சச்சின் 50

சச்சின் 50

தாத்தா கண்ணாடியைத் துடைத்தவாறு ஐபிஎல் பார்த்துக்கொண்டிருந்த பேரனை அழைத்தார்.

‘மும்பை இந்தியன் அணிக்காக சச்சின் டெண்டுல்கர் சன் அர்ஜுன் பந்து வீசுறாரு தாத்தா..' என்றான் பேரன்.

தாத்தா ஒரு நல்ல கிரிக்கெட் விசிறி. சச்சின் என்றதும் அவர் கண்கள் விரிந்தன.

‘கிரிக்கெட்டின் கடவுள் என்றால் சச்சின் தான்.. உனக்கெல்லாம் அவர் ஆட்டத்தைப் பார்க்க கொடுத்து வைக்கல... ஒரு நாள் போட்டிகளில் அவர் விளையாடுகிறார் என்றால் நாடு முழுக்க தெருக்கள் எல்லாம் காலியா இருக்கும் தெரியுமோ? இப்பல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு டபிள் செஞ்சுரி அடிக்கிறாங்க... முதன்முதலில் ஆண்கள் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்தவர் சச்சின் தான் தெரியுமா?'

‘அப்டியா தாத்தா.. சச்சின் ஒரு ஜீனியஸ்னு சொல்லுவாங்க'

‘ஜீனியஸ்னு சொல்லறதை விட கடும் உழைப்பாளின்னு சொல்லலாம். மும்பையில சாதாரண குடும்பத்தில் பிறந்த சச்சினுக்கு ஒரு கிரிக்கெட்டர் ஆகணும்னு ஆசை. அவர் அண்ணன் அஜீத் டெண்டுல்கர், தம்பியைக் கூட்டிட்டு அப்போ பிரபலமான பயிற்சியாளராக இருந்த ரமாகாந்த் அச்ரேக்கரிடம் போனார்.. அவரோட கோடைக்கால பயிற்சி முகாம்ல சேத்துக்கணும்னு கேட்டார். சச்சின் வலைப்பயிற்சியில் தன் திறமையைக் காண்பித்தா அச்ரேக்கர் எடுத்துக்குவார். ஆனால் எல்லோரும் பாத்திட்டிருக்கிற டென்ஷல, சச்சின் ஒழுங்கா ஆடல. இன்னும் கொஞ்சம் வயசாகட்டும் அப்பறம் பாக்கலாம்னு அச்ரேக்கர் சொல்ல, அஜீத் இல்லிங்க.. டென்ஷன்ல இப்படி ஆடறான், நீங்க கொஞ்சம் தள்ளி இருந்து பாருங்கன்னு சொல்ல, அச்ரேக்கருக்கு ஏதோ தோணியிருக்கு.. சரின்னு விலகி வந்து பார்த்தாரு.. சச்சின் இப்ப யாரும் இல்லன்னு டென்ஷன் இல்லாமல் ப்ரீயா ஆட, அவரை தன் முகாம்ல சேத்துகிட்டாரு அச்ரேக்கர்! அதிலிருந்து ஒரே ஏறுமுகம்தான். பதினைந்து வயதில் ரஞ்சிக்கு ஆடத் தேர்வான சச்சின் முதல் போட்டியிலேயே நூறு ரன்களைக் குவித்து இளம் வயதில் முதல்தரப் போட்டியில் சதம் அடித்தவர் ஆனார் தெரியுமா?'

‘தாத்தா... அப்புறம் இந்திய அணிக்கு தேர்வானார்… ஒரு நாள் போட்டியில 49 சதங்களும் டெஸ்ட் போட்டியில 51 சதங்களும் அடிச்சி 2013-ல் ஓய்வு பெற்றார்... அவர் ஓய்வை அறிவிச்ச நாளில் நீங்க சாப்பிடவே இல்லையாமே?'

‘ஹிஹி.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல... இனி யாருக்காக கிரிக்கெட் பார்க்கணும்னு நினைச்சேன்... மனசே சரியில்ல... சச்சின் மாதிரி கம்பீரமா நின்னு விளையாட, ஒரு ஆஃப் ட்ரைவ், ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் ஆட ஒருத்தன் பொறந்து வரணும்... ஒற்றை ஆளா நின்னு ஆட்டங்களில் அவர் போராடும்போது இந்த நாடே அவர் கூட நின்னு ஆடறமாதிரி இருக்கும்'

‘அவருக்கும் இதோ ஐம்பது வயசாயிடுச்சி தாத்தா..'

‘ஆம். 2011உலகக் கோப்பை ஜெயிச்சப்போ அது சச்சினுக்காகவே ஜெயிச்சதுன்னு தோனி சொன்னது நேத்து நடந்தமாதிரி இருக்கு... நடுத்தர குடும்பத்துல இருந்து ஒருத்தன் தனக்கு எது புடிக்குமோ அதை விடாப்பிடியா பின் தொடர்ந்து பயணம் செய்து உலகத்தின் உயரங்களைத் தொட்டான். அவன் எத்தனையோ இளைஞர்களுக்கு வழிகாட்டி.. உந்து சக்தி..'

“தாத்தா.. அதெல்லாம் சரி... அப்பா கூட நல்லா கிரிக்கெட் ஆடுவாராம். அதிலயே பெரிய ஆளா வரணும்னு நினைச்சாராம்! ஆனா நீங்க அதெல்லாம் ஆடக்கூடாது... படிப்புதான் முக்கியம்னு சொல்லி அவரைக் கட்டாயப்படுத்தி எஞ்சினியரிங் படிக்க வெச்சிட்டீங்களாமே... அப்பா நேத்து புலம்பிட்டிருந்தார்'

‘அது வந்து..'

‘போங்க தாத்தா.. நீங்க ரொம்ப மோசம்.'

மே, 2023 அந்திமழை இதழ்

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com