வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த அருண்
வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்த அருண்

அப்பாவைக் காக்கப் போய் உயிரை விட்ட மகன்! நேரடி ரிப்போர்ட்!

அது மொத்த சென்னையே மனம் கலங்கிப்போன உயிர் இழப்பு. வெள்ளத்தில் சிக்கி பள்ளிக்கரணை, அருண்(வயது29) இறந்தது பெரும் சோகம்.

பள்ளிக்கரணை பாலாஜி மருத்துவமனை எதிரில் உள்ள முதல் தெரு வழியாக காமக்கோடி நகரு்க்கு ஞாயிறு அன்று சென்றோம். அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் காயிதே மில்லத் தெருவுக்கு வழி கேட்டோம்.

”கொஞ்ச தூரம் போய் ரைட்” என்றார்கள். அவர்கள் சொன்ன ’ரைட்’ எடுத்ததும், கணுக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கிய- கரடுமுரடான சாலை. குப்பைகளை வடிகட்டி வைத்திருக்கும் கருவேல மரங்கள் என அந்தப் பகுதியே வெள்ள நீரில் மூழ்கி எழுந்திருந்தது.

நம் இருசக்கர வாகனத்தை ஆமை வேகத்தில் நகர்த்த, தெருவில் ஆண்களும் பெண்களும் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல இருந்தனர். தயங்கியபடியே அவர்களிடம், “வெள்ளத்தில் இறந்துபோன அருண் வீடு...” எனக் கேட்டோம்.

“நேரா போய் ரைட் திரும்பினா, பச்சை கலர் பெயிண்ட் அடிச்ச ரெண்டாவது வீடு” என்றார்கள்.

சேறும் சகதியும் வழிந்தோடும் வீட்டு வாசலில் அருணின் அப்பா (முருகன்) நின்றுகொண்டிருந்தார். இரங்கல் தெரிவித்து, நடந்த துயரைப் பற்றிப் பேசத் தொடங்கினோம். உட்காருங்க என வேகமாய் ஒரு நாற்காலியை எடுத்துவந்தார். அவரின் பின்னாடியே வந்த உறவினர்கள், எங்களை வழிமறித்து, ”இப்போ எதுவும் வேண்டாம். காரியம் முடியட்டும். தயவு செய்து கிளம்புங்க.” என்றார்கள்.

துயரில் இருப்பவர்களிடம் பேச சொற்கள் இல்லை. கிளம்பினோம்.

ஆனாலும், மனம் தத்தளித்தது. அருகிலிருந்த கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தோம். எதேச்சையாக அருணின் அப்பா, உப்பு வாங்க வந்தார். “உங்க பையனைப் பத்திதான் கேக்குறாங்க…” எனக் கடைக்காரர் சொன்னார்.

அருணின் தந்தை முருகன்
அருணின் தந்தை முருகன்

உப்புப் பாக்கெட்டை இரண்டு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, தழுதழுத்த குரலுடன், “எல்லாரும் வீட்டைவிட்டுப் போய்ட்டாங்களேனு, துணிமணிங்க, டி.வி.லாம் நனைஞ்சிடாம தூக்கிவச்சிடலாம்னு இங்கேயே இருந்தேன். அவங்க அம்மாவ விட்டுவரப் போன பையன் என்னைக் கூட்டிப் போவ வந்தான்...” என்றவர்,

கிழக்கு திசையைக் காட்டி, ” தோ… அந்த மொகனையிலதாம்பா கால் தவறி வுழுந்திருக்கான். மூணு நாளா இங்கதான் மூட்டைத் துணிபோல கெடந்துருக்கான். நீச்சல் தெரியாது அவனுக்கு. என்னைக் காப்பாத்த வந்துதான் இப்பிடி...” என்றவர் மேற்கொண்டு ஒரு வார்த்தைகூடப் பேசமுடியாமல் விக்கித்து நின்றுவிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வாழ்வாதாரத்துக்காக சென்னைக்குப் புலம்பெயர்ந்திருக்கிறது, முருகனின் குடும்பம். கட்டடத் தொழிலாளியான இவர், மனைவி அம்பிகா, மகன் அருணுடன் இந்தப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். மகள் ரேவதியின் திருமணத்தை ஓராண்டுக்கு முன்னர்தான் நடத்தி முடித்திருக்கிறார்.

முருகனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது, நிவாரணப் பொருட்கள் தருவதற்காக கார் ஒன்று வந்தது. தெருவில் நின்றிருந்தவர்கள் ஓடோடிப்போய் வரிசையில் நின்றார்கள். முருகனும், சேற்றுத் தண்ணீரில் மெதுவாகப்போய் வரிசையில் இணைந்து கொண்டார்.

”யார் தம்பி நீங்க, அவர்ட்ட என்ன கேட்டீங்க...” என தொலைவிலிருந்து கேட்டவாறே நம்மைநோக்கி வந்தார், ஒரு பெண்மணி. இறந்துபோன அருணின் அத்தை செல்வி. செய்தியாளர் என்பதைத் தெரிவித்தோம்.

அருணின் அத்தை செல்வி
அருணின் அத்தை செல்வி

“திங்கக்கெழம சாயங்காலம் நாலு மணி இருக்கும். இங்க..லாம் பதினஞ்சடி ஒசரத்துக்குத் தண்ணி வந்திடுச்சி. அருணு, அவங்க அம்மாவைக் கூட்டிப்போய் ஐ.ஐ.டி. காலனில உள்ள சமுதாயக் கூடத்துல வுட்டுட்டு, ரெயின் கோட்டு மாட்டிக்குனு நைட் ஒரு ஏழு மணி சுமாருக்கு அவங்க அப்பாவைக் கூட்டிவரக் கிளம்பிக்கிறான்.

‘நாளைக்கு கூட போட்டுல போய் உங்கப்பாவக் கூட்டிக்கலாம்டா…நீ இங்கேயா இருடானு’ அவங்க அம்மாவும் சொல்லிக்கிறாங்க. அப்பாவ எப்பிடியாவது கூட்டிக்குனு போயிடலாம்னு வந்துருக்கான். அதுக்குமுன்னமே கவர்மெண்ட்டுக்காரங்க அவரக் கூட்டினுப் போயிட்டாங்க..” என்றார் பெருமூச்சுடன்.

செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) முழுவதும் மகனைத் தேடிய அருணின் பெற்றோர், புதன்கிழமை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

”செவ்வாக்கெழம காலையில, நான் இங்க வந்தப்ப, துணிங்க குப்பபோல மெதந்துட்டுக் கெடந்துச்சு. புதங்கெழமை காலையில வரும்போதும், அந்த துணி மூட்டைங்க அப்படியேதான் கெடந்துச்சு.

’அன்னைக்கு வீட்டு மேலருந்து பசங்க டெலஸ்கோப் வச்சி பாக்குறப்பதான், அருணோட பாடி தெரிஞ்சது. அருணோட மாமா தான் கிட்டப் போயி காலப் புடிச்சி இழுத்துட்டு வந்தார்.” என்கிறார்,அருணின் சடலத்தை ஆரம்பத்தில் பார்த்த செல்வம்.

ஏழாம் நாள் சடங்கு செய்யும் அருண் குடும்பத்தினர்
ஏழாம் நாள் சடங்கு செய்யும் அருண் குடும்பத்தினர்

திங்களன்றே அருண் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழக்க, அவரின் உடலைக் காவல்துறை கைப்பற்றியபோது (புதன்- 06), உடலின் சில பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததாகக் கூறுகின்றனர். அருணின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பிறகு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் இறுதிச்சடங்கு 7ஆம் தேதி நடைபெற்றது.

அருண் இறந்துகிடந்த இடத்தில், அவரின் பெற்றோர், உறவினர்கள் கற்பூரம் ஏற்றி சடங்கு செய்தனர்.

உணவு டெலிவரி வேலை செய்துவந்த மகனுக்கு, விரைவில் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளில் ஆசை ஆசையாய் இருந்திருக்கிறார்கள், அருணின் பெற்றோர்.

அவர்களின் ஆசை மட்டுமல்ல,வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அருணும்தான் என்பதை யாரால்தான் சகிக்கமுடிகிறது?

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com