
‘இந்தியை எதிர்த்து மாணவர்கள் போராடியதே முட்டாள் தனம் ’--- இந்த வாசகத்தை அவர் உதிர்த்தது பத்து ஆண்டுகள் முன்பிருக்கும். பாளையங்கோட்டைச் சிறையில் அவரோடு நான் இருந்த போதிருந்து அவரது குணங்களை நெருக்கமாக அறிய நேர்ந்தது. அவரது விட்டேற்றிக் குணத்தையும் எதிர்பார்ப்பையும் அறிந்திருந்தேன்.
சிறைப் பட்டிருந்த இன்னொருவர் சாமியாராகி இலங்கை எல்லாம் சென்று வந்தார். மிகத் தீவிரமாய்ப் பேசி போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் ஒருவர் மனநோய்க்கு ஆளாகி, பின்னர் சரியாகி வழக்குரைஞராக பணியாற்றுகிறார் எனவும் கேள்விப்பட்டதுண்டு.
போராட்டத்தின் பின் பொதுத் தொண்டிலிருந்தும் சமூகப் போராட்டத்திலிருந்தும் விலகி நின்றமை - இவர்கள் சிதைவின் பின்னுள்ள அடிப்படைக் காரணங்கள். கொள்கை அடிப்படையிலான போராட்டம் என்பது ஒருபொழுது தொடங்கி அடுத்த பொழுதில் கழுவி ஊற்றி விடுவது அல்ல. அது வாழ்நாள் முழுதுக்குமாய் ஏந்திச் செல்லவேண்டியது. ‘ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் தன்னைக் கம்யூனிஸ்டாக வைத்துக் கொள்வதற்காக போராடுபவன்‘ என்பதற்குச் சமமானது இது.
இந்தப் போராட்டத்தின் பின்னான விளைவுகளிலிருந்து இவர்களது எதிர்பார்ப்பும் , போராட்டத்திற்கு முளையிட்ட இயக்கம் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாததும் காரணிகள். இவர்களுடையதை மட்டுமல்ல, சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைக் கூட இயக்கம் சிறிதும் நிறைவேற்றாமல் முடங்கியது. மாறாக எதிர்த் திசையில் பயணித்தது. எதிரான பயணிப்புக்கு அரசதிகாரத்தில் அமர்ந்தது தான் அடிப்படை. அரச பதவி எல்லோரையும் கீழ்நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பது உண்மையானது. Power corrupts every man.
தி.மு.க தலைமை 65 போராட்டத்தை அதற்கு மேலே முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை. தமது அரசியல் நலன்களுக்காக எப்படிப் பயன்படுத்துவது என்பதே பிரதான நோக்கமாக ஆக்கிக் கொண்டது. இந்தி எதிர்ப்பை, உண்மையில் இன விடுதலைப் போராக மாற்றியிருக்கவேண்டும். அன்றைய காலகட்டம் உலக முழுவதும் இனவிடுதலைக்கான காலமாக இருந்தது. பல நாடுகளும் இனவிடுதலை அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்தன. அயர்லாந்து முதல் பலநாடுகளில் இன ரீதியில் நடந்த விடுதலைப் போராட்டங்களை எல்.கணேசன் போன்ற முன்னோடிகள் எங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள். பிற நாடுகளின் இயக்கங்களுக்கு தேசிய இன விடுதலை குறித்த தெளிவான, முழுமையான புரிதல் இருந்தது.தேசிய இன விடுதலை என்பதே மக்களுடைய விடுதலைதான். மக்கள் தம் ஜனநாயக உரிமைகளை முழுமையாகப் பெறுவதற்கு ஒரு முன் நிபந்தனையாக அது இருக்கிறது.
சர்வதேச அளவிலான நிலைமைகளைப் பற்றிய புரிதலுடன் தான் போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தோம். இதனூடாகவே வேர்ப் புழுபோல் மற்றொரு உள்காரணியும் செயல்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் மென்முறை வழியிலோ வன்முறை வழியிலோ ஒரு போராளி இயக்கமாக வளர்க்கப்படவில்லை. மாணவர் இயக்கத்தையும் அந்த இடத்திற்கு செல்ல அனுமதிக்கவில்லை.
‘இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும்’ என 1959 -ல் பிரதமராக இருந்த நேரு நாடாளுமன்றத்தில் வாககுறுதியளித்தார். அது வெறும் வாக்குறுதி மட்டுமே. அது நாடாளுமன்ற அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டு சட்ட முன் வடிவாக ஆக்கப்படவில்லை. விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு சட்டமாகும் சாத்தியத்தை பெற்றதா எனில் இல்லை. அது வெறும் உமி; அவ்வளவே; அதை தங்கத் தூள் எனக் கொண்டடியதோடு, தமிழ் மக்களை நம்பவும் வைத்தது திமு.க. பின்னர் அந்த உமியும் காற்றோடு பறந்து, இந்தி பேசும் இனங்கள் தமக்குக் கிட்டிய தங்கத்தை கொண்டாடிக் கொண்டாடிக் குவித்துக் கொண்ட காட்சிகளை இன்றுவரை கண்டு வருகிறோம். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஒருவர் மீது ஒருவர் குறைகாணும் அரசியல் பிழைப்புக்காகவுமே இந்தி எதிர்ப்பு என்பது தி.மு.க , அ.இ.அ.தி.மு.க ஆகியவை கையாளும் பிழைப்புவாத தந்திரமாக ஆகியுள்ளது.
இருமொழி கொள்கை என்பது அடிப்படையில் பிழையான கொள்கை. ஒருமொழிக் கொள்கை என்பதே சரியானது. அகில இந்திய அரசியல் கட்சிகள் மும்மொழிக் கொள்கை என்றன.
‘மும்மொழித் திட்டம் மோசடித் திட்டம்;
இருமொழித் திட்டம் ஏமாற்றுத் திட்டம்;
ஒருமொழித் திட்டமே உண்மையான திட்டம் ’
என்பதை கடந்த ஐம்பது ஆண்டுக் கால வரலாற்று அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொண்டுள்ளோம்.
இருமொழித்திட்டத்தின் அடிப்படையில் ‘இந்தி ஒருபோதும் இல்லை; ஆங்கிலம் எப்போதும்’ என்ற முழக்கத்தை முன்வைத்தது வரலாற்றுப் பிழை. ஆட்சிமொழியின் இடத்தை இந்தி எடுத்துக் கொள்ள, ஆங்கிலம் தமிழர் வாழ்வியலின் அனைத்து இடத்தையும் கபளீகரம் செய்து கொண்டது. கல்வியிலிருந்து அனைத்துத் துறைகளும் ஆங்கில வசம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கல்வி நிலையங்களில் ஏறத்தாழ தமிழே இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் அப்போது முளை விட்ட ஆங்கிலப் பள்ளிகள் இன்று திராவிட இயக்கங்களின் ஆட்சியில் எங்குமாய் நீக்கமற நிறைந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் மண்டையும் மூக்கும் மட்டுமே முன் தெரிய பிறப்பெடுத்த ஆங்கிலம் தி.மு.க, அ.தி.மு.க.வின் கருணை மிகு ஆட்சியில் முழு உருவமாய் வளர்ந்து நின்றது. இந்தி ஆதிக்கத்தை மட்டுமல்ல,ஆங்கில ஆதிக்கத்தையும் எதிர்த்துக் குரல் உயர்த்த வேண்டிய அவலம் நம்மீது சேர்க்கப்பட்டிருக்கிறது.
மதுரை தொடர் வண்டி நிலையத்தின் வலது கைப் பக்கமிருந்தது அந்த பிராமண உயர்நிலைப் பள்ளி. இப்போதும் அங்கிருக்கிறது. வேர் முதல் உச்சிவரை மட்டுமல்ல, விழுதுகளிலும் பிராமணப் பண்பாடு இறங்கி பரம்பரைகளுக்கு ஓடியது. ஏறக்குறைய அனைத்துப் பள்ளிகளிலும் பிராமண சாதியினரே அப்போது இந்தி ஆசிரியர்களாய் பணியாற்றினர். பள்ளியில் கல்வி நேரம் முடிந்தபின் தனியாய் இந்தி வகுப்புக்கள் தொடங்கின. பிராமணன் அல்லாத அச்சிறுவனும் இந்தி கற்க ஆசையாக சேர்ந்தான். பிரார்த்தமிக், மத்தியமா என்று சொல்லப்படும் இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று மூன்றாவது ஆண்டில் ராஷ்டிரபாஷா என்னும் தேர்வுக்குத் தயாராகினான். உயர்நிலைப் பள்ளி இறுதிவகுப்பில் (அது 1960) தமிழ் உணர்வு உள்ளிறங்க இந்தி எதிர்ப்பின் சூடு மேலேற பிராமண வெறுப்பு கொப்புளித்தது. விவாதம் நடத்தி, தகராறு நடந்தது. முடிவில் பள்ளிச் சிறுவன் ஏற்கனவே தேர்வாகிய இந்திச் சான்றிதழ்களை கிழித்து வீசிஎறிந்தான்.
மொழி எதிர்ப்பு வெறுப்பாகி, வெறுப்பு கிழிப்பாகி முடிந்த செயலை நினைத்துப் பார்க்கையில், இன்று அறுபதுகளின் இறுதியில் நின்று கொண்டிருக்கும் அச்சிறுவனின் இதழ்களிலிருந்து ஒரு கழிவிரக்கப் புன்னகை உதிர்கிறது. செயலற்ற தன்மைகளின் மொத்த தொகுப்பாக வரலாறு அவன் முன் பெருஞ் சிரிப்பு கொட்டுகிறது. தமிழகத்தின் மொழிகாப்பு வரலாற்றில் அவனது பங்கு சிறு துரும்பு அளவே. அளப்பரிய ஈகங்களால் தமிழக வரலாறு பொங்கி வழியவழிய நிறைந்த காலத்தில் வாழ்ந்தான் என்பது அன்றி அச்சிறுவனுக்கு வேறு புனைவுகள் என்ன வேண்டும்?
இந்தி எதிர்ப்புப் போரில் கொல்லப்பட்டோர் நூறு என அரசுக் கணக்கு கூறியது. 500 பேர் வரை கொல்லப்பட்டனர் என வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். மேற்கு மண்டலம் என சொல்லப்படும் கோவைப் பிரதேசத்தின் பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் கொன்று குவித்த பிணங்களை கணக்கு வழக்கில்லாமல் இராணுவமே எரித்துச் சாம்பலாக்கியது. திருப்பூரில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் குண்டடிபட்டு , பலரது பிணங்கள் ஒரு கிணற்றுக்குள் போட்டு மூடப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்த சோகத்தின் முடிவில் இரண்டு காவல் துணை ஆய்வாளர்கள் எரிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. இந்தியத் துணைக் கண்டத்தில் எல்லை காப்பது தவிர வேறெந்தப் பணியும் செய்தறிந்திராத இராணுவம், உள்ளிறங்கி மக்களின் உயிர் வாங்கும் என்பதை முதன்முதல் மக்கள் தரிசித்தார்கள்.
‘இது என்ன காலம்?
என் வீட்டு வாசலின் முன் அமர்ந்து
வீடு எங்கே என்று
தேடிக் கொண்டிருக்கிறேன் ‘
என்றொரு பஞ்சாபிக் கவிதை உண்டு. அது போலவே வரலாற்றுக் காலத்தை தொலைத்து விட்டு வரலாற்றில் வாழ்தல் எப்படி என்று தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.
(கட்டுரையாளர், 1965 -ன் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது ஆகி பாளையங்கோட்டைச் சிறையில் வைக்கப் பட்டிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்)
அக்டோபர், 2012.