இரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அதிபர்
இரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அதிபர்

அப்பாடா... தடை இல்லை - இலங்கை அதிபர் தேர்தல் உறுதி!

Published on

இலங்கையில் அதிபர் தேர்தலில் யார் யார் போட்டி எனும் பரபரப்பு இருந்துவந்த நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் வழக்கு ஒன்று தாக்கல்செய்யப்பட்டது.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதியன்று தேர்தலில் வென்று, அதிபர் பதவியில் அமர்ந்தார், முன்னாள் இராணுவத் தளபதி கோட்டாபய இராஜபக்சே. ஆனால் அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டது. கடுமையான விலைவாசி உயர்வு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, பட்டினி என நாடு முழுவதும் மக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

தலைநகர் கொழும்பில் 2022 ஏப்ரல் 9ஆம் தேதி முதல் அறகலய எனும் பெயரில் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கியது. அதில் சிங்களர், தமிழர் என எந்த இனப் பாகுபாடும் இல்லாமல் பெரும் கூட்டம் திரண்டது.

கோட்டாபய இராஜபக்சே, இலங்கை முன்னாள் அதிபர்
கோட்டாபய இராஜபக்சே, இலங்கை முன்னாள் அதிபர்

ஒரு மாதப் போராட்டத்தின் முடிவில் அப்போதைய பிரதமர் மகிந்த இராஜபக்சே அமைச்சரவை கூண்டோடு பதவிவிலகியது. அதன்பிறகும், மக்கள் போராட்டம் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் அதிபர் மாளிகையைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.

அதைத் தொடர்ந்து அந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதியன்று விமானப் படை விமானம் மூலம் தப்பியோடிய அதிபர் கோட்டாபய மாலத்தீவுகளில் தஞ்சம்புகுந்தார். பின்னர், அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனிடையே, தன் அண்ணன் மகிந்தவுக்குப் பதிலாக இரணில் விக்கிரமசிங்கேவைப் பிரதமராக நியமித்திருந்தார், கோட்டாபய.

காலத்தின் கோலம் இராஜபக்சேக்களின் அரசியல் எதிரியான இரணிலுக்கு சர்வ கட்சி ஆதரவுடன் நாட்டைப் பாதுகாக்க வேறு யாருமில்லை என்கிறபடி, தற்காலிகமாக அதிபர் பதவியும் கிடைத்தது.

ஓராண்டில் அதிபர் தேர்தல் என அறிவிக்கப்பட்டாலும், அந்தத் தேர்தலை நடத்தும் அளவுக்கு தேர்தல் துறைக்குப் பணம் இல்லை.

இதே பணமில்லை என்கிற காரணத்தைச் சொல்லிதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிபர் வெளியிட வேண்டிய அறிவிப்பைக் காலம்கடத்திக்கொண்டே வருகிறார், இரணில் விக்கிரமசிங்கே.

ஆனாலும் அதிபர் பதவிக்கான தேர்தலை அதற்குரிய காலத்தில் நடத்தியாக வேண்டும் என்பது கட்டாயம். ஏனென்றால் தேர்ந்தெடுக்கப்படாத இரணில் எவ்வளவு காலத்துக்கும் அப்பதவியில் இருக்கமுடியாது.

இலங்கை சட்டப்படி, இந்த ஆண்டு நடைபெறவேண்டிய அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை இந்த மாதம் 17ஆம் தேதிக்குள் வெளியிட தேர்தல் ஆணையம் தயாராக இருக்கவேண்டும்.

எனவே, இன்னும் 12 நாள்களில் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருந்த சூழலில், இலங்கை உயர்நீதிமன்றத்தில் திடீரென ஒரு வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. அதில், அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்வரை இருக்கலாம் எனக் கூறி முன்னர் செய்யப்பட்ட சட்டத்திருத்தம் இன்னும் தெளிவாக்கப்படவில்லை எனக்கூறி, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இரணிலுக்கு வேண்டப்பட்ட தொழிலதிபரான லெனாவா என்பவர் தாக்கல்செய்த வழக்கில், ஒருவேளை அவருக்குச் சாதமாகத் தீர்ப்பு வந்திருந்தால், இரணில் மேலும் ஓராண்டுக்கு அதிபர் பதவியில் நீடிக்கமுடியும் என்கிற நிலை ஏற்பட்டது.

ஆனால், தலைமை நீதிபதி உட்பட 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அந்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரர் அரசாங்கத்துக்கு வழக்குச் செலவாக ஒரு இலட்ச ரூபாய் செலுத்தவும் அதிரடியாக உத்தரவிட்டது.

ஒருவேளை தேர்தல் தள்ளிப்போகுமோ என பதைபதைத்துக்கொண்டு இருந்த இலங்கை முக்கிய கட்சிகள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் நிம்மதியடைந்துள்ளன.

ஆழமான கட்டுரைகள், சுவாரசியமான செய்திகளுக்கு அந்திமழையை வாசியுங்கள்

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com