
அந்த வயதுக்குரிய தளர்ச்சி எதுவும் தெரியவில்லை. ஒற்றைக் கையில் ஒலிபெருக்கியை குரல் விலகாமல் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் எதிரே மேடையில் பாடும் குழுவினருக்கு இசை அசைவுகளை உணர்த்தியவாறே பாடுகிறார் இசைஞானி இளையராஜா: “அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே…” – அரங்கமே மெய்மறந்து கேட்கிறது. தொடர்ந்து “என் கனவும் நினைவும் இசையே… இசையிருந்தால் மரணம் ஏது…” என்று அவர் உணர்வு பொங்கப் பாடுகையில், அந்த வரிகள் அவருக்கு முற்றிலும் பொருந்தும் என்பதை பார்வையாளர்கள் உய்த்துணர்கிறார்கள். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு புலமைப்பித்தன் வரிகளில் “கோயில்புறா” படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல். இன்று கேட்டாலும் புத்துணர்வைத் தருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் – சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன், இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு (திரைத் துறையில் 50 ஆண்டுகள்) பாராட்டுவிழா – நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் (செப்.13) இப்படித்தான் தொடங்கியது. முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன் பங்கேற்றார்கள்.
சிம்பொனி இசையை (Valiant, Symphony Number 1) அரங்கேற்றுவதற்காக இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்பே, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாராட்டி வழியனுப்பி வைத்தார். உலக அரங்கில் வெற்றிகரமாக சிம்பொனியை அரங்கேற்றிவிட்டு சென்னை திரும்பிய போது, அரசு சார்பிலான வரவேற்பை அளித்து, ஒரு தமிழனாக, இந்தியனாக – உச்சம் தொட்ட கலை மேதையை அங்கீகரித்தார். அதைத் தொடர்ந்து இந்தப் பிரம்மாண்ட பாராட்டு விழாவை நடத்தியிருக்கிறார். ராயல் பில்ஹார்மானிக் சிம்பொனி இசைக் குழுவைச் சேர்ந்த 87 கலைஞர்களையும் சென்னைக்கு வரவழைத்து இந் நிகழ்ச்சியில் தனது “Valiant” சிம்பொனியை இசைக்க வைத்தது இளையராஜாவின் பெருமுயற்சி.
சிம்பொனி இசைக்குழுவினரை ஒருங்கிணைத்து இங்கே அழைத்துவந்து இசைக்க வைப்பது லேசானது அல்ல. இதை இளையராஜாவே நிகழ்ச்சியில் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றுவதற்கும் பதிவு செய்தவற்கும் பெரும் பொருட்செலவு ஆகியிருக்கும் என்று இசைத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வரை செலவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரத்தை இளையராஜா எப்படித் திரட்டினார், உரியவர்களை இனங்கண்டு எவ்வாறு ஒருங்கிணைத்தார் என்பதெல்லாம் - இசை கடந்து, இந்த வயதில் அவரது ஆழ்ந்த செயல்திறனுக்குச் சான்றாகும்.
ஆசியாவிலிருந்து முழு முதல் சிம்பொனி இசைக் கோர்வையை அமைத்தவர் என்ற வரலாற்றுப் பெருமையை நமக்கு தனது அர்ப்பணிப்பால் ஈட்டித் தந்திருக்கிறார் இளையராஜா. இது பற்றியெல்லாம் சற்றும் புரிதலன்றி, அரசு செலவில் ஏன் இந்தப் பாராட்டு விழா என்றெல்லாம் சமூக ஊடகங்களில், ஜல்லியடித்தார்கள்.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக நிகழ்ச்சியில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் உரை மிகச் சிறப்பாக இருந்தது. “நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா” என்ற பிரபலமான பாடல் வரிகளைக் குறிப்பிட்டுத் தொடங்கியவர், கலைத்தாய்க்கு மட்டுமல்ல, தமிழ்த் தாய்க்கும் சொந்தமானவர் இளையராஜா – அதன் பொருட்டே தமிழ்நாடு அரசு சார்பில் இந்தப் பாராட்டு என்றார். இளையராஜாவைப் பாராட்டுவதில் நாம்தான் பெருமையடைகிறோம் என்று புகழாரம் சூட்டிய முதல்வர், தமிழர் வாழ்வியலில் அவரது இசை எவ்வாறெல்லாம் கலந்திருக்கிறது என்பது பற்றியும் பேசினார். இளையராஜா எல்லைகளைக் கடந்தவர் என்று உணர்வுபூர்வமாகச் சொன்னவர், திருக்குறள் மற்றும் நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து உள்ளிட்ட சங்க இலக்கியப் பாடல்களுக்கும் அவர் இசையமைத்து அடுத்த தலைமுறையினரிடம் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இதுவரை இளையராஜா நமக்கு வழங்கிய இசைக்கு நன்றி தெரிவிக்கும் விழா இது என்று உவகையுடன் சொன்ன முதல்வர், இசைஞானி இளையராஜா பெயரில் ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் பெரும் ஆரவாரத்துக்கிடையே வெளியிட்டார். அத்துடன் நிற்கவில்லை. இளையராஜாவுக்கு மத்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்க வேண்டும் என்ற நெடுங்காலம் பலராலும் பல தளங்களில் வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கைக்கு வலு சேர்த்தவர், “அது நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன்” என்ற குறிப்போடு உரையை முடித்தார்.
முதல்வருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் உள்ளம் பொங்க நன்றி தெரிவித்துவிட்டு, சிம்பொனி இசைக் குறிப்பை தான் எழுதியது பற்றி வழக்கம் போல அவரது பாணியில் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார் இளையராஜா. தனது தலையைத் தொட்டுக் காட்டி - இங்கிருந்து சிந்தித்து, சிம்பொனி இசைக் குழுவினர் 87 பேருக்கும் தனித்தனியாக தாம் இசைக்குறிப்புகளை எழுதியதையும் அதைத்தான் அவர்கள் கவனம் சிதறாமல் இங்கே வாசித்தார்கள் என்றும் விளக்கினார். சிம்பொனி என்பது வெறுமனே ஒரு பாட்டு போடுவது போல என்று யாரும் நினைத்துவிடக்கூடாது, அது எத்தனை நுட்பமான திறனும் உழைப்பும் நிறைந்தது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்திவிட வேண்டும் என்ற தீவிரம் அவரிடம் தெரிந்தது.
இதற்குப் பிறகு, தனது திரையுலக வாழ்க்கையின் சுவாரஸ்யமான தருணங்கள் பற்றி பேசத் தொடங்கிய அவர், “ஜானி” படம் எடுத்த காலத்தில் ரஜினி, இயக்குநர் மகேந்திரன், நான் – மூவரும் குடித்தோம் என்றார். மேடையில் அமர்ந்திருந்த ரஜினி வேகமாக எழுந்துவந்து குறுக்கிட்டுப் பேசினார். “நானும் மகேந்திரனும் டிரிங்ஸ் சாப்பிட்டோம். சாமி, அதாவது சார்கிட்ட வேணுமான்னு கேட்டோம்…. அரை பாட்டில் பீர் அடித்துவிட்டு அவர் 3 மணி வரை போட்ட ஆட்டம் இருக்கே...” என்பதோடுகூட நிறுத்தியிருக்கலாம். “சாமி சினிமா சிசு, கிசு பற்றியெல்லாம் கேட்டார்… அண்ணனுக்கு அப்போ… ம்ம்…” என்று நீட்டினார். அந்த நிகழ்ச்சியின் உயரத்தையும் தனது உயரத்தையும் ஒரே சமயத்தில் ரஜினி சரித்த தருணம் அது.
திரையுலகப் பிரபலங்கள் மூன்று பேர், மது அமர்வில் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவதுதான் இயல்பு. நிலத்தடி நீர் குறைந்துவிட்டதன் விளைவுகள் பற்றியோ அல்லது கடல்நீரில் நெகிழிக் குப்பைகள் கலப்பது குறித்தோ அந்த நேரத்தில் பேசுவார்களா, என்ன…?
“போகிற போக்கில் அடிச்சுவிடுவார்…” என்பது போலப் பேசி ராஜா அதை முடித்துக்கொண்டார்.
இதற்கு முன்பும் ரஜினி, இளையராஜாவை பொது மேடையில் உரசிப் பார்க்க முற்பட்டிருக்கிறார்.
ஒரு முறை, “என்ன சாமி…. வரல, வரலேன்னீங்களே… இப்போ லட்சுமி நிறைய வருதுல்ல….” என்று காப்புரிமை சார்ந்து அவருக்கு வரும் வருமானத்தைக் குறித்துக் காட்டுவது போலப் பேசினார்.
இன்னொரு முறை, “வள்ளி” படத்தில் வரும் அற்புதமான பாடலான “என்னுள்ளே… என்னுள்ளே…” பாடலுக்கு இசையமைத்தது, கார்த்திக் ராஜா என்று போட்டுக் கொடுத்தார். இளையராஜா உச்சத்தில் இருந்த காலம். தொழில்ரீதியாக மகனிடம் இசைக்குறிப்புகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து, அந்தப் பாடல் வேலையை செய்யச் சொல்லியிருக்கலாம். அது அவர்கள் ஏற்பாடு. யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜாதான். இன்றும் அந்த ஒரே பாட்டால்தான் அந்தப் படம் ரசிகர்களால் நினைக்கப்படுகிறது. ராஜாவின் உயரத்தைக் குறைத்துக் காட்டுவதன்றி அந்தத் தகவலைப் பகிர்ந்ததில் வேறு நோக்கம் இருக்குமா என்பது விவாதத்திற்குரியது.
மது அமர்வு பற்றிக் குறுக்கிட்டுப் பேசிய பிறகு, ரஜினி தனது தனி உரையில் இளையராஜாவை பலவாறாகப் புகழ்ந்து பேசினார். “அவர் இசை உலகில்தான் வாழ்கிறார். அவ்வப்போது நமது உலகிற்கு வந்துவிட்டுப் போகிறார்…” என்று மிகச் சரியாகவே சொன்னார். இருந்தும்கூட, ஓர் இசை மேதைக்குரிய தமிழ்நாடு அரசின் சிறப்பான பாராட்டுவிழாக் கட்டமைப்பை, வழக்கமான தனது படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசுவது போன்ற பாணியைக் கடைப்பிடித்து, வேறுமாதிரி அசைத்துப் பார்த்தது – குன்றிய உணர்வையே பார்வையாளர்களிடம் எதிரொலித்தது.
கமல் ஹாசன் அவர் பாணியில் ஒரு கவிதை எழுதிவந்து அதைப் பாடி, தனது பாராட்டுகளைப் பதிவு செய்தார்.
சிம்பொனி குறித்து யாரும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்துப் பேசாதது லேசான வருத்தமே என்பது போல இளையராஜா நிகழ்ச்சிக்கு மறுநாள் விடுத்த வீடியோ செய்தியில் கூறியிருந்தது கவனத்திற்குரியது.
50 ஆண்டுகள். 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள். 8600 பாடல்கள். தனி ஆல்பங்கள். How to Name it, Nothing but Wind முதல் திருவாசகம், சமீபத்திய திவ்ய பாசுரங்கள் வரை இளையராஜாவின் இசைப் பயணம் அவருக்கு முன்னும் பின்னும் யாரும் நெருங்காத, நெருங்க முடியாத நீண்ட தடம். “ஜமா” என்ற கூத்துக்கலை பற்றிய படத்தை தனது இசையால் மக்களிடம் சேர்க்கிறார். வெற்றிமாறனின் “விடுதலை” - இரண்டு படங்களும் இளையராஜா இல்லாமல் ஒரு வெற்றிகரமான படைப்பாக மாறியிருக்க வாய்ப்பில்லை. மிகச் சமீபத்தில், “திருக்குறள்” மற்றும் “பேரன்பும் பெருங்கோபமும்” ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இரண்டு படங்களுக்கும் கதைக்களத்துக்கு உரிய இசையை நன்றாகவே வழங்கியிருந்தார். என்றாலும், பெரிதாகப் பேசப்படவில்லை.
இத்தனையும் கடந்து, எந்த முன்சாயலும் இல்லாத சிம்பொனி இசையைப் படைத்திருக்கிறார். இந்தக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு அவரை முறைப்படி விழா எடுத்து பாராட்டியிருப்பது முக்கியமானது.
நடிகர்திலகம் சிவாஜியுடன் ஒரு பேட்டிக்காக (25 ஆண்டுகளுக்கு முன்பு) உரையாடிய பொழுதில், “உரிய காலத்தில் விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கமும் வருத்தமும் என் மனத்தின் ஓரத்தில் “விண், விண்… என்று இருக்கத்தான் செய்கிறது. நானும் மனுஷன்தானே…. இதை மறைத்தால் என்னைவிட அயோக்கியன் யாரும் இருக்க முடியாது” என்று சொன்னார். அதுபோல இளையராஜா என்ற பெருங்கலைஞனுக்கும் உரிய நேரத்தில் உரிய விருது கிடைக்கவில்லை.
இளையராஜா இசையுலகிற்குள் நுழைந்து உச்சம் தொட்டு 36 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவருக்கு முதல் பத்ம விருது கிடைத்தது. அவருக்குப் பிறகு என்று சொல்வது சரியாக இராது. ஏனெனில் இளையராஜா காலம் இன்னும் தொடர்கிறது. அவர் காலத்திலேயே, தனித்த அடையாளத்தை நிறுவிய இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் 1992-ல் முதல் படத்துக்கு இசையமைக்கிறார். அடுத்த 8 ஆண்டுகளில் பத்ம விருது கிடைக்கிறது. 2010-ம் ஆண்டு இளையராஜாவுக்கும் ஏ.ஆர். ரகுமானுக்கும் ஒரே சமயத்தில் பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. (2009-ல் ரகுமான் ஆஸ்கர் விருதுகளை வாங்கியிருந்தார்). பின்னர் 8 ஆண்டுகள் கழித்து 2018-ல் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டது. இடையில், 2012-ல் சங்கீத நாடக அகாதெமி விருது பெற்றார்.
2022-ல் சிறந்த கலைஞர்களுக்கு அளிக்கப்படும் கௌரவத்தின் ஓர் அங்கமாக, இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து சிவாஜி கணேசன், சோ ஆகிய இருவரும் இதற்கு முன்பு இந்த கௌரவத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
திரைப்படத் துறை சார்ந்த தேசிய விருதுகளை ஐந்து முறை மட்டுமே இளையராஜா பெற்றிருக்கிறார். அவற்றிலும் இரண்டு தெலுங்கு படங்கள், ஒரு மலையாளப் படம் போக இரண்டே இரண்டு தமிழ்ப் படங்கள் (சிந்து பைரவியும் தாரை தப்பட்டையும்). 1500 படங்களில் ஐந்து மட்டுமே தேசிய அளவில் சிறப்புக்குரியதா என்பதை தமிழ் மற்றும் தென்னிந்திய ரசிகர்கள், இசை ஆர்வலர்கள், வல்லுநர்களின் தீவிரப் பரிசீலனைக்கு விட்டுவிடலாம்.
தாரை தப்பட்டை (2016 சிறந்த பின்னணி இசைக்கான விருது), பத்ம விபூஷண் (2018), மாநிலங்களவை உறுப்பினர் (2022) ஆகிய மூன்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசால் வழங்கப்பட்டவை. அதனாலயே அவை விமர்சனத்துக்குரியது என்பது போலப் பேசுவது, ஓர் இசை மேதைக்கான தேசிய அங்கீகாரத்தை அவமதிப்பது அன்றி வேறல்ல.
அரசியல்ரீதியாக பா.ஜ.க. இளையராஜாவை பயன்படுத்திக்கொள்கிறது என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. வாய்ப்பிருந்தால் பயன்படுத்துவார்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, வேட்டி கட்டிய தமிழர்கள் மத்தியில் ஆட்சியைத் தீர்மானித்த காலத்தில், அவர்களுக்கு வாய்ப்பிருந்தது. தமிழகத்தின் மகத்தான கலைஞனுக்கு உயரிய தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்திருக்கலாம். நமக்குத் தெரியவில்லை. இவர்கள் பரிந்துரைத்து, “ஏதோ காரணத்தால்” அவர்கள் விட்டிருக்கலாம். இளையராஜாவின் பொற்காலமான 80-களில் ஆட்சியிலிருந்தவர்கள்கூட செய்திருக்கலாம். நடக்கவில்லை. அவையெல்லாம் வரலாற்றில் புதைந்துகிடக்கும் எண்ணற்ற ரகசியங்களில் அடங்கும்.
தனது திரைப் பிரபலத்தை 90-களின் மத்தியில் ஒரு “வாய்ஸ்” விட்டு தமிழக அரசியலில் நெருக்கமாக உள்வந்தார் ரஜினி. பிறகும், கால் நூற்றாண்டாக தனது அரசியல் நோக்கிய நகர்வுகளுக்கு திரைப் பிரபலத்தையும் திரை சார்ந்த வர்த்தக வெற்றிக்கு அரசியல் பரபரப்புகளையும் நுட்பமாகப் பயன்படுத்திக் கொண்டார். அதுபோல எக்காலத்திலும் வெளிப்பட்டவரல்ல, இளையராஜா. அவரது அரசியலை பாடல்களில், பின்னணி இசையில் செய்தார். பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள் - பெரும் நிறுவனம், அறிமுகத் தயாரிப்பாளர் என்ற பாகுபாடின்றி இசையைத் தந்தார். தமிழ் சினிமாவில் அதற்கு முன்பிருந்த சமன்பாடுகளை முற்றிலும் மாற்றியமைத்து, வாய்ப்புகளையும் வெற்றிகளையும் பரவலாக்கினார் தனது இசை வாயிலாக. இது மட்டுமே தனித்த ஆய்வுக்குரியது.
ஒரு மேடையில் கமலைப் பார்த்து, “நான் முன்பே இவரைக் கட்சி தொடங்கச் சொன்னேன்” என்றார், இளையராஜா. பின்பொரு வேளை, திருவாசகம் இசைக் கோர்வைக்காக மியூசிக் அகாதெமியில் நடந்த பாராட்டு விழாவில், வைகோவின் பக்தி இலக்கியம் குறித்த பேச்சு அரங்கை அதிர வைத்தது. அதற்குப் பிறகு ஏற்புரை வழங்க வந்த இளையராஜா, எடுத்த எடுப்பிலேயே “இவருக்கு (வைகோ) அரசியல் எதற்கு…?” (இத்தனை அருமையாக இலக்கியம் பேசுகிறார் என்ற பொருளில்) என்றார்.
மற்றபடி ஓர் இசைக் கலைஞனாக தனக்கிருந்த பெரும் செல்வாக்கை அரசியல் சார்ந்து இளையராஜா புதிய வாய்ப்புகளை நாடி - பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அவருக்கு அந்த வாய்ப்பிருந்தது. கலைஞரும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். அவர் அளித்த இசைஞானி பட்டமே நிலைத்துவிட்டது. சிம்பொனி சாதனை பாராட்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது போல, கருணாநிதியின் பிறந்தநாளுக்காக (ஜூன் 3) தனது பிறந்தநாளை ஒரு நாள் முன்னதாக வைத்துக்கொண்டார். தமிழகத்தின் ஒரு மூத்த தலைவருக்கு தான் செய்யும் மரியாதையாக அவர் கருதினார் என்றே கொள்ள வேண்டும். இதை வைத்து அவர் தி.மு.க. ஆதரவாளர் என்று முத்திரை குத்த முடியுமா?
2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது உலக செம்மொழி தமிழ் மாநாட்டை நடத்தினார். அதற்கான மைய நோக்குப் பாடல் – கருணாநிதி எழுத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியானது. இன்று அந்தப் பாடல் எங்கே..? ரகுமான் திறமையை குறைத்து மதிப்பிடுவது அல்ல இது. உண்மையில், அந்தப் பாட்டு, இளையராஜாவின் களம். ரகுமானின் தாழ்வாரம் வேறு. வரலாற்றில் புதைந்த ரகசியங்களில் இதுவும் ஒன்று.
சிம்பொனி இசைப்பதற்காக லண்டன் செல்வதற்கு முன்பு, அனைத்து முன்னணி தொலைக்காட்சி ஊடகர்களையும் அழைத்து, தனது இசை வாழ்வு குறித்து விரிவாகப் பேசினார், இளையராஜா. தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் தனது சகோதரர்களோடு பாடிய அனுபவங்களை தயக்கமின்றி நினைவுகூர்ந்தார்.
அவரை ரசிகர்கள் பெரிய அளவில் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இன்னமும் அவரை முழுமனத்துடன் ஏற்பதில் சிலதரப்பினருக்கு வெளியில் சொல்ல முடியாத தயக்கங்கள் இருக்கின்றன. சிலர், அவரைக் கொண்டாடுவதற்கு முன்நிபந்தனைகள் விதிக்கிறார்கள்.
இத்தனை சாதித்த பிறகும் தனக்கான அங்கீகாரத்தைப் பெற தானேதான் பெருங்குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதையே இளையராஜா நமக்கு மீண்டும் மீண்டும் பலவாறு உணர்த்துகிறார்.
தமிழ்நாட்டில் நடிகர், நடிகைகள் மட்டுமே அரசியலுக்கு வந்து, முக்கிய இடங்களை நோக்கி நகர முடியும். நடிகர் ராமராஜனுக்கு ஜெயலலிதா சீட் தந்தார். திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரனை அ.இ.அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்கினார். அவர் கட்சி. அவர் முடிவு. நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு சென்றார்கள். நெப்போலியன் மத்திய அமைச்சரவையில் சமூக நீதித்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். இப்படி, பல உதாரணங்களைச் சொல்லலாம்.
தொடக்கத்தில் தி.மு.க.வுக்கு எதிராகக் குரல் கொடுத்து அதிரடியாக கட்சி தொடங்கிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், இன்று அதே கட்சியின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் சிறந்த கலைஞனை தி.மு.க. கௌரவித்தது எனக் கொள்ளலாம், அது அரசியல் கணக்கு என்ற புரிந்துணர்வுடன் இருதரப்பும் செய்துகொண்ட ஏற்பாடு என்றாலும்கூட.
அரசியலில், கடைசி விளிம்புவரை வருவதாகச் சொல்லிவிட்டு ஒதுங்கிக்கொண்ட ரஜினியுடனும், ரஜினிக்கு பிறகு அரசியலுக்கு நெருக்கமாக வந்து, அவரைக் கடந்து (அதாவது எம்.பி. பதவியுடன்) பயணிக்கும் கமல் ஹாசனுடனும் ஜோடியாக நடித்த நடிகை குஷ்பு தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவராகப் பதவி வகிக்கிறார்.
இந்தப் பின்னணியுடைய தமிழ்நாட்டிலிருந்து, இளையராஜா என்ற உலக சாதனை படைத்த இசைக் கலைஞனை, சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் நியமனப் பதவி வரிசையில், பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினராக்கினால் அவரை நோக்கி கடுமையான விமர்சனக் கணைகள் பாய்கின்றன – “சங்கி” என்பது உள்பட.
அண்ணல் அம்பேத்கரையும் பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டுப் பேசிய புத்தகத்துக்கு இளையராஜா அணிந்துரை வழங்கியதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டார். ஒரு சிறந்த கலைஞனையும் அரசியலையும் தவறாகப் புரிந்துகொள்வது அவரவர் விருப்பம், உரிமை. மேலும், ஒரு மாபெரும் மக்களிசைக் கலைஞன், தாங்கள் எதிர்பார்க்கும் “அரசியல் தெளிவுடன்” இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அல்லது அக் கலைஞனுக்கான அங்கீகாரத்துக்கு அதை முன்நிபந்தனையாக நகர்த்துவது எப்படிப்பட்ட அரசியல்?
இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் 2017-ல் “The Flying Lotus” என்ற பெயரில் ஓர் இசைக் கோர்வையை வெளியிட்டார். கருப்பு பணத்திற்கு எதிரான பெரும் நடவடிக்கை என்று கூறப்பட்ட பா.ஜ.க. அரசின் பணமதிப்பிழப்பு (Demonetisation 2016) அறிவிப்பை எதிரொலிக்கும் விதமாக அது அமைந்திருந்தது. இடையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சும்கூட சேர்க்கப்பட்டிருந்தது. இதைக் கேட்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம் என்றும் ரகுமான் கூறியிருந்தார். எப்படிப் புரிந்துகொள்வது? அவரவர் விருப்பம் என்பதே ரகுமான் சொல்ல வந்தது.
அடுத்து - இதர முன்னணி நடிகர்களின், இசைக் கலைஞர்களின் இறை நம்பிக்கையை கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளும் தமிழ்ச் சமூகம், இளையராஜாவின் நம்பிக்கையை பலவாறாகப் பிரித்து, பிரித்து ஆராய்ச்சி நடத்துகிறது. எள்ளல் பேசுகிறது.
இளையராஜாவுக்கு பிறகு வந்தவர்கள் அல்லது அவரது அடியொற்றி வந்தவர்கள், காப்புரிமை சார்ந்து தங்கள் பொருளாதார நலனை பிசகாமல் உறுதி செய்திருக்கிறார்கள். அதுபற்றிய எந்த ஓசையுமிராது. காப்புரிமை சார்ந்த முறைப்படுத்தப்பட்ட ஏற்பாடு இல்லாத காலத்தில், விடுபட்டுப் போன தனது உரிமையை இப்போது சட்டரீதியாகக் கோரும் இளையராஜாவை, “குளியலறையில் அவர் பாடலைப் பாடினால்கூட காசு கேட்பார்…” என்று கூசாமல் சமூக ஊடகங்களில் பேசித் தீர்க்கிறார்கள்.
காப்புரிமை குறித்த அடிப்படையான புரிதலுக்குக்கூட தமிழ்ச் சமூகம் தயாராக இல்லை அல்லது புரிந்தாலும் இளையராஜா விஷயத்தில் ஏற்கத் தயாரில்லை என்பதாக இருப்பது பெரும் சோகம். எத்தனை முனைகளில் அவருக்கு நெருக்கடிகள்… இவற்றுக்கிடையில்தான், காலம் கடந்த இசையை நமக்குத் தந்து கொண்டிருக்கிறார்.
இன்னொன்று – இளையராஜாவுக்கு திமிர் அதிகம் என்ற விமர்சனம். இதற்கு அவரே சிம்பொனிக்கு முந்தைய பேட்டிகளில் பதிலளித்திருக்கிறார். இளையராஜா தேர்ந்த இசைக் கலைஞன். தேர்ந்த பேச்சாளர் அல்ல. விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டவர் அல்ல. அவரது படைப்புகளை விமர்சிக்கலாம். ஆனால், இத்தனை சாதனைகளுக்குப் பிறகும், “சமூகம் எதிர்பார்க்கும் அல்லது மேற்படி சமூகம் விரும்பும் அடக்க ஒடுக்கத்துடன்” அவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படியான மனநிலை…?
அதிராமல், குறைந்த டெசிபலில் பேசுவதோ அல்லது சிக்கலான கேள்விகளை சாதுரியமான புன்னகையுடன் புறந்தள்ளிவிட்டுச் செல்வதோ அல்லது அப்படியான சூழலுக்குள்ளேயே தனது வரத்து இல்லாமல் பார்த்துக்கொள்வதோ “அடக்கம்” என்பதாக இங்கே ஒரு பார்வையிருக்கிறது. இளையராஜா இந்த “இலக்கணத்துக்கு” அப்பாற்பட்டவர்.
இதெல்லாம் எடுபடவில்லை.
இளையராஜா காலம் முடிந்துவிட்டது என்றொரு உரையாடல்.
முடிந்துவிட்டதா? அவர் இசையமத்து வெளிவரும் படங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். தமிழ் திரையுலகில் இன்றும் இளையராஜாதான் ஆட்சி செய்கிறார்.
“மஞ்சுமல் பாய்ஸ்” என்ற மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடியது. கொடைக்கானல் “குணா” குகையை மையமாகக் கொண்ட அந்தப் படத்தின் உயிர்நாடி இளையராஜாவின் இசை என்பது யாவரும் அறிந்ததே.
புதிய தலைமுறை இயக்குநரின் “லப்பர் பந்து” (பொட்டு வச்ச தங்கக் குடம்), அஜீத்குமார் நடித்த “Good Bad Ugly” (ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி, இளமை இதோ, இதோ…), “மாரீசன்” (நேத்து ஒருத்தர ஒருத்தர் பார்த்தோம்…) “கூலி” (வா, வா, பக்கம் வா…) – இப்படி சமீபத்திய படங்களை தூக்கி நிறுத்தியது இளையராஜா பாடல்கள்தான். இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த “தண்டகாரண்யம்” படத்தில்கூட ஓ. பிரியா,…பிரியா… மற்றும் மனிதா, மனிதா உன் விழிகள் சிவந்தால்… பாடலையும் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குநர்களின் கதைகளுக்கு ஏற்ற உணர்வை வெளிக்கொணரும் இசையைத் தருவதில், புதுப்பழைய, புத்தம்புதிய இசையமைப்பார்களின் போதாமைக்கு உதாரணம் கூறும் சிறிய பட்டியல் இது.
சிம்பொனி இசையின் சுவையை பலகாலமாக எனது பாடல்களில் கலந்து வழங்கி உங்களை (கேட்பவர்களை) தயார்படுத்தியிருக்கிறேன் என்று இளையராஜாவே கூறியிருக்கிறார். அவரது சிம்பொனி - அந்தப் பாட்டு போல, இந்தப் பாட்டு போல… என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள் சில தமிழர்கள். முன்தோன்றி, மூத்தகுடி வழிவந்தவர்கள் ஒரு தமிழனின் படைப்பாளுமையை, மேன்மையை உணர்வதில் தட்டுத்தடுமாறுகிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரியதற்கு ஏற்ப, சங்க இலக்கியப் பாடல்களை இசை வடிவில் தருவேன் என்று மறுநாளே கூறியிருக்கிறார் இளையராஜா. கூடவே மக்கள் கேட்கும் வகையில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரசு ஆதரவுடன் நடத்துவேன் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
அவர் சிம்பொனி குறித்து பலதளங்களில் தீவிரமாக உரையாடல் நடத்தப்பட வேண்டும். இசை நிபுணர்கள் வட்டாரம் அவ்வாறான உரையாடலை முன்னெடுக்க வேண்டும். அவரது பாடல்களைப் போலவே, அவரது சிம்பொனியை நாம் கூடுதல் புரிந்துணர்வுடன் கேட்டு ரசிக்க வேண்டும். அதையே அவர் எதிர்பார்க்கிறார். அதுவே நாம் அவருக்கு அளிக்கும் உகந்த மரியாதை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் ஆடி திருவாதிரை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பிரமதர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதன் ஓர் அங்கமாக இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. “நான் கடவுள்” படத்தில் இடம்பெற்ற பிரபலமான “ஓம் சிவோகம்…” பாடலைத் தொடர்ந்து திருவாசகம் இசைக் கோர்வையின் பாடல்களை இளையராஜாவே குழுவினருடன் பாடினார். முடிந்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். பிரதமரே எழுந்து நிற்கும்போது, மற்றவர்கள்… அவர்களும் Standing Ovation செய்தார்கள். ஒரு சிறந்த கலைஞனுக்கு இதைக் காட்டிலும் பாராட்டு என்னவாக இருக்க முடியும்?
இதுபோலவே சிம்பொனி சிகரம் தொட்ட தமிழனுக்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில், பாடப்பட்ட திரைப் பாடல்கள் அனைத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் விருப்ப பட்டியல் என்று கமல் ஹாசன் எழுந்து நின்று மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.
இளையராஜாவின் பாடல்களை முதல்வரும் மெய்மறந்து கேட்டார்.
“இந்த நொடி இப்படியே உறைந்துவிடாதா! வாழ்க இசை ராஜா” என்று மறுநாள் X தளத்தில் பதிவு செய்திருந்தார்.
“இசைஞானி தமிழ்நாட்டின் பெருமை! அவரைக் கொண்டாடுவது நம் கடமை!” என்பதும் அவரது X தளப் பதிவில் அடங்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தக்க தருணத்தில் இளையராஜாவை சரியாகவே கொண்டாடியிருக்கிறார்கள்.
“அரசியல் லாபத்துக்காக” இருவரும் செய்கிறார்கள் என “அரசியல் நட்டத்துக்காக” மட்டும் இயங்குபவர்கள் குறை சொல்லக்கூடும். சொல்லட்டும். இந்த உலகம் ஒற்றைத் தன்மையில் இயங்குவது அல்ல என்பது புரிந்தால் இதுவும் புரியும்.
கலை சார்ந்த அரசியலிலும் அரசியல் சார்ந்த கலையிலும் - நுட்பமான இழைகளைப் பின்னி, பின்னி - ஒவ்வொரு அடுக்காக மேலெழுந்து, இதுதான் எல்லை என்று தீர்மானித்தவர்களே வியந்து நோக்க புதிய எல்லைகளை அடுத்தடுத்து கடந்தவர் இளையராஜா. இன்று, உலக இசை எல்லைகளை முன்நகர்த்துவதில் முக்கியப் பங்களித்து நமக்கு வரலாற்றுப் பெருமை சேர்த்திருக்கிறார்.
“இசையே என் வாழ்க்கை. என் வாழ்வே இசை” என்பது சிம்பொனி இசை மேதை மொஸார்ட்டின் கூற்று. நமது கால சிம்பொனி இசை மேதை இளையராஜாவும் அப்படித்தானே.
இதயம் நிறைய - இளையராஜாவை கொண்டாடுவோம்.