மெனோபஸ்... பெரி மெனோபாஸ்! அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!

மெனோபஸ்... பெரி மெனோபாஸ்!
அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்!
Published on

அவளுக்கு வயது நாற்பதுக்கு நடுவில்.  அவளுக்கு வரும் மாதாந்தர பீரியட்கள் முறை தவறுகின்றன. கை கால் மூட்டுகளில் அவ்வப்போது வலி. எதைப் பார்த்தாலும் எரிச்சல்.  எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதில் திடீரென உடலில் ஆங்காங்கே வெப்பம் அதிகரிப்பதுபோல் உணர்ந்து,  திடீரென வியர்வை பொங்குகிறது. தூங்கும்போதும் இது ஏற்பட்டு உறக்கம் கெட்டுவிடுகிறது.

என்ன ஏதென்று பதறுகிறவளுக்குத் தெரிந்துவிடுகிறது, அது தனக்கும் மெனோபாஸ் ஏற்படப்போகிறது என்பதற்கான அறிகுறி. இன்னும் சில ஆண்டுகளில் அவளுக்கு பீரியட்கள் சுத்தமாக நின்றுவிடும். ஆனால் அதற்கு முந்தைய ஆண்டுகளில் அதாவது  ‘பெரிமெனோபாஸ்’  என்று அழைக்கப்படும் இச்சமயத்தில் இதுபோன்ற அவஸ்தைகளை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என!

உடம்பில் அங்கங்கே சூடாவது  என்கிற அறிகுறி சுமார் 80 சதவீத பெண்களுக்கு  இருக்கும். அது மட்டுமல்லாமல் ஏராளமான பல அறிகுறிகளும் இத்துடன் சேர்ந்தோ சேராமலோ இருக்கலாம். தூக்கமின்மை, குழப்பம், பெண்ணுறுப்பில் வறண்ட தன்மை, மூட்டுவலி போன்றவை.

இதற்கெல்லாம் காரணம்? ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் அளவு இந்த சமயத்தில் இஷ்டத்துக்கு ஏறி இறங்குவதால்தான் இந்த பிரச்னைகள் தோன்றுவதாக மருத்துவம் கூறுகிறது. மெனோபாஸ் ஆனபிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து, ஒரே சீராக நீடிக்கும். பலருக்கு இந்த அறிகுறிகள் மெனோபாஸ் தொடர்பானவை என்று புரியாமல் தொல்லைகளுக்கு உள்ளாகிறார்கள்.

ஆனால் இதன் மறுபக்கம் இந்த வயதில் எல்லா பிரச்னைகளும் பெரிமெனோபாஸால் வருகிறது என்று தள்ளிவிடுவதும் நடக்கிறது.  மூட்டுவலி ஈஸ்ட்ரோஜன் குறைவால் மட்டுமல்ல ஆர்த்தரைட்டிஸிலும் வரும். ஆழமாக சோதனைகள் செய்தால் ரத்த சோகை, தைராய்டு குறைபாடு, வைட்டமின் குறைபாடுகளும் இருப்பது தெரியும். ஆகவே இந்த சமயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டியதும் அவசியம்.

மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகள் வருவதாக 2000-வது ஆண்டு ஆரம்பத்தில் ஒரு ஆய்வு சொல்லவே, ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்துபோனது. அந்த ஆய்வு மிகச் சிறிய அளவில்தான் பாதிப்பு இருப்பதாகச் சொன்னது. அந்த பாதிப்புகளை விட பயன்கள் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே பயப்படத் தேவையில்லை என நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது. ஈஸ்ட்ரோஜனை மாத்திரை வடிவிலோ தோலில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகள் வடிவிலோ எது மருத்துவர் ஆலோசனைப்படி பொருத்தமோ அதை எடுத்துக்கொள்ளலாம். ஹார்மோன்கள் ரிஸ்க் என மருத்துவர்கள் நினைக்கையில் இந்த அறிகுறிகளை சரிசெய்ய ஒவ்வொன்றுக்கும் மருந்துகள் இருக்கின்றன.

எனக்கு இதெல்லாம் வேண்டாம்; பல்லைக் கடித்துக்கொண்டு கடந்துவிடுவேன் என்றுதான் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த வயதில் உருவாகும் தூக்கமின்மை முத்லிய அறிகுறிகள் இதயப் பிரச்னைகள், நீரிழிவு போன்றவற்றிலும் கொண்டுபோய் விடலாம். பெண்ணுறுப்பில் ஏற்படும் வறட்சியால் சிறுநீர்த் தொற்று உருவாகலாம். மெனொபாஸையொட்டி, எலும்புகளின் அடர்த்திக் குறைவு ஏற்படலாம். இந்த அறிகுறிகள் சாதாரணமாக 5-7 ஆண்டுகள் தொடர்ந்து வரும் வாய்ப்புகள் இருப்பதால் மகளிர் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரையில் பொதுவாக நாற்பத்து ஐந்து முதல் ஐம்பது வயது நடுவில்தான் மெனோபாஸ் அறிகுறிகள் ஏற்படும். அரிதாக சிலருக்கு முன்னதாக ஏற்படலாம்.

‘இந்த கட்டத்தில் பெண்களுக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டால் கருப்பை புற்றுநோய் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.  இதைப் பரிசோதிக்காமல் விடுவதால் பிற்காலத்தில் புற்றுநோயுடன் வருகிறவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். பீரியட் நிற்கும் சமயத்தில் நிறைய ரத்தப்போக்கு இருந்திருக்குமே நீங்கள் அச்சமயம் மருத்துவரிடம் பரிசோதித்திருக்கலாமே என்று கேட்டால், நாங்கள் இது வழக்கமாக ஏற்படுவது என நினைத்து விட்டு விட்டதாக சொல்வார்கள். முன்கூட்டியே இதைக் கண்டறியவேண்டும் என்பதில் கவனம் தேவை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் நல மருத்துவர் தமிழ்த்தென்றல் அரவிந்த்.

பெரிமெனோபாஸ் சமயம், கருத்தரிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. அந்த சமயத்திலும் உண்டு.  ஒரு விந்தணுவும் ஒரு கரு முட்டையும்தான் கருத்தரிக்கத் தேவை. பெரிமெனோபாஸ் முடிந்து ஓராண்டு பீரியட் வராமல் கடந்தபின்னர்தான் இனி கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற உறுதியான முடிவுக்கு வர முடியும்.

இந்த மெனோபாஸ் பற்றிய விழிப்புணர்வும் விவாதங்களும் இப்போதைய நவீன உலகில் தற்போதைய தலைமுறையில்தான் பெண்களிடையே உருவாகி இருக்கிறது. முந்தைய தலைமுறைகள் செய்வதறியாது கடந்துபோனதை இந்தத் தலைமுறை விழிப்போடு கண்காணிப்பது நல்லதுதான்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com