ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று

மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்
ஜீவிதம் மகா அற்புதமான ஒன்று
Published on: 

எல்லோருக்குமான விடியல்தான் அன்று தஸ்லீமாவுக்கும். ஆனால் அன்றைய வழக்கங்கள் எதையும் அவர் மேற்கொள்ளவில்லை. ஏதோ ஒரு மீறல் மனதை அழுத்தியது. அது உடலிலும் தெரிந்தது.

நீண்ட நேரம் மௌனித்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய இயல்பின்மை கணவர் நெய்மை பதட்டபடுத்தியது. ஆனாலும் எதிரில் இப்போது உறையும் மௌனம் இதுவரையிலான இருபது வருட வாழ்வில் அவர் எதிர்கொள்ளாதது,

“என்ன ஆச்சு தஸ்லீம்?”

ஆதரவான கையின் ஸ்பரிசம் ஒன்று அவள் தோள்களைத் தொட்டது.

“இந்த அன்றாடங்களை நான் வெறுக்கிறேன் நெய்ம்”

“புரியல”

“தூங்கி எழுவது, சமைப்பது, குழந்தையைத் தயார்ப்படுத்துவது, மாமியார் மாமனாரை பராமரிப்பது, இரவு உன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருப்பது, சமைத்துத் தீர்ப்பது, அப்புறம் உன்னோடு படுக்கையைப் பகிர்ந்து கொள்வது, அடுத்த நாள் மீண்டும் தூங்கி எழுவது...”

“போதும் தஸ்லீம்!”

அவன் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. அநியாயத்திற்கு பதட்டத்திலிருந்தான்.

“அதனால்?”

“நான் என் இந்த நாற்பதாவது வயதில் இவ்வாழ்விலிருந்து இன்னொரு வாழ்விற்கு மாறலாமென நினைக்கிறேன் நெய்ம்”

“புரியல”

“வாழ்ந்ததற்கு ஏதாவதொரு அர்த்தம் இருக்கணும் நெய்ம். என் பால்யகால கனவு ஒன்று உண்டு. இதுவரை ஒரு நிழல் போல அது என்னைப் பின் தொடர்ந்து வருகிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பராமரிப்பில் என் மீதி வருடங்களை செலவிடப் போகிறேன்”

அவளின் சமீப நடவடிக்கைகள் ஏதோ ஒரு பேரிடியை தன் தலையில் இறக்கப் போகிறாள் என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தியிருந்தது அவனுக்கு. எதிர்பார்த்த ஒன்றுதான். அது இத்தனை பெரிய பாரம் மிக்கது என்பதுதான் தாங்க முடியாததாய் இருந்தது.

“அப்படியெனில் நம் மகளின் எதிர்காலம்?”

“அவரவர் எதிர்காலத்தை அவரவரே பார்த்துக் கொள்வார்கள் நெய்ம். என் எதிர்காலத்தை என் அப்பா அம்மா தீர்மானிக்கவில்லை. நானேதான் தீர்மானித்தேன்”

அவளின் தர்க்கத்தை கடக்க முடியாமல் கரைக்கு இப்புறமாகவே நெய்மால் நிற்க முடிந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன் இதே போலொரு கோடையில், தஸ்லீமா தன் வெள்ளைக்கார நண்பனோடு, ஒரு சுட்டெரிக்கும் மதியானத்தில் என் வீட்டிற்கு வந்தாள்.கூட வந்த அந்நண்பனுக்கு முப்பது வயதியிருக்கலாம். நான் திகைப்பதைப் பார்த்து, ‘Pekka Kontiainen பின்லாந்து. ஆந்தைகளின் வாழ்வைப் பற்றி க.டஞீ முடித்துள்ளார். நானும் பெக்காவும் சேர்ந்துதான் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பணியாற்றப்போகிறோம்” தஸ்லீமாவின் குரலில் இருந்த அழுத்தம் என்னை பிரமிக்க வைத்தது.

“நாங்கள் அச்சமின்றி இந்த ஊரில் தங்குவதற்கு ஒரு இடம் வேண்டும் பவா”

நிலத்தில் கட்டியிருந்த சிறு குடிலை அவர்களுக்குக் காண்பித்தேன். அடுத்த நாள் காலை அதுவரை நான் குடித்தறியா சுவையில் பின்லாந்து கறுப்பு காபியை அவர்களோடு பகிர்ந்துகொண்டேன்.

Pekka Kontiainen என்ற பெயர் எதனாலோ அவனை உறுத்தியது.

‘விஷ்வா’ என நாங்கள் எல்லோரும் சுலபத்தில் அழைக்கும்படி தன் பெயரை மாற்றிக்கொண்டான்.

நீர் பாய்ச்சுவது, மாட்டுக்கு தீவனம் வைப்பது தெரு நாய்களுக்கு சோறாக்கி போடுவது என துவங்கிய அவர்களின் நிலத்து வாழ்க்கை கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் இலக்கை அடைந்தது.

தினம் பத்து ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடு அவர்கள் நிலத்துக்கு வருகிறார்கள். நாளெல்லாம் காடு, மேடு, நீர், நிலம், பூனை, நாய் என அவர்களைப் பழக்குகிறார்கள்.

மகன் வம்சி அக்குழந்தைகளின் ஒருநாளை படமாக்கியிருக்கிறான் வாய்ப்பிருப்பின் பாருங்கள்.

(Divya Rasa & Temple of love (Youtube link :   

ஒரு நாளும் அவர்கள் முகத்தில் சலிப்பையோ, துக்கத்தையோ நான் பார்த்ததில்லை. விரும்பிய பணியை சேர்ந்து செய்ய தன்னைவிட பத்துவயது குறைவான ஒரு சக ஹிருதயனை அவள் தன் நண்பனாக, தோழனாக அல்லது காதலனாக இணைத்துக் கொண்டாள். அவ்வளவுதான்.

இதற்கு மேல் நாம் பார்க்க வேண்டியது, ஒரே ஒரு ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையோடு ஒரு பெற்றோராலேயே இருக்க முடியாது. அவர்களிருவரும் பத்து பேரோடு தினம் தினம் வாழ்கிறார்கள் என்பதை மட்டுந்தான்.

ஏதோ ஒரு நாளில் தன் கணவர் நெய்ம்மின் சகிக்க முடியாத தனிமை தஸ்லீமாவையும் அடைந்திருக்கக்கூடும்.

இணையத்தில் தேடி தன் கணவனுக்கு ஒரு பெங்காலி ஆர்க்கிடெக் பெண்ணை மனைவியாக, தானே சாட்சி கையெழுத்து போட்டு சேர்த்து வைத்தாள்.

இப்போது தஸ்லீமாவும், விஷ்வாவும் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், ஒரு தாயின் கருவறை வடிவில் அவர்கள் அக்குழந்தைகளுக்காக கட்டப்போகும் விடுதியின் பூமி பூஜையிலும், நெய்ம் தன் புதுமனைவியோடு வந்திருந்தது வாழ்த்தியதை பின் வரிசையில் நின்று கவனித்தேன்.

வாழ்க்கை மகா அற்புதமான ஒன்று. அது ஒருபோதும் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை உங்களுக்காக பொத்திவைத்துக் காத்திருக்கும் என பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என் ஸ்நேகிதி தஸ்லீமாவுக்காகவும், நண்பன் விஷ்வாவுக்காகவும் தான் எழுதியிருக்க வேண்டுமென தோன்றுகிறது எனக்கு.

ஏப்ரல், 2017.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com