சுழன்றாடிய தபஸ்யா... கண்ணுக்கும் காதுக்கும் கிடைத்த விருந்து!

தபஸ்யா நடன அரங்கேற்றம்
தபஸ்யா நடன அரங்கேற்றம்
Published on

விழாக்கோலம் பூண்டிருந்த வாணிமஹாலில் உள்நுழைகையில் ஒரு கையில் அபய ஹஸ்தமும், மறு கையில் வரத ஹஸ்தமுமாய் பிளக்ஸ் போர்டில் வரவேற்றார் தபஸ்யா.

முன் வரிசை  மைய நாற்காலி ஒன்றில், அருகிலிருந்த கிளீவ்லேண்ட் சுந்தரத்திடம் பேசிக்கொண்டிருந்தார். ”அற்புதக் கலைஞர் பழனிவேல்” என்று நிகழ்வின் தொகுப்பாளர் சந்திரமோகன் அவர்களால் அழைக்கப்பட்ட  ஏ.கே.பி.

மணி நாலடிக்க நிமிஷங்கள் இருக்கையில்,வெளீர்  உடையில் மேடைக்கு வந்தமர்ந்தார்கள் மன்னார்குடி எம்.எஸ்.கே.சங்கரநாராயணன் – வெங்கடேசன் சகோதரர்கள் மற்றும் சிறப்பு தவில்கள், மன்னார்குடி எம்.ஆர். வாசுதேவன், சமீபத்தில் “கலைமாமணி” பட்டம் பெற்ற திருராமேஸ்வரம் டி.பி.ராதாகிருஷ்ணன்.  மேட்டுப்பாளையம்  எம்.எஸ். ரவிக்குமார்

முதல் கீர்த்தனை  ஆரம்பித்த நொடிகளில், ‘’ஆரம்பிச்சிட்டாங்களா…..?” குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பித்ததைச் சற்று ஆச்சர்யமாக தனக்குத்தானே கேட்டுக் கொண்டு, பார்த்துக் கொண்டிருந்த செல்போனை கீழே வைத்துவிட்டு, ஒளிப் பதிவை ஆரம்பித்தார் ஒளிப்பதிவாளர்.

கடம் கலைஞர் ஆதம்பாக்கம் சங்கர் அவை நுழைந்து, ஏ.கே.பிக்கு வணக்கம் செலுத்தி இருக்கையில் அமர, சிறப்பு விருந்தினர்கள், வாத்தியக் கலைஞர்கள், வாய்ப்பாட்டுக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் என அரங்கம் மெல்ல நிரம்ப ஆரம்பித்தது.

கச்சிதமாக அமைத்துக் கொண்ட தனி ஆவர்த்தனத்தில். ஏ.கே.பியின் கைவிரல் அட்சரங்களைக் கவனித்து வாசித்துக் கொண்டிருந்தார் எம்.ஆர்.வி. சிறுவயதில் ஏ.கே.பியோடு இணைந்து வாசித்த தருணங்கள் நினைவில் வந்து போயிருக்கக் கூடும்.

சில ஆவர்த்தனங்கள் முடிந்ததும் “குறைத்துவிடலாமா..?” என்று சைகையால் ஏ.கே.பியிடம் சம்மதம் கேட்டு இறுதியாய் அறுதி நோக்கி ராதாவுடனும், ரவிக்குமாருடனும்  பயணித்தார் எம்.ஆர்.வாசுதேவன்.

அரங்கேற்றத்துக்கு அரங்கு தயாரானதை உறுதி செய்து ஏ.கே.பியின் மூத்த மகனும், மிருதங்கக் கலைஞரும், அரங்கேற்ற நாயகி தபஸ்யாவின் தந்தையுமான சரவணன்  கிரீன் ரூம் நோக்கி பார்வையில் விசாரிக்க ”இன்னுமொரு உருப்படி…’  என்று சமிக்ஞையில் பதில் வர,வாசிப்பை கொஞ்சம் நீட்டித்தார் நாதஸ்வர கலைஞர் வெங்கடேசன்.

முதல் பாடலுக்குப் பரதப்பள்ளி மாணவிகளின் கூட்டு நடனம். அடுத்ததாக, தபஸ்யாவின் சலங்கைபூஜை நிகழ்வு…

தபஸ்யாவின் குருவும் அன்னையுமாகிய ரத்தினமாலா சரவணன், பாட்டிகள் இருவரின் ஆசீர்வாதத்துடன்,   பேத்தியின் நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வதித்து, சலங்கையைக் கையளித்தார் ஏ.கே.பி.

சடுதியில் அரங்கின்  இடது பக்கத்தில் இசைக் கலைஞர்கள் ஆரோகணித்தனர். முதலில் மிருதங்க கலைஞர் ஏ.கே.பி சரவணன், அடுத்தாக நட்டுவாங்கம் ரத்தினமாலா சரவணன், பாடகர் பிரியாஸ்ரீ ஷங்கர், நாதஸ்வரக் கலைஞர் திருக்களார் பாரதிதாசன், புல்லாங்குழல் கலைஞர் மோகன்ராஜ், மற்றும் வீணைக் கலைஞர் நித்யஸ்ரீ.

வருடங்கள் ஏன் மாமாங்கங்களாய் பல பரதக் கலைஞர்களுக்கு வாசித்த கை, தன் பேத்தியின் நிகழ்வில் வாசிக்கத் தயாராக மலர்ந்த முகத்தோடு ,அரங்கின் வலப்புறம்  தவிலின் வலந்தலையை சரிசெய்தபடி ஏ.கே.பி.

 திருக்களார் பாரதியின் ஸ்ருதிப் பெட்டியில் இருந்து புறப்பட்ட ரிஷபத்தின் ரீங்காரம் அரங்கில் அதிர்வலையாய் பரவ ஆரம்பிக்க, கண்டஜாதி திருபுடை தாளத்தில் மல்லாரி,  நாதஸ்வரத்தின் அனசு வழி  அரங்கை அடைய,  தன் சொற்கட்டுகளால் தவிலில் ஏ,கே.பி இணைய, அந்த தருணத்தை நேரில் கண்டவர்களும்,கேட்டவர்களும், அனுபவித்தவர்களும் பாக்கியசாலிகள்.

பேத்திக்கான அரங்கேற்ற நிகழ்வின் ராஜபாட்டையாக கம்பீரநாட்டையில் மல்லாரியை உருவாக்கி இருந்தார் ஏ.கே.பி.

 நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களில்  ஒருவராக வந்திருந்தார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன். கலைரசிகரான அவர் வாழ்த்திப் பேசினார்.  தபஸ்யா நடனமாடுகையில் தனக்கு அருகாமையில் அமர்ந்திருந்த மிருதங்க சக்கரவர்த்தி,  உமையாள்புரம் சிவராமனிடம், தபஸ்யாவின் அபிநயங்கள், நடன நுணுக்கங்கள் குறித்து கேட்டதற்கு சிவராமன் அவர்கள் “நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன்” என்று தன்னிடம் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.

பல வருடங்களுக்கு முன்னால் காரைக்கால் பரத நிகழ்வு ஒன்றுக்காக, மொத்த குழுவும் தனது மாருதி ஆம்னி வேனில் அமர்ந்திருக்க, தானே காரோட்டிக் கொண்டு, அதிகாலை ஒன்றில், தனது நண்பரும், தவில் கலைஞருமான “கலைமாமணி” தலைச்சங்காடு டி.எம்.ராமநாதன் அவர்களைப் பார்க்க வந்திருந்தார் ஏ.கே.பி.  தபஸ்யாவின் குருவும், தாயாருமாகிய ரத்தினமாலாவும் அந்த குழுவில் இருந்திருக்கக் கூடும். அடுத்த முறை சரவணனைச் சந்திக்கையில் கேட்கவேண்டும்.  அன்று காலை சிற்றுண்டியில் அவருக்கு மிகவும் பிடித்த மிளகாய் துவையலைப் பரிமாறி அருகிலிருந்து பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு பெற்றிருந்தேன்.

 பெரியப்பா ஏ.கே.பியின் அந்த ஆம்னி வேன் பயணம் முதல், பெயர்த்தியின் அரங்கேற்றம் வரையிலான நெடும்பயணத்தை, அரங்கில் இருக்கையில் நினைத்துக் கொண்டேன்.

 அர்த்தநாரியாக மாறி சுழன்றாடுகையில், தபஸ்யாவின் இடது காதணி கழன்று விழுந்தது தற்செயல் என்றாலும், அபிநயத்திலும், அங்க அசைவுகளிலும் மீராவாகவும், மறு கணத்தில் துரியோதனனாகவும், அசைவுகளில், நடையில், உடல் மொழியில் பரிமளித்தார் தபஸ்யா.

விழா தொடக்கத்தில் சிற்றுண்டி, விழாவின் முடிவில் இரவு உணவு என அன்னமிடல் ஏற்பாடுகளும் கனக்கச்சிதமாய் இருந்தன. உமையாள்புரம் சிவராமன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராம் மற்றும் பல மிருதங்க கலைஞர்கள், ஓ.எஸ்.அருண் ,சீர்காழி சிவசிதம்பரம், நித்யஸ்ரீ மகாதேவன், மகதி உள்ளிட்ட வாய்ப்பாட்டுக் கலைஞர்கள், வி.வி.எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்ட வயலின் இசைக் கலைஞர்கள், நாதஸ்வர -தவில் கலைஞர்கள், காத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட நாடகக் கலைஞர்கள். டாக்டர் ராஜமூர்த்தி, ஆதி மஹா சாது டாக்டர். சுவாமி பத்மேந்திரா உள்ளிட்ட விருந்தினர்கள், முதல்வர் குடும்பத்தின் சார்பாக திருமதி ஜெயந்தி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. பிப்ரவரி ஏழாம் தேதி அரங்கேறிய நிகழ்வு ,தபஸ்யாவின் கலைப் பயணத்தின் அழகான தொடக்கம்.

ஏ.கே.பி என்ற ஆலமரத்தின் அடியில் வேரூன்றுவது சாதாரணமானதல்ல… தபஸ்யாவின் கலைவேட்கையும், அர்ப்பணிப்பும் அவர் இன்னும் முன்செல்ல உத்வேகம்  தரட்டும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com