பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை: நேரம் போதுமா?

மதிய உணவு இடைவேளை
மதிய உணவு இடைவேளை
Published on

‘‘சுத்தமா நேரம் பத்தல”,

“க்ளாஸ்ல பாதி பேர் முழுசா சாப்பிடமாட்டோம்”,

“பெல் அடிச்சிடுவாங்களே”,

“ஷேரிங் செய்யவே கூடாதாம்”,

“ஏன், அதெல்லாம் நிறையவே இருக்கே, சீக்கிரமா வந்து க்ளாஸ் ரூம்ல பேசிட்டு இருப்போம்”,

“சரியா இருக்கும்”. - இவை மதிய உணவு இடைவேளை நேரம் போதுமானதாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு வந்த விடைகள். தமிழ்நாட்டில் பலதரப்பட்ட பள்ளிகள் உள்ளன. பாடவேளை என்பது சராசரியாக 45 அல்லது 50 நிமிடங்கள் என்று இருக்கின்றன [2025 கல்வியாண்டு நாட்காட்டி]. மதிய இடைவேளை முடிந்ததும், கல்விசார் இதர பாடவேளைகள் 20-30 நிமிடங்கள் இருக்கின்றன. இது அரசுப் பள்ளிகளில் இருக்கும் வழிகாட்டல். ஒட்டுமொத்தமாக மதிய இடைவேளை என்பது 25 நிமிடங்களில் ஆரம்பித்து சுமார் 60 நிமிடங்கள் வரை நீடிக்கின்றன. சீரான ஒழுங்கு இருக்க வேண்டுமா? அவசியமில்லை. அதனை அந்தப் பகுதியின் பள்ளித் தலைமை ஆசிரியர் முடிவு செய்வது என்பதே சரி. பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மதிய இடைவேளையை நீட்டிக்கலாம்.

எங்கே சிக்கலும் கவலையும்?

இடைவேளை அதிகமான நேரம் இருப்பது வரவேற்கக்கூடியதே. ஆனால், நேரம் குறையும்போதுதான் வருத்தமும் சிக்கலும். ஆசிரியர்களிடம் பேசும்போது 30 நிமிடங்கள் தாராளமாகப் போதுமே என்று சொல்கின்றனர். ஒருவேளை ஒரு மாணவரின் பார்வையில் இருந்து கவனிக்க மறந்துவிட்டார்களோ என்றே தோன்றுகின்றது. ஆம், சாப்பிடுவதற்கு 30 நிமிடங்கள் தாராளம். மெதுவாக உண்ணும் குழந்தைக்கும் இந்த நேரம் போதுமானது. ஆனால், மதியப் பாடவேளை என்பது சாப்பிட மட்டுமில்லை.

கணக்கு போடுவோம் வாங்க.

மதிய உணவு இடைவேளை
மதிய உணவு இடைவேளை

சத்துணவு வழங்கப்படும் பள்ளிகளில் மணி அடித்த பின்னர் குழந்தைகள் வரிசைகளில் சென்று தட்டுகளைக் கழுவிக்கொண்டு [தண்ணீர் போதுமானதாக இருக்க வேண்டும்], வரிசையில் நின்று உணவைப் பெற்றுக்கொண்டு நண்பர்களுடனோ, வரிசையிலோ அமரவேண்டும். இதற்கே 10 நிமிடங்கள் எடுக்கும். மிச்சம் வைக்காமல் மென்று சாப்பிடுவதென்றால் 25-30 நிமிடங்களாகும். மீண்டும் சாப்பிட்ட தட்டைக் கழுவி, கழிப்பறைக்குச் சென்று தத்தமது வகுப்பறைகளுக்குச் சென்று அமர இன்னொரு 10 நிமிடங்கள். பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின்படி 12.20 முதல் 1 மணிவரை மதிய இடைவேளை [வகுப்புகளுக்கு ஏற்றவாறு நேரம் மாறுகின்றது]. மாநிலம் முழுக்க இதனைக் கடைப்பிடிக்கச் சொன்னாலும் தலைமை ஆசிரியர் நேரத்தை நிர்ணயம் செய்துகொள்வது என்பது பாராட்டுக்குரியது. ஆக, குழந்தைகளுக்குச் சாப்பிட்டுவர 40 நிமிடங்கள் கனக்கச்சிதமாக இருக்கும். இதுவே பெரிய பள்ளி என்றால் வரிசை, தூரம் எல்லாம் இன்னும் நீண்டதாக இருக்கும்.

தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளிலே அமர்ந்து உண்கின்றனர். 25 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் அதிகபட்சம். பெரும்பாலான பள்ளிகளில் 30 நிமிடங்கள் மட்டுமே. வகுப்பறை வாசல்களில் அமர்ந்தும் உண்கின்றனர். இவர்களுக்கு இந்த நேரம் சுத்தமாகப் போதவில்லை. இந்தக் குழந்தைகளிடம் இருந்து மட்டுமே அதிக கோரிக்கைகளும் புகார்களும் வருகின்றன. அவர்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும் எனக் கேட்கக்கூடத் தெரியாது. பாத்திரங்களை முதல் சுற்று கழுவச் சொல்லும்போது ஒரு நாளைக்குப் பள்ளியில் வீணாகும் உணவை அளந்துவிடலாம். குறைந்தபட்சம் இதனை நடுநிலை வகுப்புகள் முதல் ஆரம்பிக்கலாம். நம் வேலைகளை நாமே செய்வதற்கான பயிற்சியும்கூட. ஆனால், பாத்திரங்கள் கழுவக்கூடாது என்று தனியார் பள்ளிகளில் பதாகையே வைத்துள்ளனர்.

சாப்பிடமட்டுமா?

மிக முக்கியமாக மதிய இடைவேளை என்பது வெறும் உணவு சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. வேகவேகமாக உணவு சாப்பிடுவதால் அவை சரியாக செரிக்காது. நிச்சயம் சத்தான உணவை நிதானமாகச் சாப்பிடவேண்டும். இந்த நேரம் தங்கள் நண்பர்களுடன் பேசுவதற்கு மிக அவசியமாகத் தேவை. சமூகத்திறன் அவசியம் என ஒரு பக்கம் பேசிக்கொண்டே இருக்கின்றோம். ஆனால், அதற்கான ஒரு வெளியையும் பள்ளிகளில் ஏற்படுத்துவதில்லை. என்னதான் வகுப்பறைகளில் ஒரு வெளியை உருவாக்குகின்றோம் என்றாலுமே அது ஒரு மேற்பார்வையில் நடப்பது. தன்னியல்பாக நடக்க சில நிமிடங்களாவது எந்த மேற்பார்வையும் இன்றி இருக்கவேண்டும். வகுப்பறைகளில் மதிய உணவு இடைவேளை முடிந்து கல்விசாரா வகுப்புகள், இதழ்கள் வாசிப்பு ஆகியவை வரவேற்கத்தக்கவை. ஆனால், அதுவும் ஒரு பாடவேளைதான். சும்மா இருக்கப் பழகுவதில்லை. சில நிமிடங்கள் சும்மா இருப்பதால் அதுதரும் ஆசுவாசத்தால் அடுத்து வரும் பாடவேளைகளிலும் முழுக் கவனம் செலுத்த வைக்கும்.

எங்கே நினைவுகள்?

வளர்ந்த குழந்தைகளிடம் எல்லாம் கேளுங்கள். பள்ளிக்கால நினைவுகளில் பெரும்பகுதி மதிய இடைவேளையின்போது நிகழ்ந்திருக்கும். முன்னர் 1 மணிக்கு மேலே மதிய இடைவேளை. அவ்வளவு நினைவுகளைச் சேகரிக்க முடிந்தது. பள்ளிக்கு வெளியே சென்றுவர முடிந்தது. எதிரே கடைகளில் வாங்கிச் சாப்பிடவும், அரட்டை அடிக்கவும், வயதிற்கு ஏற்ப செய்கைகள் மாறுபட்டாலும் நினைவுகளை நிரப்பவும் நேரம் இருந்தது. அதனைச் சுருக்கி, வாழ்வினை வேகப்படுத்தி, ஏதாவது ஒன்றைப் பள்ளிக்குள் பெற்றுவிடு எனத் துரத்துகின்றோமா?

ஆசிரியர்களுக்கான உணவு நேரம்?

இன்னொரு கோணத்தில் இவர்களை மேற்பார்வை செய்யும் ஆசிரியர்களின் உணவு நேரம். அவர்களுக்கும் நேரம் வேண்டும், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா? பெரிய பள்ளிகளில் சுழற்சி முறையில் மேற்பார்வை செய்துகொள்ளலாம். மற்ற பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சவால்தான். பல தனியார் பள்ளிகளில் 5-10 நிமிடங்கள் மட்டுமே ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்றன. மிக எளிதில் அவர்கள் சோர்வடைந்துவிடுவார்கள்.

கவனமும் பரிந்துரைகளும்:

வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவிலும் பெரிய கவனம் தேவைப்படுகின்றது. சத்துணவு எடுத்துக்கொள்ளாத குழந்தைகளின் உணவு எவ்வாறு இருக்கின்றது என்பதனையும் பள்ளி ஆய்வு செய்யவேண்டும். ஒரு நாளைக்குத் தேவையான 30% சத்தான உணவு மதியம் இருக்கின்றதா என ஆய்வு செய்ய வேண்டும். பெற்றோர்களுக்கு வழிகாட்டவேண்டும். தேவையெனில் பெற்றோர் ஆசிரியர் கழகங்களில் இதற்கான உறுதுணைகளைக் கோரலாம். பெற்றோர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வைக்கு யோசிக்கலாம். தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் காலை உணவிலும் கவனம் தேவைப்படுகின்றது. இங்கும் நிறைய குழந்தைகள் நேரம் போதாமையால் உட்கொள்வதில்லை. மதிய உணவிற்கான நேரமும் போதாமல் உள்ளது. இவை எல்லாம் சிறுகச் சிறுக பெரும் சிக்கலை நோக்கி நகர்த்திக்கொண்டு உள்ளன. யுனஸ்கோ பரிந்துரைப்படி குறைந்தது 20 நிமிடங்கள் சாப்பிடுவதற்கு மட்டும் ஒதுக்கவேண்டும். கூடுதலாக அது சக மாணவர்களுடன் உரையாடும்படியும் அமைய வேண்டும். நிச்சயம் இது மதியம் நடத்தும் பாடங்களை இன்னும் கவனமாகக் கற்க உதவும்.

எல்லாம் நல்லபடி நடக்கின்றதா எனக் கூராய்வினைப் பல கோணங்களில் இருந்து பார்ப்பது அவசியம். உணர்வுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஒவ்வொன்றையும் அணுக வேண்டியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com