
வாழ்வில் இவ்வாறான ஒரு தலைவரைப் பார்ப்பது மிகவும் அபூர்வமானது. அதற்குக் காரணம் அவரது ஆரம்பகால வாழ்க்கை. அதுதான் அவரை இந்த அளவுக்குப் பக்குவப்படுத்தி நூறு வயது வரை நேர்மை தவறாதவராக, சமூகத்திற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராக மாற்றியிருக்கிறது.
தோழர் நல்லகண்ணுவின் இளம் வயதில் திருநெல்வேலி மாவட்டம் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தது. அப்போது, இந்திய வீரர்களை, இந்திய பணத்தை உலக மகா யுத்தத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக யுத்த எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் ஓர் இயக்கம் நடைபெறுகிறது. அவர் இந்த இயக்கத்துக்கு தமுக்கு அடித்து நிதி திரட்டித் தருபவராக இருந்திருக்கிறார், தன்னுடைய பன்னிரெண்டு வயதில். அப்படித்தான் அவரது அரசியல் பயணம் தொடங்குகிறது. பின்னர் படிப்படியாக அவரது போராட்ட குணங்கள் மாறுகின்றன.
நல்லகண்ணுவின் வாழ்க்கையில் நான் பார்க்கக்கூடிய முக்கிய விஷயம் எதுவென்றால், பார்ப்பதற்கு எளிய விவசாயி போல் தோற்றம் அளிக்கக் கூடிய அவர் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர். எளிமையை தன் வாழ்க்கையாகவே மாற்றிக் கொண்டவர். அவரின் தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஜூரியாக வேலை பார்த்தவர். நிறைய நிலங்களும் சமூக செல்வாக்கும் கொண்டது அவருடைய குடும்பம்.
நல்லகண்ணுவின் அண்ணன், தம்பிகள் அனைவரும் அந்தக் காலத்திலேயே நன்கு படித்தவர்கள். அவ்வாறான குடும்பத்திலிருந்து வந்த அவர், எவ்வித ஆடம்பரத்தையும் பணக்காரத்தனத்தையும் காட்டாமல் எளியவனிலும் எளியவனாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இதைத்தான் அவரின் சிறப்பாகப் பார்க்கிறேன்.
இவை தவிர, அவரிடம் இருந்த போர்க்குணம் எரிமலையைப் போன்றது. இது அவரின் தோற்றத்தில் தெரியாது. அவரின் 23ஆவது வயதில் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 12 ஆண்டுகள் ஆயுள் தண்டனை. வெடி குண்டு வைத்திருந்தார் என்பதற்காக 6 ஆண்டுகள் கூடுதல் தண்டனை வழங்கப்படுகிறது. அந்த தண்டனையைப் பார்த்து கலங்காதவர் அவர்.
அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் கவனிக்கத்தக்கவை. தன்னல மறுப்பு, தோழர்களின் பாதுகாப்பில் கவனம் என நிறைய உண்டு. அக்காலத்தில் சிறைச்சாலையில் கம்யூனிஸ்டுகளை அடித்து, பயமுறுத்தி, அதன் மூலம் அவர்களின் போர்குணத்தை அழிக்க பெரும் முயற்சி நடந்திருக்கிறது.
சிறைக்குள் ஒரு கம்யூனிஸ்ட் கைதி வருகிறார் என்றால், தயாராக இருக்கும் சிறைக்காவலர்கள், அவரை வாசலில் இருந்து அடிக்க ஆரம்பித்துவிடுவார்களாம். அடித்த பிறகு, தண்ணீர் தொட்டியில் அமுக்கி எடுப்பார்களாம். இப்படியான பல கொடுமைகள் 1948இல் இருந்திருக்கிறது. அப்போது கம்யூனிஸ்டுகள் அனைவரும் கூடி என்ன முடிவு செய்தார்களாம். யாரையாவது அடிக்க ஆரம்பித்தால் நாம் எல்லோரும் பாய்ந்து போய் அந்த அடியை நாம் வாங்கிக் கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கிறார்கள். அப்போது, பாலதண்டாயுதம் முக்கியமான தலைவர். அவரை சிறைக் காவலர்கள் அடிக்க தொடங்கியபோது, ஓடிப்போய் அவர் மேலே படுத்து, முழு அடியையும் நல்லக்கண்ணுவே வாங்கியிருக்கிறார். பாலதண்டாயுதத்துக்கு கோபம் வந்து இவரின் கையை இழுத்து தள்ளி “நீ மட்டுமே அடி வாங்குறீயேடா.. தள்றா..” என தள்ளியிருக்கிறார். அந்த அளவுக்கு தோழமை உணர்வோடும் கூட்டு முடிவை செயல்படுத்தக் கூடியவராகவும் இருந்திருக்கிறார்.
நல்லகண்ணுவின் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எல்லா காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே நின்றிருக்கிறார். அவர் பிறந்தது ஆதிக்க சமூகம். இன்னும் சொல்லப்போனால், தலித் மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்யக் கூடியவர்களைக் கொண்ட சமூகம் அது. அந்நேரத்தில் இந்த பிற்போக்குத்தனத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் நிற்கும்போது, அவரையும் அவரது குடும்பத்தையும் உறவினர்கள், ஊர்க்காரர்கள் புறக்கணிக்கிறார்கள். நல்லகண்ணுவை காவல்துறையிடம் காட்டிக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் இவர் புலியூர்குறிச்சியில் கைது செய்யப்படுகிறார். 6 வெடிகுண்டுகள் வைத்திருந்ததாகவும், காவல்துறையினரை தாக்க முற்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு. அவரைக் கைதுசெய்து சிறைக்குக் கொண்டுவந்த காவல்துறை, தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, கீழே புகையை மூட்டி நெடியேற வைத்திருக்கிறார்கள். அப்போது அவர் பகத்சிங் மாதிரி மீசை வைத்திருந்தார். அவரின் மீசை முடி ஒவ்வொன்றையும் காவலர்கள் பிடுங்கி எடுத்திருக்கிறார்கள். உதட்டிலிருந்து ரத்தம் கசிந்தாலும், தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற ரகசியத்தை அவர் சொல்லவில்லை.
“நீ வாட்ட சாட்டமா இருக்கட… நீ குடியிருக்கும் பகுதியில பெண்களும் வாட்ட சாட்டமா இருக்குமா..?” என காவலர்கள் பேச ஆரம்பித்ததும். வாய் திறக்காதவர் வாய் திறக்கிறார். “என்ன முணுமுணுக்குறனு…?” போலீஸ்காரர் கேட்டதும். “உங்கள் வீட்டிலும் வயசுக்கு வந்த பொம்பள புள்ளங்க இல்லையா.. கீழ் சாதிக்காரங்கனா இப்படி நினைப்பீங்களா…?” என கேட்கிறார்.
அந்த போலீஸ் அதிகாரி பதட்டமாகி அப்படியே நின்றுவிட்டிருக்கிறார். இந்திய அளவிலேயே கட்சி ரகசியங்களை பாதுகாக்கக்கூடிய பட்டியலில் இவர் முதலிடத்தில் இருந்தார்.
நல்லகண்ணுவின் மாமனாரை 82 வயதில் வெட்டிக் கொன்றுவிடுகிறார்கள். அவர் ஒரு கம்யூனிஸ்ட். தலித்துகளுக்கு கிராமத்தில் தனிக் குவளை இருந்ததற்காகவே அதைக் கண்டித்து அந்தப் பகுதியில் டீ கடை ஆரம்பித்தவர். 1995இல் பெரிய ஜாதிக் கலவரம் நடந்தது. யார் அதிகமாக வெட்டியது என கணக்கு பார்ப்பார்கள். அந்த எண்ணிக்கைக்காகவே அவரையும் வெட்டி விட்டார்கள். நியாயமாகப் பார்த்தால் இந்த விஷயத்துக்கு நல்லகண்ணுக்கு கோபம் வந்திருக்க வேண்டும். அவர் கோபப்படவில்லை. கட்சியினரைக் கூட்டி, நானே அந்த இடத்துக்குப் பாதை யாத்திரை சென்று இரண்டு சமூகத்திடம் சமாதானம் பேசுகிறேன் என்றார்.
அவர் அமைதிப் பேரணி தொடங்கியபோது என்ன நடந்தது என்றால், தலித் இளைஞர்கள் அவரை ஊருக்குள் விடவில்லை. அதற்கு பழைய தலித் தலைவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், “இவர் இல்லை என்றால் வீடு கிடையாது, நிலம் கிடையாது, சாலையில் நடக்க முடியாது. இவரையாடா வரக்கூடானுது சொல்றீங்கனு” என்று கேட்டவர்கள். இவரின் கை பிடித்து ஊருக்குள்ளே அழைத்து சென்றார்கள்..
அவர் நடத்திய மகத்தான போராட்டம் எதுவென்றால் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம். இப்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், இயற்கை வளங்களைப் பாதுகாக்கிற புதிய போராட்டங்களை அவரின் பெயரில் தொடங்க வேண்டும், வாழ்நாளை அதற்காக அர்ப்பணிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
தாமிரபரணி ஆறு காப்பாற்றப்பட அவர் தான் காரணம். புகளூரில் காவேரி ஆற்றிலிருந்து மணலை அள்ளிச் சுரண்டினார்கள். விஸ்வநாதன் என்பவர் அதற்கு எதிரான போராட்டத்தைத் தொடங்க, நல்லகண்ணு கூட இருந்து எல்லாவற்றையும் செய்தார்.
அதேபோல், ஈழத்தமிழர்கள் பற்றிய சரியான புரிதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடையாது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடப்பதற்கு முன்னர், ஐதராபாத் கூட்டத்தில் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உண்ணாவிரதம் நடத்தியது. இந்திய அளவில் அதை ஒரு முக்கியமானதாக மாற்றினோம். அதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் நல்லகண்ணு. அவருடன் தா. பாண்டியன், என்னைப் போன்றவர்களும் இருந்தோம்.
நல்லகண்ணு கட்சி அரசியலை, அதிகார அரசியலை வெறுக்கக்கூடியவர். காந்தி, அம்பேத்கர், பெரியார் போல் தேர்தல் அரசியலால் பெரிய மாற்றங்கள் நிகழாது என நம்பிக்கை கொண்டவர். மக்கள் போராட்டங்கள் மூலம் ஏற்படக் கூடிய தன்மைகள்தான் மாற்றத்துக்கு வழி வகுக்கும் என நம்பியவர். கட்சி அரசியலின் சீர்கேடுகளைக் கலைந்து, மக்கள் அரசியலின் மேன்மைகளை வளர்த்தெடுத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, குடிமை அதிகாரம் அடிப்படையில் அதிகாரம், விழிப்புணர்வு பெற்றவர்களாக, இன்னும் சொல்லப்போனால், சமூகத்தின் பண்பட்ட போராளிகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம். தலைவர் ஜீவா விரும்பியதைத்தான் நல்லகண்ணுவும் விரும்பினார்.
அந்த மாற்றத்தைச் செய்வதுதான் அவருக்கு தமிழ்நாடு செலுத்தக்கூடிய அஞ்சலியாக இருக்க முடியும்.