மஞ்சுமல்பாய்ஸ் படத்தில்
மஞ்சுமல்பாய்ஸ் படத்தில்

குடியைக் கையாள்வது| மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை முன்வைத்து

திசையாற்றுப்படை - 14

மஞ்சுமல் பாய்ஸ் அதன் தகுதிக்கு மேலான அமோக வெற்றியடைந்திருக்கிறது. கேரளாவைவிட தமிழகத்தில் பெருவெற்றி அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 200 கோடியைக் கடந்த வசூலாம். 15லிருந்து 20 கோடிகளுக்குள் தயாரிப்புச் செலவு இருந்திருக்கக்கூடிய இந்தப்படத்தின் வசூல் திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. ஒரு 20கோடிப் படம் 200 கோடிகளை வசூலிப்பதை ஆரோக்கியமான டிரண்ட் ஆகவும் பார்க்க முடியும். அதேநேரம் இந்தப்படத்திற்கு முன்னும் பின்னும் வெளியான சிறு முதலீட்டுப் படங்களை மஞ்சுமல் பாய்ஸ் முடக்கிவிட்டது என்றும் அதில் சில நல்ல படங்களும் இருந்தன என்பதையும் திரையுலக நண்பர்கள் கவலையோடு பதிவு செய்கிறார்கள்.

இரண்டு விசயங்களால் இந்தப்படம் நம்மை ஈர்க்கிறது என்று நினைக்கிறேன். ஒன்று நண்பனுக்காக ஒருவன் செய்யத்துணியும் சாகசம். சாகசங்களற்ற மொக்கையான நம் வாழ்க்கையில் உண்மையில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், நமக்குத் தெரிந்த இடத்தில் நடப்பதாகக் காட்டப்படுவது சுவாரஸ்யத்தை அளிக்கிறது.

பல்வேறு வேலைகளைச் செய்யும் ஒரு நண்பர்கள் வட்டம். பெரும்பாலும் கீழ் நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்தவர்கள். எங்கும் நண்பர் குழாமாகச் சுற்றுபவர்கள். திருமணவீடுகளில் குத்தாட்டம் போட்டு மணமக்களையும் விருந்தினர்களையும் முகம் சுழிக்க வைப்பவர்கள். நினைத்த நேரத்தில் ஊர்சுற்றக் கிளம்புபவர்கள். அப்படி ஒரு நாள் திடீரென கொடைக்கானல் போகத்தீர்மானிக்கும் இந்த நண்பர்கள் கூட்டம் பணமில்லாமல் ஒதுங்கிவிடும் சுபாசை வீடுதேடிப்போய் அள்ளிக்கொண்டு போகிறது. வழக்கம்போல் குடியோடுதான் பயணம் தொடர்கிறது. குடியும் இளமையும் காரணமற்ற உற்சாகமாகவும் கொண்டாட்டமாகவும் மாறுகிறது. குணா குகையைப் பார்க்க இறங்கும்போது வழிகாட்டி எச்சரிக்கிறான். எச்சரிக்கைப் பலகையையும் பார்க்கிறார்கள். போதாக்குறைக்கு இரும்பு வலையால் பாதையை அடைத்திருக்கிறார்கள். மேற்கண்ட எல்லா எச்சரிக்கைகளையும் மீறித்தான் செல்கிறார்கள். சுபாஷ் உள்ளே விழுகிறான். போகாதன்னு சொல்லியும் வம்படியா போயி குழிக்குள்ள விழுந்தா… நாம என்ன பண்றது… சாவட்டும்… என்று காவலர் சொல்வதில் ஒரு நியாயம் இருப்பது போலவே தெரிகிறது.

மஞ்சுமல் பாய்ஸ், ஒருபடமாக பார்வையாளனை இருத்திவைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இதை ஒரு மகத்தான படம் என்று வகைப்படுத்த இயலாது. குகைக்குள் சுபாஷ் விழுந்து மீட்கப்படும் காட்சிகள் முழுக்க அரங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக அமைந்திருக்கின்றன. இடைவிடாத இசை தொந்தரவாக இருக்கிறது. நிசப்தம் தேவைப்படும் இடங்கள் படத்தில் உண்டு. அதிலும் குகையிலிருந்து நண்பனை மீட்டு வெளிவரும் காட்சியில் பார்வையாளர்களுக்கு இயல்பாக எழக்கூடிய பதட்டமும் எதிர்பார்ப்பும் திரையரங்கில் உருவாகிறது. ஆனால் அரங்கின் நிசப்தத்தைக் குலைக்கக்கூடிய வகையிலாக இசை இடைவிடாமல் ஒலிக்கிறது. அதைவிட அபத்தமாக அப்போது ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் ஒலிக்கிறது. அப்போது திரையரங்கில் பார்வையாளர்கள் அந்தக் காட்சியின் தீவிரத்தைக் கைவிட்டு நமக்கு மிகவும் பரிச்சயமான ‘கண்மணி’ பாடலைக் கொண்டாடத் தொடங்குகிறார்கள். இந்த இடத்தில் படத்தின் இயக்குநரும் பார்வையாளர்களும் தோற்றுப் போகிறார்கள். தன் படத்தின் தீவிரத்தை மலினமான உத்தியால் இயக்குநர் சீர்குலைக்கிறார். அதே நேரத்தில் தமிழகப் பார்வையாளர்கள் தங்கள் மலினமான திரைப்பட ரசனையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இத்தகைய விமர்சனங்களையெல்லம் பொருட்படுத்தத் தேவையில்லாத அளவுக்கான வெற்றியைப் படம் பெற்றுவிட்டது. அத்தோடு கதை முடிந்தது.

ஒரு திரைப்படமாக அது எடுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றிவிட்டது. தயாரிப்பாளருக்கு கணிசமான லாபத்தையும், இயக்குநருக்கு பெரும் புகழையும் வாரி இறைத்துவிட்டது. இயக்குநராக அவர் எந்த அநியாயத்தையும் செய்துவிடவில்லைதான். இயக்குநர் காட்டிய இளைஞர் உலகம் எங்கும் மிகைப்படுத்தப்படவில்லை. நீண்டகாலமாக மலையாள திரைப்படங்கள் மூலம் நமக்கு அறிமுகமாகியிருந்த பளபளப்பான கேரளம் ஒன்று இருக்கிறது. நாயர்களும் நம்பூதிரிகளும், அழகிகளும் பேரழகிகளும் உலவும் அந்தக் கேரளத்திற்கு இணையாக கீழ் நடுத்தரவர்க்க மனிதர்கள் வாழும் கேரளம் ஒன்றும், அதற்கும் கீழான சமூக பொருளாதார நிலையிலான கேரளம் ஒன்றும் இருப்பதை கேரள சினிமா பொருட்படுத்தியதில்லை. இதுவரை கேரள திரையுலகம் பொருட்படுத்தாத அந்த உலகம் கடந்த சில பத்தாண்டுகளில் கேரள சினிமாவில் தென்படத்தொடங்கியிருக்கிறது. அங்கமாலி டைரிஸ் தொடங்கி வைத்த அந்தப் போக்கின் நீட்சியாகவே மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் இளைஞர் உலகத்தைக் கூறலாம். ஆக இந்தப்படத்தின் அழகியல் கூறுகள், ஒரு திரைக்கதையாக இதன் பலங்கள் பலவீனங்களை பெரிதாக யாரும் பேசவில்லை. காரணம் அப்படிப்பட்ட அலசல்கள் தொடங்குவதற்கு முன்பாகவே படம் பெருவெற்றிபெற்றுவிட்டது.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் திரை அழகியலைப் பேசுவது இந்தப் பதிவின் நோக்கமல்ல. மாறாக இந்தப்படத்தில் காட்டப்படும் இளையோர் கலாச்சாரத்தை (youth culture) பேசுவதற்கு போதுமான காரணங்கள் இருக்கவே செய்கிறது. அந்த வகையில்தான் எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் கூடுதலாக அவர் ‘ குடிப்பொறுக்கிகள்’ என விளித்ததை பலரும் கண்டித்திருக்கிறார்கள். ஜெயமோகன் திரைப்படத்தைப்பற்றி எந்தக் கருத்தையும் கூறாமல் அந்தத் திரைப்படத்தில் உலவும் இளைஞர்களின் கலாச்சாரத்தை முன்வைத்து தன் உள்ளக்குமுறலைப் பதிவுசெய்துள்ளமைக்கு பலரும் பலவிதமான காரணங்களை கற்பிதம் செய்திருக்கிறார்கள்.

திரைப்படங்கள் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படுகின்றன. அவை சினிமா எனும் கலையாகக் கூடி வந்திருக்கிறதா என்று அவற்றின் கலைத் தன்மையை மட்டும் பேசினால் போதுமானது என்று எளிதாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவை சமூகத்தில் கலாச்சாரங்களை மாற்றவும் திரிக்கவும் புதிய கலாச்சாரங்களை உருவாக்கவுமான திறன் கொண்டவை என்பது நாம் நன்கறிந்ததே. ஆகவே ஒரு திரைப்படத்தை முன்வைத்து அத்திரைப்படம் பதிவுசெய்யும் பண்பாடு எத்தகையது? அது உள்ளது உள்ளபடியே பதிவு செய்யப்பட்டுள்ளதா? மிகைப்படுத்தப்பட்டுள்ளதா? அதில் இயக்குநரின் பார்வை வெளிப்பட்டுள்ளதா? என்பவை பற்றியும் உரையாட வாய்ப்பிருக்கிறது.

இந்தப்படத்தைப் பார்த்துமுடித்தபோது எனக்குள்ளும் இத்தகைய வினாக்கள் எழத் தவறவில்லை. படம் அடிப்படையில் நட்பின் ஆழத்தைப் பற்றிப் பேசுகிறது என்பது உண்மைதான். ஆனால் எப்படிப்பட்ட நட்பு இது? இந்த இளையோர் யார் என்றும் கொஞ்சம் பேசிப்பார்க்கலாம். கொஞ்சம் விளையாட்டுத்தனம், கொஞ்சம் ரவுடித்தனம், கொஞ்சம் தறுதலைத்தனம் எல்லாம் சேர்ந்த நண்பர்களின் இணைவு. தமிழகத்தில் போலவே கேரளாவிலும் இத்தகைய தறுதலை நட்புவட்டங்கள் இருப்பது ஆறுதலாக இருக்கிறது. பல்வேறு வேலைகளில் இருப்பவர்கள் அல்லது ஒரே கல்லூரித் தோழர்களாக இருக்கும் இத்தகைய நண்பர்களின் இணைவுப்புள்ளி என்பது கேளிக்கை. ஒரே வகையான விளையாட்டுகளில் ஈடுபடுவது, அரட்டை அடிப்பது, பெரும்பாலும் குடிப்பதற்கான கூடுகைகள். அவ்வப்போது பைக்குகளில் கார்களில் மலைப்பகுதிகளுக்கு பயணம் போவது. பயணத்தின் முக்கிய நோக்கம் குடி. பயணம் ஆரம்பித்த நிமிடத்திலிருந்து குடிக்கத் தொடங்கி அறையெடுத்து அங்கும் குடித்து வாந்தி எடுத்துக்கொண்டே வந்து சேர்வது. சிலர் அறையை விட்டு வெளியேறாமல் குடிமயக்கத்திலேயே இருப்பது. இதையே பெரும்பாலான இளைஞர்கள் ‘என் ஜாய்மண்ட்’(enjoyment) என்பதாகக் கருதுகிறார்கள். இந்தப்படத்தின் உபவிளைவாக இத்தகைய தறுதலை நட்பு வட்டங்கள் பெருகக்கூடும். இடம்பொருள் தெரியாமல் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பதான மனநிலைகளும் சேர்ந்துகொள்ளக்கூடும்.

தற்போதைய கேரளாவில் புழங்கும் வெளிநாட்டுப்பணம் இத்தகைய புதிய சில கலாச்சாரங்களை உருவாக்கியிருப்பதை மலையாளிகளே வருத்தத்தோடு ஒப்புக்கொள்கிறார்கள். பொதுவாகவே மலையாளிகள் தங்களை கொஞ்சம் விசேச பிறவிகளாகக் கருதிக்கொள்பவர்கள். மஞ்சுமல் திரைப்படத்தில் காட்டுவதுபோல் திருமணவீடுகளில் அத்துமீறி நடந்துகொள்வது வாடிக்கையான விசயம்தான் என்கிறார்கள். தங்கள் வாழும் இடங்களைச் சுத்தமாகப் பேணும் மலையாளிகள் எப்படி தமிழக எல்லைகளில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் செல்கிறார்கள். இந்தப் புதிய கலாச்சார சிதைவுகளில் ஒன்றுதான் இந்தப் படம் பதிவு செய்யும் நட்புவட்ட நடவடிக்கைகள்.

அடிக்கடி நம் ஊர் செய்தித்தாள்களில் படிக்கும் செய்திகள் இத்தகைய நட்பு வட்டங்களைப் புரிந்துகொள்ள ஏதுவாகின்றன. நண்பர்களாக குளிக்கச் சென்றவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஆபத்தான கடல் பகுதியில் குளித்த நண்பர்களைக் காணவில்லை. காரில் சுற்றுலா சென்ற நண்பர்கள் விபத்தில் சிக்கினர். இப்படியான செய்திகளை அன்றாடம் பார்த்து கடந்து போய்க்கொண்டிருக்கிறோம். இந்த விபத்துக்களின் பின்னணியில் குடி ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. இரண்டாவது ஆபத்துபற்றிய எச்சரிக்கையை மீறுதல். அதற்குக் காரணமாக இருப்பது நண்பர் கூட்டம் தரும் அபத்தமான ஆதரவு. இது கேரளத்தில் மட்டுமே நடப்பதாகக் கருத வேண்டியதில்லை. இதற்கு இணையான இதைவிடவும் கூடுதலான கலாச்சார சீரழிவுகள் நம்மிடத்திலும் உண்டு. சமீபகாலமாக தமிழக கிராமப்புற திருமணவீடுகளில் புதிய ஒரு பழக்கம் உருவாகியிருக்கிறது. விருந்தினர்களுக்கு உணவுக்கு முன்பாக ஆளுக்கொரு குவாட்டர் பாட்டில் வழங்குவதுதான் அது. என்னுடைய அப்பாவுக்குரியதையும் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டு வாங்கிச் செல்வதும் உண்டாம். இதற்காகவே சில ஆயிரங்களை ஒதுக்கிவிடவேண்டுமாம். இதற்கு இணையாக திருமண மண்டபங்களுக்கு முன்னால் நண்பர்களாக இணைந்தும், சாதித் தலைவர்கள், நடிகர்களோடு ப்ளக்ஸ் பதாகைகளை வைப்பதான அபத்தங்களும் உண்டு.

இப்போது இந்த விமர்சனம் படிப்படியாக நகர்ந்து குடிப்பழக்கம் பற்றியதாக மாறியிருக்கிறது. நமது மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுமையுமே குடிப்பழக்கம் பெருகியிருப்பதையும், இளம்பருவத்திலேயே இப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி வருவதையும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காந்தியர்கள் குடியை முற்றிலும் ஒழிப்பதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பாலியல் தொழிலைப் போலவே குடியும் ஒழிக்கமுடியாத ஒன்று என்பது உலகம் முழுவதும் நிரூபணமாகியுள்ளது.

மேற்குலகில் இல்லத்தின் உணவு மேசையில் குடும்பமாக குழந்தைகளோடு உணவருந்தும் போது, பெரியவர்கள் ஒயின் பருகுவதைப் பார்த்து எந்தக்குழந்தையும் அதைப் பருக அடம்பிடிப்பதில்லை. விருந்துகளில் பெரியவர்கள் மது அருந்தும்போதும் 18 வயதுக்குட்பட்டவர்கள் அதை வேண்டுவதில்லை. அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. இதை எப்படி அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். எந்தெந்த சந்தர்ப்பங்களில் எந்த வகையான மது அருந்தலாம், எவ்வளவு அருந்தலாம்? எப்போதாவது அருந்துவது(occasional drinking), தினமும் அருந்துவது(habitual drinking), மதுவுக்கு அடிமையாவது(alcohol addiction) என்ற வகைப்பாட்டில் நாம் எங்கிருக்கிறோம், குடி நோயாளிகள் எப்படி உருவாகிறார்கள், நீண்டகால குடிப்பழக்கம் என்னென்ன உடல், மன உபாதைகளை ஏற்படுத்தும்? என்பது போன்ற அடிப்படையான விசயங்கள் குறித்த குறைந்தபட்சத் தெளிவு நமக்கு இருக்கிறதா? இந்த விசயங்களை நாம் வெளிப்படையாகப் பேச ஏன் தயங்குகிறோம்? பாலியல் கல்வியை வகுப்பறைகளில் பேச முயற்சி செய்யும் நாம் ஏன் வகுப்பறைகளில் ‘குடி’ பற்றி அறிவியல் பூர்வமாக உரையாடக்கூடாது? 10 நபர்கள் புதிதாகக் குடிக்கத் தொடங்கும்போது அதில் ஒருவர் குடி நோயாளியாகக்கூடிய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் யார் அந்த ஒருவர் என்பதை எப்படித் தெரிந்துகொள்வதற்கு ஏதேனும் வழியுண்டா?

குடி நோயாளிகள் உலகம் முழுமையும் உண்டென்றாலும் நமது சூழலில் அதன் பாதிப்பு ஒப்பிட முடியாத அளவுக்கானதாக இருக்கிறது. நான் நடைப்பயிற்சி செல்லும் சாலை, சில கிராமங்களை இணைக்கக்கூடியது. மாலை வேளைகளில் நகரங்களில் உடலுழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளர்களில் பெரும்பகுதி இளைஞர்கள் வீடுகளுக்குச் செல்லும் வழியில் சாலையோரங்களில் இருவர் மூவராய் அமர்ந்து குடித்துக் கொண்டிருப்பதை அன்றாடம் கண்டு வருகிறேன். இங்கு குடிப்பதல்ல பிரச்னை.. குடியைக் கையாளத் தெரியாமையே.

எப்படி சர்க்கரை நோயை, அது நோயல்ல. ஒரு குறைபாடு. அதைக் கையாளப் பழகிக் கொண்டால் பெரும் அபாயங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதைப்போல குடியையும் ஒரு நோயாகக் கருதி அதைக் கையாள இளைய தலைமுறைக்குக் கற்றுத்தரவேண்டும். குடிப்பழக்கம் பற்றிய மிகைப்படுத்தப்படாத உண்மைகளை விளக்கி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகத்தான் குடியையைக் கையாளமுடியுமே தவிர நடக்கவே இயலாத ‘குடி ஒழிப்பை’ முன்னிறுத்துவதால் நாம் ஒருபோதும் குடியை ஒழிக்க முடியாது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com