ஏடிஎம் கார்டுகூட குடும்பத்தின் கையில்… மாறுமா மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை?

உலக மாற்றுத்திறனாளிகள் நாள் சிறப்புக் கட்டுரை
பார்வை மாற்றுத்திறனாளிகள்
பார்வை மாற்றுத்திறனாளிகள்
Published on

உலகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், விருதுகள், என பல வகைகளில் மாற்றுத்திறனாளிகள் நாள் (03-12-2025) இன்று வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வேளையில் இந்த ஆண்டுக் கருப்பொருளான ’மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சமூகங்களை ஊக்குவித்தல் மூலம் சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தல்’ குறித்து கொஞ்சம் சிந்திப்போமா !

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் இடம்

மாற்றுத்திறன் என்பது மருத்துவ வரையறைகளைத் தாண்டி, சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களின் கலவையாகும் என அமர்த்யா சென் (2009) குறிப்பிடுகிறார். ஒரு மாற்றுத்திறனாளி இங்கு குறைபாட்டுடன் மட்டுமே பிறக்கிறார் அவரை ஊனமுற்றவராக அல்லது செயல்பட இயலாதவராக மாற்றுவது சமூகத்தின் அறியாமை அல்லது அலட்சியம். மாற்றுத்திறனாளிப் பெண்கள், பாலின பாகுபாடு மற்றும் உடல் குறைபாடு என இரட்டைச் சவால்களை எதிர் கொள்கின்றனர். வன்முறைக்கு ஆளாதலும், கல்வி மறுக்கப்படுதலும் அவர்கள் வாழ்வில் தொடர்கதையாக உள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் வரலாறு

கண்டுகொள்ளப்படாமலும், பிறர் கருணை கோருவதாகவும் இருந்த மாற்றுத் திறனாளர் உரிமைகளின் வரலாறு, 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை உலக மனித உரிமைகள் பொதுப் பிரகடனம் மூலம் அனைவருக்கும் சம உரிமைகளை அங்கீகரித்ததிலிருந்து தொடங்கியது. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கை UNCRPD (2006) ஆம் ஆண்டு சட்டபூர்வமான ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு உலக நாடுகள் மாற்றுத்திறனாளர் பிரச்சினைகளை கவனத்திற்கெடுத்துக் கொண்டன.

நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDGs, 2015) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் மாற்றுத் திறனாளர் உரிமைகள் ஒருங்கிணைக்கப்பட்டன; சமத்துவக் கொள்கைகளும் வலுப்படுத்தப்பட்டன. இவற்றைச் செயலாக்க இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (RPWD Act,2016) நடைமுறைப்பட்ட்து. இதோ சமூக முன்னேற்றத்தின் அடிப்படை முயற்சிகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை இணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் அழைப்பாக இவ்வருட மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருள் அமைந்துள்ளது.

சமூக ஒருங்கிணைப்புக்கான முன்னெடுப்புக்கள்

சமூக ஒருங்கிணைப்பின் முதல்படி மாற்றுத்திறனாளிகளை வரவேற்பதான சூழலை உருவாக்குவது என உணர்ந்த அரசு, The Accessible India Campaign மூலம் சாய்வு தளங்கள், மின்தூக்கி, தொடு உணர் பாதைகள், சக்கர நாற்காலி, தாழ்தளப் பேருந்துகள் என இந்தியா முழுமையும் பொது கட்டமைப்பு, பொது போக்குவரத்து வசதிகளை அணுகக்கூடியதாக ஏற்படுத்தியுள்ளது. பொது நிகழ்ச்சிகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களை கட்டாயமாக்குதல், அரசு இணைய தளங்களை திரைவாசிப்பான்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்தல் என தகவல் தொடர்பினை அணுகக்கூடியதாக மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது.

தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்திருப்பது, அவர்களை உதவிகளை பெற்றுக்கொள்ளும் இடத்திலிருந்து அதிகார மையத்திற்கு நகர்த்தி இருப்பது ஆகச்சிறந்த முன்னெடுப்பு.

21 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசுத் துறைகளில் சமவேலை வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக அரசின் பல்வேறு துறைகளில் 119 பணி இடங்களைக் கண்டறிந்து தமிழக அரசு, ஆணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஐ.டி. துறை மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு(CSR) அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்குகின்றன.

மருத்துவ சிகிச்சைகள், கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மருத்துவ காப்பீடு, உள்ளடக்கிய கல்வி, தொழில் தொடங்க கடனுதவி, திறன் மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் என பல்வேறு சட்டங்களும் திட்டங்களும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன.

சமூக ஒருங்கிணைப்பில் சிக்கல்கள்

இத்தனை முயற்சிகளுக்கு பின்னும் வறுமையுடன் போராடி 10 ரூபாய் பேனா விற்கும் பார்வைக் குறைபாடுடையவரை அன்றாடம் ரயில் நிலையங்களில் கடந்துதான் வருகிறோம். ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றுள்ள ஆயிரமாயிரம் பார்வைக்குறைபாடு உடையோர் தனியார் பள்ளிகளில் வேலைக்கு அமர்த்தப்படுவது இல்லை.

தசைச் சிதைவு நோய் மற்றும் மூளை முடக்குவாதம் உடைய குழந்தைகள், சத்துணவு இன்றி, சுகாதார வசதிகள் நிறைவுறாமல் கிராமங்களில் இன்றும் துன்புறுகின்றனர். நகரங்களில் படித்த பெற்றோர், சமூக மதிப்பு காரணங்களுக்காக மாற்றுத் திறனாளி அடையாள அட்டை கூட வாங்காமல் குழந்தைகளை மறைத்து வாழும் அவலமும் தொடர்கின்றது.

பல துறைகளால் தோண்டப்பட்ட சாலைகள் சக்கர நாற்காலிகள் செல்வதற்கு ஏதுவாக இல்லை. வீடுகளே அணுகல் குறைபாட்டுடன் இருப்பதால் சுய வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது.

மிக முக்கியமாக முடிவெடுத்தல் மாற்றுத்திறனாளிகளின் கையில் இல்லை. கல்வி, வேலை, திருமணம், விவாகரத்து, குழந்தைப்பேறு போன்றவற்றில் சுயாதீனமாக முடிவெடுக்க பெற்றோரோ, சுற்றத்தாரோ, சமூகமோ அவர்களை அனுமதிப்பது இல்லை.

மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை முதல் ஏடிஎம் அட்டைகள்வரை குடும்பத்தினரே கையாளுகின்றனர். பொருளாதார சுதந்திரம் முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.

அரசியல் பங்கேற்பு சமூக ஒருங்கிணைப்பினை அளவிடும் ஒரு வலிமையான அளவுகோல்களில் ஒன்றாகும். ஆனால் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகளுக்கு அது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அணுகல் குறைவுடைய வாக்கு சாவடிகளில் இருந்து அரசியல் இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.

சமூக பார்வையில் மாற்றமே, சமூக ஒருங்கிணைப்பின் வழி !

உலகளவில் 7 பேரில் 1 நபர் மாற்றுத்திறனுடன் வாழ்கிறார் என்று ஐ.நா. தரவுகள் குறிப்பிடுகிறன . இவ்வளவு பெரிய மனித சக்தியை விலக்கி, வறுமை ஒழிப்பு மற்றும் சமவாய்ப்பு போன்ற நிலையான வளர்ச்சி இலக்குகளை உலகம் அடைய இயலாது. “மாற்றுத் திறனாளிகள் சமூகத்தில் முழுமையாக பங்கேற்க, அவர்களைத் தடுக்கும் அனைத்து தடைகளையும் அகற்றுவது அவசியம்.” என முன்னாள் ஐ.நா. செயலாளர் பான் கி-மூன் வலியுறுத்துகிறார்.

சமூகத்தில் உள்ளார்ந்து இருக்கும் ஏற்ற தாழ்வு மனப்போக்கே சமூக ஒருங்கிணைவின் தடையாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த மேம்பட்ட சமூகத்தை அடையும் இப்பயணத்தில் அரசின் சட்டங்களோ, திட்டங்களோ மட்டும் உதவாது. சமூகத்தின் அங்கமான ஒவ்வொரு நபரும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணம் முதல் இடஒதுக்கீடுவரை, எதுவும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை எனும் மாற்றம் சமூகப் பார்வையில் ஏற்பட வேண்டும். இத்தகைய அடிப்படையான சிந்தனை மாற்றமே பெயரளவில் உள்ள சமூக ஒருங்கிணைவை உண்மையாக்கும்.

(கட்டுரையாளர், சிறப்புக் கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர், பார்வை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் - மண்டல மையம், சென்னை)

revbest15@gmail.com

logo
Andhimazhai
www.andhimazhai.com