கோவன், ம.க.இ.க. பொதுச்செயலாளர்
கோவன், ம.க.இ.க. பொதுச்செயலாளர்

பாடகர் கோவன் பதிலடி: ” நான் இங்குதான் இருக்கிறேன்!”

எங்கே அந்தக் கோவன்?

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக வைரல் பாட்டைப் பாடி, கடுமையாகப் பிரச்சாரம் செய்தவர் இந்த ஆட்சியில் எங்கே போனார்?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 59 பேர் இறந்துபோயிருக்கிறார்கள்; தி.மு.க.வுக்கு முட்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறாரா அந்தக் கோவன்?

- அ.தி.மு.க., பா.ஜ.க. மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சி போன்ற அமைப்பினரும் கடுமையாகவும் பலர் ஆபாசமாகவும் இணையத்தில் விடாமல் எழுதிவருகின்றனர்.

இவர்கள் இவ்வளவுக்கு சுட்டிக்காட்டும் அளவுக்குக் காரணம்,

கோவன் உட்பட்ட ம.க.இ.க. குழுவினர் பாடிய,

ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம் ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸூல உல்லாசம்” என்கிற பாடல்தான்.

வினவு யூட்டியூபில் மட்டும் இந்தப் பாடல் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத் தவிர ஏராளமானவர்கள் தனித்தனியாக இந்தப் பாடலை வாட்சாப்பிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் பகிர்ந்துவருகிறார்கள்.

கேள்வியின் நாயகனான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் செயலாளர் கோவனிடமே இதுபற்றிக் கேட்க தொடர்புகொண்டோம்.

கள்ளச்சாராய பலிகளுக்கு எதிராக இரண்டு போராட்டங்களை முடித்துவிட்டு, அடுத்த போராட்டத்துக்கான தயாரிப்புகளில் இருந்தவரை, பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு பிடித்தோம். அவருடன் பேசியதிலிருந்து:

கரூரில் 24-06-2024 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கோவன்
கரூரில் 24-06-2024 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கோவன்

”கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களைவிட கோவன் எங்கே என பல தரப்பினரும் காய்ச்சி எடுக்கிறார்களே... இதற்கு உங்கள் பதில் என்ன?”

” கோவன் எங்கேயும் ஓடிவிடவில்லை. இதைத் தெரிந்துகொண்டே அவதூறு பேசுகிறவர்களுக்கு பதில்சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் சமூகத்துக்குப் பொறுப்பானவர்கள் என்பதால் முறையான ஊடகக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறோம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் டாஸ்மாக் மதுக் கடைகளை மூடுவதாக தி.மு.க. வாக்குறுதி அளித்தது. அதைச் செய்வார்களென ஓராண்டு காத்திருந்தோம். டாஸ்மாக் மட்டுமல்ல, கள்ளச்சாராயம், கஞ்சா உட்பட்ட அனைத்து போதைகளுக்கு எதிராகவும், கடந்த ஆண்டு அதாவது 2023 மே மாதம் 2ஆம் தேதி என்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பாடலை வெளியிட்டோம். அதை இப்போது மீள்பதிவு செய்திருக்கோம். அதில் உள்ள நான்கு வரிகளைக் கேளுங்கள்.

[ போதையில்லா தமிழ்நாட்டைப் பார்க்க முடியுமா

திராவிட மாடலிலே டாஸ்மாக்கைப் பூட்டமுடியுமா

சரக்கு வித்து கவருமெண்டு நடக்கவேணுமா

தேர்தல் அறிக்கையிலே சொன்னதெல்லாம் காகிதம்தானா? ]

திருச்சியில் 20-06-2024 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கோவன்
திருச்சியில் 20-06-2024 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கோவன்

”போன ஆட்சியில் அந்தப் பாடல் வைரல் ஆன அளவுக்கு இருந்த போராட்ட வீச்சு இப்போது இல்லை என்கிறார்களே?”

”எங்களுக்கு இப்போது கைவசம் தனி யூட்டியூப் சேனல் கிடையாது. சி.பி.எம். தோழர்கள் டைஃபி அமைப்பு சார்பில் போதைக்கு எதிராக இயக்கம் நடத்தினார்கள். அறந்தாங்கியில் ஒரு நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்தார்கள். அங்கு நிகழ்ச்சி நடத்தினோம். அதைத் தவிர, நான் வசிக்கிற திருச்சி, உறையூர் பகுதியில அக்கம்பக்கமாக இருந்த மூன்று கடைகளை மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்புகள் இணைந்து அகற்ற வைத்தோம். அதே இடத்தில் எலைட் பார் கொண்டுவருவதாக இருந்த தகவல் கிடைத்தது. மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு அந்த பார் முயற்சியை நிறுத்திக்கொண்டார்கள். எங்கே டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடுகிறார்களோ அல்லது எங்களை அழைக்கிறார்களோ அங்கு சென்று போராடி மதுக்கடையை மூடவைத்திருக்கிறோம். இப்படி லால்குடி போற பாதையில் அன்பிலில் ஒரு கடையை எங்கள் போராட்டத்தின் மூலம் மாற்றவைத்தோம். திருச்சி- பெரம்பலூர் போகும் வழியில் சனமங்கலம் கடையையும் மாற்றவைத்தோம். திருச்சி பீமநகரிலும் மக்கள் போராடி, எங்களை அழைத்தார்கள். அந்தக் கடையை அகற்ற வைத்தோம்.

இப்படி பாடியும் இருக்கிறோம், மூடியும் இருக்கிறோம்.

கடந்த ஆட்சியில் நாங்கள் பாடியதால் என் மீது வழக்கும் ஊடக வெளிச்சம் கிடைத்ததால், நான் கோவன்னு அறியப்பட்டேன். இந்த ஆட்சியில் எங்களின் நடவடிக்கைகள் பாடல்கள் ஊடக வெளிச்சத்துக்கு வரவில்லை.”

2023 மே 2ஆம் தேதி வெளியான பாடல்
2023 மே 2ஆம் தேதி வெளியான பாடல்

”ஆனாலும் தி.மு.க.வை ஒருபக்கம் நீங்கள் ஆதரிக்கத்தானே செய்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?”

”தி.மு.க.வை குறிப்பாக இந்தியா கூட்டணியை அரசியல்ரீதியான காரணத்துக்காக ஆதரித்திருக்கிறோம். காரணம், இந்திய அரசமைப்புச்சட்டத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு கட்சி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான். அதற்காக, தி.மு.க. மக்களுக்கு எதிராகக் கொண்டுவரக்கூடிய திட்டங்களை எதிர்த்து போராட்டம் செய்துகொண்டேதான் இருக்கிறோம். உதாரணமாக, நிலம் எடுப்புச் சட்டமெனக் கொண்டுவந்தார்கள். அதை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். கார்ப்பரேட்டுகளின் கோரிக்கையாக 12 மணி நேரம் வேலை சட்டம் கொண்டுவருவோம் என சட்டம் கொண்டுவந்தார்கள். அதற்கெதிராக நாங்களும் போராடினோம். அது நிறுத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மரக்காணம் கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்தபோது, அதற்கு முன்னரே நாங்கள் பாடல் வெளியிட்டோம். பொதுவாக, அப்போது இளைஞர்கள், மக்களுக்கு போதைப் பிரச்னை பெரும் சிக்கலாக இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து கடைகளை மூடுவது குறித்து பெரிய அக்கறை இல்லை. மக்கள் விரும்பாத இடங்களில் அகற்றினார்களே தவிர, சரிபாதியாகக் குறைப்பது, மூடுவது என இல்லை.

கஞ்சா ’ஒழிப்பது’ தி.மு.க. அரசுத் தலைமைக்கு ஆர்வமாக இருக்கலாம். அரசின் காவல்துறைக்கோ நிர்வாகத் துறைக்கோ கட்சிக்காரர்களுக்கேகூட ஆர்வம் இல்லை. காவல்துறை அவர்களின் பணியை சுதந்திரமாகச் செய்யட்டும் என விடுகிறார்கள். விளைவு, நிர்வாகத் துறையின் காவல்துறையின் ஆதரவோடு இந்தப் பிரச்னை மிக மோசமாகத்தான் போய்க்கொண்டுதான் இருக்கிறது. இதில் தி.மு.க.வை நாங்கள் ஆதரிப்பது என்கிற பேச்சே இல்லை. எந்த சமரசமும் இல்லை.

அரசியல்ரீதியாக பா.ஜ.க.வுக்கு எதிராக, பாசிச எதிர்ப்புக்காக தி.மு.க. மேடையிலேயே நாங்கள் பிரச்சாரம் செய்திருக்கிறோம். வரும் ஜூலை 1ஆம் தேதி திருத்தப்பட்ட மூன்று சட்டத் தொகுப்புகளை பா.ஜ.க. கொண்டுவருகிறது. அதை முதலமைச்சர் எதிர்த்து கடிதம் எழுதி இருக்கிறார். இந்த விஷயத்தில் திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம். ”

ஏபிசிடி படத்து வடிவேல்போல சாட்டை துரைமுருகன்!

”இதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது, பா.ஜ.க.வோ அதன் சார்பில் மௌத்பீசாகப் பேசக்கூடிய சாட்டை துரைமுருகனோ கருத்தாளர் மணியோ சீமானோ போதைக்கு எதிராக பெரிய போராட்டம் நடத்தியதில்லை. நாங்க போராடிக்கொண்டு இருக்கிறோம். எங்கள் வேலையைச் செய்தபடி இருக்கிறோம். இது எப்படி ஆகிப்போச்சுன்னா ஒரு திரைப்படத்தில் (ஏபிசிடி), நின்றுபோன வண்டியை பின்னால் இருந்தபடி தள்ளுதள்ளு என சவுண்டு மட்டும் கொடுப்பார் வடிவேல். மற்றவர்கள் மூச்சைக் கொடுத்து தள்ளுவார்கள். நாங்கள் மூச்சைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இவர்கள் ரொம்பவும் வசதியாக இந்தச் சேனல்களில் உட்கார்ந்துகொண்டு தள்ளுதள்ளு எனப் பேசுகிற ஆட்கள்... இவர்களுக்கு என்ன வலி தெரியும்?

இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அங்கே செய்தோம் இங்கே செய்தோமென இல்லாமல், இதை ஒரு பிரச்சாரமாக- தனி இயக்கமாக, இவர்கள் சொல்லக்கூடிய கட்சிகள் செய்திருக்கின்றனவா? பா.ஜ.க.வெல்லாம் பேசுகிறதே, எங்கே கோவன் எனக் கேட்கும் அ.தி.மு.க. இதையெல்லாம் செய்யவேண்டியதுதானே? செய்வார்களா... ஏன்... கொண்டுவந்ததே அவர்கள்தானே... முதலில் மதுவிலக்கு என்றவர் எம்ஜிஆர், பாதுகாப்பான மது என டாஸ்மாக்கை உருவாக்கினது அவர்தானே?

பிராக்சிகளுக்கு அருகதை இல்லை!

அ.தி.மு.க., பா.ஜ.க., அவர்களின் பிராக்சிகள் எல்லாம் இதில் பேசுவதற்கு அருகதையே இல்லை.

இன்னொன்று, நாங்கள் மது ஒழிப்புக்காகப் போராடுகிறோம்; அதற்கான போராட்டங்களில் கலந்துகொள்கிறோம். ஆனால், எங்களுக்கு உழைக்கும் மக்களுக்கான பல பணிகள், வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. போதை வெறியைவிட இன்றைக்கு பெரும் ஆபத்து மதவெறி. அதற்காக நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபடுகிறோம். அந்தக் காணொலிகளை இந்தப் பேச்சு பேசுபவர்கள் கேட்கவில்லையா, பார்க்கவில்லையா? பொய்... சுத்தப் பொய்.

கோவன் அகால மரணம் அடைந்தார் என்கிறவரை பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் ஐ.டி. விங்குகளை வைத்து, அற்பத்தனமான காரியங்களைச் செய்கிறார்கள். எந்த நாகரிகமும் இல்லாமல் குடும்பத்தையே திட்டுகிறான். அவன்களுக்கெல்லாம் ஒரு விழுக்காடுகூட பதில்சொல்ல விருப்பமும் இல்லை, அவசியமும் இல்லை. தெரிந்தே இழிவுசெய்கிறான். படுமோசமான இழிவான வார்த்தைகளை தரம்தாழ்ந்த வார்த்தைகளைப் பேசறான். மக்களைப் பற்றித்தான் எங்களுக்கு கவலை... அவர்களிடம் செய்திகளைக் கொண்டுசெல்லும் பொறுப்பான ஊடகங்களுக்கு மட்டும் பேச விரும்புகிறோம்.” என்று கறாராக முடித்தார், பாடகர் கோவன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com