விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது.
விஷ்ணுபுரம் விருது யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது.ஷ்ருதி டிவி

விஷ்ணுபுரம் விருது விழா: உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்!

தமிழில் இலக்கியக் கூடுகைகள், இலக்கிய விழாக்களுக்கென்று சில முகங்கள் உண்டு. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாற்றி தனித்த அடையாளத்துடன் முகம் காட்டுகிறது விஷ்ணுபுரம் விருது விழா. தமிழ்நாட்டில் நடைபெறும் பெரிய இலக்கிய விழாவாக இவ்விழா மாறிவிட்டது.

இது மிகைப் படுத்தல் அல்ல, உண்மை என்பதை டிசம்பர் 16-17 தேதிகளில் கோவை ராஜஸ்தானி அரங்கில் நடந்த விழாவுக்கு வந்து நேரில் பார்த்தவர்கள் அறிவார்கள்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக இவ்விழா நடைபெற்று வருகிறது.

இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சி.முத்துசாமி, ராஜ்கெளதமன், கவிஞர் அபி, சுரேஷ்குமார இந்திரஜித், கவிஞர் விக்ரமாதித்தன், சாரு நிவேதிதா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

2020-ல் சுரேஷ்குமார இந்திரஜித் விருது பெற்ற போது கோவிட் காலம் என்பதால் பெரிய விழாவாக நடைபெறவில்லை.

சில ஆயிரங்களில் தொடங்கிய பரிசுத்தொகை இப்போது ஐந்து லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இவ்வளவு பெரிய இலக்கிய விருதும் பரிசுத்தொகையும் தமிழ்நாட்டில் வேறு விருதுகளுக்கு கொடுக்கப்படுகின்றனவா? அதுவும் அரசிடமிருந்தோ கார்ப்பரேட்டுகளிடம் இருந்தோ எந்த நிதியும் பெறாமல் இந்த விருதுத்தொகை வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது, விழாவின் தீவிரத்தை உணர்த்துவதும் கூட.

விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொள்ளும் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் என ஒப்புக்கொண்ட யாரும் தவறாமல் வந்து விடுகிறார்கள்.

தொடக்க காலங்களில் இளையராஜா, மணிரத்னம், பாரதிராஜா, நாசர்,பாலா, வசந்த், வெற்றிமாறன், வசந்த பாலன் போன்ற திரைப் பிரமுகர்கள் கலந்து கொண்டதால் விழாவுக்கு வெளிச்சம் கிடைத்து, கவனம் பெற்றது. பிறகு எழுத்தாளர்களை அழைக்கத் தொடங்கினார்கள்.

இந்த விழா நாளடைவில் வளர்ந்து உருப்பெருத்து எழுத்தாளர்களும் வாசகர்களும் இரண்டு நாட்கள் சங்கமிக்கும் சந்தோஷத் திருவிழாவாக மாறிவிட்டது.

செவியும் வயிறும் நிரம்புகின்றன!
செவியும் வயிறும் நிரம்புகின்றன!

பொதுவாக இலக்கிய விழாக்கள் என்கிற போது சார்புகளும் சர்ச்சைகளும் கசப்புகளும் காழ்ப்புகளும் எவ்வகையிலாவது உள்ளே நுழைந்து விடும்.

இவ்விழா மட்டும் தான் தொடங்கியது முதல் இறுதி வரை முழுக்க முழுக்க இலக்கியம் என்கிற உளக்குவிப்போடு மைய நோக்கு தவறாமல் பூரண அமைதியோடு நேர்நிலை எண்ணத்துடன் நிகழ்ந்தேறுகிறது. அதனால் தான் ' உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல் 'அனுபவத்தைக் கலந்துகொண்ட அனைவருக்கும் வழங்குகிறது.விழாவில் எதிர்மறை எண்ணங்கள் நுழைந்து விடாதபடி அமைப்பாளர்கள் அனைவரும் கறாரான கவனமுடன் இருக்கிறார்கள்.அப்படி நுழையும் பட்சத்தில் முளையிலே கிள்ளியெறிய அவர்கள் எல்லோருடைய கையிலும் கத்திரிக்கோல் உள்ளது.எனவே நிகழ்வுகள் ஓடு பாதையில் இருந்து தடம் புரளாமல் சென்று சேர்கிறது.

வளரும் எழுத்தாளர்களின் இலக்கிய நம்பிக்கையைக் குலைக்கும் எந்த வித முயற்சிக்கு அனுமதியில்லை.

விழா அரங்கு வளாகத்திலும் தங்கும் இடங்களிலும் புகை பிடிப்பதற்கும் மது குடிப்பதற்கும் அனுமதி இல்லை. இப்படிச் சொல்ல ஒரு துணிவு வேண்டும் அல்லவா? ஏனென்றால் எல்லா தீய பழக்கங்களும் தனிமனித உரிமை என்று வாதிடுவோர் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம்.

ஒருமுறை விழாவுக்கு வந்தவர்கள் அடுத்த முறை வரத்துடிப்பது இதன் சிறப்பு. அதற்குக் காரணம் விழா நடக்கும் அழகும் நேர்த்தியும் நேர ஒழுங்கும் விழாக் குழுவினரிடம் உள்ள ஒத்திசைவும் ஒருங்கிணைப்பும்தான். அதனால்தான் சிறிது கூட பிசிறு தட்டாத, ஸ்ருதி பிசகாத முழு நீளக் கச்சேரியாக இவ்விழா அமைந்துவருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் அணுக்கமான நண்பர் கே.வி அரங்கசாமியால் விதை போடப்பட்டு ஜெயமோகனால் வளர்த்தெடுக்கப்பட்ட விஷ்ணுபுரம் வட்டம் இன்று ஆழ வேரூன்றி பெரிய விருட்சமாக கிளை பரப்பி நிற்கிறது. விஷ்ணுபுர விழாக்குழுவில் செயல்படும் இளைஞர் கூட்டம் தன்னியல்பாகச் செயல்படும் அளவிற்குத் தயாராகியுள்ளது. ஆர்வமும் ஊக்கமும் நிறைந்த இளைஞர்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அது தானாகச் சேர்ந்த கூட்டமாக மாறி வருகிறது.

முன்பெல்லாம் தனது விழா போல் கவனமாகவும் ஒருவித உள் பதற்றத்துடன் இதில் பங்கெடுத்து வந்த ஜெயமோகனை, இவ்விழாவில் பார்த்தபோது இது பிறிதொரு விழா என்கிற எண்ணத்தோடு சற்றே மனம் விலகி ஏழாம் வரிசையில் உட்கார்ந்து நகம் கடித்துக் கொண்டிருந்தார். சில நேரம் தன்னால் நடை பழகி விடப்பட்ட குழந்தை நடப்பதைப் பார்க்கும் ஒரு தந்தையைப் போல ரசித்தார்.

அந்த அளவிற்கு இந்த விழா ஏற்பாடுகளில் அனைத்தும் சரியான ஒரு தொனியில் ஒருங்கிணைந்து முழு விசையுடன் செயல்படுகின்றன.

எந்த வகையிலும் அதிகாரம் எட்டிப் பார்க்காத அனுசரணையும் நல்லிணக்கமும் மட்டுமே நிரம்பிவழியும் இந்த ஒத்திசைவு, பயிற்சி அளிக்கப்பட்டு வருவதில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்து அனைவரும் பழகிக் கொண்ட ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

பதினான்கு ஆண்டுகளாக இந்த விருது விழா நடக்கிறது. ஆண்டுதோறும் வாசகர்களும் பங்கேற்பாளர்களும் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள், கூடிக் கொண்டே இருக்கிறார்கள்.தவிர்க்க இயலாத காரணங்களால் வர முடியாமல் போனவர்கள் தவிர வந்தவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாள் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு எழுத்தாளர்கள் பா. ராகவன், சந்திரா, வாசு முருகவேல், தீபு ஹரி, மொழி பெயர்ப்பாளர்கள் லதா அருணாசலம் மற்றும் இல. சுபத்ரா, இதழாளர் கனலி விக்னேஸ்வரன் ஆகியோர் வாசகர்களுடன் உரையாடினார்கள். அடுத்த நாள் மலேசியாவில் இருந்து வந்திருந்த சையது முகமது ஜாகிர், அரவின் குமார், ராமச்சந்திர குஹா, விருதாளர் யுவன் சந்திரசேகர் ஆகியோருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

வழக்கமாக, அந்தக் கலந்துரையாடல் நிகழ்வுகள் வீடியோ பதிவு செய்யப்படுவதில்லை. ஏனென்றால் அதன் சகஜத்தன்மை விலகிவிடும் என்ற காரணத்தால் அவ்விதம் செய்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.அதனால் மேடைக்கு வருபவர்கள் சுதந்திரத்துடனும் நம்பிக்கையுடனும் பேச முடிகிறது.

அதுமட்டுமல்லாமல் அனைத்தையும் வீடியோவாகி வெளியிட்டால் பிரத்தியேகமாக இதற்கென்று நேரம் ஒதுக்கி வந்திருக்கும் வாசகர்களுக்கான தனியான அனுபவம் ஒன்று இருக்க வேண்டாமா?

நேரில் வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வெகுமதியான அனுபவம் அது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி தான் விருது வழங்கும் விழா. இந்த ஆண்டு எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா,மலேசிய எழுத்தாளர் சையது முகமது ஜாகிர், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எம். கோபாலகிருஷ்ணன், வாசகர் பாலாஜி பிருத்விராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக கவிஞர் ஆனந்த்குமார் எடுத்த , யுவன் சந்திரசேகர் பற்றிய ஆவணப்படமான ‘சுழற்பாதை யாத்ரிகன்’ திரையிடப்பட்டது.

என்னதான் ஆவணப்படம் என்றாலும் சில சமயம் அப்படத்தில் பேசுவது கூட ஒரு நடிப்பு போல் மாறிவிடுவதுண்டு. ஆனால் யுவன் பற்றிய இப்படத்தை மறைந்திருந்து கேண்டிட் கேமரா கொண்டு எடுத்தது போன்ற உணர்வைத் தந்தது. அந்த அளவிற்கு இயல்பாக இருந்தது.படத்தின் காட்சிகள் ஆங்காங்கே கைத்தட்டல் பெற்றன.

ராணுவ ஒழுங்கில் வாசகர்கள்: எல்லோரும் நிமிர்ந்து உட்காருங்க!
ராணுவ ஒழுங்கில் வாசகர்கள்: எல்லோரும் நிமிர்ந்து உட்காருங்க!

யுவனைப் பற்றிய 'வேடிக்கை பார்ப்பவன் 'என்கிற நூலும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விருது விழா என்பதை ஒரு சடங்காக மாற்றாமல் விருது பெறுபவரின் படைப்புகளைப் பற்றிக் கட்டுரைகளும் கருத்துகளும் ஆய்வுகளும் நேர்காணல்களும் வாசகர்கள் முன் வைக்கப்படுகின்றன.வேறெங்கு வெளியாகியிருந்தாலும் அனைத்தையும் ஜெயமோகன் தளத்தில் வெளியிட்டு அந்தப் படைப்பாளியை இரண்டு மாதங்களுக்கும் மேல் உற்சவமூர்த்தி ஆக்கி உற்சாகப்படுத்துகிறார்கள்.

இந்தக் காலத்தில் அவரைப் பற்றித் தீவிரமாகவும் மறு வாசிப்பாகவும் வாசிக்க வைத்துப் பேரின்பத்தை அளிக்கிறார்கள். இவை எல்லாம் அந்தப் படைப்பாளிக்குக் கிடைக்கும் பரிசு தொகையை விடப் பல மடங்கு பரவசம் தருபவை. பாடத்திட்டம் போல் பாவித்து அவற்றை எல்லாம் ஒரு வாசகனாக வாசித்துவிட்டு உரிய முன் தயாரிப்புடன் அந்தப்படைப்பாளியைச் சந்திக்கும் போது,அதுவரை மானசீகமாக நெருங்கி இருந்தவர்கள், அருகில் இருந்து உரையாடும் வாய்ப்பைத் தரும்போது மிகவும் அணுக்கமாகி விடுகிறார்கள்.

இந்தச் சந்திப்பு அனுபவமும் நெருக்கமும் வாசகருக்கும் எழுத்தாளருக்கும் பரஸ்பரம் பரவசம் தருவன.

விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு சுமார் 600 பேருக்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சென்றாண்டைப் போல் நாற்காலிகளைத் தளர்வாக நகர்த்த முடியவில்லை. இறுக்கமாக இருந்தன .ஏனென்றால் அந்தளவுக்கு நெருக்கிப் போட்டிருந்தார்கள். கூட்டம் கூடிவிட்டதுதான் காரணம். அரங்கம் நிறைந்து வழிந்தது. பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள், காட்சிகளைத் திரையில் பார்த்தவர்கள் என்று இன்னொரு இருநூறு பேர் இருப்பார்கள்.அடுத்த ஆண்டு அந்த அரங்கு போதாது போலும்.

வெளியூரில் இருந்து வந்து தங்குபவர்களே 300 பேர் இருப்பார்கள் .இவர்கள் முறைப்படி முன்பதிவு செய்து தங்கும் இடம் பெற்றவர்கள்.அனைவருக்கும் தங்கும் வசதியையும் இரண்டு நாளுக்கு கல்யாண சாப்பாடு போன்ற மதிய உணவு உள்பட ஆறு வேளை உணவு, நான்கு வேளை தேநீர் என அளித்து முழு திருப்தியான மனதோடு விழாவை ரசிக்க வைக்கிறார்கள்.

மேடையில் விருந்தினராக வந்திருக்கும் படைப்பாளர்களிடம் கேள்வி கேட்பவர்கள் சம்பந்தப்பட்ட படைப்புகளையும் படைப்பாளர்களையும் ஆழ்ந்து அறிந்து கொண்டு கேள்விகள் கேட்கிறார்கள். படைப்பாளிகளே திக்கு முக்காடும் அளவிற்கு எதிர்பாராத கோணத்தில் கேள்விகள் வருகின்றன.

இலக்கியத்தை ஒரு வழிகாட்டியாகவும் வடிகாலாகவும் தன் மீட்சியாகவும் மனப்பயிற்சியாகவும் புத்துணர்ச்சி தரும் ஒன்றாகவும் எனக் கருதுபவர்கள் பலர் இங்கே சங்கமிக்கிறார்கள்.

இலக்கியத்தை ஏன் வாசிக்க வேண்டும் ஏன் இலக்கியத்தில் இயங்க வேண்டும் என்பதற்கான விடைகள் பலவாறாக இங்கு கிடைக்கும்.பலருக்கும் ஒரு புதிய திறப்பை அளிக்கும் அனுபவமாக விழா அமையும்.

வாசிப்பில் நமது இடம், தரம் என்ன? இலக்கியப் பயிற்சியில் நாம் அடைய வேண்டிய தூரம் என்ன? போன்றவற்றிற்கும் இங்கே விடை கிடைக்கும்.முதல் நாள் இரவு தங்கும் வாசகர்களுக்கு ஜெயமோகனுடன் விடிய விடிய நடக்கும் உரையாடல் வேறு வகையான அனுபவம்.

"இப்போதெல்லாம் யார் சார் படிக்கிறாங்க ?"என்ற கேள்வி என்றும் தொடர்கிறது.வாசிக்காத கூட்டத்தால் இது பரப்பப்படுகிறது. ஆனால் இலக்கியத்தை இப்படி ஊக்கத்துடன் தீவிர உளக்குவிப்புடன் வாசிக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை இங்கு வரும் வாசகர்களின் அனுபவங்களின் மூலம் அறிய முடியும்.

ஜெயமோகனை முன்னிட்டு மட்டும் வரும் வாசகர்கள் இங்கு வந்த பின் அவர் காட்டிய திசையில் இலக்கியத்தின் பரந்த வெளியை உணர்ந்து கொள்வார்கள்.

இலக்கியம் பேசுவோம்: ஜெயமோகனுடன் (இடது), யுவன் சந்திரசேகர் (வலது)
இலக்கியம் பேசுவோம்: ஜெயமோகனுடன் (இடது), யுவன் சந்திரசேகர் (வலது)

எழுத்தாளர் ஜெயமோகன் பல்வேறு வகைகளில் எழுதிக் குவிப்பவர் மட்டுமல்லாமல் கலை,இலக்கிய செயல்பாடுகளிலும் தீவிரமாக இயங்கி வருபவர். அதன் ஒரு பகுதி தான் இந்த விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா .அது மட்டுமல்லாமல் அவ்வப்போது தத்துவ அறிமுகப் பயிற்சி, மேடைப்பேச்சுப் பயிற்சி,கவிதைப் பட்டறை, நவீன ஓவியங்களைப் புரிந்து கொள்ளுதல், ஆலயக்கலை அறிதல், நவீன இலக்கிய அறிமுகம்,மேற்கத்திய இசை அறிமுகம், யோகா பயிற்சி என்று சுமார் 30 நிகழ்ச்சிகள் இந்த இலக்கிய அமைப்பின் மூலம் நடைபெற்று வருகின்றன.ஒவ்வொன்றும் பயிற்சி வகையிலானவை. இளம்வாசகனை அடுத்த கட்டத்தை நோக்கி ஆற்றுப்படுத்துபவை.

பொதுவாக உலகத்தில் இலக்கியங்களைப் படைப்பதிலும் இலக்கிய செயல்பாடுகளிலும் தேக்கமும் சோர்வும் நிலவுகின்றன.

இலக்கியம் முதியோர்களால் கல்வியாளர்களால் வளர்க்கப்படுவதாக தோற்றப்பிழை தெரிகிறது. அந்தப் பொய்ப் பிம்பத்தை இந்த விழா உடைக்கும். ஏனென்றால் இங்கே இளைஞர்கள் கூட்டம் அதிகம். குறிப்பாக இந்த ஆண்டு முதல் பெண்கள் கூட்டமும் அதிகமாகி உள்ளது.

இலக்கியம் இத்தனை இளைஞர்களை ஈர்ப்பதுபோல இன்று உலகில் குறைவாகத்தான் பார்க்கமுடியும்.

பல்வேறு தரப்பினராக இப்படிக் கலந்து கொள்ள வந்தவர்களிடம் காணப்பட்ட வேறுபாடுகள் ஆச்சரியமூட்டுபவை. எழுத்தாளர்கள், வாசகர்கள் என்று தொடங்கி பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர், பொறியாளர்கள் என்று விரிந்து ஆட்டோ ஓட்டுநர் வரை வந்து நிற்கிறது. மாற்றுத்திறனாளிகளில் பார்வை மாற்றுத் திறனாளிகளும் உண்டு. அவர்கள் வருகை தந்து மனதால் கண்டு கொண்டு செல்கிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமையாக அவர்களை இணைக்கும் ஒற்றைச் சரடாக இலக்கியம் இருப்பது இவ்விழாவின் விளைவு.

நெருங்கி விசாரித்த போது சில விவரங்கள் கிடைத்தன. விஷ்ணுபுரம் விழாவைச் சிறப்புற ஒருங்கிணைத்து நடத்துபவர் செந்தில்குமார். அவர் குவிஸ் மாஸ்டரும் விளையாட்டு வீரரும் கூட.

விஷ்ணுபுரம் பதிப்பகத்தைச் சேர்ந்த மீனாம்பிகை வருகையையும் அரங்கையும் நெறிப்படுத்துகிறார். செல்வேந்திரன் ஊடகத்தொடர்புக்கும் பயணம், தங்கும் அறைகளுக்கு சுதா ஸ்ரீனிவாசனும் பொறுப்பு.

உணவு, அரங்க அமைப்புக்கு விஜய் சூரியன்.இரண்டிலும் அசத்தி இருந்தார். விருந்தினர்களை அழைத்து வருவது முதல் ஒருங்கிணைப்பு வரை ராம்குமாரின் பணி. டைனமிக் நடராஜன் எல்லாவற்றிலுமே பங்கெடுத்து வழி நடத்துபவர்.

ஜா.ராஜகோபாலன் அரங்க நிகழ்வுகளை நடத்துகிறார்.அது மட்டுமில்லாமல் ஈரோடு கிருஷ்ணன், நரேன், சுஷீல்குமார், ஆனந்த்குமார், ஷாகுல் ஹமீது, காளிப் பிரசாத், யோகேஸ்வரன் என்றிருந்த இளைஞர்களின் அணி பொறுப்பைப் பகிர்வதில் போட்டுக் கொண்டு செயலாற்றுகிறார்கள். இன்னும் பெயர் தெரியாத செயல்வீரர்கள் ஏராளம்.

விருந்தினர் வரவேற்பு, அறை, பயணம் என அனைத்துக்குமே ஒன்று பழுதாகிப் பிசகினால் மாற்றுத்திட்டமும் வைத்திருப்பார்கள்.

இவற்றையெல்லாம் அறிந்தபோது ஆச்சர்யம் தான் வந்தது. விழாவில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி எழுத்தாளர் பாவண்ணனிடம் கேட்ட போது, '' நிகழ்ச்சி முடிந்து ஊருக்குத் திரும்பி நான்கு நாட்கள் நகர்ந்துவிட்டாலும் ஒருங்கிணைக்கப்பட்ட எழுத்தாளர் நிகழ்ச்சிகளும் விழாவும் இன்னும் நினைவிலேயே நிழலாடுகின்றன. அந்த விழா ஓர் இனிய அனுபவம். முற்றிலும் இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்ட ஐநூறு அறுநூறு பேர்கள் சூழ நாம் அமர்ந்திருப்பதும் செவிமடுப்பதும் பெரிய அனுபவம். நமக்குப் பிடித்த பல எழுத்தாளர்கள் நம்மைப்போலவே பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, ஒவ்வொரு உரையையும் கேட்பதும் பெரிய அனுபவம். புதிதாக எழுதும் முனைப்பு கொண்டவர்களுக்கு இத்தகு உரையாடல்கள் பெரிதும் பயனளிக்கும். இதற்கு முன் இப்படி வாய்த்ததில்லை. இன்றைய காலகட்டத்துக்கு இந்த அமைப்பு இத்தகு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இங்கிருந்து தொடங்கும் புதிய எழுத்தாளர்கள், இன்னும் பத்தாண்டு கழித்து இந்த இடத்தில்தான் இலக்கிய முயற்சியைத் தொடங்கும் விதை விழுந்தது என்று சொல்லும் நாள் வரும் "என்கிறார்.

விழாவில் கேரளாவில் உள்ள சித்தூர் அரசுக் கல்லூரியில் இருந்து வந்து கலந்து கொண்ட பேராசிரியர் கதிரவன் இப்படிச் சொல்கிறார்.

"விஷ்ணுபுரம் விழா என்பது எழுத்தாளர்கள், வாசகர்களின் சங்கமம். எழுத்தாளர் ஒருவரோடு வினாக்கள் எழுப்பிக் கலந்துரையாட ஒரு மணிநேரம் தரப்படும் அதேவேளையில் எழுத்தாளர்களோடு கலந்துரையாட ஏதுவாக போதுமான நேர உணவு இடைவேளையும் , தேநீர் இடைவேளையும் வழங்கப்படுவது இதன் தனிச்சிறப்பு. இடைவேளை நேரங்களில் உணவரங்கில் எதிர்ப்படுவோர் எல்லாம் எழுத்தாளர்களாய் இருப்பது சொல்லில் விவரிக்க முடியாத சிறப்பு. ஒரு தமிழாசிரியனுக்கு அவனுக்குப் பெயர்களாய் படைப்புகளாய் அறிமுகமாயிருந்த இலக்கிய ஆசிரியர்கள் கண்ணெதிரே சகமனிதர்களாய் உலவுவதும் காதுகுளிரப் பேசுவதும் எத்துணை பிரமிப்பு என்பதும் சொல்லில் அடங்காதது. கம்பராமாயணம் குறித்து நாஞ்சிலாருடன் பேசினேன். ஈழத்தமிழிலக்கியம் குறித்து வாசு முருகவேலுடனும் அகரமுதல்வனிடமும் பேசினேன். கீரனூர் ஜாகிர்ராஜாவோடும் சு.வேணுகோபாலோடும் நலம் உசாவினேன். தன் காதலியின் கையை மனதில் பிடித்துக்கொண்டு அரங்கெங்கும் சுற்றித்திரிந்த மாரன் அஜிதனுடன் பேசினேன். தீபு ஹரி, சந்திரா போன்ற படைப்பாளர்களைப் புதியதாய்த் தெரிந்துகொண்டேன். இம்முறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொண்ட மகிழ்நிலை வடிந்து இயல்நிலை திரும்ப இரண்டு நாட்களாகின " என்கிறார்.

விழாவுக்கு வர முடியாவிட்டாலும் விழாவின் அசைவுகள் ஒவ்வொன்றையும் கண்டம் கடந்து இந்தப் பூமியின் மறுபக்கத்தில் கனடாவிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பேசும் போது, "தமிழில் இவ்வளவு பெரிய இலக்கிய விழா என்பது அசாத்தியமான ஒன்று. ஆண்டுதோறும் இவ்விழாவின் விசாலம் அதிகரித்துக் கொண்டே செல்வது பெரிய மகிழ்ச்சிக்குரியது.

தொடங்கியது முதல் இந்த விழா விரிவடைந்து கொண்டே செல்கிறது இன்னும் விரியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கலந்து கொண்ட அனைவரும் சொல்வது விழாவின் ஒழுங்கு, நேர்த்தி, நேரக் கட்டுப்பாடுகள்,குறித்த நேரத்தில் எதையும் தொடங்குவது,செய்வது, முடிப்பது போன்றவை. இப்படி ஓர் ஒழுங்கும் நேர்த்தியும் எந்த இலக்கிய விழாக்களிலும் நடவாத ஒன்று.ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வட்டம் வாசகர்கள் அமைப்பால் மட்டுமே அது சாத்தியம்.இந்த இயக்கம் எந்தக் காலத்திலும் முடிந்து விடாது. ஒரு தொடர் பயணமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும்"என்கிறார்.

இவ்விழாவைப் பற்றி பார்வை மாற்றுத்திறனாளி பத்மநாபன் கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் விஷ்ணுபுரம் விழா குறித்த அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கும் போதே அது குறித்த என்னுடைய எதிர்பார்ப்புகள் பெருகத் தொடங்கும்.இது என்னுடைய மூன்றாவது வருகை .முதன் முதலில் விக்ரமாதித்யன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்ட போது நான் வந்திருந்தேன். அடுத்து சாரு நிவேதிதா இப்போது யுவன் சந்திரசேகர்.

ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் சார்ந்த படைப்புகளை வாசித்து விட்டுச் செல்வது என் வழக்கம்.

நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொள்ள வந்திருந்த பா.ராகவன் எழுதிய 'ரெண்டு' என்ற நாவலை வாசித்திருந்தேன்.அதற்கு முன்பு அவரது 'யதி' நாவலையும் வாசித்து இருந்தேன்.

அவ்விதத்தில் தீபு ஹரி எழுதிய 'ஒருத்தி கவிதைக்கும் இரவுகளுக்கும் திரும்புகிறபோது' தொகுப்பையும் வாசித்து விட்டுச் சென்றேன்.

இளைஞர்கள் வாசிப்பது இல்லையா?: மேடையில் ஒரு குழுப் புகைப்படம்
இளைஞர்கள் வாசிப்பது இல்லையா?: மேடையில் ஒரு குழுப் புகைப்படம்

யுவன் சந்திரசேகர் எழுதிய 'குள்ள சித்தன் சரித்திரம்', 'வெளியேற்றம்' ஆகிய படைப்புகளை வாசித்துவிட்டுச் சென்றது என்னளவில் நிறைவான அனுபவம்.

நிகழ்வுகள் இரண்டு நாட்களும் திட்டமிட்டபடி சிறப்பாகவே நடந்தன.

காலை முதல் இரவு வரை கச்சிதமான ஏற்பாடுகள் ,அரங்க அமைப்புகள் என எவ்விதத்திலும் குறை இல்லாமல் அனைத்தும் நிறைவாகவே இருந்தன.

ராமச்சந்திர குஹாவின் வருகையும் எஸ்.எம். ஜாகிரின் வருகையும் இந்த ஆண்டின் உச்சம்.

மிக மிகச் சிறந்த நிகழ்வாக என்னைக் கவர்ந்தது யுவன் சந்திரசேகர் பற்றிய ஆவணப்படம். இவ்வளவு இயல்பாக ஒரு படைப்பாளர் உரையாட முடியும் என்பதை உணர முடிந்தது.அதுமட்டுமல்ல யுவனை எழுத்தாளர் நண்பர் காளிப்ரசாத் அறிமுகப்படுத்திய போது அவரது படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னபோது அவர் காட்டிய உற்சாகம் இயல்பானது மட்டுமல்ல உடன் இருப்பவர்களிடமும் தொற்றிக் கொள்வது என்பதை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் நிகழ்வில் எனக்குக் கூடுதலாக நண்பர்கள் அமைவதுண்டு. இந்த ஆண்டும் புதிதாகச் சந்தித்த நண்பர்களும் அறையைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களும் எனக்கு நிறைவளித்தார்கள்.

நண்பர் காளிப்ரசாத்துடன் இணைந்து நாங்கள் இம்பர் வாரி கம்பராமாயணம் வாசிப்புக் குழுவின் சார்பில் ஜெயமோகனுடன் நிழற்படம் எடுத்துக் கொண்டோம் இதுவும் நிறைவு.

ஒவ்வொரு ஆண்டும் மனதில் அடுத்த ஆண்டு குறித்த இனிய நிகழ்வுகளை எதிர்பார்த்து அதனைத் தேக்கி வைக்க ஏதுவாக சில இனிய தருணங்கள் நிகழ்வதுண்டு. இந்த ஆண்டும் அவ்வாறே.இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை முன்னெடுத்த விஷ்ணுபுரம் நண்பர்களுக்கு என் அன்பையும் நன்றியையும் முன் வைக்கிறேன்"என்கிற இவர், ஆந்திராவிலுள்ள குப்பம், திராவிடன் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

விழா பரபரப்புகள் அணைந்து முடிந்ததும் ஒவ்வொரு விஷ்ணுபுரம் விழா முடிவிலும் ஜெயமோகன் தனக்குத் தோன்றுவதாகக் கூறுவது, 'இது முற்றிலும் என்னைத் தவிர்த்துவிட்டு முன்னகர்ந்து செயல்படுவதாக ஆகவேண்டும் ' என்பதுதான் என்கிறார். அவரது கனவு மெய்ப்படும்.

"எங்கேயும் பயணிக்காத போதும் எதையும் வாசிக்காத போதும் இந்த வாழ்க்கையின் மெல்லிய இசையைக் காது கொடுத்துக் கேட்காத போதும் உன்னையே நீ பாராட்டிக் கொள்ளாத போதும் கொஞ்சம் கொஞ்சமாக நீ சாக ஆரம்பிக்கிறாய்" என்ற பாப்லோ நெருடாவின் சொற்களைப் படித்த வாசகர்கள் தான் அங்கே வருகிறார்கள்.விஷ்ணுபுரம் விருது விழா மூலம் புத்துணர்ச்சியும் சிலர் புத்துயிர்ப்பும் பெற்று அதிக ஆயுளைப் பரிசாக்கிக் கொள்கிறார்கள்.

விழாவுக்கு கட்டுரையாளர் போனதற்கான ஆதாரமாக்கும் இந்த படம்!
விழாவுக்கு கட்டுரையாளர் போனதற்கான ஆதாரமாக்கும் இந்த படம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com