எங்கும் குடி எதிலும் குடி என நாடே குடிமயம் ஆகிவரும் நிலையில், மதுவிலக்கைப் பற்றிப் பேசுவதைவிட, உடனடிப் பிரச்சினைகளைப் பேசியாகவேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருகின்றன. இதில் முக்கியமான ஒன்றாக, ஒரே அளவு பாட்டில் மதுவைக் கண்டபடி விலையை ஏற்றி விற்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசின் டாஸ்மாக் மதுவை பல இடங்களில் விலையை ஏற்றி விற்பதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையின் அதிகாரிகளும் அவ்வப்போது மதுக்கடைகளில் ஆய்வுசெய்து இப்படியான முறைகேடுகளைக் கண்டுபிடித்து அபராதம் விதிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஊழியர்களை இடைநீக்கம் செய்வதுவரை நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனாலும், குறைந்தபட்ச விலையைவிடக் கூடுதலாக சட்டவிரோதமாக மது விற்பனை ஜோராக நடக்கிறது என்பது நீடித்துவரும் குற்றச்சாட்டு.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட விவரங்கள் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.
கடந்த 2016 - 2021 ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்டது; அந்த வகையில் 15,405 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; மோசடி செய்தவர்களிடமிருந்து 14 கோடியே 83 இலட்சத்து 86 ஆயிரத்து 690 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது என்பதுதான் அந்தத் தகவல்.
அது சரியென்று வைத்துக்கொள்வோம். இந்த நான்கு ஆண்டுகளில்...?
”இப்போது இந்த நான்கு ஆண்டுகளில் கூடுதலாக விற்பனை செய்த டாஸ்மாக் பணியாளர்களிடமிருந்து ஏறத்தாழ 6 கோடியே 79 இலட்சத்து 86 ஆயிரத்து 47 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டு, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சில பேர் மீது பணியிடை மாற்றம் முதலிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.” - இதுவும் அவரே சொன்ன தகவல்தான்.
என்ன வழக்குகளைப் பற்றி அவர் மூச்சு விடவில்லை. எதிர்க்கட்சியும் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க, இந்திய அளவில் ஒரே அளவு மது வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகிறதே என்பது இன்னொரு குடியுலகப் பிரச்சினை.
கோவாவில் ஒரு முழு பாட்டில் மது 100 ரூபாய் என்றால், அதுவே பக்கத்தில் உள்ள கர்நாடகத்தில் 305 ரூபாய், இராஜஸ்தானில் 205, தெலங்கானாவில் 229 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இப்படி மூன்று மடங்கு அளவுக்கு விலை வித்தியாசம் இருப்பதற்கான காரணம், மதுவுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரிதான்.
கோவாவில்தான் குறைந்தபட்சமாக 55% மட்டுமே மது வரியாக விதிக்கப்படுகிறது. கர்நாடகத்திலோ இது 80%. நாட்டிலேயே இதுதான் மிக அதிகமான வரி என்கிறது இந்தியாவின் பன்னாட்டு சாராய, மதுவகைகளுக்கான அமைப்பு (ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.ஐ.).
ஒரு பாட்டில் பிளாக் லேபில் விஸ்கியின் விலை புதுதில்லியில் 3,310 ரூபாய். இதுவே மும்பையில் 4,200 ரூபாய்க்கும் கர்நாடகத்தில் சுமார் 5,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இப்போது நாடு முழுவதும் பரவிவரும் ஒரே நாடு கொள்கை, வரிவிதிப்பில் இது மட்டும் விலக்காக இருக்கமுடியுமா? சீரான வரிவிதிப்புதானே சரி எனக் கேள்விகளை அடுக்குகிறார்கள், சாராயம், பிற மதுவகைத் தொழில் துறையினர்.
தற்போதைய நிலையில், பெட்ரோல், டீசல் மீது வரி விதிப்பு, மதுவகைகள் மீதான ஆயத்தீர்வை இரண்டுமே மாநில அரசுகளுக்கு முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி, “ மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை உறுதிசெய்துகொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் இதில் ஒரே சீராக வரி விதிப்பு இருக்கவேண்டும் என்பது தொழிலில் முக்கியமானது.” என டைம்ஸ் ஆஃப் இண்டியாவிடம் தெரிவித்துள்ளார், (ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.ஐ.) தலைமைச் செயல் அலுவலர் சஞ்சித் பதி.
இவரைப் போலவே, “இந்தத் தொழில் துறை வளர்ச்சி அடைய வேண்டுமானால் ஒரேமாதிரியான வரிவிதிப்பு முறை அவசியம்.” என்று வலியுறுத்துகிறார், இந்திய சாராய மதுவகைத் தொழில் கூட்டமைப்பின் தீபக் ராய்.
அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு...!
குடிநோயிலிருந்து மீட்கப்படும்வரை, குடிகாரர்களுக்கு தரமான குறைந்த விலை மது கிடைக்குமா என்பதும் தவிர்க்கமுடியாத கேள்வியாக இருக்கிறது.