அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படும் அம்பேத்கர் தொடர்பாக தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. சென்னை புத்தகக் காட்சியில் நம் கண்ணில் தென்பட்ட வற்றைப் பற்றிய குறிப்பு இது. அவற்றை எந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது, அதன் உள்ளடக்கம் என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
1. ஜாதியை அழித்தொழிக்கும் வழி
எழுத்தாளர்: டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு: தலித் முரசு
விலை: ரூ. 140
“ஜாதியை அழித்தொழிக்கும் வழி” என்னும் இந்நூல் 1936 ஆம் ஆண்டு லாகூர் ‘ஜாத் – பட் – தோடக் மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆனால் பேசப்படாத உரை. தலித் முரசு இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.
2. அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும் உண்மைகளும்
எழுத்தாளர்: ம.மதிவண்ணன்
வெளியீடு: கருப்பு பிரதிகள்
விலை: ரூ.300
கவிஞர் மதிவண்ணனின் கடும் உழைப்பில் உருவான ஆய்வு நூலான இது, ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!’ என்ற ரங்கநாயகம்மாவின் புத்தகத்துக்கு பதில் சொல்லும் வகையில் எழுதப்பட்ட புத்தகமாகும்.
3. விசாவுக்காகக் காத்திருத்தல்
எழுத்தாளர்: டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு: கருப்பு பிரதிகள்
விலை: ரூ. 50
இந்த புத்தகம் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் 1935-36 காலகட்டத்தில் நிகழ்ந்த சில முக்கியச் சம்பவங்களை விவரிக்கிறது.
4. இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்
எழுத்தாளர்: டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு: கருப்பு பிரதிகள்
விலை: ரூ. 50
புராணக் கதைகளின் நாயகர்களாகக் கருதப்படும் இராமன் மற்றும் கிருஷ்ணனின் பாத்திரங்களை விமர்சனத்திற்குட்படுத்தும் டாக்டர் அம்பேத்கரின் நூல் ஆகும்.
5. அம்பேத்கர்: உருவும்-மறு உருவாக்கங்களும்
எழுத்தாளர்: பா. பிரபாகர்
வெளியீடு: கருத்துப்பட்டறை
விலை: ரூ. 90
டாக்டர் அம்பேத்கரை கடவுளாக்கிவிட்டதாக அறிவுத்துறையினர் வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் ஆய்வுகளையும் ஆதாரங்களையும் வழங்குகிறது.
6. இந்தியாவில் சாதிகள்: அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம் வளர்ச்சி
எழுத்தாளர்: டாக்டர் அம்பேத்கர்
வெளியீடு: கருப்பு பிரதிகள்
விலை: ரூ. 50
இது 1916ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழக மானுடவியல் கருத்தரங்கில் வாசிக்கத் தயாரிக்கப்பட்ட, இந்திய சாதிகளின் தோற்றம், அமைப்பு மற்றும் வளர்ச்சியை விரிவாக அலசும் டாக்டர் அம்பேத்கரின் உரையாகும்.
7. நான் ஏன் பதவி விலகினேன்
தொகுப்பு: மருத்துவர் நா. ஜெயராமன்
வெளியீடு: அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் பண்பாட்டு இயக்கம்
விலை: ரூ. 120
அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை எழுத எத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டார், நேருவின் அமைச்சரவையிலிருந்து அவர் வெளியேறியபோது ஆற்றிய உரை, பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூரிய விசயங்கள் என மூன்று பேருரைகளை நூலாசிரியர் தொகுத்துள்ளார். அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்று.
8. A Part Apart ( ஆங்கிலம்)
எழுத்தாளர்: அஷோக் கோபால்
வெளியீடு: நவயானா
விலை: ரூ. 999
இந்த நூல் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் சாதி ஒழிப்பு முயற்சிகளை விரிவாக ஆராய்கிறது. காஞ்ச அய்லயா மற்றும் ஆனந்த் டெல்டும்டே போன்ற எழுத்தாளர்கள் இந்த நூலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
9. அம்பேத்கர் பற்றிய அருண்சோரி நூலுக்கு மறுப்பு
எழுத்தாளர்: கி. வீரமணி
வெளியீடு: திராவிடர் கழகம்
விலை: ரூ. 20
இந்த நூல், அருண்சோரி எழுதிய அம்பேத்கர் பற்றிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
10. பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்
தொகுப்பு: முனைவர் ஜெயபாலன், முனைவர் விஜயகுமார்
வெளியீடு: நீலம் வெளியீடு
விலை: ரூ. 150
ஜனநயகம் தொடர்பான டாக்டர். அம்பேத்கர் எழுதிய 10 உரைகளின் தொகுப்பு. அம்பேத்கரிய வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தக்கூடிய மிக முக்கியமான புத்தகம்.
11. அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
தொகுப்பு: வாசுகி பாசுகர்
வெளியீடு: நீலம் வெளியீடு
விலை: 150
டாக்டர் அம்பேத்கர் எழுதிய பல்வேறு முன்னுரைகளின் தொகுப்பு இந்நூல். கவரக்கூடிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.
12. சென்னையில் அம்பேத்கர் ஆற்றிய உரைகள், எழுத்தாளர்: அ. முத்துக்கிருஷ்ணன்
வெளியீடு: தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை
விலை: 50
கண்ணிமாரா ஹோட்டல், ரிப்பன் மாளிகை, பெரம்பூர் பவுத்த விகார் போன்ற இடங்களில் அம்பேத்கர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு. சென்னை வேலூர் போன்ற பகுதிகளில் அம்பேத்கர் வருகை தந்தபோது ஆற்றிய உரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்.
13. இந்திய சேரிக் குழந்தைகள்
எழுத்தாளர்: டாக்டர். அம்பேத்கர்
வெளியீடு: சிந்தன் புக்ஸ்
விலை: 200
இந்த புத்தகம் அம்பேத்கர் இறப்பதற்கு முன்பு எழுதிய புத்தகம் எனவும், அவர் இறப்புக்கு பிறகு மகாராஷ்டிர அரசு வெளியிட்டது எனவும் பதிப்புரை எழுதிய புளியந்தோப்பு மோகன் தெரிவித்துளார்.சாதி ஒழிப்பில் பிராமணர் அல்லாதாரின் பங்கு என்ன என்பதை இப்புத்தகம் விமர்சிப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
14. தீண்டப்படாதார்
எழுத்தாளர்: அம்பேத்கர்
வெளியீடு: சிந்தன் புக்ஸ்
விலை: 200
சூத்திரர்கள் யார் என்ற புத்தகம் அம்பேத்கரின் மிக முக்கியமான புத்தகம், அதை தொடர்ந்து தீண்டப்படாதார் யார் என்ற இந்த புத்தகம் , தீண்டப்படாதவர்கள் யார், அவர்கள் எப்படி அவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என பல விசயங்களை விளக்கியிருப்பார்.
15. பாபாசாகேப் அம்பேத்கருடன் என் வாழ்க்கை
எழுத்தாளர்: சவிதா அம்பேத்கர்
தமிழில்: தா. ராஜன்
வெளியீடு: எதிர்வெளியீடு
விலை: 699
அம்பேத்கரின் கடைசி எட்டு ஆண்டு கால வாழ்க்கையை மிக விரிவாக இப்புத்தகம் பேசுவதாக எழுத்தாளர் ராமச்சந்திர குஹா குறிப்பிட்டுள்ளார். அதை அட்டைப்படத்திலேயே போட்டுள்ளனர். நல்ல வடிவமைப்புடன் வந்துள்ள முக்கியமான புத்தகம்.
16.மஹத் - முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்
எழுத்தாளர்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: கமலாலயன்
வெளியீடு: NCBH
விலை: 800
பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்க மஹத்தில் தலித்துகள் நடத்திய போராட்டத்தையும், அதற்கு அம்பேத்கர் தலைமை தாங்கி நடத்தியதையும் இப்புத்தகம் விரிவாகப் பதிவு செய்கிறது. இந்தியாவில் குடிநீருக்காக நடத்திய முதல் போராட்டம் என இதை பதிவு செய்கிறார்கள்.
17. அம்பேத்கரின் முகப்புரை
எழுத்தாளர்: ஆகாஷ் சிங் ரத்தோர்
தமிழில்: வின்செண்ட்
வெளியீடு: எதிர் வெளீயீடு
விலை: 350
அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அம்பேத்கர் எப்படி எழுதினார், அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றி விரிவாக பேசியுள்ள புத்தகம்.
18. அம்பேத்கர் இன்றும் என்றும்
வெளியீடு: விடியல் பதிப்பகம்
விலை: 650
தமிழில் அதிகம் விற்பனை ஆன புத்தகங்களுள் இதுவும் ஒன்று. மூன்று பகுதிகளான இந்த புத்தகத்தில் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. அதில் “இந்து மதத்தில் புதிர்கள்”, ”பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்”, ”தீண்டாமை” இந்த மூன்று தலைப்புகளில் பல கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஆறு பதிப்புகள் கடந்து இந்த புத்தகம் விற்பனை ஆகி வருகிறது.
20. கல்வியை பற்றி அம்பேத்கர்
பதிப்பாசிரியர்: ரவிக்குமார். துரை
வெளியீடு: மணற்கேணி
விலை: 250
பதிப்பாசிரியர் ரவிக்குமார் அவர்கள் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்.
அம்பேத்கரின் கல்வி சிந்தனை எப்படி பட்டதாக இருந்தது என்பதை இப்புத்தகம் விரிவாக பேசுகிறது. குறிப்பாக பட்டியலின மக்களின் கல்வி பிரச்சனைகள், பட்டியலின மக்களின் கல்விகாக ஆங்கில அரசு செய்த விசயங்கள், பல்கலைக்கழக மானியக்குழுக்கள், இந்தியாவில் நடைபெற்ற கல்வி தொடர்பான பல்வேறு விசயங்களை இந்த நூல் பல்வேறு தரவுகளுடைய துணையுடன் பேசுகிறது.
21.அம்பேத்கர்- சில பார்வைகள்
எழுத்தாளர்:
தமிழில்: க்ருஷாங்கினி
வெளியீடு: மணற்கேணி
விலை: 130
இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம். அம்பேத்கரைப் பற்றியும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் பல்வேறு விசயங்களைப் பேசும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது.
22. அம்பேத்கரின் இறுதிச் செய்தி
எழுத்தாளர்: நானக் சந்த் ரட்டு
வெளியீடு: தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை
விலை: 40
அம்பேத்கரின் கடைசி கால வாழ்க்கையை மிக விரிவாக பதிவு செய்கிறது. அம்பேத்கர் இறப்பிற்கு முன் சமண மதத்தை சார்ந்த சிலரை சந்திக்க இருந்தது போன்ற சுவாரசியமான செய்திகள் பல இடம்பெற்றுள்ளது.
23. முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கர்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்
எழுத்தாளர்: ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: சிங்கராயர்
வெளியீடு: சீர்மை பதிப்பகம்
விலை: 150
முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் என்ன நினைத்தார் என்பதே இப்புத்தகத்தின் உள்ளடக்கம். இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை எப்படியெல்லாம் முசுலீம்களுக்கு எதிராக சித்தரித்துள்ளனர் என்பதை, அந்த கட்டுக்கதைகளுக்கு பதில்லளித்து விளக்கியுள்ளார் ஆனந்த் டெல்டும்டே. நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
24. இரட்டை வாக்குரிமை
எழுத்தாளர்: அ.ஜெகநாதன்
வெளியீடு: நீலம் பதிப்பகம்
விலை: 180
அம்பேத்கர் வலியுறுத்திய இரட்டை வாக்குரிமை தொடர்பானது இப்புத்தகம். இரட்டை வாக்குரிமை என்றால் என்ன என்பதில் இன்றும் சிலருக்கு ஐயங்கள் இருக்கும். அதை இப்புத்தகம் தீர்த்துவைக்கும்.
25. எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்
வெளியீடு: விகடன் பிரசுரம் மற்றும் voice of commons
விலை: 1200
சமீபத்தில் வெளிவந்த புத்தகம். விகடன் ஆசிரியர் வி. முருகன், வெ. நீலகண்டன், ஷாஜன் கவிதா ஆகிய மூவரும் இணைந்து தொகுத்துள்ளனர். இதில் இந்தியா முழுவதும் உள்ள தலித் தலைவர்கள், அம்பேத்கர் இயக்க செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்களுடைய கட்டுரைகளும் நேர்காணல்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக நிறைய அரிய புகைப்படங்களும், ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
26. பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு பன்முகப் பார்வை
தொகுப்பு: இரா. வினோத்
வெளியீடு: இந்து தமிழ் திசை
விலை: 220
இந்து தமிழ் திசை நாளிதழில் வெளியான அம்பேத்கர் தொடர்பான கட்டுரைகளை தொகுத்து இந்த நூலில் வழங்கியுள்ளனர்.”ஜனநாயகம்” , “சாதி ஒழிப்பு, கல்வி என பல தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.
27. Dr. Babasaheb Ambedkar Writings & Speeches
வெளியீடு: மாகாராஷ்டிர அரசு
அம்பேத்கர் குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவரும் பெரும்பாலான புத்தகங்களுக்கு மூல நூலாக இருப்பது இந்த நூல்.17 தொகுதிகள் கொண்ட புத்தகத்தின் 17ஆவது தொகுதி மட்டும் மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
இது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
28. Iconoclast
எழுத்தாளர்: ஆனந்த் டெல்டும்டே
வெளியீடு: Penguin Random House India
விலை: 1499
சமீபத்தில் இந்தியா முழுவதும் கவனம் பெற்ற புத்தகம். அம்பேத்கரை வழிபாட்டு கண்ணோட்டதில் பார்க்காமல், விமர்சன கண்ணோட்டதில் எப்படி அணுகவேண்டும் என ஒரு ஆய்வு நோக்கில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
29. அம்பேத்கரின் உலகம் - தலித் இயக்க உருவாக்கம்
எழுத்தாளர்: எலினார் ஸெல்லியட்
தமிழில்: தருமி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: 400
அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் செயல்பாட்டை பேசக்கூடிய புத்தகம்
30. அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்
எழுத்தாளர்: கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலா
தமிழில்: பூ.கொ.சரவணன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: 300
அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் செயல்பாட்டை, சாதி ஒழிப்பை பற்றி பேசக்கூடிய புத்தகம்
31. இந்துத்துவ அம்பேத்கர்
எழுத்தாளர்: ம. வெங்கடேசன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: 250
பொதுவாக அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிரானவராகவே பார்க்கப்படுவார். அவருடைய செயல்பாடுகளும் முன்னெடுப்புகளும் அப்படியானதே.
ஆனால் அதிலிருந்து விலகி "இந்துத்துவ அம்பேத்கர்" என்ற தலைப்பில் வந்த இப்புத்தகம் சர்ச்சைக்குரியதாகவே பார்க்கப்பட்டது.
32. காவியில் சிதையும் சிவப்பு
எழுத்தாளர்: அ.ப.காரல் மார்க்ஸ் சித்தார்த்தர்
வெளியீடு: தென்னிந்திய புத்த விஹார் அறக்கட்டளை
விலை: 299
அம்பேத்கர் எழுதிய "புத்தரும் அவர் தம்மமும்" என்ற நூலை விமர்சித்து "அம்பேத்கரும் அவர் தம்மமும்" என வசுமித்ர எழுதியிருந்தார். தமிழில் கடும் விமர்சனங்களுக்கும் சர்ச்சைக்கும் உள்ளான அந்த புத்தகத்திற்கு மறுப்பு தெரிவித்து வழக்கறிஞர் அ.ப.காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
33. தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்
எழுத்தாளர்: பேரா.க.ஜெயபாலன்
வெளியீடு: பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
விலை: 350
1932 முதல் 1954 வரை தமிழ்நாடு கேரளா ஆந்திரம் கர்நாடகம் மாநிலங்களுக்கு எப்போதெல்லாம் வந்தார் என்ன உரையாற்றினார் என்பதை பேசுகிறது.
34. பாபாசாகேப்பின் பதிப்புலகம்: அறிவு மரபும் அதிகாரப்படுத்தலும்
எழுத்தாளர்: பா. பிரபாகரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 150
அம்பேத்கரை ஒரு இதழாளராக இப்புத்தகம் அறிமுகப்படுத்துவதாக எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் குறிப்பிட்டுள்ளார்.
35. சாதியை அழித்தொழித்தல்
எழுத்தாளர்: அம்பேத்கர்/ அருந்ததி ராய்
தமிழில்: ப்ரேமா ரேவதி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 490
சாதியை அழித்தொழித்தல் என்ற அம்பேத்கரின் உரையை மீள்வாசிப்பு செய்து, " டாக்டரும் புனிதரும்" என்ற தலைப்பில் அருந்ததிராயின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது.
36. அம்பேத்கர் கடிதங்கள்
எழுத்தாளர்: சுரேந்திர அஜ்நாத்
தமிழில்: சிவசங்கர் எஸ் ஜே
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 495
அம்பேத்கர் தன் வாழ்நாளில் எழுதிய கடிதங்கள் தான் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம். தமிழில் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் என்றைக்கு யாருக்கு கடிதம் எழுதினார் என்பது போன்ற விரிவான தகவல்களோடு இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளனர்.