
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் தலைவராக முக்கியப் பங்கு வகித்த திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கணேசன் அந்தப் போராட்டம் பற்றிய நினைவுகளை அந்திமழை அக்டோபர் 2012 இதழில் பகிர்ந்திருந்தார். எல் கணேசன் மறைவை ஒட்டி அதை மீள்பதிவு செய்கிறோம்:
நான் ஈடுபட்டது 1965-ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம். தெளிவாகச் சொல்லணும்னா இந்தித் திணிப்பும், இந்தி எதிர்ப்பும் ஒரே வகைப்பட்டது அல்ல. எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பிக் கொள்கிறார்கள். அதில் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது 1937-இல் இந்தி திணிக்கப்பட்டபோது அது ஆட்சிமொழி என்று திணிக்கப் படவில்லை. அப்போது ஆங்கிலம்தான் ஆட்சிமொழி. இந்தியைப் பாடமொழி ஆக்குவதை அப்போது எதிர்த்தோம். அதில் வெற்றியும் கண்டோம்.
அதற்குப் பிறகு 1946-இல் தேர்தல் நடக்கிறது. பிறகு இந்தி திரும்ப வருகிறது. 1947 - இல் இந்தியைத் திணிக்கிற சட்டம் வருது. அப்போது அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சர், அவர் இந்தியைத் திணிக்கிறார், போராட்டம் வெடிக்கிறது. 1947-இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திதான் ஆட்சிமொழி என்றும், பின் 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் துணை ஆட்சிமொழி என விதி செய்கிறார்கள். இந்த விதி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்று சொல்கிறார்கள். அதில் பல குழப்பங்கள் இருக்கு. பின்னாடி 1965-இல் இந்திதான் ஆட்சி மொழி என்று வருகிற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்கிறபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்கான குழு செயற்குழுவாலும் பொதுக்குழுவாலும் நிர்ணயிக்கப்பட்டு கலைஞர்தான் அதை ஒருங்கிணைக்கிறார். 1964-இல் அவரிடம்தான் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
1964-இல் சட்ட எரிப்புப் போராட்டம். அந்தப் போராட்டத்தில் ஆயிரத்து சொச்சம்பேர்தான் கைதானார்கள். அதற்கு மேல் இல்லை. 38-இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது கட்சி நடத்தியது அல்ல, அது தமிழர்கள், தமிழ் அறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நடத்திய போராட்டம். ஆனால் காலம் போகப் போக அது கட்சிதழுவிய போராட்டமாக மாறியது. ஏனென்றால் நம் நாடு விடுதலை பெற்று காங்கிரஸ் இந்தி மொழியைப் புகுத்த, அதை திராவிட இயக்கம் எதிர்க்கிறது. ஆதலால் இது கட்சி தழுவிய போராட்டமாக மாறுகிறது.
அந்தக் காலகட்டத்தில் 1962-இல் நான் சட்டக் கல்லூரி பேச்சாளனாகிறேன். மாணவர்களுக்கு மத்தியில் கட்சியால் சிறிய பிளவு இருந்தாலும் இந்தியை எதிர்க்கும் உணர்வு பொதுவாக எல்லோரிடத்திலும் மேலோங்கி இருந்தது. ஆனால் எதிர்த்துப் போராடும் கட்சி என்று பார்த்தால் தி.மு.க மட்டுமே போராடுகிறது. தி.மு.க மாணவர்கள் நடத்தும் போராட்டத்தைப் பிற கட்சி சார்ந்த மாணவர்கள் எதிர்க்கிறார்கள். அந்தச் சமயத்தில் 1963 மற்றும் 1964-இல் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவராக நான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுகிறேன். இந்த இந்தி எதிர்ப்பைக் கட்சிப் பிளவுகளில் இருந்து பிரித்து பொதுப் பிரச்சினையாக மாற்றினால் வெற்றி பெற்றுவிட முடியும் என நம்பினேன். ஆகையினால் நான் “அகில இந்திய இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு”வை அமைத்தேன். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். என்னுடன் துரைமுருகன் வந்தார்; அறந்தாங்கியைச் சேர்ந்த நாவளவன் வந்தார். அப்போது கட்சிப் பாகுபாடு காட்டவில்லை. யார் யார் மாணவர் குழுத் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்களோ அவர்களை என் குழுவிலே இணைக்கிறேன். அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தவில்லை.
அப்போது ராஜா முகம்மது என்று ஒருத்தர் பிரசிடென்சி கல்லூரியில் படிக்கிறார், வைகோவும் அதே கல்லூரியில் படிக்கிறார். ஆனால் அந்தக் கல்லூரி-யின் மாணவர் குழு செயலாளர் எம்.எம்.ராமன். அதேபோல் சட்டக்கல்லூரி-யில் கே.சீனிவாசன், பொன். முத்து ராமலிங்கம் இப்படிப் பல பேர் தி.மு.க-வில் முக்கியமானவர்கள். அவர்களைச் சேர்த்தால் கட்சி உள்ளே வந்துவிடும். அதனால் அந்தக் கல்லூரிப் பேரவைத் தலைவர் ரவிச்சந்திரனைச் சேர்தேன். அதேபோல் புகழ்பெற்ற பச்சையப்பன் கல்லூரிப் பேரவைத் தலைவரையும் சேர்த்தேன். குழு மெல்ல மெல்ல வளர்ந்தது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படியொரு எழுச்சி வந்துவிடும் என்று எந்தத் தலைவரும் எண்ணவில்லை, நம்பவுமில்லை. பெரும் பூதாகரமாக வெடிக்கிறது. முதல்முறையாக இராணுவம் வரவழைக்கப்படுகிறது. முதன்முதலில் இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இப்படி வளர்ந்துகொண்டு வருகையில் முதல்வர் பக்தவத்சலம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிடுகிறார். ஆதலால் நாங்கள் சந்தேகம் வராதபடி பூங்காவிலும், கடற்கரையிலும் கோயில்களிலும் கூடிப்பேசினோம். அப்படி ஒருமுறை பூவிருந்தவல்லியில் இருக்கும் நேரு பூங்காவில் கூடிப் பேசும்போது அண்ணா அழைத்துவரச் சொன்னதாக சோமு (பின்னாளில் மத்திய மந்திரி ஆனவர்) வந்து கூறினார். அண்ணாவைச் சந்தித்தபோது அவரும் உட்காரவில்லை; என்னையும் உட்காரச் சொல்லவில்லை.
அவர் வாதத்தை எப்படி ஆரம்பித்தார் என்று இன்றும் என்னால் சொல்ல முடியும். “விதைத்திருக்கிறீர்கள்; நல்ல போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள், இதற்குமேல் போனால் பல கொடுமைகள் வரும், துப்பாக்கிச் சூடு நடக்கும், பல பேர் பலி ஆவீர்கள். அதுமட்டுமல்ல தீய சக்திகள் அதைக் கையில் எடுத்துக்கொள்ளும், அப்போது அதற்குக் காரணவாதி நீங்கள் என்று சதிவழக்கில் இளைஞர்கள் உங்கள் வாழ்க்கை சீரழிந்துவிடும். நாங்கள் போராடுகின்றோம், ஒருவேளை நாங்கள் தோற்றுப்போனால் எங்களுக்குப் பின்னர் நீங்கள் போராடலாம். இப்போது போய் படிக்கிற வழியைப் பாருங்கள்” என்றார். அந்த ஒரு மணி நேரத்தில் நான் என்ன வாதாட நினைத்தேனோ அதை அவரே பேசிவிட்டு அதற்கேற்ற பதிலும் சொல்லி விடுகிறார். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. என் உள்ளத்தில் வைத்து தினமும் பூஜை செய்கின்ற தலைவர் அண்ணா. ஆனால் என் மனச் சாட்சி போராட்டம் நடத்தவேண்டும் என்கிறது. என் முடிவு என்ன என்று அண்ணா என்னிடம் கேட்கிறார்.
“ If you are Lal Bahadur Sastri I would have bombarded you, but unfortunately you are my Leader. Don't convince, I will try to take up your advice” என்றேன் நான்.
இதை மூன்று நான்கு தடவை கலைஞர் திரும்பத் திரும்ப சொல்லி இப்படி அண்ணாவிடம் பேசிய முதல் ஆளும் கடைசி ஆளும் நீங்கதான். இதுவேதான் உங்களுக்கும் முதலும் கடைசியுமான தடவை என்றார். அதன்பிறகு அண்ணாவையும் மீறிப் போராட்டம் நடத்தப்பட்டது. இரயில் நிறுத்தப் போராட்டம், மறியல் போராட்டம் இப்படிப் போராட்டங்களை நடத்துகின்றோம். அண்ணா எதெல்லாம் யூகித்தாரோ அதெல்லாம் நடக்கிறது. இராணுவம் வருது, போராட்டக்காரர்கள் சுடப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கானபேர் சுடப்படுகிறார்கள். அரசு 200 பேர் எனப் புள்ளி விவரம் தருகிறது. விடுதலைப் போராட்டத்தின்போதுகூடத் தமிழ்நாட்டில் இப்படியொரு போராட்டம் நடந்ததில்லை, இத்தனைப் பேர் பலி ஆனதில்லை.
அண்ணா கூப்பிட்டு சொன்னதுபோல் போராட்டத்தைத் திரும்பப்பெற முடிவெடுக்க தஞ்சாவூரில் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் முன்னோடியாக இருந்தவர்கள் கே.சீனிவாசன், எம்.நடராஜன். அப்பறம் இன்றைக்கும் கலைஞருக்கு நேர்முக உதவியாளராக இருக்கும் கே.ராஜமாணிக்கம். இந்தி எதிர்ப்பில் 38-இல் நடந்த போராட்டமும் அதற்குப் பின்னால் 1947-இல் இருந்து 1950 வரை நடந்த போராட்டமும், 1964-65-இல் நடந்த போராட்டங்களும் முக்கியமானவை. ஆனால் உண்மையில் அதன் பின்னர் 65 ஆம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டம்தான் தலைசிறந்த போராட்டம். மிகப்பெரிய போராட்டம். இதைத்தொடர்ந்து அடுத்த ஆட்சி மாற்றம் வருகிறது.
இப்போது உள்ள நிலையில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தி எதிர்ப்பில் திராவிட இயக்கங்கள் வெற்றி பெற்றதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை. மிகுந்த வேதனைக்குரிய உண்மை. அதாவது புகைவண்டி நிலையங்களில், பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டபோது தார்கொண்டு அழித்த இயக்கம் திராவிட இயக்கம். நான் கேட்பது என்னவென்றால் இன்றைக்கு எந்தப் புகைவண்டி நிலையங்களில் இந்திப்பெயர் எழுதப்படவில்லை? இப்போது கல்வி பொதுப் பட்டியலாக்கப்பட்டுவிட்டது. இதை யார் தடுத்தார்கள், யார் தடுக்க முடிந்தது? பொதுப்பட்டியல் என்று சொன்ன பிறகு மத்திய அரசும் அதில் சட்டம் இயற்றலாம். மத்திய அரசு இந்தி தான் என்று பிரகடனப் படுத்தவில்லையே தவிர இன்று நடைமுறை என்ன? இந்தி மொழி கற்பிக்கும் பள்ளி இல்லாத மாநிலம் இருக்கிறதா? அந்தப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு சிபாரிசு தேவைப்படுகிறது. சரி அது போகட்டும். இந்தி எங்கு இல்லை? வடநாட்டுப் பொது நிறுவனங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம்தான் நாம் காணமுடியும். ஆகவே என்னுடைய கருத்து, இந்திவெறியர்கள் மெல்ல மெல்ல வெற்றி பெற்றுவிட்டார்கள் அல்லது வெற்றி பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.
இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் ஒருகாலத்தில் வெகுவிரைவில் இல்லையென்றாலும் கட்டாயம் ஆபத்து வரும். அப்படி வருகிறபோது அந்த ஆபத்தைக் கொண்டுவருவது இந்தியாகத்தான் இருக்கும். என் கருத்தென்றோ அல்லது ஆசையென்றோ அல்லது யூகமென்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
(சந்திப்பு: திருச்சி லெனின்; உதவி: உ. அரவிந்தன்)
அக்டோபர், 2012.