சாலமன் பாப்பையாவின் மனதைக் கவர்ந்த பட்டிமன்றத் தலைப்பு எது தெரியுமா?

சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையாபடம்: பா. லெனின்
Published on

அறுபது ஆண்டுகளாக பட்டிமன்றங்களில் பேசிவரும் சாலமன் பாப்பையாவின் மறைவு இட்டுநிரப்ப முடியாத மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு மதுரையில் அவரைச் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அந்திமழை யூட்யூப் சானலுக்காக உரையாடி இருந்தேன். மிகுந்த ஊக்கத்துடன் ஆழ்ந்து பேசி எங்களைக் கவர்ந்திருந்தார். தான் கலந்துகொண்ட அத்தனை பட்டிமன்றங்களின் அழைப்பிதழ்களையும் சேகரித்து பத்திரமாக வைத்திருப்பதாகக் குறிப்பிட்டது ஆச்சர்யமாக இருந்தது. அந்த பட்டிமன்றத் தலைப்புகளே ஒரு நல்ல பி.எச்டி ஆய்வுக்குத்தகுந்தவையாக இருக்கக்கூடும்.

அவரிடம் நீங்கள் பங்கேற்ற பட்டிமன்றங்களில் மனதை விட்டு நீங்காதது எது? என்று கேட்டேன். அவர் மிக சுவாரசியமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். அவர் பாணியில் இதைச் சொல்வதை நேரில்  கேட்பதற்கான கொடுப்பினை எங்கள் குழுவுக்கு இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவருக்குப் பிடித்த பட்டிமன்றத் தலைப்பு பற்றி அவர் கூறியதாவது:

எழுபதுகளுக்குப் பின்னர் பட்டிமன்றங்கள் பேசுவதற்கு பல நெருக்கடிகள். கூட்டமும் இலக்கியமோ சமயமோ பேசினால் குறைந்துகொண்டே வந்தது. இப்படியான சூழலில் மக்களிடம் எப்படி போய் சேர்வது?  அந்த சமயத்தில் பாமர மக்கள் முன்னிலையில் பட்டிமன்றம் நடத்தும் சூழல் வந்தது. ’குடும்பத்தை பேணிக்காத்து பெருமைப்படுத்துவது கணவனா? மனைவியா?’ என மதுரையில் ஓரிடத்தில் தலைப்புக் கொடுத்து அழைத்தனர்.  மக்களுக்கு போய் சேர வேண்டியது இதுதான். மதுரை மீனாட்சி கண்ணை திறந்துவிட்டாள் என மனம் நிறைய மகிழ்ச்சியாக இருந்தது. ஒப்புக் கொண்டேன். என்னுடைய அணியில் ஆறு பேர். காந்திமதி, சக்திபெருமாள் என எல்லோரும் பெரிய பெண் பேச்சாளர்கள். ஆனால், அவர்களுக்கு இந்தத் தலைப்பில் பெரிதாக உடன்பாடு இல்லை. ‘உங்கள் மேல் இருக்கும் மரியாதைக்காகத்தான் வந்தோம். இனிமேல் இதுபோன்ற தலைப்பை எடுக்காதீர்கள் அய்யா. நாங்கள் வரமாட்டோம். என்னென்ன தலைப்பிலோ பேசிய நாவால் இதெல்லாம் பேச வேண்டுமா? இதெல்லாம் ஒரு தலைப்பா?’ என்றார்கள். நான் உடனே, ‘மன்னித்துவிடுங்கள்! பணம் வாங்கிவிட்டேன், இந்த ஒருமுறை பேசுங்கள்’ என்று அவர்களை கூட்டிக்கொண்டு போனேன்.

தெருவை அடைத்துக் கொண்டு அவ்வளவு கூட்டம் வந்திருந்தது. அதில் கால்வாசி பெண்கள். அதைப்பார்த்ததும் என் அணிக்கு அதிர்ச்சி. அதுதான் முதன்முதலில் பெண்கள் கூட்டம் அதிகம் வந்த கூட்டம். சங்க இலக்கியம், திருக்குறள் என நாங்கள் வழக்கம்போல ஆரம்பித்தோம். ஆனால், பெரிய ஆர்வம் யாரும் காட்டவில்லை. ஏனெனில் சாமானிய மக்கள் கூட்டம் அது.

இறுதியில் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசினேன். ஏனெனில், என் அம்மா எப்படி குடும்பம் நடத்தினார் என்பது என் நினைவில் இருந்தது. இரண்டு நாடோடிப் பாடல்களை எடுத்துக் கொண்டேன். ஆலை தொழிலாளிகளில் குடிகார கணவன் மனைவியை அடிக்கும்படியும் அந்தப் பெண் அதற்கு பாடும் பாட்டாக  ‘அறியாத ஊரிலும் தெரியாம வாக்கப்பட்டேன்… அடியாதீய புடியாதீக… விடியகாலம் ஓடிப்போறேன்’  என்று பாடும் பாட்டை எடுத்தேன். அந்த மனைவி விடியகாலம் வயலோரம் செல்லும்போது அங்கு உழுது கொண்டிருப்பவர்களை பார்த்து, ‘ஒத்த பனையோரம் உழுகிற நாயமாரே… கத்திட்டே போறேனே என் கணவன்கிட்ட சொல்லிடுங்க,’ என இந்தப் பாட்டை சொல்லிவிட்டு மேடையில் பார்த்தால் பெண் பேச்சாளர்கள் அழுகிறார்கள். கீழேயும் பெண் பார்வையாளர்கள் அழுகிறார்கள். யார் இந்த தலைப்பிற்கு வரமாட்டேன் என சொன்னார்களோ குறிப்பாக காந்திமதி அம்மா என்னிடம் வந்து, ‘அய்யா! இதுதான் பட்டிமன்றம்’ என்றார். பின்பு, இதுபோன்ற தலைப்புகளில் குறைந்தது 600 பட்டிமன்றங்கள் நடத்தினோம்.

இதன் கேசட்டுகளும் அப்போது வெகு பிரபலம்.  எனவே, என் மனதை விட்டு நீங்காத நினைவுகள் என்றால் அது ‘கணவனா? மனைவியா?’ மற்றும் ‘தாயா? தாரமா?’ என்ற பட்டிமன்றத் தலைப்புகள்தான்.

logo
Andhimazhai
www.andhimazhai.com