1 வாரம்கூட ஆகாத புது மாப்பிள்ளை... மனைவியின் கண் எதிரே காஷ்மீரில் பலியான கடற்படை அதிகாரி!

1 வாரம்கூட ஆகாத புது மாப்பிள்ளை... மனைவியின் கண் எதிரே காஷ்மீரில் பலியான கடற்படை அதிகாரி!
Published on

நாடு முழுவதும் நேற்று இரவு முதல் ஒரே ஒரு படம், காஷ்மீர் பெகல்காம் பயங்கரவாதத்தின் கொடும் சாட்சியமாக பார்த்தவர் மனங்களில் எல்லாம் பாடாய்ப் படுத்துகிறது. 

திருமணமாகி ஒரு வாரம்கூட ஆகாதநிலையில் கடற்படை அதிகாரியான தன் கணவனை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதைப் பார்த்து கையறுநிலையில் பெருந்துயரில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார், படத்தில் உள்ள அவரின் இளம் மனைவி! 

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த லெப்டினண்ட் வினய் நர்வால், 3 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தின் கொச்சியில் கடற்படையில் முறைப்படி இணைந்துகொண்டார். கடந்த 16ஆம் தேதியன்று ஹிமான்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்தகையோடு, தேனிலவுக்காக சுவிட்சர்லாந்து செல்வது இவர்களின் திட்டம். ஆனால் விசா உடனடியாகக் கிடைக்கவில்லை.

திட்டத்தை மாற்றிக்கொண்ட தம்பதியர், காஷ்மீரின் பல இடங்களுக்கும் சென்றுபார்த்துவிட்டு, அங்குள்ள குட்டி சுவிட்சர்லாந்து பகுதிக்கும் தவறாமல் சென்றனர்.

விதி, சதி என்பதற்கு அப்பால், கடற்படை வீரனை சட்டென காலன் பறித்துக்கொண்டான்.

ஆறு நாள்களுக்கு முன் தன்னுயிராய் வந்த நேர்வாலை தன் கண் முன்னே எங்கிருந்தோ வந்த பயங்கரவாதக் குண்டுகள் இரையாக்கிக்கொண்டதைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து ஹிமான்சி இன்னும் மீளவில்லை.

நர்வாலின் மற்ற உறவினர்களும் தங்கள் குடும்பத்தின் முக்கிய இளம் தூணை இழந்ததில் அதிர்ச்சியில் உடைந்துபோய் இருக்கிறார்கள்.

“ குர்கானில் கடந்த 6ஆம் தேதி அவனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது முதல் எங்கள் ஒட்டுமொத்த குடும்பமே பெரிய கொண்டாட்டங்களில் இருந்துவந்தோம். உத்தரகண்டில் 16ஆம் தேதி திருமணம், கர்னாலில் 19ஆம் தேதி திருமண வரவேற்பு. பி.இ. படித்து கடற்படையில் சேர்ந்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கடற்படைப் பயிற்சியை அவன் முடித்தபோதிருந்தே கல்யாணத்தைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டோம். திருமண நிகழ்ச்சிகள் மிகவும் மகிழ்ச்சியாக நடந்துமுடிந்து, இரண்டு பேரும் தேனிலவுக்குப் போனார்கள். ...” என ஊடகத்தினரிடம் நாதழுக்கப் பேசிய கவா சிங், வினய் நர்வாலின் சின்னத் தாத்தா.

அரியானாவின் கர்னாலுக்கு அடுத்த 10ஆவது கி.மீ.ல் உள்ள பூசாலி கிராமம்தான், வினய்க்குப் பூர்வீகம். கர்னாலின் ஒரு சொகுசு ரிசார்ட்டில் நர்வால்- ஹிமான்சி திருமணம் கொண்டாட்டத்துடன் நடைபெற்றது என நினைவுகூரும் அவரின் தாத்தா இரக்பீர் சிங், “மதுபன் காவல்நிலையத்தினர்தான் முதலில் தகவல் சொன்னார்கள். பிறகு கர்னால் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலிருந்து மீண்டும் அழைத்து அதிர்ச்சித் தகவலை உறுதிப்படுத்தினார்கள்.” என்கிறார் துயரோடு.

வினயின் தாயார், குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறார். தந்தை, ஜிஎஸ்டி வரித் துறையில் அதிகாரி. அவரும் வினயின் ஒரே தங்கையும்தான் சிறீநகரிலிருந்து விமானம் மூலம் தில்லி வழியாக வினயின் உடலைக் கொண்டுசென்றார்கள்.

பரந்த புல்வெளியில் ஆபத்துக்கு ஒதுங்கக்கூட இடமில்லாதபடியான ஓர் இடத்தில், பயங்கரவாதத் துப்பாக்கியின் சூட்டுத் தாக்குதலில் வினய்க்கு நெஞ்சிலும் கழுத்திலும் இடது கையிலும் காயங்கள். மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

இன்று மாலையில் வினயின் இறுதி ஊர்வலத்துக்கு முன்னர்வரை ஹிமான்சியின் அழுகையும் கதறலும் அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தபடி இருந்தது. ஹிமான்சியின் தந்தையும் தாயும் அவரைத் தேற்ற முயன்றும் முடியாமல் அவரை சடலம் இருக்குமிடத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும் அளவுக்கு அவர் மிகவும் உடைந்து அழுதபடியே இருந்தார்.

அரியானா சட்டப்பேரவைத் தலைவர் ஹர்விந்தர் கல்யாணும் கர்னால் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்மோகன் ஆனந்தும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

முதலமைச்சர் நயாப் சிங் சைனி, வினயின் தாத்தாவிடம் காணொலிக்காட்சியில் பேசி ஆறுதல்கூறினார். கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஆறுதல்கள், தேறுதலைத் தரக்கூடும் என்றாலும்...

தேனிலவு முடித்துவிட்டு வரும் மே முதல் தேதியன்று வினயின் பிறந்த நாளைக் கொண்டாடத் தயாராக இருந்தோமே என விம்மி விம்மி அழுகின்றனர், அவரின் குடும்பத்தினர்!

இந்த அழுகைக் குரலைக் கட்டுப்படுத்த யாரிடமும் ஒரு சொல்லும் இல்லை, இப்போதைக்கு!

logo
Andhimazhai
www.andhimazhai.com