அளவில் காங்கிரஸ் கட்சி இவ்வாறு கரடுதட்டிப் போயிருந்தது. சமூகத்தில் இருந்த பரந்துபட்ட பிற பிரிவினருக்கு இடம் அளிப்பதற்கான வாய்ப்பை முற்ற முழுதாகத் தடுத்து வைத்திருந்தது.
1967 தேர்தலில் தி.மு.க. பெற்ற மகத்தான வெற்றிக்கு 1964-ல் நடைபெற்ற மாணவர் போராட்டம், தேர்தலுக்குமுன் நிலவிய கடும் அரிசிப் பஞ்சம் ஆகிய இரு காரணங்கள் பொதுவாகக் கூறப்படுவதுண்டு. அவற்றோடு, ஒரு நிறுவனம் என்ற அளவில் காங்கிரஸ் கட்சியின் இந்த இறுகிய சமூக அடித்தளமும் மிக முக்கிய காரணியாக பங்காற்றியது எனலாம்.
இந்திய அரசியல் விடுதலையின்போது நிலவிய தேச பக்தி, ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் தேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றுதல், அதன் வழி மக்களின் வாழ்க்கையை வளமாக்குதல் போன்ற இலட்சியக் கனவுகளை முன்வைத்து அரசியல் பயணத்தைத் துவங்கிய காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியில் அக்கனவுகளும் வேட்கைகளும் மெய்ப்படவில்லை. கனவுகள் பொய்த்துப்போனதோடு நிற்கவில்லை. வேட்கைகளும் வற்றிப்போயின. காங்கிரஸ் என்ற கட்சி நிறுவனமே அக்கனவுகளையும் வேட்கைகளையும் பொசுக்கும் கரடுதட்டிப்போன எந்திரமாக மாறிப்போனது.
இக்கரடுதட்டிப்போன எந்திரத்திற்கு எதிராக, தமிழ்ப் பற்று, இந்தி எதிர்ப்பு, ஜமீன்தார் ஒழிப்பு, நிலச்சீர்திருத்தம் போன்ற புதிய இலட்சியக் கனவுகளையும் வேட்கைகளையும் விதைத்து, 15 ஆண்டுகாலம் தீவிர பிரச்சாரம் செய்து வந்த தி.மு.க., இளம் தலைமுறை இளைஞர்களைத் தன் பால் ஈர்த்து ஆட்சியைக் கைப்பற்றியது.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் கழித்து, கட்சி நிறுவனம் என்ற அளவில் தி.மு.க.வின் நிலை என்ன? அரை நூற்றாண்டிற்கு முந்தைய காங்கிரஸ் கட்சியின் நிலைதான் இன்றைய தி.மு.க.வின் நிலை. தி.மு.க.வின் நிலை மட்டுமல்ல, பிற கட்சிகளின் நிலையும்கூட. ஒரு மிகப் பெரிய வித்தியாசத்துடன்.
அரை நூற்றாண்டிற்கு முந்தைய காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், தமது சமூக உயர்நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான, நீட்டித்துக்கொள்வதற்கான வழியாக, புதிதாக உருவான தேர்தல் வழிப்பட்ட அரசியல் அதிகார அமைப்பையும், அதன் இயங்குதளமான கட்சியையும் கைக்கொண்டார்கள். அவர்களுக்கு, அவர்தம் சமூக உயர்நிலை முதன்மையானது. (இதன் நீட்சியாகவே தொண்டர்களற்ற, ‘தலைவர்கள்’ நிரம்பிய கட்சியாக காங்கிரஸ் இன்றும் திகழ்ந்துவருகிறது) ஒரு நிறுவனம் என்ற அளவில், கட்சி அமைப்பு அவர்தம் சமூக உயர்நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு புதிய வழிமுறை மட்டுமே. அரசியல் அவர்களுக்கு முழுநேரத் தொழில் அல்ல.
தி.மு.க. உருவான காலத்திலிருந்து, அக்கட்சியின் பிரமுகர்களுக்கு அரசியல் என்பது ஒரு முழுநேரத் தொழில். கட்சி என்பது அம்முழுநேரத் தொழிலை மேற்கொள்வதற்கான ஒரு இயங்குதளம்.
வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர், இளைஞர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, நட்சத்திரப் பேச்சாளர்கள், பல அணிகள், துறைகள், பொதுக்குழு, செயற்குழு, போன்ற நன்கு வரையறுக்கப்பட்ட அதிகாரப் படிநிலை வரிசை கொண்ட கட்சியாக ஆரம்பகாலம்தொட்டே தி.மு.க. திகழ்ந்து வருகிறது. தி.மு.க.வைத் தொடர்ந்து உருவான பிற கட்சிகளிலும் இவ்வொழுங்கே நியதியாகியிருக்கிறது. கட்சியின் அதிகாரப் படிநிலை வரிசையில் வகிக்கும் நிலைக்கேற்ப, கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், மந்திரிசபையில் பங்கேற்பு, வாரியத் தலைவர் பதவி போன்ற கவுரவ பதவிகள் அரசு அதிகாரத்தில் கட்சியினருக்கு வழங்கப்படுகின்றன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு உருவான, அரசியலை முழுநேரத் தொழிலாகக் கொண்ட இக்கட்சிப் பிரமுகர்கள், தமது அரசியல் செல்வாக்கை, அவரவர் நிலைக்கேற்ப பெரும் பொருள் ஈட்டுவதற்கான மூலதனமாக மாற்றிக்கொண்டார்கள் என்பது நிதர்சனம். ஊழல் முறைகேடுகள், நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியவற்றுக்கு அப்பால், பெரும் தொழில்களில் முதலீடு செய்து பெருமளவில் பொருளீட்டும் புதிய பணக்காரக் குழுவினராக கட்சிப் பிரமுகர்கள் உருவானார்கள்.
தி.மு.க.விலிருந்து பிரிந்து சென்ற அதிமுக, எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்னான அதிமுக, 80-களின் இறுதிகளில் மிகப் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளின் அணித்திரட்சியாக உருவான கட்சிகள் ஆகிய அனைத்திலும், அக்கட்சிகளின் பலத்திற்கேற்ப, அரசியல் செல்வாக்கை பெரும் பொருள் ஈட்டுவதற்கான வழியாக கைக்கொள்ளும் கட்சிப் பிரமுகர்களின் ஆதிக்கம் நிலைபெற்றுள்ளது.
சாதி, வர்க்கம், மதம், பாலினம் ஆகிய பிரிவுகளை ஊடறுத்து, கட்சிப் பிரமுகர்கள், அரசியல் செல்வாக்கின் மூலம் பெரும் பொருள் ஈட்டுபவர்களாகவும், அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு எனச் சகல தளங்களிலும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துபவர்களாகவும் கடந்த அரை நூற்றாண்டில் உருவெடுத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பரம்பரை மிராசுதார்கள், ஜமீன்தார்கள், நிலச்சுவான்தார்களின் இடத்தை இவர்கள் இட்டு நிரப்பியிருக்கிறார்கள். (தமது பரம்பரை செல்வாக்கிற்கும் ஆதிக்கத்திற்கும் முடிவுகட்டியது என்ற காரணத்திற்காகவே சில பிரிவினர் தி.மு.க.வின் மீது தீராத பகைமையைக் காட்டிவருவது இதிலிருந்து புலப்படும்.)
1967 ஆம் ஆண்டின் இளைய தலைமுறையினர், தி.மு.க.வின் 15 ஆண்டு கால தீவிரப் பிரச்சாரத்தால் விதைக்கப்பட்ட இலட்சியக் கனவுகளாலும் கொள்கைகளாலும் எழுச்சி பெற்ற புதிய தலைமுறையினராக இருந்தார்கள். இன்றைய இளம் தலைமுறையினருக்கு, அவர்களுடைய வாழ்வனுபவத்தோடு இணைத்து நோக்கக்கூடிய, புதிய இலட்சியக் கனவுகளை விதைக்கக்கூடிய, ‘அரசியல் எழுச்சி’ ஊட்டக்கூடிய, எந்தச் சக்தியும் எந்தக் கட்சியும் இல்லை.
கொள்கை, கோட்பாடு, இலட்சியம், மக்களின் நல்வாழ்வு பற்றி பேசும் கட்சிகள் அனைத்தும், அவற்றின் பிரமுகர்கள் அனைவரும், நடைமுறையில் அவற்றுக்கு எதிராக இருப்பதையும், அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாகவும், பெரும் வணிக நலன்களோடு நெருக்கமான தொடர்புடையவர்களாகவும், அவர்களே பெருந்தொழில் முனைவோர்களாகவும் இருப்பதை அரசியல் பயிற்சியோ, செயல்பாடோ, கொள்கைகளோ கோட்பாடுகளோ அற்ற இன்றைய இளம் தலைமுறையினர் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். தமது நீண்டகால அனுபவத்தின் ஊடாக, முதிய தலைமுறையினரும் இதை உணர்ந்தே இருக்கிறார்கள்.
இக்கரடுதட்டிப்போன சூழலுக்கெதிரான பரந்துபட்ட வெறுப்புணர்வுதான் த.வெ.க.வின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னால் மிகையில்லை.
காலத்திற்கேற்ற புதிய கனவுகளையோ, இலட்சியங்களையோ, கொள்கைகளையோ த.வெ.க. முன்வைக்கவில்லை. அக்கட்சி அறிவித்த கொள்கைகளுக்கும் பிற கட்சிகளின் கொள்கைகளுக்கும் பெருத்த வித்தியாசங்களும் இல்லை. தி.மு.க., பிற கட்சிகளைப் போன்று ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு கொண்ட கட்சியாகவும் த.வெ.க. இருக்கவில்லை.
ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு கொண்ட கட்சியாகக்கூட த.வெ.க. இருக்கவில்லை என்பது அதன் மிகப் பெரிய பலவீனமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்ற புதிய கூட்டணி அணுகுமுறையை வைத்தபோதும் தேர்தல் களத்தில் நின்ற அனைத்துக் கட்சிகள், கூட்டணிகளாலும் தனித்துவிடப்பட்ட கட்சியாக த.வெ.க. இருந்ததும் அதன் மற்றொரு பலவீனமாக கருதப்பட்டது. அரசியல் களத்திற்கு த.வெ.க.வின் தலைவர் முற்றிலும் புதியவர், அரசியல் அனுபவம் துளியும் அற்றவர் என்பதும் பெரும் பலவீனமாகக் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனால், அரசியல் நோக்கர்கள் அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்ட இம்மூன்று பலவீனங்களே த.வெ.க.வின் வெற்றிக்கு வித்திட்ட பலமான காரணிகளாக இருந்தன என்பது அண்மைக்கால அரசியலின் மாபெரும் முரண்நகை.
இம்மூன்று அம்சங்களுமே, அரசியல் இயங்குதளம் என்ற அளவில் கரடுதட்டிப் போயிருக்கும் பிற கட்சிகளிலிருந்தும் அவற்றின் வழமையான அணுகுமுறைகளிலிருந்தும் த.வெ.க.வை வித்தியாசப்படுத்திக் காட்டியவை. நிறுவனம் என்ற அளவில், கரடுதட்டிப் போயிருக்கும் கட்சிகளால் அரசியல் புலத்திற்குள் நுழையும் வாய்ப்பு குன்றியிருந்த, வலுவான அரசியல் பின்புலமோ பண பலமோ இல்லாதிருந்த இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் இலகுவான தன்மை கொண்டிருந்தது. தமிழ்நாட்டு அரசியல் களத்திற்கு முற்றிலும் புதிதான “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என்ற அணுகுமுறையை முன்வைத்து, தனது இலகுவான தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டியது. அதன் தலைவர், அரசியல் களத்திற்குப் புறத்தே இருந்துவருபவர் எனும் வகையில், வழமையான அரசியல் பிரமுகர்களிலிருந்து மாறுபட்டு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடியவர் என்ற எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கியது.
கடந்த 20 – 30 ஆண்டுகளாக பழகிவந்த அரசியல் அணுகுமுறைகள், நடைமுறைகளே தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டப் போதுமானவை என்ற நம்பிக்கையில் ஊறியிருக்கும் கட்சியினருக்கு, இப்புதிய அம்சங்களின் பலம் பலவீனமாகத் தென்பட்டதில் வியப்பில்லை. கரடுதட்டிப்போன நிறுவனங்களாக மாறியிருக்கும் கட்சிகளின்பால் உருவாகியிருக்கும் பரவலான அதிருப்தியின் காரணமாகவே த.வெ.க.வின் “பலவீனங்கள்” பலமான அம்சங்களாகின என்பது புலப்படாமல் போனதும் வியப்பில்லை.
செயலிலும் சிந்தனையிலும் கரடுதட்டிப் போயிருக்கும் வழமையான கட்சி என்ற நிறுவனத்தின்பால் மட்டும் பரந்துபட்ட மக்களின் அதிருப்தியுணர்வு நின்றுவிடவில்லை. அலைக்கழிக்கும் அரசு நிர்வாக இயந்திரம், நீதித்துறை, காவல்துறை, ஊடகம் ஆகிய புலங்களின்மீதும் பரந்துபட்ட மக்கள் பிரிவினரிடையே அதிருப்தியும் நம்பிக்கையின்மையும் நிலவுவது வெளிப்படை.
இவற்றில், நிறுவனம் எனும் அளவில் ஊடகங்களின்பாலான அதிருப்தியும் புலப்பெயர்வும் குறிப்பிடத்தக்கது. ஊடகங்களின் பக்கச்சார்பு, பிரச்சாரம், பரபரப்பு ஆகிய அம்சங்களின் தோல்வியையும் தாண்டி, அவற்றை நுகரும் சாதனங்களே அடிப்படையான மாற்றத்திற்கு ஆளாகியிருக்கின்றன. அச்சு ஊடகங்கள் காகிதங்களில் படபடப்பது குறைந்து, இணையத்திற்கும் ஸ்மார்ட் ஃபோன் செயலிகளுக்கும் தாவி, கண்சிமிட்டத் தொடங்கி கணகாலமாயிற்று.
தொலைக்காட்சி ஊடகங்களை நுகர்வதற்கென உருவான தொலைக்காட்சிப் பெட்டிகள் அவற்றின் தன்மையிலேயே மாற்றம் கண்டிருக்கின்றன. ஸ்மார்ட் டி.வி.களின் வருகை, செயற்கைக்கோள்களைச் சார்ந்து இயங்கும் தொலைக்காட்சி ஊடகங்களை நுகர்வதிலிருந்து, கேபிள்களைச் சார்ந்து இயங்கும் இணைய ஊடகங்களை நுகர்வதை நோக்கி நகர்த்தியிருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன்களில் நுகரும் இணையவழிச் செயலியான “யூடியூப்”, ஸ்மார்ட் டிவி-க்களை ஆட்கொண்டு ஒரு தசாப்தத்திற்கு மேலாகிறது.
கேளிக்கை/பொழுதுபோக்கு நிறுவனம் என்ற அளவில், திரைப்படத் துறையிலும் இரண்டு முக்கிய மாற்றங்கள் சத்தமின்றி நிகழ்ந்திருக்கின்றன. ஓடாத திரைப்படங்களையும் ஓடவைத்து வாழவைத்துக்கொண்டிருந்த நகைச்சுவை டிராக்குகளும் பாடல்களும் அரிதிலும் அரிதாகிவிட்டன. நம்மையறியாது முணுமுணுக்க வைக்கும் திரைப்பாடல் ஒன்று வெளியாகி எத்தனை ஆண்டுகளிருக்கும்? நகைச்சுவைக் காட்சிகளுக்காக வெற்றி பெற்ற திரைப்படங்கள் வெளியாகி எத்தனை ஆண்டுகளாகிவிட்டன?
திரைப்படங்களில் நிகழ்ந்திருக்கும் மற்றுமொரு முக்கிய மாற்றம், காட்சிகளின் நீளம். 10 நொடிகளுக்கு ஒரு “வெட்டு” என்ற வழமை மாறி, 3 நொடிகளுக்கொரு “வெட்டு” இயல்பாகியிருக்கிறது. தமிழ் திரைப்பட உலகில் இரு தசாப்தங்களுக்கு முன்னரே பாடல் காட்சிகளில் தொடங்கிய இம்மாற்றம், அண்மைக் காலத் திரைப்படங்களில் முழுமையாக வியாபித்திருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன்களில் விழியசைத்துப் பழகிய பார்வையாளர்களுக்கு இவ்வேகம் இயல்பாகிப் போனதில் வியப்பில்லை.
நகைச்சுவைத் துணுக்குகளும் இசை நுகர்வும் இணைய ஊடகங்கள் வசமாகி ஒரு தசாப்தமாகிவிட்டது. இணையவழிச் சாதனமான ஸ்மார்ட் ஃபோன்கள் மூலம் பழைய திரைப்படங்களின் நகைச்சுவைத் துணுக்குகளையும் பாடல்களையும் நுகர்வது என்ற அளவோடு இது நின்றுவிடவில்லை.
“மீம்ஸ்” என்ற புதிய அவதாரத்தை நகைச்சுவை எடுத்திருக்கிறது. “ரீமிக்ஸ்” என்ற அவதாரத்தில் இசை மறுசுழற்சியில் கிளர்ச்சியை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கிறது. திரைத்துறையில் உருவானதை நுகர்வோர் என்ற நிலையிலிருந்து, அவற்றை நிகழ்த்துவோராக எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். “டிக்டாக்” செயலி தொடங்கிவைத்த இம்மகாத்மியம், “இன்ஸ்டாகிராம்” ரீல்ஸ்களாகவும் “யூடியூப்” ஷார்ட்ஸ்களாகவும் சர்வவியாபகமாக ஆகியிருக்கின்றன.
நிறுவனம் எனும் அளவில், பொழுதுபோக்கு வெளிகளும் மாறிவிட்டிருக்கின்றன. திரையரங்குகள் திருமண அரங்குகளாக உருமாறி இரு தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. இளைஞர்கள், பெரியவர்களின் பிரதான பொழுதுபோக்கு வெளியாக “ஷாப்பிங் மால்கள்” மிளிரத் தொடங்கி ஒரு தசாப்தத்திற்கு மேலாகிவிட்டது. வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ குடும்பத்தாரோடு செல்லும் சுற்றுலாத்தலப் பயணங்களைக் காட்டிலும், வார இறுதிகளில் இளைஞர் குழுக்கள் கூடிக் கும்மாளமிடும் ஒதுக்குப்புறமான சிறு சுற்றுலா மையங்கள் பெருகியிருக்கின்றன.
40 வயதைக் கடந்தவர்களுக்கு இவையனைத்தும் மாற்றங்கள். Gen Z என்று அழைக்கப்பெறும் இளைய தலைமுறைக்கு அன்றாட வாழ்வனுபவம். ஸ்மார்ட் ஃபோன்களில் நொடிப் பொழுதுகளில் நகரும் விரல் அசைவுகளும் விழி அலைவுகளும் இத்தலைமுறையினர் உழலும் கால அலகு – அவர்களது வேகம். எப்பொருளையும் மறுசுழற்சிக்கு ஆட்படுத்தி புதியன படைக்கும் ஆற்றல் அவர்களது தனித்திறன். இமைகொட்டா விழிப்பும், சாக்காடு போல் உறக்கமும் அவர்களது பொழுதுகள். சோம்பல் உற்சாக பானம். நிகழ்த்துதல் ஆகாரம். கேலியும் கிண்டலும் அவர்களது ஆரவாரம்.
இத்தகைய தலைமுறைக்கு அரசியல் அறிவு இல்லை, கொள்கை இல்லை, கோட்பாட்டுத் தெளிவு இல்லை எனும் குற்றச்சாட்டுகள் இலக்கறியாமல் எய்யப்படும் அம்புகள். அவர்கள் கைவசமிருக்கும் ஸ்மார்ட் ஃபோன்கள், தேய்த்து கேட்டதும் கொடுக்கும் அண்ட சராசரங்களையும் தம்முள்ளே அடக்கியிருக்கும் பூதங்களைக் கொண்ட அற்புத விளக்குகள். மேய்வோருக்கு முடியைக் காட்டும், அகழ்வோருக்கு அடியைக் காட்டும் வல்லமை கொண்ட விளக்குகள்.
2017 தைப்புரட்சியின்போது இத்தலைமுறை பெரும்திரளாகக் கூடி அவ்விளக்குகளை ஒளிரவிட்டு தமது வருகையைப் பறைசாற்றிய அற்புதத் தருணத்தில், அரை நூற்றாண்டு அனுபவம் எனும் துருப்பிடித்த சங்கிலியால் கட்டுண்டிருந்த கட்சிகள் தம்மைப் பீடித்திருந்த தளைகளை உணரத் தலைப்படவில்லை. தோல்வியைத் தழுவியிருக்கும் இத்தருணத்திலும் இல்லை. தாம் அரும்பாடுபட்டுக் கட்டியெழுப்பிய கட்சி என்ற நிறுவனம் முக்காலமும் முறியாத வல்லமை படைத்த காலச்சக்கரம் என்ற அறியாமையுள் அமிழ்ந்திருக்கிறார்கள். ஆனால், அரசியல் வரலாறு காட்டும் சித்திரம் வேறு.
கட்சிகள் அதிகார அமைப்பின் நலனுக்கும் தேச நலனுக்கும் முற்றிலும் எதிரானவை என்ற கருத்தே முதலில் தோன்றியது. பின்னர், ஆட்சியின் நலனுக்கு நன்மை பயக்குமென்றால் கட்சிகளின் இருப்பைத் தற்காலிகமாக சகித்துக்கொள்ளலாம் என்ற கருத்து மேலெழுந்தது. அதன் பிறகே, ஆட்சி அமைப்பு சிறப்பாக இயங்குவதற்கு கட்சிகள் அவசியம் என்ற கருத்து உருவானது.
கட்சிகளின் அவசியத்தை நியாயப்படுத்திய கருத்து உருவாகி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகே நவீன காலக் கட்சிகள் தோன்ற ஆரம்பித்தன. அவையும், அரசுக்கு வரி செலுத்துவோருக்கு மட்டும் வாக்குரிமையை அளித்து, அவர்களை மட்டுமே குடிமக்களாகக் கருதிய குறுகிய பரப்பிற்குள்ளாகவே இயங்கி வந்தன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை நியதியான பிறகே இன்றைக்கு நாம் காணும் வெகுமக்களைத் திரட்டும் கட்சிகள் உருவாயின. மூன்று நூற்றாண்டு ஐரோப்பிய வரலாறு இச்சித்திரத்தையே தருகிறது.
தமிழ்நாட்டில் நீதிக்கட்சியின் தோற்றத்தோடு நவீன வகையான அரசியல் கட்சி உருவானது. ஆங்கிலேய அரசிற்கு மனு போட்டு “சுதந்திரப் போராட்டம்” நடத்திக் கொண்டிருந்த இயக்கமாக இருந்த காங்கிரஸ், நீதிக்கட்சிக்கு எதிர்முகம் காட்டவே அரசியல் கட்சியாக உருமாறியது. அரசியல் விடுதலையைத் தொடர்ந்து, வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கிட்டிய பிறகும் மிராசுதார்கள், ஜமீன்தார்கள், பெரும் பணக்காரர்களின் கட்சியாக இறுக்கமடைந்தது.
அன்றைய இளம் தலைமுறையினருக்கு இலட்சிய வேட்கையூட்டி எழுச்சி பெற்ற தி.மு.க., காங்கிரஸ் கட்சி உருவாக்கியிருந்த இறுக்கமான நிலையிலிருந்து அரசியல் களத்தை விடுவித்தது. ஆனால், வெகுவிரைவிலேயே அரசியலை முழுநேரத் தொழிலாகக் கொண்ட பிரமுகர்களின் ஆதிக்கத்திற்கும் நலன்களுக்கும் உகந்ததாக அரசியல் களத்தைச் கீழ்ப்படுத்தும் பாதையில் வீழ்ந்து புதியதொரு இறுக்கத்தை உருவாக்கியது. தி.மு.க.வின் அடிச்சுவட்டில் உருவான கட்சிகளும் இப்பாதையிலேயே பயணித்தன. அவர்கள் வகுத்த பாதைக்கு மாற்றுகள் இல்லை என்ற மயக்கத்தில் திளைத்திருந்தன.
தாம் வகுத்த பாதைக்கு மாற்று என்ற பேச்சே மதவாதமாகவும் எதேச்சதிகாரமாகவும் பாசிசமாகவும் மட்டுமே இருக்கமுடியும் என்ற கருத்தை அரணாக உருவாக்கிக்கொண்டன. ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் அரசின் அனைத்து அங்கங்களின் மீதான அவநம்பிக்கையை விதைத்து எதேச்சதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதைக் காண மறுத்து, எதேச்சதிகாரத்துடன் ஒப்பிடுகையில் ஊழல் பரவாயில்லை என்ற கருத்தோட்டத்தைப் பரப்பும் ஒப்பிலாப் பணியையும் சில தரப்பினர் முன்னெடுத்தனர்.
இன்று, மாபெரும் மாற்றங்கள் சமூகத்தின் அனைத்துப் பரப்பிலும் நிகழ்ந்திருக்கும் இவ்வேளையில், அம்மாற்றங்களை அன்றாட வாழ்க்கை அனுபவமாக உள்வாங்கியிருக்கும் இளம் தலைமுறையினர் அக்கற்பனைக் கருத்தோட்டங்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவு காட்டுகின்றது.
குறிப்பாக, ஒரு புதிய மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்தால் கரடுதட்டிப் போயிருக்கும் கட்சிகளின் மீது நீண்டகாலமாக தேக்கிவைத்திருந்த அதிருப்தியை இத்தேர்தலில் பரந்துபட்ட மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அண்மையில், இணையத்தில் உருவான “கரப்பான்பூச்சி கட்சி”யும் இந்த அதிருப்தியின் வெளிப்பாடு என்றே கொள்ளமுடியும். புதிய மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும் இறுக்கமான அதிகாரப் படிநிலைவரிசை கொண்ட கட்சி அமைப்பிற்கு மாற்றாக, இலகுவான கட்டமைப்பு கொண்ட, அல்லது எவ்விதமான கட்டமைப்பும் இல்லாத புதிய வகைப்பட்ட கட்சிகள் தோற்றம் பெற்றுள்ளதை த.வெ.க.வின் வெற்றியும், “கரப்பான்பூச்சி கட்சி"யும் பிரகடணம் செய்கின்றன. நிலவும் கட்சிகள் அனைத்திற்கு மாற்றாக எழத்தொடங்கியிருக்கும் இக்கட்சிகள், “கட்சிக்கு எதிரான கட்சி" (anti-party party) என்ற புதிய போக்கை அரசியல் புலத்தில் தொடங்கி வைத்திருப்பதாகவும் கொள்ளலாம்.
இம்மாற்றங்களை மனங்கொள்ளாமல், தமது கருத்தோட்டங்களுக்குச் செவிசாய்க்காத இத்தலைமுறையினர் அரசியல் அறிவோ கொள்கையோ கோட்பாடோ அற்ற “தற்குறிகள்” என்ற கேலிக்குள் சரணடைவது, தாம் எதிர்கொண்டிருக்கும் சரிவிற்கான காரணங்களைக் காண மறுத்து சுயநியாயப்பாட்டில் சுகம் காண்பதாகவே இருக்கும்.
சுயநியாயப்பாட்டில் சுகம் காண்பதை விடுத்து, தமது தவறுகளைக் களைந்துக்கொள்ள முற்படுவது எளிதான காரியமும் இல்லை. அது நடந்தேறினால், கடந்த நூற்றாண்டில் தி.மு.க. நிகழ்த்திக் காட்டிய மாபெரும் திருப்புமுனைக்கு ஒப்பான புதிய திருப்புமுனையாக இருக்கும். சூரியன் அப்போது மேற்கில் உதிக்கும்.
- வளர்மதி, எழுத்தாளர்