நாகை மாவட்டத்தில் ஆயக்காரன்புலம் என்கிற ஒரு ஊர், இப்போது அரிமா சங்கத்தின் கண் தானம் சேவையின் மூலம் பெருமைக்குரிய பங்காற்றி வருகிறது. இறந்தவர்களைப் புகைப்படம் எடுக்கக் கூட அனுமதிக்காத ஊர்கள் உள்ள இந்தத் தமிழ்நாட்டில் ,கண்தானம் பெற்று இறந்தும் கண்ணொளி கொடுக்கும் சேவையில் ஒளிர்ந்து வருகிறது.இந்தச் சேவையில் ஆயக்காரன்புலம் அரிமா சங்கம் மாநிலத்திலேயே முன்மாதிரியாகத் திகழ்கிறது. ஒரு முறை ஒரே ஆண்டில் 175 ஜோடிக் கண்களைத் தானம் பெற்றுச் சாதனை படைத்தது. இப்படிப் பார்வை இழந்தவர்களுக்கு ஒளி தரும் சேவையில் சிறப்பு பெற்ற அதே ஊர், கண்ணொளியால் மட்டுமல்ல அறிவொளியாலும் சிறந்து விளங்குகிறது. அதற்குக் காரணம் அங்குள்ள ஒரு பள்ளி. அதுதான் இரா. நடேசனார் அரசினர் மேல்நிலைப்பள்ளி.
ஆயக்காரன்புலம் என்கிற ஊர் மட்டுமல்ல. அதைச் சுற்றிலும் உள்ள பல சிற்றூர்களும் கல்வியால் இன்று வளர்ந்து பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்து நிற்கின்றன. இதற்குக் காரணமான அந்தப் பெருமைக்குரிய பள்ளி, இரா.நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆயக்காரன்புலம் பல வரலாறுகளைக் கொண்டது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது 26.06.1950 இல் திறந்து வைக்கப்பட்ட அந்தப் பள்ளி வளர்ந்து பெரிதாகிக் கிளை பரப்பி நிழல் தரும் ஆலமரமாக பேருரு கொண்டு இன்று காட்சி தருகிறது. அந்தக் காலத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பள்ளிக்கு நிலக் கொடை வழங்கியவர் நடேசனார் என்பவர். ஊரில் அவரைவிடப் பெரும் பணக்காரர்கள் இருந்தும் கல்விப் பணிக்காகத் தனது நிலத்தின் கணிசமான பகுதியை அதாவது, ஏழரை ஏக்கர் நிலத்தை அளித்துக் கொடை வள்ளலாகத் திகழ்ந்தவர் தான் இரா. நடேசனார். அந்த நிலத்தின் பெறுமதி இன்று பல கோடி இருக்கும். அவரது நினைவாகவே அந்தப் பள்ளிக்கு இரா.நடேசனார் அரசு மேல்நிலைப்பள்ளி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி தொடங்கிய போது கட்டட நிதிக்காக அந்த ஊரில் திருமணத்துக்கு ஆகும் செலவுப் பணத்தைப் பள்ளிக்குக் கொடையாக அளித்துவிட்டு திருமணத்தை 'நிலாக் கல்யாணம்' என்ற பெயரில் இரவில் நடத்தியவர்கள் பலர் உண்டு. அந்த ஊரின் மண்ணோடும் மரபோடும் கலாச்சாரத்தோடும் கலந்து இன்று காலத்தின் மௌன சாட்சியாக அந்தப் பள்ளி கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறது.
கல்விக்கு மட்டுமல்ல கண்டிப்புக்கும் பெயர் பெற்ற அந்தப் பள்ளியில் படித்து விட்டு வெளியே சென்றவர்கள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், டாக்டர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், ஆட்சித்துறை உயர் அதிகாரிகள்,தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று உலகெங்கும் பரவி இருக்கிறார்கள்.
'பள்ளியின் பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் 'என்கிற அளவிற்குத் தரத்தைத் தக்க வைத்துக் கொண்டதில் உள்ளூர் ஆசிரியர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அதிகம்.
ஊரில் எண்ணற்ற கட்சிகள் இருந்தும் அரசியல் உள்ளே நுழையாத பள்ளியாக அது இருந்து வந்தது.அரசியல் நுழையாததால் தான் சரியான கல்விச் சூழல் அமைந்து சமரசமற்ற கல்வியைத் தர முடிந்தது.
இப்பள்ளியின் மாணவர் என்பதற்குப் பிற ஊர்களில் ஒரு தரமுத்திரை உண்டு. முதல் தலைமுறையாகப் பள்ளிக்குள் நுழைந்த மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி இன்று மூன்றாம் தலைமுறையாகவும் தனது கல்விப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது .
பள்ளிக்கு முன்னாள் மாணவர்களிடமிருந்து நிரந்தரக் கல்விப் புரவலர் வைப்பு நிதியாக 75 லட்ச ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது. இந்த நிதியாக லட்சங்களில் கொடுத்தவர்கள் மட்டுமே 29 பேர். வடபாதி , காசி. அன்பரசு என்பவர் மட்டுமே ஐந்து லட்சத்து 4 ஆயிரம் வழங்கி அசத்தியுள்ளார். இப்படி திரட்டப்பட்ட நிதியின் வட்டித் தொகையினைப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளிக்கு, இந்த 2025 பவளவிழா ஆண்டு. அண்மையில் இப்பள்ளியின் பவள விழா நடைபெற்றது. அன்று பள்ளி விழாக் கோலம் பூண்டிருந்தது. கண்ணில் தென்பட்ட அனைவரது முகங்களிலும் விழாவின் உற்சாகம் மின்னியது.
பள்ளியின் பவள விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தலைமை வகித்தார். மாவட்டக் கல்வி அலுவலர் துரைமுருகு வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தனது தலைமை உரையில், அரசின் நலத்திட்டங்களை எடுத்துரைத்து மாணவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் காசி. பழனியப்பன் பேசும்போது, "நான் இந்தப் பள்ளியில்ஏழரை ஆண்டு காலம் பணியாற்றினேன்.எனது தோழர் பி ஆர் அவர்களின் மாணவராக உள்ளவர்தான் நமது கல்வி அமைச்சர் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்றவர், அமைச்சரிடம் நேரடியாகச் சில கோரிக்கைகளை வைத்தார். அவை
1.வேதாரண்யத்தை ஒரு கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
2. இப்பள்ளிக்கு வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு வசதியாக மேலும் வசதியாக மேலும் ஒரு சமூக நீதி மாணவர் விடுதிஅமைத்துத் தர வேண்டும் .
3.இப்பள்ளி தேர்தல் காலத்தில் வாக்கு எண்ணும் மையமாகவும் இருப்பதால் ஒரு பெரிய ஆடிட்டோரியம் அமைத்துத் தர வேண்டும், என்று கோரிக்கைகளை வைத்தவர், "நிறைவாக ,குலோத்துங்க சோழனின் வெற்றிக்கு உழைத்த தளபதி கருணாகர தொண்டைமான் போல ,நடேசனார் குடும்பத்துத் தளபதியாக இருந்து இவ்விழா சிறப்பதற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்த ஆசிரியர் அ.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறேன்' என்றார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பள்ளியின் பவள விழா ஆண்டு மலரை வெளியிட்டார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் மலரைப் பெற்றுக் கொண்டார். மலரைப் பெற்றுக்கொண்ட மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன் பேசும்போது , "இந்தப் பள்ளியின் வெள்ளி விழாவின்போதும் பொன்விழாவின் போதும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருந்தார். அதேபோல இப்போது 75 வது ஆண்டு பவள விழாவின் போதும் திராவிட மாடல் தளபதி அவர்கள் ஆட்சியில் இருக்கிறார் .அதே போல் நூற்றாண்டு விழாவின் போதும் திராவிட மாடல் அரசுதான் ஆட்சியில் இருக்கும் "என்று பேசினார்.
விழாவில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, "ஒரு பள்ளியின் வெள்ளி விழாவாக இருந்தாலும்,பொன் விழாவாக இருந்தாலும், பவள விழாவாக இருந்தாலும் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என்று ஒவ்வொருவரும் ஒன்று கூடி இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாதிரி விழாவின் பெருமை என்னவென்று சொன்னால்,சாதி மதம் இனம் இவற்றை எல்லாம் கடந்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் விழா என்பது பள்ளி ஆண்டு விழாவாகத்தான் இருக்கும். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கு வந்திருப்பதற்காக மகிழ்ச்சியடைகிறேன். பாராட்டுகிறேன். அதற்கு நன்றி சொல்வது என் கடமையாக இருக்கிறது.
அப்படி நான் கலந்து கொண்டு பேசும்போது கல்வியை நாம் போற்றுகிறோம்; பள்ளிக்கூடத்தை நாம் பாராட்டுகிறோம் ;கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களைப் ஆசிரியர்களை பாராட்டுகிறோம்;
முன்னாள் மாணவர்களைப் பெருமைப்படுத்துகிறோம்; இந்தப் பள்ளிக்காக தங்களுடைய பங்களிப்பை வழங்கியுள்ள அனைத்து கொடை வள்ளல்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக நாம் இதைக் கொண்டாடுகிறோம்.முதல் கொடை வள்ளலாக இந்தப் பள்ளிக்காக ஏழரை ஏக்கர் நிலம் அளித்த நடேசனார் அவர்களைப் போற்றும் விதமாகவும் தான் இங்கே நாம் கொண்டாடுகிறோம்.
பவளவிழா மலர் புத்தகத்தில் 'இது உன் பள்ளி! பெருமைப்படு! பெருமைப்படுத்து! ' என்று எழுதி இருக்கிறது .என்னைக் கேட்டால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அதை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இங்கே பேசியவர்கள் வள்ளுவர், ஒளவை, பாரதிதாசன் போன்ற பெருமக்களின் கருத்துக்களைக் கூறினார்கள். அப்படிப்பட்ட உயரிய கருத்தை உயர்த்திப் பிடிக்கின்ற அரசாகத் தான் நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது.அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.இந்தப் பள்ளியின் லோகோவில் பார்த்தால் கணினி இருக்கிறது; வள்ளுவர் இருக்கிறார் ;மாணவர் இருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது தொழில்நுட்பத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது புரியும் . இதையெல்லாம் வைத்துத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை மாணவர்கள் இங்கிருந்தே கற்றுக் கொள்ள வேண்டும் என்று அது சார்ந்த ஹைடெக் லேப்,ஸ்மார்ட்போர்டு கொண்டு வருகிறார். எதிர்காலத்தை மனதில் வைத்து வெளிநாடு போய் தான் நம் பிள்ளை கற்க வேண்டுமென்றில்லை, இங்கிருந்தே கற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று செயல்படுகிறார். தொழில்நுட்ப ரீதியாக அதை எல்லாம் உணர்ந்து படிக்கும் பிள்ளைகளாக நீங்கள் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். 75வது ஆண்டு விழாவில் 75 லட்ச ரூபாய் கொடையாக வைத்திருக்கிறீர்கள். அது நூறாண்டு கடக்கும்போது ஒரு கோடியாக மாறும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்று ஒன்றிய அரசே பாராட்டும் அளவிற்குத் தமிழகக் கல்வி உள்ளது. இங்கே நடேசனார் அவர்களின் பெயரைக் கேட்டபோது கல்விக்காக பணியாற்றிய திராவிட இயக்கத் தலைவர் சி. நடேசனார் அவர்களது பெயரும் நினைவில் வருகிறது.
அன்று கல்வி இவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. கல்வி கற்பதற்குச் சென்னைக்கு வாருங்கள். நான் உங்களுக்குத் தங்குவதற்கு இடம் தருகிறேன் என்று தன் விடுதிக்கு அழைத்தவர்தான் திராவிட இயக்கத் தலைவர் சி. நடேசன் அவர்கள் .
அப்போதெல்லாம் உணவு விடுதிக்குச் சென்றால் கூட யார் உட்கார்ந்து சாப்பிட வேண்டும்? யார் நின்று கொண்டு சாப்பிட வேண்டும்? யார் வெளியில் நின்று சாப்பிட வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது அதை மாற்றியது திராவிட இயக்கம்.
பள்ளிப் பருவம் அது சுற்றித்திரிகிற மகிழ்ச்சிகரமான காலம் தான். ஆனால் எந்தத் தவறான பழக்கங்களுக்கும் செல்லாமல் கல்வியில் கவனத்துடன் படிக்க வேண்டும்.படிப்புக்கு தடையாக எது வந்தாலும் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார் முதல்வர் .
நான் இங்கே வந்து இருக்கும் பெற்றோர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். நமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது கூடாது.
நமது பிள்ளையிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது நமது பொறுப்பு ,நம்முடைய கடமை.நாம் பெற்ற பிள்ளை தான் நமது சொத்து. நமக்கான செல்வம் அந்தப் பிள்ளைதான். அந்தப் பிள்ளையின் திறமை என்ன என்று பார்க்க வேண்டும்.
எல்லா பிள்ளையாலும் நூற்றுக்கு நூறு வாங்க முடியாது.ஒரு பிள்ளை 70 வாங்கும் ,ஒரு பிள்ளை 60 வாங்கும், ஒரு பிள்ளை ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கும். ஆனால் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்குகிற பிள்ளையிடம் உள்ள திறமை, நூற்றுக்கு நூறு வாங்கிய பிள்ளையிடம் இருக்காது என்பதை உணர வேண்டியது தான் நமது பெற்றோர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் உள்ள மிகப்பெரிய கடமை.
அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் சொல்கிறார், 'பள்ளிக்கூடம் வந்து விடுங்கள் உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவது அரசின் கடமை' என்கிறார்.
ஒன்றிய அரசே இந்தியாவில் கல்விக்காக 78 ஆயிரம் கோடி ஒதுக்குகிற நிலையில் தமிழ்நாடு மாநில அரசு மட்டும் 46 ஆயிரம் கோடி ஒதுக்குகிறது என்கிறபோது தமிழக முதல்வர் இதை இழப்பாக, செலவாகப் பார்க்கவில்லை இதை ஒரு முதலீடாகப் பார்க்கிறார். அப்படி ஒரு முதலீடாக அன்றே பார்த்த நடேசனார்தான் இங்கே திருவுருவச் சிலையாக நின்று கொண்டிருக்கிறார்.
ஒரு அரசாங்கம் திட்டம் என்கிற பெயரில் ஏதாவது ஒரு நூலை கொடுத்து அதைப் பிடித்துக் கொள்ள வேண்டும் மேலே வர வேண்டும் என்று தான் பல திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. பெற்றோர் பட்ட கஷ்டங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்று தான் அந்த திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
மாணவர்களிடம் நான் வைக்கிற வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று மட்டும் தான் உங்கள் பெற்றோர்கள் நினைப்பார்கள்.
நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் தெரியுமா என்று எந்தஅப்பா அம்மாவும் சொல்லிக் காட்டுவதில்லை. ஆனால் அதை உணர்ந்தவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்."நீ பட்டதெல்லாம் போதும்மா பன்னிரண்டாம் வகுப்பு முடித்து நல்ல கல்லூரியில் சேர்ந்து விடுகிறேன், கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகி உன்னை உட்கார வைத்து சோறு போடுகிறேன். நான்கு வருடம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்கிற அளவுக்கு மாணவர்கள் இருக்க வேண்டும். சொல்லக் கூடத் தேவையில்லை, செயலில் காட்டும் அளவுக்கு நீங்கள் படிக்க வேண்டும்.அப்துல் கலாம் ஐயா போன்றவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து மட்டும் தான் வர முடியுமா? இங்கிருந்து ஒரு அப்துல் கலாம் ஐயா வந்துவிட முடியாதா?இங்கிருந்து ஒரு ஐஎஸ்ஆர்ஓ நாராயணன் வந்துவிட முடியாதா? முடியும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்.
தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது போல் வாங்குகிற மதிப்பெண் மட்டுமே உன் வாழ்க்கையை மதிப்பீடு செய்து விடாது தம்பி. மதிப்பெண்கள் அவசியம் தான், அதே நேரத்தில் உனக்கான தனித்திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.தனித்திறன் வளர்த்துக் கொண்டால்தான் ஒட்டுமொத்தமாக உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்கும் என்பதற்காக இதைச் சொல்கிறோம்.
இங்கே ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க மூன்றரை முதல் நான்கு லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால், ஒரு வளமான அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
நீங்கள் நினைத்துப் பாருங்கள். எல்லா ஆசிரியர்களுக்கும் குடும்பங்கள் இருக்கின்றன, அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. ஆனால் தான் பெற்ற பிள்ளைகள் நன்றாக வர வேண்டும் என்பதைக் காட்டிலும் ,வகுப்பறையில் படிக்கும் 30 பிள்ளைகளும் நன்றாக வரவேண்டும் நினைக்கிற ஒரு இனம் ஆசிரியப் பெருமக்கள் இனம் தான்.அந்த ஆசிரியர்கள் சொல்வதை எப்போதும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
டீச்சர் என்னைத் திட்டுகிறார் என்று நினைக்காதீர்கள் நீங்கள் நன்றாக வரவேண்டும் என்று ஆசை இருப்பதால் தான் அப்படிச் சொல்கிறார்கள். நன்றாக படித்து மாதாமாதம் சம்பாதிக்கும் போது ஆசிரியருக்கா கொடுக்கப் போகிறாய்?
இங்கே பள்ளியில் செய்திருக்கும் செயல்பாடுகளைப் பார்க்கும் போது நல்ல தயாரிப்புகளைத் தான் இந்த ஆசிரியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களை நான் பாராட்டுகிறேன்.
இங்கிருந்து நீங்கள் வளர்ந்து பெரிய ஆளுமையாக வரும்போது , நான் உங்களைச் சந்திக்கக் கால் கடுக்கக் காத்திருக்கும் நிலை வர வேண்டும். அப்படி உயர்ந்த ஆளுமைகளாக நீங்கள் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.இந்தப் பள்ளி 75 ஆண்டிலிருந்து நூற்றாண்டு கடந்து சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" இவ்வாறு பேசினார்.
தனது பேச்சில் அமைச்சர், பள்ளி சார்ந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதற்கு ஆவன செய்யப்படும் என்றும் உறுதி அளித்தார்.
நிகழ்வின்போது இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் சமீபத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவருமான ஆசிரியர் செல்வ சிதம்பரம், தான் பெற்ற விருதுத்தொகையான ரூ10,000த்தை பள்ளி வளர்ச்சி நிதிக்காக அமைச்சரிடம் வழங்கினார்.
நிறைவாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வை. செந்தில்குமார் நன்றி கூறினார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த தலைவர் ந.அரிகிருட்டிணன், துணைத் தலைவர் த.சிவானந்தம், பொருளாளர் வே. சதாசிவம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் க. யாழினி , துணைத் தலைவர் பா. வீரமணி ஆகியோர் விழாவை முன்னெடுக்கத் துணை நின்றனர்.
விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். கே. வேதரத்தினம், என்.வி. காமராஜ் ,வேதாரண்யம் நகர மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி மற்றும் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.