‘நம்ம வாழ்க்கையும் பதிவாகணும் அண்ணன்'

‘நம்ம வாழ்க்கையும் பதிவாகணும் அண்ணன்'

2001 இல் மும்பையில் பணியிலிருந்த நான் சென்னைக்கு பணியிடமாற்றம் பெற்று வந்திருந்தேன். குடும்பச் சூழல் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியிருந்தது. உண்பதும், உறங்குவதும், உடுப்பதும் மட்டுமே வாழ்வா என்ற கேள்வி என்னை உறுத்தியபடியே இருந்தது. பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த கடலோரமும் அதன் அன்றைய நிலையும், என்னை அலைக்கழித்தபடியே இருந்தது. இத்தனைக்கும் நான் ஒரு கப்பலோட்டம்சார் தனியார் நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். ஒரு நாளின் பெரும் பகுதியைப் பணிசார்ந்தே கழித்தபடி இருந்தாலும், இரவு உறங்கப் போகும் வேளைகளில் நான் நிம்மதியைத் தொலைத்திருந்தேன்.

பழங்குடிகளான கடலோர மக்களின் வாழ்வு நிலையற்றது. ஆனால் தனித்துவமானது. சமவெளிச் சமூகத்தோடும், அங்கிருந்தே உருவாகும் ஆட்சி அதிகாரத்தோடும் இவர்களுக்கு பாரிய தொடர்புகள் இல்லை. வாழ்வு முற்றிலுமாகவே கடலோடும், கடற்கரையோடும் மட்டுமே முடிந்து விடுகிறது. அரசியலும், ஆட்சி அதிகாரமும் இவர்களது கற்பனைக்கும் எட்டாத விடயங்கள். தமிழகத்தின் வடக்கு - கிழக்கு கடற்கரைப் பிரதேசம்தான் இப்படியாக நிலத்துக்குத் தங்கள் முதுகையும், கடலுக்குத் தங்கள் முகத்தையும் காட்டியபடி இருக்கிறதென்றால், தெற்கு, தென் கிழக்கு மற்றும் தென் மேற்குக் கடற்கரைகள் நம்பிக்கைசார் பிரச்னைகளாலும் அந்நியப்பட்டுக் கிடக்கிறது. ஒதுங்கலும், ஒதுக்கப்படுவதும் பலநூறு ஆண்டுகளாக இங்கு நிதர்சனம். கல்வியால் பயன்பெற்று பல்வேறு தளங்களில் தடம் பதித்த கடற்கரைக்காரர்களும் சமூகத்தை, அதன் அவலத்தை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் குற கூறினார்களேயல்லாது, அந்த நிலைமாற சிறிதளவும் அக்கறை காட்டவில்லை. எழுத்து, கவிதை எனக் கிளம்பியவர்களும் ஆன்மிக அரசியலில் முகம் புதைத்து, அதையே சிலாகிக்கவும் செய்தார்கள்.

வாழ்தலின் புரிதல் ஏற்பட வேண்டுமென்றால், அது ரத்தமும் சதையுமாக பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தபடியே இருந்தது.

காரணம், மற்றநிலப்பரப்புகளிலிருந்தெல்லாம் வாழ்வு பதிவானபடியே இருந்தது. வாழ்வு பதிவு பெற்று அப்பதிவு பொதுப்பரப்புக்கு வாசிக்கக் கிடைத்தால்தான் அந்த மக்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை இங்கு இருக்கிறது. காரணம், வாசிப்பினால் ஏற்படும் பரஸ்பரப் புரிதல். அப்படிப் பதிவு பெற்ற சமூக மக்கள் தங்கள் அடுத்தடுத்த இலக்கான பொருளாதாரச் செழுமை, அரசியல் பிரதிநிதித்துவம் என முன்னேறியபடி இருந்ததை என்னால் உணர முடிந்தது. கடலோர வாழ்வைப் பதிவு செய்யவேண்டும், ஆனால் எங்கிருந்து, எப்படித் தொடங்குவது எனத் தெரியாமல் தவித்தேன்.

கல்லூரிக் காலத்திலேயே சாண்டில் யனையும், கல்கியையும் அறிந்திருந்தேன். ஜெயகாந்தன், அசோகமித்திரன், தி. ஜானகி ராமன், நகுலன், மௌனி, தஞ்சை பிரகாஷ் போன்றவர்கள் பின்னாளில்தான் என் வாசிப்பு வளையத்துக்குள் வந்தார்கள். முதுகலைப் பொருளாதார ஆய்வில் கடலோர மக்கள் வாழ்வையே எடுத்து, அதையே எம். ஃபில் மற்றும் முனைவர் ஆய்விலும் தொடர்ந்திருந்தேன். சூழல் காரணமாக, என்னால் முனைவர் ஆய்வின் இறுதிக் கட்டத்தை நெருங்க முடியவில்லை. ஆனால் அர்ப்பணிப்போடு செய்த அந்தக் கள ஆய்வும், வாசிப்பும் என்னுள் உறைந்து போய் இருந்தது. முனைவர் பட்ட ஆய்வின் தோல்விக்குப் பின், வாழ்வே தடம் மாறி மும்பை சென்று தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தில் பணியமர்ந்து, பின்மாற்றலாகி சென்னைக்கு வந்திருந்தேன். விடுமுறை, பணி ஓய்வு வேளைகள் திரும்பவும் கடலோர வாழ்வுக்கு நெருக்கமான சூழலை ஏற்படுத்தி என்னைப் பழைய மனநிலைக்குக் கொண்டுவந்துவிட்டன.

அன்று 2004 மே மாதம் 17ம் நாள், பணி நிமித்தமாக அதிகாலையிலேயே சென்னை துறைமுகத்துக்குள் வந்திருந்தேன். அன்றைய தினம் எங்கள் நிறுவனத்துக்கான நான்கு கப்பல்கள் அவைகளுக்கான தளங்களில் சரக்கு ஏற்றுவதும், இறக்குவதுமாக இருந்தன. ஒவ்வொன்றாக பார்த்துவிட்டு, இறுதியாக தூரத்தில் ஜோர்டானிலிருந்து உரம் ஏற்றி வந்திருந்த நான்காவது கப்பலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். அந்தக் கப்பலில் கிரேன்களின் அசைவு நின்றிருந்ததால், என்னவோ ஏதோவென எண்ணியபடி வாகனத்தைத் துரிதப்படுத்திக் கப்பலை நெருங்கியபடியிருந்தேன். கப்பலின் கேங்வேயில் யாரோ ஒரு நபரை கைத்தாங்கலாக கீழே இறக்கியபடி இருந்தார்கள். என்னுடைய வாகனத்தைப் பார்த்ததும், கூட்டத்தை நோக்கி வார்ஃப் சூப்பர்வைசர் கத்துகிறான். ‘ஒரு லோட் லாரியில போட்டு அவன துறைமுகத்துக்கு வெளியே விட்டுருங்க, மத்தவங்க வேலைய ஆரம்பிங்க' என்கிறான். பக்கத்தில் ஒரு சக தொழிலாளியோ ‘அய்யோ அவங் கால் முறிஞ்சி போச்சி, எப்புடி வீட்டுக்குப் போவான்'எனப் பதறுகிறான். அவசரமாக காரிலிருந்து இறங்கி, கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைகிறேன். ‘சார் இவன் தனியார் தொழிலாளி, தேவயில்லாத வேல பாத்திருக்காம். வேலைய இப்ப உடனே ஆரம்பிச்சிறுலாம்' என்கிறான் சூப்பர்வைசர். மற்றவனோ ‘இல்ல சார், காற்று வேகமா இருந்ததால கப்பல் ரோல் ஆகிகிட்டு இருந்திச்சி, ஹோல்டு மேல நின்னு சிக்னல் காட்டிகிட்டு இருந்த சீஃப் ஆஃபிசர் கீழே விழுந்திரக் கூடாதேன்னு இவம் ஓடிப் போயி பிடிச்சான். அவரோ இவனப் பாத்து ‘நான் ஒரு பெர்சியன் நீ என்னைத் தொடக்கூடது'ன்னு தள்ளி விட்டுட்டார் சார்' என்கிறான். குனிந்து பார்த்தால் காலில் அடிபட்டு கீழே கிடந்தவனின் முகமோ, எனக்கு மிகவும் பரிச்சயமானதாய் இருக்கிறது. இந்த முகத்துக்கு காரணமான மற்றொரு முகம், எனக்கு அந்த நொடியில் ஞாபகத்திற்கு வர, அதிர்ந்து போனேன்.

நான் பிறந்த ஊரில் எனது பள்ளிப் பருவத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் மாபெரும் கடலோடி, வீரன்,  நீதிமான். கம்பெடுப்பதும், கலகம் செய்வதும் கடற்கரையூர்களைப் பொருத்தவரையில் வீரவிளையாட்டுகள். அப்படியான விளையாட்டு ஒன்றில் துரோகத்தால் கொலை செய்யப்பட்டவர். அவர் தனியனாய் வேலெடுத்துப் பாய்ந்தால், எதிரே நிற்கும் கூட்டம் சிதறிச் சின்னாபின்னமாகும். பல ஆண்டுகளுக்குப் பின் தந்தையின் கொலைக்குப் பழிதீர்க்க, அடுத்து நடந்த கலகத்தில் மூன்று கொலைகளைச் செய்து, ‘என் தந்தையின் கொலை வழக்கில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, அதனால் நீதியை நானே எடுத்துக் கொண்டேன்' என நீதிமன்றத்தில் முழங்கியவன்தான் இப்போது கால் முறிந்து கிடக்கிறான் என் கண் முன்னே. மனதைத் திடப்படுத்தியபடியே அவனைத் தூக்கி, நான் வந்திருந்த காரிலேயே கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துவிட்டு என்னுடைய வேலையைப் பார்க்கப் போய்விட்டேன்.

ஒருவாரம் கழித்து, அவனிடமிருந்து வந்திருந்த தொலைபேசி அழைப்பால் அவனைப் பார்க்க மருத்துவமனை வந்திருந்தேன். என்னைக் கண்டதுமே அவன் தன் படுக்கையிலிருந்து எழும்ப முயன்றான். அவனைக் கையசைத்துத் தடுத்துவிட்டு அவனருகே சென்று அமர்ந்தேன். அவனது தலையணைப் பக்கத்தில் தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்' நாவல் இருந்தது. ஆச்சர்யத்தில் விழிபிதுங்கி அமர்ந்திருந்தேன். நான்தான் பெரிய படிப்பாளி, அறிவாளி மற்றவர்கள், அதிலும் குறிப்பாக உதவி வேண்டி நம்மிடம் வந்து நிற்பவர்கள் முட்டாள்கள் என்ற எண்ணம்தானே நம்மில் பலருக்கு இருக்கிறது. நானே இன்னும் தி.ஜாவை அறியாதவன், இவனுக்கு, அதுவும் ஒரு கரடுமுரடான தொழிலாளிக்கு எப்படி, என எனது ஏட்டுப் படிப்பு என்ற குப்பையைக் கிளறிய மேலாண்மைப் புத்தி யோசிக்கிறது. படித்த எனது அறியாமையும், ஆணவமும்... எனது அந்தத் தலைக்கனம் தவிடுபொடியான நேரமும், இடமும் அதுதான். பேச நா எழாமல் அமைதியாய்ச் சூழலை அவதானித்தபடி இருந்தேன். நிசப்தமாய்க் கழிந்த அந்த கணங்களை, அவனது தெளிந்த நீரோடை போன்ற குரலே மாற்றியது.

 ‘நீங்க வரமாட்டீங்களோன்னு நினைச்சேன். என்னைப் போலவே தவறுதலாய் வழிநடத்தப்பட்ட நிறைய இளைஞர்கள், கடற்கரையில இருக்காங்க. பழிவாங்குற உணர்வு, எங்ககிட்ட இருந்து போகமாட்டேங்குது.''

 ‘புத்தகங்கள் படிக்கிற..‘

 ‘சேலம் சிறையில் இருந்தப்ப, கண்காணிப்பாளர் புத்தகங்கள் தந்து வாசிக்கச் சொன்னார். அப்ப ஆரம்பிச்ச பழக்கம்.'

 ‘நல்லது.'

 ‘அந்தக் கண்காணிப்பாளர் இன்னொரு விசயமும் சொன்னார். கடற்கரையில இருந்து வாற குற்றவாளிகள், அடிதடி, கொலை இப்படித்தாம் வாறாங்களே தவிர ஏமாத்து, திருட்டு, பாலியல் குற்றம் எதுவுமே இல்லன்னு சொன்னார்.'

‘அப்படியா?'

 ‘சமவெளி மக்களோட பழகுறதுக்கு, நம்ம மக்கள் கிட்ட பெரிய தயக்கம் இருக்கு. ஆலய வழிபாடு, கடல் தொழில், சண்டை இதத் தவிர வேற எதுவும் நம்ம மக்களுக்குத் தெரியாது. ஒரு ரேசன் கார்டோ, பட்டாவோ அல்லது மின்சார இணைப்போகூட எடுக்கத் தெரியாது.'

‘காரணம் என்னென்னு நினைக்கிற?'

 ‘வெளியுலக வாழ்க்கை பற்றித் தெரிஞ்சி கொள்றதே இல்ல. படிக்காதவன்கிட்ட வாசிப்பு இல்லங்குறத ஒத்துக்கிறுலாம், படிச்சவன்கிட்ட வாசிப்பு அறவே இல்லாமப் போச்சி. மதவெறி,

சாதிவெறி புடிச்சி அலையிறான்வ. நம்மளோட வாழ்க்க பற்றியும் வெளிய யாருக்கும் தெரியில. மீனவர்கள்ன்னு எளக்காறமாப் பேசுறாங்க.'

 ‘ஏதாவது வேலை வாங்கித் தந்தா செய்யிறியா?' எனது குறுகிய மேலாண்மைப் புத்தி வேலை செய்த இடம் இது. ஆனாலும் என்னை அவன் சாமர்த்தியமாய்க் கையாண்ட விதம், அப்பப்பா.

 ‘கண்டிப்பாச் செய்வேன் அண்ணன் ஆனா...'

 ‘ஆனான்னா என்ன, சொல்லு.'

 ‘அதைவிட முக்கியமா, எனக்கு உங்ககிட்ட ஒரு வேண்டுகோள் இருக்கு. அடுத்த தலைமுறைகள் வாழ வழிவகுக்குற வேண்டுகோள்.'

 ‘சொல்லுப்பா..'

 ‘நம்ம வாழ்க்கையும் பதிவாகணும் அண்ணன். உங்ககிட்ட சொல்லனுமின்னு தோணுது. நீங்க எனக்கு வேலை வாங்கித் தந்தா அது என்னோட, அதிக பட்சமா என் குடும்பத்தோட முடிஞ்சி போயிறும். நான் ஒரு தொழிலாளியா வேல செஞ்சி எங் குடும்பத்தக் காப்பாத்திறுவேன். ஆனா வாழ்க்க பதிவானா, அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பயனுள்ளதா இருக்குமே.'' ‘...'

‘பழி பாவத்துக்கு அஞ்சாத, அதனாலேயே சிரமப்படுற நான் சொல்றேன் எழுதுங்க அண்ணன்.''

 ‘...'

‘முதல்ல நம்ம பிள்ளைகள் படிக்கட்டும், அடுத்தவங்க படிக்கிறது அப்புறம். பெருமைய எழுதி எந்த பிரயோசனமும் இல்ல, வாழ்க்கைய, அதன் பாடுகள, கொடுமைய, அவலத்த எழுதுங்க. குறைந்த பட்சம் அடுத்து வாற தலைமுறைகளாவது திருந்தி நடக்க வழிபிறக்கும்.' அந்தத் தம்பியின் குரல், ஒட்டுமொத்த கடலோர மக்களின் பிரக்ஞையின் குரலாய் என் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துகொண்டே இருந்தது. அதன் பிறகு பதிப்பாளரான தமிழினி வசந்தகுமார் அவர்களைச் சந்தித்ததும் ஆழி சூழ் உலகு நாவல் வெளியானதும் அனிச்சையாய் நடந்து முடிந்த விடயங்கள். என்னைப் பொருத்தவரையில், ஒரு காலகட்டத்தின் அடித்தள மக்கள் வாழ்வை, அந்த வாழ்வுக்கான போராட்டத்தை, வலியை அக்கறையோடும் அதன் விழுமியங்களோடும் மற்றொரு காலகட்டத்தின் தலைமுறைகளுக்கு கடத்த முயன்றிருக்கிறேன்.

அடிப்படையான மனிதநேயமே என்னை என்றும்வழிநடத்துகிறது. போலியான சமூகப் போராளிகளால் வழக்குகள் வந்தன, இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த இரவு கழிந்தால், நாளை காலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சமூக அவமதிப்பு வழக்கு வாய்தாவுக்காக ஆஜராக வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் ‘நடப்பவை அனைத்தும் நல்லவையே, வாழ்வை விலகி நின்று வேடிக்கை பார்‘ அவ்வளவுதான். அனுபவமாகக் கொடுக்கப்பட்ட இந்த வாழ்வில் பள்ளமும், மேடும், முட்களும், பூக்களும் இருப்பதுதானே இயற்கைதானே. மேட்டில் நின்று பூக்களை வாங்கியபோது, பள்ளங்களில் தனிமையாய் முட்களில் இடறிய நினைவுகள் உள்ளிருந்து உரமேற்றுகின்றன.

என்னைப் போன்று அக்கறையோடு வாழ்வைப் பதிவு செய்யும் பல்வேறு நிலப்பரப்பின் சக பதிவாளர்களைப் போல், நானும் ஒரு பதிவாளன். இது காலம் தந்த, கடவுள் தந்த, இயற்கை தந்த பேறு.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com