கனவின் குரல்

கனவின் குரல்

நாவல் பிறந்த கதை

அதுவொரு கனவின் குரலைப் போலத்தான் பல ஆண்டுகளாக என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்தது. கூர்மையாக அதை அனுதினமும் உற்றுப் பார்த்தும் கொண்டிருந்தேன். புகைமூட்டமாய் அந்தச் சொல் என்னுள் வந்து தங்கிய சமயத்தை அடிக்கடி நினைத்தும் பார்க்கிறேன்.

நண்பர்களுடைய இரவு அரட்டை மேடையில் எங்கிருந்தோ, எவர் வாயில் இருந்தோ “சுபிட்சமுருகன்” என்ற சொல் என்னை வந்தடைந்த ஞாபகம் இருக்கிறது. யார் சொன்னது? எந்த அரட்டை? என இதுவரை என்னால் பின்னோக்கிப் போய்க் கண்டறிய முடியவில்லை.

மாறாக, அப்படியொரு நிகழ்வே நடக்காமல், அரை விழிப்பு நிலையில் கனவில் உதித்த சொல்லோ அதுவெனவும், ஒரு மயக்கமும் இருக்கிறது எனக்குள். ஆனாலும் சுபிட்சமுருகன் எனும் சொல் என்னை வந்தடைந்த அக்கணத்தில் அடைந்த பரவசம்கூட இன்னமும் துல்லியமாக நினைவில் இருக்கிறது.

முருகன் வழிபாடு சார்ந்த குடும்பமே என்னுடையது. தெற்கத்திவாழ் மக்களின் வாழ்வில் தவிர்க்கமுடியாத மையமும் அது. என்னுடைய பெயரையே அவ்வழிபாட்டின் நிமித்தமாகவே என்னுடைய அம்மாவழித் தாத்தா எனக்கு வைக்கவும் செய்தார். மிகச்சிறு வயதில் குளித்து முடித்தவுடன் அவரைப் போலவே எனக்கும் ஒரு துண்டை இடுப்பில் கட்டி விட்டு, கையடக்க பழைய துருப்பிடித்த, வெள்ளிப் பரிசுக் கோப்பையினுள் கொட்டப்பட்டிருக்கும் விபூதியை எடுத்துப் பூசிவிட்டு, முருகா என்றழைக்கச் சொல்கிற போது, “முதுகா” என மழலையாய்ச் சொன்ன காட்சியை இனிமையாக இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

எனக்கு முதல் மொட்டை போட்டதும் பழனி மலையில்தான். இப்படியான பின்புலத்தில் வந்த எனக்கு சுபிட்ச முருகன் என்ற சொல் ஏற்படுத்திய பரவசம் மிக இயல்பானதுதான். அதை மிகை என்றும் கருதவியலாது. தவிர கலையென வருகையில் மிகை அதன் செல்லப் பிள்ளையும்தான். இணையத்தில் அந்தச் சொல்லை உள்ளீடு செய்து தேடிப் பார்த்தேன். அப்படி ஒரு பெயருடன் எந்தயிடத்திலும் முருகன் கோயில் கொண்டிருக்கவில்லை என்பதைக் கூட அறிந்து கொண்டேன்.

உள்ளுக்குள் உழன்ற அந்தச் சொல் தன்னை நாவலாகவும் நிறுவிக் கொள்ளத் துடிக்கிறது என்பதை அஜ்வா நாவல் எழுதி முடித்த சமயத்தில் உணரவும் செய்தேன். ஆரம்பத்தில் எங்கும் இல்லாத சுபிட்சமுருகன் என்கிற சிலையைத் தேடி உலகம் முழுக்க ஒருத்தன் சுற்றுகிற கதையாகவே யோசிக்கத் தொடங்கினேன். ஆனால் உடனடியாகவே அதிலிருந்து விடுபடவும் செய்தேன். அச்சொல் அவ்வாறு என்னை அணுகாதேயெனப் பிடித்துத் தள்ளியதையும் உணர்ந்தேன்.

என்னை நிறையத் தளைகள் பீடித்திருந்த காலமும் அது. நிறைய மூச்சுத் திணறல்களுடன், முட்டல் மோதல்களுடன் என்னை நோக்கி நான் திரும்பிப் பார்க்க முயன்ற காலமும். அதுவரை நானே எனக்குள் மேற்பரப்பில் மட்டுமே அலைபாய்ந்து கொண்டிருந்தேன். மெய்யாகவே எது விடுதலை? எது இனியென் கொழுகொம்பு? எனத் தேடத் தொடங்கி அலைபாய்ந்து கொண்டிருக்கையில், பழனி தோட்டத்திற்குச் சென்று சேர்ந்தேன்.

ஏற்கனவே போகிற இடம்தான் அதுவென்ற போதிலும், அந்தமுறை அடியாழத் தேடலோடு போய் அமர்ந்ததால் எல்லா காட்சிகளுமே புத்தம் புதிதாய்த் தெரியத் தொடங்கின எனக்கு. தோட்டத்தை ஒட்டிச் செடிகளைப் பார்த்தபடி மென்னடை போனபோது அங்கே உலவுவதாகச் சொல்லப்பட்ட “பெரிய சீவன்” ஒன்று எனக்கு முன் படமெடுத்து ஆடியது.

வழக்கமாக மயிர்க்கால்கள் நட்டுக் கொண்டு நிற்கும் பாம்பைப் பார்க்கையில். ஆனால் அந்தமுறை பித்தம் கொண்டவனாய்த் தூரத்தில் நின்று படமெடுத்த அதன் மையத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அதுவுமே என்னைக் கூராகப் பார்த்துக் கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட பலநிமிடங்களுக்கு இரண்டு உயிர்களும் தத்தமது வழியில் எதிர்ப்பட்டு நின்று கொண்டிருப்பதை மேலே இருக்கிற சூரியனுமே சமமாய்க் கருதி உற்றுப் பார்த்தது. நாவல் அச்சமயத்தில் தனது முதற்சொல்லை உருவாக்கியது.

அது தகிக்கிற கோடை காலம். வாடி வதங்கிய செடிகளுக்குக் குடத்தில் நீர்சுமந்து ஊற்றிக் கொண்டிருந்த போது, “என்னதான் தண்ணி விட்டாலும் ஒரு மேல் மழையாவது பெஞ்சிரணும். பூமி குளிரணும். மரமும் குளிரணும். மக்க மனுசாலும் குளிரணும். கடைசியா தாக்காட்ட முடியாம மாடு வானத்தை பார்த்து ம்மான்னு கத்த ஆரம்பிச்சிருச்சுன்னா, அதுக்கு மேல இந்த உக்கிரத்தை யாராலும் உணர்த்த முடியாது” என்றார் பொங்கிமுத்து.

பூமியைக் குளிர வைக்கிற மழை பற்றிய கனவைப் போலச் சட்டென எனக்குள் சுபிட்ச முருகன் என்ற சொல் ஒரு நாவலாகத் திரளத் துவங்கியது. அது அழைத்துச் செல்லும் போக்கிற்கு வான்பார்த்துக் கத்தும் ஒரு மாட்டைப் போலப் பின் தொடர்ந்து ஓடத் துவங்கினேன். பாம்பு, அத்தை, தாத்தா, மாமா, அதுவரையிலான என்னுடைய அலைச்சல்கள் என எண்ணங்கள் ஒரு பேரலையைப் போல எனக்குள் பரவத் தொடங்கின.

ஓடிவந்து அதன் முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கினேன். எனக்குள் ஆழ அமிழ்ந்து போகிற வித்தை மெதுவாக வசப்படவும் துவங்கியது. போதம் என்கிற யானை தன் துதிக்கையால் என் தலையைத் தொட்டமாதிரி ஒரு சிலிர்ப்பும் ஏற்பட்டது. விடாமல் அடுத்தடுத்து என அதன் ஒவ்வொரு அத்தியாயங்களையும் எழுதத் தொடங்கினேன்.

உள்ளுக்குள் கூர்மையாய் உற்றுப் பார்த்தபடி இருந்த போதும், புறத்தில் நிகழும் சகுனங்களையுமே உற்றுப் பார்த்தேன். நாவலில் லட்டு பற்றி ஒரு அத்தியாயத்தில் எழுதி முடித்து விட்டு வாசலில் வந்து நின்றால், “மழை பெஞ்சிருச்சுன்னா எனக்கு லட்டு வாங்கி தரணும் பார்த்துக்கோங்க” என்றார் பொங்கிமுத்து.

இன்னொருநாள் காலையில் வெட்டவெளியில் படுத்திருந்தவனை எழுப்பி, “என்ன முருகன் சாமி ஊருக்கு வந்ததை சொல்லவே இல்லை” என்றார் மூத்த பண்ணாடியொருத்தர். பங்குனி உத்திர யாத்திரைக் குழுவோடு போய் நடந்த போது, “ஏண்டா முருகா உனக்கு கோவிச்சுக்கிட்டு போயி உக்கார்றதுக்கு வேற எடமே கிடைக்கலீயா? எவ்வளவு தூரத்தில போயி உக்காந்திருக்க” என்று ஒரு மூதாட்டி என்னைப் பார்த்துச் சொன்னாள், நடையை முடிக்க முடியாத சோர்வில். எழுதிக் கொண்டிருந்த காலத்தில் இதுபோன்று நடந்த அத்தனை நிகழ்வுகளையுமே ஒரு சகுனமாகவே எண்ணிக் கொண்டது மனம்.

அவையெல்லாமே நாவலிற்குள்ளே நிகழ்வுகளாகவும் திரண்டு வரத் தொடங்கின. முதல் சில ஆலாபனை அத்தியாயங்களுக்குப் பிறகு நாவல் என்னை வாரிிச் சுருட்டி வேறொன்றாக ஆக்குவதை நன்றாகவே உணர்ந்தேன். எழுதுகிறவன் நானல்ல என்கிற கூருணர்வுமே எனக்குள் தட்டுப்படத் துவங்கியது. உண்மையிலேயே சத்தியமாகவே வேறொரு கை எனக்குள் அமர்ந்து எழுதுவதாக முதலில் உணர்ந்தேன். பிறகு அதைக்கூட உணர முடியாதளவிற்கு அதற்குள் முற்றிலுமாகவே கரைந்து போனேன்.

அதன் இறுதி அத்தியாயத்தை எழுதிய காலத்தை இப்போதும் மீள நினைக்கிறேன். வெளியே மதியம் முழுக்கக் காற்றில்லாமல், மரத்தின் இலைகள்கூட அசையாமல் கப்பென இருந்தது வானம். அதன் உச்சகட்ட உக்கிரத்தை நிலத்தின் மீது உமிழ்ந்தது. வெயில், மூச்சுச் சத்தம் கூட விடவியலாமல் கிடந்த சகல ஜீவராசிகளையும் உருக்கி உலுக்கியது. முன்மாலைப் பொழுது மறைகிற நேரத்தில் சுபிட்ச முருகன் நாவலின் இறுதி வரிகளை எழுதி முடித்தேன்.

சுபிட்சமுருகன் சிலையை நாவலின் நாயகன் கண்டடைந்த அந்தக் கணத்தில் வானத்தில் ஒருயானையைப் போலத் திரண்டிருந்த கருமேகத் திரளில் இருந்து முதல் சொட்டு மழைத் துளி அவனது மார்பில் விழுகிறது. அவன் மண்ணில் விழுந்து புரள்கையில் பெருமழை அவனைப் போர்த்துகிறது என முடியும். எழுதி முடித்தவுடன் வெளியே மின்னலுடன் சகலத்தையும் நடுங்க வைக்கிற இடிச் சத்தம் கேட்டது. அதுவரை அந்நிலத்தில் பார்த்தேயிராத வகையில் கோடைப் பெருமழை அடித்துக் கொண்டு பெய்யத் தொடங்கியது, ஓடைகளில் எல்லாம் அடித்துக் கொண்டு நீர்போகும் அளவிற்கு.

சுபிட்ச முருகன் என அந்தச் சொல்லை வான் நோக்கிப் பார்த்துச் சிரித்தபடி சொல்லிக் கொண்டேன். ஆமாம், இறுதியில் அதைக் கண்டடைந்து விட்டேன் என்கிற பெருமிதமும் மழையைப் போலவே உள்ளுக்குள் பேரானந்தமாய்ப் பொழிந்தது. உடனடியாகவே ஓடிப் போய் பொங்கிமுத்துவிற்கு லட்டு வாங்கிக் கொடுத்தேன். என்னளவில் எல்லோருக்கும் கொடுத்த லட்டும்தான் அது. தித்திப்பு என்பது லட்டில் மட்டுமல்ல சுபிட்ச முருகன் என்ற சொல்லிலும் இருக்கிறது. சொல்லைவிட வேறு என்ன பெரிய தித்திப்பு இருந்துவிடப் போகிறது இவ்வுலகில்?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com