மீண்டும் மீண்டுமா... பிரதமர் பேச்சும் டிரம்பின் வீச்சும்... நடப்பது என்ன?

மீண்டும் மீண்டுமா... பிரதமர் பேச்சும் டிரம்பின் வீச்சும்... நடப்பது என்ன?
Published on

மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக பாகிஸ்தான் மீதான இராணுவத் தாக்குதல் முடிந்தபோதும் அதன் பரபரப்பு அடங்கவில்லை. ஆனால் இதில் அமெரிக்கத் தலையீடும் குறிப்பாக அந்நாட்டின் அதிபர் டிரம்பின் வீச்சும் அதற்குப் பிந்தைய பிரதமர் மோடியின் பேச்சும் ஆச்சரியமூட்டும்படியாக உள்ளன.

ஏதோ தற்செயலாக ஒரு முறை டிரம்ப் தவறாகச் சொல்லிவிட்டாரோ என்றே எண்ணத் தோன்றியது. ஏனென்றால் அது அவரின் இயல்பும்கூட.

அமெரிக்க அரசியலில் அவர் செய்துவரும் அதிரடிகளை கோமாளித்தனமாக இருப்பதாகக் கூறி அங்குள்ள மக்கள் கோபத்துடனும் எதிர்த்தும் கண்டித்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

டிரம்ப் தான் போதாது என்று உலகின் முன்னணி செல்வந்தர் எலான் மஸ்க்கையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டது இன்னொரு முக்கிய காரணம்.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் டிரம்ப் அரசாங்கத்தின் புதிய முடிவுகளை எதிர்த்து இப்படி மக்கள் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையிலும், டிரம்போ அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் உக்ரைன் - இரசியாவுக்கு மாறிமாறி அறிவுரைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்.

இடையில் இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையும் வந்துவிட, டிரம்ப் பக்கமிருந்து சொல்லும்படியாக திட்டவட்டமான கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இரு தரப்பும் நேரடி இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டநிலையில், திடீரென அமெரிக்கத் தரப்பிலிருந்து சண்டை நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்திய அரசும் பாகிஸ்தான் தரப்பும் பிறகுதான் இதைப் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்புகளை வெளியிட்டன.

பாகிஸ்தானில் அமெரிக்கத் தலையீடு புதிய விசயம் இல்லை எனும் நிலையில், இந்தியாவில் டிரம்பின் அறிவிப்புக்குக் கடும் அதிருப்தி வெளிப்பட்டது. மத்திய அரசுக்கு முன்னர் வெளிநாட்டு அரசின் அறிவிப்பு எப்படி வெளியிடமுடியும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவும் கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இதையே இடதுசாரிகள் தலைவர்களும் இதையே வலியுறுத்த பிரதமர் மோடிக்கு அரசியலாக நெருக்கடி ஏற்பட்டது.

அதையடுத்து, அவரின் சார்பில் வெளியிடப்பட்ட ஊடகச் செய்தியில், தற்போது அமைதி ஏற்பட்டாலும் பாகிஸ்தான் சிறு தாக்குதல் தொடுத்தாலும் பதில் தாக்குதல் தொடுப்போம் என்றும் மூன்றாவதாக ஒரு தரப்பு சமாதானப்படுத்தத் தேவையில்லை என்றும் அமெரிக்கத் துணை அதிபர் ஜேடிவான்சிடம் அழுத்தமாகச் சொல்லப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமரின் தகவலைத் தொடர்ந்து, முப்படைத் தளபதிகளும் அவரவர் கருத்துகளைக் கூறினார்கள்.

அதன்பிறகும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாடு முழுவதும் பேசுபொருளானது.

இந்தச் சூழலில்தான் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என அறிவிப்பு வெளியானது.

பிரதமரே வெளிப்படையாகப் பேசப்போகிறார் என்பதால், இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அறிவித்தபடி பிரதமரும் ஆவேசமாக உரையாற்றினார். மையமாக, பாகிஸ்தான் பயந்து நடுங்கி நம்மிடம் சண்டையை நிறுத்துமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டதாக பிரதமரின் பேச்சில் குறிப்பிடப்பட்டது. மேலும், தாக்குதல் தொடர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் மீண்டும் அழுத்தமாகச் சொன்னார்.

ஆனால், அவருடைய உரைக்கு முன்னால், மீண்டும் டிரம்பின் தகவல் ஒன்று வெளியானது. “ இந்தியா, பாகிஸ்தான் இரு நாட்டு அரசுகளையும், போரைத் தொடர்ந்தால் வர்த்தக உறவை முறித்துவிடுவதாக மிரட்டினேன்; அதனால்தான் உடனடியாகப் போரை நிறுத்திவிட்டார்கள்.” என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

வர்த்தகத்தை வைத்து அணு ஆயுதப் போரையே நிறுத்திவிட்டேன் என்று அவர் சொன்னதுதான், உச்சம்!

இவ்வளவு திருப்பங்களுக்கு இடையே டிரம்புக்குப் பிறகு பேசிய பிரதமர் மோடி தன் உரையில், அதைப் பற்றி ஒரு பொட்டுகூட குறிப்பிடவில்லை!

என்ன... தலைசுற்றுகிறதா?

அடுத்த உரைவரைக்கும் காத்திருப்போம்...

அதுவரை ஒரு சிறிய செய்தி இடைவேளை!

நன்றி, வணக்கம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com