இங்கு தேனீக்கள் வாடகைக்குக் கிடைக்கும்!

freepik.com
உலக தேனீக்கள் தினம்
Published on

 இன்றைக்கு உலக தேனீக்கள் தினம்(20-05-2025). “தேனீக்கள்- இயற்கை அளித்த ஊட்டச்சத்து உற்பத்தியாளர்கள்” என்ற கருப்பொருளில் 2025 ஆம் ஆண்டிற்கான உலக தேனீ தினத்தை முன்னெடுக்கிறது ஐநா. தேனீக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதும், மகரந்த சேர்க்கையில் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுமே இதன் நோக்கம்.

  இன்று நகரமயமாக்கல், காலநிலை மாற்றம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் ஆகிய பல காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

ஆகவே மகரந்த சேர்க்கை நிகழ உங்கள் தோட்டத்தில் தேனீக்கள் இல்லையென்றால் என்ன செய்வது? தேனீக்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய தொழில் இப்போது அறிமுகமாகிவருகிறது.

உங்கள் தோட்டத்தில் மகரந்த சேர்க்கை நடக்க தேனீக்கள் தேவை என்றால் என்னிடம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார், தேனீ பண்ணையாளராக மாறியுள்ள விஞ்ஞானி நிதின் குமார் சிங். உத்தர பிரதேசத்தில் உள்ள பாராபங்கியைச் சார்ந்த நிதின் குமார் சிங் தேனீ சார்ந்த தொழில் முனைவோராக வலம் வருகிறார்.

 600 தேனீப் பெட்டிகளை வைத்துள்ளார் அவர்.  ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தேனீக்கள் வரை  இருக்கும். இவை இந்தியா முழுவதும் தேவைப்படும் இடங்களுக்கெல்லாம் வாடகைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் தேனீக்களுடன் ஒரு ராணி தேனீ இருக்கும். ஒரு தேனீ பெட்டியின் மாத வாடகை ரூ.2500. 15000 சதுர அடி நிலப்பரப்பில் 10 முதல் 20 தேனீ பெட்டிகள் வரை வைத்துக் கொள்ளலாம்.

பீகாரில் உள்ள லிச்சித் தோட்டங்கள் முதல் ஹிமாச்சலில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டம் வரை இந்த தேனீக்கள் பயணிப்பதுடன் நல்ல விளைச்சலையும் தந்து இருக்கின்றன இவரின் தேனீக்கள்.

 இவை மகரந்தச் சேர்க்கையில் உதவுவதுடன் பயிர் விளைச்சலையும் அதிகமாக்குகின்றன.

நிதின் இந்த தொழிலை பணத்துக்காக மட்டுமல்லாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறார்.

 “தேனீக்கள் நம் கூட்டாளிகள். அவர்கள் இல்லாமல் நாம் யாரும் இல்லை.தேனீக்களை நாம் நன்றாக புரிந்து கொண்டு அதன் வேலைகளை செய்ய விட வேண்டும்” என்கிறார் நிதின்.

வங்கதேசத்தில் ஒரு தேனீப்பண்ணை
வங்கதேசத்தில் ஒரு தேனீப்பண்ணை

லக்னோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் பேராசிரியராகப் பணிபுரியும் கீதாஞ்சலி மிஸ்ரா, “இந்தியாவில் தேனீக்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் 20% குறைந்துள்ளது. ஒடிசா போன்ற இடங்களில் 80% வரை அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. மகரந்தம், மகரந்த தேன் இல்லாமை , பூச்சிக்கொல்லி பயன்பாடு, கால நிலை மாற்றம் ஆகியவை அதன் எண்ணிக்கை குறைவதற்கான காரணிகள்.

மகரந்தத் தேன் பற்றாக்குறை தேனீக்களின் உடல் நலத்தை பாதிக்கிறது.வெப்பநிலை, மழைப்பொழிவு முறை ஆகியவை அதன் தீவனம், அடை கட்டும் திறனை பாதிக்கிறது.

பல்வேறு உயிரினங்கள் தேனீக்களை நம்பி இருப்பதால் பல்லுயிர் பாதிப்படைவதுடன் வரும் காலங்களில் விளைச்சல் குறைந்து உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும்” என்கிறார்.

நிதினின் தேனீப் பண்ணை லக்னோவில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  டமாயூரா என்ற கிராமத்தில் சூரியகாந்தி, தக்காளி, சிறுதானியங்கள் ,புதினா ,கடுகு ஆகியவற்றிக்கு நடுவில் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

நிதின் பண்ணைத் தேனீக்கள் பயணம் செய்கின்றன
நிதின் பண்ணைத் தேனீக்கள் பயணம் செய்கின்றன

என்னுடைய தேனீக்கள் சுற்றுலா பயணிகள் என்று பெருமிதம் கொள்கிறார் நிதின்.  இவற்றில் பெரும்பாலானவை இத்தாலியை பிறப்பிடமாகக் கொண்டுள்ள ஏபிசி மெல்லிபெரா என்ற வகையைச் சார்ந்தவை. ‌ இந்த தேனீக்கள் சூர்ய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்குமான இடைவெளியில் தான் ஊர்விட்டு ஊர் எடுத்துச் செல்லப்படும். அக்டோபர், மே மாதங்களில் தேன்கூடுகளை எடுத்து தேன் சேகரிக்கும் நேரம் . இந்த மாதங்களில் ஜூன் ,செப்டம்பர் மாதங்களை விட தேனீ பெட்டியின் விலை அதிகமாக இருக்கும்.

 ஆப்பிள், மாதுளை பழத்தோட்டங்களில் தேனீக்களை பயன்படுத்தும் போது 20% முதல் 30% வரை விளைச்சல் அதிகமாக இருக்கிறது என்றாலும் எதிர்பார்க்க முடியாத சில சவால்கள் இந்த தொழிலில் ஏற்படும் என்ற கருத்தும் உலா வருகிறது.

 பொள்ளாச்சி திவான்சாபுதுரை சேர்ந்த விவசாயி விவேக், தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கவும், அதற்கு  அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதற்காகவும் இரு தென்னை மரங்களுக்கு இடையே உலக உருண்டையையும் அதன் மீது தேனீ இருப்பது போன்ற லோகோவை வடிவமைத்துள்ளார். இது குறித்து அரசிடம் பேசி அங்கீகாரம் பெற்று பயன்படுத்த வேண்டும் என்றும், தேனி வளர்ப்பு, தேன் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று உலக தேனீ விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. தேன் உற்பத்தி, அறுவடை பற்றிய விழிப்புணர்வு, தேன் மெழுகு வாயிலாக சிலைகள், சோப்பு தயாரிப்பு, தேன் நெல்லி, தேன் குல்கந்து ஆகியவற்றின் தயாரிப்பு, செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.

தேனீக்கள் இந்த உலகில் மொத்தமாக அழிந்துபோய்விடும் என்றால் என்றால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு மேல் மனித குலத்தால் இந்த பூமியில் வாழவே முடியாது என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மனிதன் உண்ணுகிற உணவில் 75% மேல் தேனீக்களின் அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் உண்டாகிறது. ஆகவே தேனீக்களின் முக்கியத்துவத்தை இந்நாளில் உணர்வோம்!

logo
Andhimazhai
www.andhimazhai.com