ரீல்ஸ் 1 :அந்தப் பொடியனுக்கு இரண்டு வயதுதான் இருக்கும். அம்மா அப்பா, அணில் ஆடு சொல்லப்பழகி யிருக்கிறானா தெரியவில்லை. ஆனால் அப்பாவுடன் அமர்ந்து ரீல்ஸில் எதிர்வீட்டு ஆண்டியை படு ஆபாசமாக கலாய்த்துக் கொண்டிருக்கிறான்.
ரீல்ஸ் 2: ‘ஏங்க கூமா பட்டிக்கு வாங்கோ’ கூவலை வைத்துக்கொண்டு பல்லாயிரம் ரீல்ஸ். அதில் ஒன்றில் தனது ரீல்ஸ் பார்ட்னரின் வாயை வாய் வைத்து உறிஞ்சி ‘தண்ணி அப்படியே இளநீ மாதிரியே இருக்குதுங்க’ என்கிறார்.
ரீல்ஸ் 3: ‘சிவனே’ என சாலையில் நடந்துபோய்க்கொண்டிருக்கிறார் ஒருவர். அவரைக் கூப்பிட்ட சில இளைஞர்கள், ‘ப்ரோ.. வீடியோ மட்டும் கொஞ்சம் எடுத்துக்கொடுங்களேன் ப்ளீஸ்!’ என சொல்லி மொபைலை அவரிடம் கொடுத்துவிட்டு, தங்களின் காஸ்ட்லி பைக்குகளில், சாகசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நபரும், மொபைல் கேமரா வழியாக பைக் சாகசங்களைப் பார்த்து ரசித்தபடி வீடியோ எடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்நபர், ஆர்வமிகுதியில் சாலையின் நடுவே வர, அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்த இந்த சம்பவம் போதும், ரீல்ஸ் மோகம் என்னவெல்லாம் செய்யும் என்பதைச் சொல்வதற்கு.
அனுதினமும் நம் கண்களில் தென்படும் ரீல்ஸ்களை ‘படையப்பா’ ரஜினி வழியில் ‘சாத்விகம்’, ‘ப்ரஜோதகம்’, ‘பயானகம்’ என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். செல்லப் பிராணிகளின் சேட்டைகள், ஒத்திசைவான நடனங்கள், மாமியார் – மருமகள் க்ரிஞ்ச் சண்டைகள், குழந்தைகளின் கொஞ்சல் மொழிகள் ஆகியவை ‘சாத்விகம்’ என்றால், இன்னொரு பக்கம் ஆபாச உரையாடல், உடல் பாகங்களைக் கடை விரித்தல், காது குடையும்போது இருக்கும் முகபாவத்துடன் டூயட் பாடலுக்கு வாய் அசைத்தல் ஆகியவை ‘பிரஜோதம்’. இன்னொரு பக்கம், சாலை, தண்டவாளம், மலை முகடு, கட்டடங்களின் உச்சி போன்ற இடங்களில் சாகசங்கள் செய்து, பார்ப்பவர்களின் அட்ரிலீனை அதிகரிக்கச் செய்யும் ‘பயானகம்’ இன்னொரு வகை. இதுபோக, போலீஸ் ஸ்டேசனிலிருந்து ‘கெத்தாக !?’ வெளியில் வருவது, அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவது, சிட்டி பஸ் டாப் மீது டான்ஸ் ஆடுவது போன்றவற்றையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பதெனத் தெரியாமல் இருக்கிறது.
இன்றைய தேதியில், பிள்ளைகளுக்கு சோறு ஊட்டக்கூட ரீல்ஸ் தேவைப்படுகிறது. ரீல்ஸ் பார்க்கும் பழக்கமில்லாத குழந்தைகளைக் காட்டுபவர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்டே அறிவிக்கலாம். குழந்தை-களுக்கே இப்படி என்றால், இளைஞர்களுக்குக் கேட்கவா வேண்டும்..? கைவிரல்கள் தேயத் தேய ஸ்வைப் செய்து ரீல்ஸ் பார்க்கிறார்கள்.
கொரானாவுக்கு முன், கொரானாவுக்குப் பின் என இந்த ரீல்ஸ் கலாச்சாரத்தை இரண்டாகப் பிரிக்கலாம். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ரீல்ஸ் கலாச்சாரத்திற்குப் பின்னால், ‘K’ வடிவத்தில் நீடிக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. காஸ்ட் ஆஃப் எஜூகேசன் தொடங்கி காஸ்ட் ஆஃப் லிவிங்வரை எல்லாமே தாறுமாறாகப் உயர்ந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வேலையில்லாத் திண்டாட்டம். விளைவு, பத்து வயதில் ‘டாக்டர் ஆகப்போறேன்’, ‘கலெக்டர் ஆகப்போறேன்’ என சொன்ன மாணவனை இருபது வயதில் ‘வெல்கம் டூ மை யூடியூப் சேனல்’ என குறுக்கு வழியில், ‘சூர்யவம்சம்’ சின்ராசாக மாறத் தோன்றவைக்கிறது.
இதற்கேற்ப, ரீல்ஸ் செலிப்ரிட்டிகளுக்கு கிடைக்கும் அதீத புகழ் வெளிச்சம், நன்றாகப் படித்து வேலைக்குப் போகிறவர்களையும் ‘செட்யூஸ்’ செய்கிறது. கல்வி நிலையங்களுக்கே சீஃப் கெஸ்டாக ரீல்ஸ் பிரபலங்கள் அழைக்கப்படுவதையும் ‘இசட்’ பிரிவு ரேஞ்சில் மாணவர்கள் கைகோர்த்து அவர்களை அழைத்துச்செல்வதையும் பார்க்கும்போது, தினமும் கையில் டப்பர்வேருடன், பேருந்திலும் லோக்கல் ட்ரெயினிலும் ஜூஸ் பிழியப்பட்டு, ஆபீஸுக்கு போய் வரும் ஓர் இளைஞனுக்கு, ‘பேசாம, நாமளும் ஒரு சேனல் ஆரம்பிச்சா என்ன?’ எனத் தோன்றுமா தோன்றாதா..?
இப்படி ரீல்ஸ் மோகத்தில் சிக்கியவர்கள், தங்களையறியாமல் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு ட்ராமாவை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். மனைவி வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தால், கணவன் கதவுக்குப் பின்னாடி ஒளிந்திருந்து சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறாள். காலையில் தூங்கி எழும்போது நம் அப்பா நம் கண்களைப் பொத்தி வாசலுக்கு அழைத்துப்போய் ஒரு பரிசு தரவேண்டும் என குழந்தைகள் எதிர்பார்க்கின்றனர். இவையெல்லாம் நம் வாழ்வின் ஏதோ ஒரு நாளில், எப்போதாவது நடந்ததுபோய், நாள்தோறும் நடக்கவேண்டும் என்றால் எப்படி..? விளைவு, இதையெல்லாம் இல்லாத வாழ்க்கை எளிதில் சலிப்படைந்துவிடுகிறது. ‘சேச்சே நமக்கு மட்டும் ஏன் இப்டி ஒரு லைஃப் பார்ட்னர்’ என ரீல்ஸ் தம்பதி சதீஷ் – தீபாவைப் பார்த்து ஏங்க வைக்கிறது. அவர்கள் மட்டும் ஏதோ 24 மணி நேரமும் ரீல்ஸில் வருவதுபோல கூத்தும் கும்மாளமுமாகத்தான் இருப்பார்கள் என முட்டாள்தனமாக நினைத்துக்கொள்ளச் செய்கிறது.
சமீபத்தில் மலையாளத்தில் ‘ப்ரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ என ஒரு படம் வந்தது. கல்யாணத்திற்குப் பெண்ணே கிடைக்காமல் அல்லல்படும் ஹீரோவான திலீபிற்கு, கடைசியாக ஒரு பெண் கிடைக்கிறார். ஆனால் அந்தப் பெண் ஒரு யூடியூப் பிரபலம். மணமேடையில் ஏறுவது தொடங்கி, ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள் நுழைந்து லைட் ஆஃப் பண்ணுவதுவரை எல்லாவற்றையும் ஆடியன்ஸுக்கு லைவாகவும் ரீல்ஸாகவும் போடும் குணம் கொண்ட அந்த பெண்ணால் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டாகிறது. ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணின் ‘கன்டன்ட்’ பசி எல்லை மீற, விஷயம் விபரீதமாகி, இருவரும் பிரிந்தே போய்விடுவார்கள். திரைப்படம் என்பதால், கிளைமேக்ஸில் ஒருவழியாக அந்தப் பெண் தன் தவறை உணர்ந்து, தன் கணவனுடன் இணைவதாக பாசிட்டிவாக முடிகிறது.
நிஜத்தில்… இந்த வாரம் தலைப்புச் செய்திகளில் பார்த்தோமே பிரியாணிக்கடைக்காரருடன் ரீல்ஸ் போட்டு மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல’ என்று ரீல்ஸ் போட்டு, தனது இரு குழந்தைகளைக் கொன்று சாகும் வரை ஆயுள் விதிக்கப்பட்டிருக்கிறாரே…அதுவே சாஸ்வதம்.
இன்னொரு பக்கம், தொடர்ந்து எந்நேரமும் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு, ‘Reduced Attention Span’ எனும் அதிக நேரம், ஒன்றில் கவனம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு ஈசியாக ‘போர்’ அடிக்கும். கரண்ட் இல்லையென்றாலோ வைஃபை வேகம் குறைந்தாலோ சட்டென எரிச்சல் அடைவார்கள். தியேட்டருக்கு படம் பார்க்கப் போனால்கூட, டைட்டில் போட்டு படம் ஆரம்பிப்பதற்குள் இன்ஸ்டாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிடுவார்கள். பொறுமை காத்தல் எனும் குணமே அவர்களை விட்டு விலகி போய்விடும். இப்படிப்பட்டவர்களுக்கு புத்தக வாசிப்பு என்பதெல்லாம் நடக்காத காரியம்.
இந்த நிலையில் ரீல்ஸில் Auto Scroll-ன்ற புது வசதியை அறிமுகப்படுத்துகிறது இன்ஸ்டாகிராம். ஒரு ரீல்ஸை பார்க்க ஆரம்பித்தால் போதும் அடுத்தடுத்து அதுவே தானாகவே பிளே ஆகும். நாசமாப்போச்சு.
‘சரி, இதெல்லாம் எனக்கும் தெரிகிறது. ஆனால் ரீல்ஸ் மோகத்திலிருந்து மீள முடியவில்லை’ என்கிறீர்களா..? முடியும். முதலில் ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம்தான் ரீல்ஸ் பார்ப்பேன் என ஒரு குறைந்தபட்ச நேரத்தை முடிவு செய்துகொண்டு, அதை அலாரமாகவும் வைத்துவிட்டு பின் ரீல்ஸைப் பார்க்கத் தொடங்குங்கள். ‘கண்டெண்ட் ஃபில்டர்’ எனும் ஆப்சனைப் பயன்படுத்தி, உங்களுக்கு உபயோகமான, எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய டாப்பிக்குகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வீடியோக்களைப் பாருங்கள். வாரம் ஒருநாள் ‘ரீல்ஸ் ஃப்ரீ டே’ எனத் திட்டமிட்டு அந்த நாள் முழுக்க ரீல்ஸ் பார்க்கவேப் பார்க்காதீர்கள். கண் முன்னே எது நடந்தாலும் அதை ரீல்ஸ் கன்டன்டாக பார்ப்பதையும் உடனே மொபைலை எடுத்து பதிவு செய்வதையும் விட்டுவிட்டு, நடக்கும் நிகழ்வுகளை எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அமைதியாக ரசியுங்கள்.
அதேசமயம் காவல்துறையினர், பைக், ஓடும் ரயில் என சாகச வீடியோக்கள் எடுப்பவர்களை வெறுமனே எச்சரித்து அனுப்பாமல், கடுமையான தண்டனைகள் வழங்கவேண்டும். முன்னதாக, இதற்கான தூண்டுதல் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை அழிக்கும் முயற்சிகளை பள்ளிகளிலிருந்தே அரசு தொடங்க வேண்டும். சமூக வலைதள நிறுவனங்களுடன் கலந்துபேசி இதுபோன்ற விபரீத ரீல்ஸ்களைப் பதிவேற்றம் செய்தாலே அவை தானாக நிராகரிக்கப்படுவதுபோல ஒழுங்குப்படுத்த வேண்டும். இவையெல்லாம் கடைபிடிக்கப்பட்டால் அடுத்து வரும் தலைமுறையினராவது உருப்படியான ஒரு வாழ்க்கையை வாழ வழி பிறக்கும்.
செய்வார்களா..?