உலகம் முழுவதும் இன்று தற்கொலைத் தடுப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் விழிப்பூட்டல் நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் உரையுடன் வித்தியாசமான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த ஆண்டின் கருப்பொருளாக, தற்கொலை பற்றிய தவறான எண்ணங்களை, சித்திரிப்பை மாற்றுவோம், உரையாடத் தொடங்குவோம் என்பதை மையமாக வைத்து நிகழ்வு நடத்தப்பட்டது.
தற்கொலை முயற்சியிலிருந்து மீண்ட பெண் ஒருவர், எப்படியெல்லாம் மனதிடமாகவும் நல்லபடியாகவும் எண்ணங்களைக் கைக்கொள்வது என்றும், கெடுதியான, பலகீனமான எண்ணங்களை எப்படி கைவிடுவது என்றும் மருத்துவ மாணவர்களிடையே பேசியது வந்திருந்தவர்களைக் கவர்ந்தது.
தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு இறந்துபோகும் ஒருவரைப் பற்றி, அவரைச் சுற்றியுள்ளவர்கள், மற்றவர்கள், ஊடகத்தில் என பல தரப்புகளிலும் எப்படியெல்லாம் சித்திரிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் உண்மையான காரணம் என்ன என்பதைக் கேள்வி கேட்க வலியுறுத்தும்வகையிலும் ’1009/ 2024’ என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது.
மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் எழுதிய நாடகத்தை, நாடக இயக்குநர் கருணா பிரசாத் பயிற்சி அளிக்க, மாணவர் காயத்ரி சிறப்பாக நடித்து அசத்தினார். நாடகப் பேராசிரியர் மு. இராமசாமி உட்பட பலர் பார்வையாளர்களாக வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில், சென்னை, தனியார் கல்லூரி பேராசிரியர் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
பேராசிரியர்கள் நமிதா நாராயணன், கே.ஆர். பத்மநாபன், எஸ்.சுகுமார், டி. ரங்கநாதன், நிலைய மருத்துவ அதிகாரி எஸ். முகுந்தன், மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார் ஆகியோரும் பேசினர்.
1009 / 2024 நாடகம்!
ஒரே புழுக்கமா இருக்கு
புழுங்கிக்கிட்டே இருக்கிறது புதுசா என்ன?
இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு
மணி...
மணி என்ன இருக்கும் விடிஞ்சிடுச்சா?
இல்ல என் கண்ணுக்கு தான் இப்படி இருட்டு தெரியுதா?
உங்களுக்கு விடிஞ்சிட்டுச்சா?
என்ன அமைதியா இருக்கீங்க ...
நான் பேசுறது கேட்குதா?
இப்பவாவது நான் பேசுறது
உங்க காதுக்கு கேட்குதா?
என்ன ஆச்சரியமா பாக்குறீங்க...
பிணம் எப்படி பேசும்னா?
பேசவா விட்டீங்க
இல்ல
பேசியதையாவது கேட்டீங்களா...
இப்ப பேசலன்னா எப்பதான் பேசுறது?
-------------------
நான் யார்னு செல்லணும்ல்ல
பேரு...
பேரு எதுக்கு?
நீங்க எழுதியிருக்கிறா மாதிரி
பெயர் தெரியாதவர் unknownஆ இருந்துட்டுப் போறேனே!
இத்தனை நாளும் எதுவும் தெரியாதவன்னு பேர் வெச்சிதான கூப்பிட்டீங்க..
அப்படியே இருந்துட்டுப் போகட்டும்.
சரி உங்க செளரியத்துக்கு நீங்க கொடுத்த நம்பரே பேரா இருந்துட்டுப் போகட்டும்.
1009 / 2024
1009... 1009
1009 எனக்கு முன்னால் இத்தனை பேரா?
---------------------
எதனால நான் எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டேன் ?
நா சொல்றது இருக்கட்டும்...
இந்நேரம் எங்க ஊருல எதிர்த்த வீட்டு அம்மா பேசி முடிச்சிருப்பா ..
அவ யாருகூடயோ பழகியிருப்பா எனக்கு இப்படி நடக்கும்னு முன்னாடியே தெரியும்.
சாயங்காலமே ஊருல பேச்சு ஆரம்பிச்சிருபாங்களே
அவ நடத்த சரியில்லக்கா ஒரு பையனோட போனமாசம் தான் பார்த்தேன்..
இந்த வயசுல வேற என்ன இருக்கும்?
அதான் அதேதான்..
இதுக்குதான் பொண்ணுகளுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது. சுயமா யோசிக்கவிடக்கூடாது.
காலா காலத்துல அவளப் புடிச்சு கட்டிக் குடுத்திருக்கணும்..
மாடு மாதிரிதானே....
கட்டிக் குடுக்கணும்....
கட்டிக் குடுக்கணும் சிறையில் அடைக்கணும்..
இந்தக் காலத்துல பொண்ணுக எப்பப்பாரு போன்லதான் இருக்குதுங்க.. போன்ல எதாவது பிரச்னையாகி அதை மறைக்க தற்கொலை செஞ்சிருப்பாளோ.. இருக்கும் இருக்கும்..
பொண்ண வளக்கத் தெரியாம வளக்குறது அப்பறம் செத்துட்டான்னு பொலம்புனா..? எல்லாம் அவங்க அம்மாவ சொல்லணும்..
அவளுக்கு வாயிக்கா. எதுக்கெடுத்தாலும் கேள்வி கேப்பா; சண்ட பிடிப்பா; அடங்க மாட்டா.
காலேஜுல எதாவது பிரச்னை ஆயிருக்கும்.
மார்க்கு கொறைஞ்சி பெயிலாயிருப்பாளோ... ஆமா ஆமா ஊர்க் குருவி பருந்தாக ஆசைபட்டா!
ஊர்க் குருவி...
ஊர்க் குருவிய
ஊர்க் குருவியாகூட நீங்க இருக்கவிடலியே
அதப் பறக்கவிடலியே ..
---------------------
காலை நாலு மணியாச்சா தமிழ் நியூஸ் பேப்பர் வந்திருக்கும் செய்தி போட்டிருபாங்களே, பாத்தீங்களா?
இளம் பெண் தற்கொலை!
யாருடனோ போனில் பழகிவந்ததாகத் தகவல்; கள்ளக் காதலன் பிரிந்ததால் மனம் உடைந்து...
மனம் உடைந்து...
எப்படி கதை எழுதுறாங்க
டிவி நியூசுல
என் போட்டோவைப் பெருசா போட்டு அதையும் வியாபாரமா ஆக்கியிருப்பாங்க...
செத்தா மட்டும்தான் நாங்க கண்ணுக்குத் தெரியுறோம்.
அதுவும் தற்கொலை முயற்சி திரில்லிங்கா இருந்தா அவங்களுக்கு இன்னும் லாபம்தான்...
-------------------
டாக்டர் என்ன சொல்வாங்க?
ஏதோ மூளையில ரசாயனக் குறைபாடுன்னு சொல்வாங்க.
மாதவிடாய் காலத்துல ஹார்மோன் மாற்றத்தால அதிகம் கோபப்படுவாங்க அதனாலதான்னு சொல்வாங்க ..
ரசாயனக் கலவை..
ஹார்மோன்...
இதுதான் நானா?
அதன் மாற்றங்கள்
இதுதான் எல்லாத்துக்கும் காரணமா ?
-------------------
அன்னிக்கி ஒரு அக்கா தற்கொலை முயற்சி பண்ணிட்டு வந்தப்ப யாருக்குதாம்மா பிரச்னை இல்லைன்னு சொன்னார்.
அதுக்கு அந்த அக்கா சொன்னா, ஒரு நாள் எங்க வாழ்க்கைய வாழ்ந்து பாருங்க சாருன்னு...
ஒரு நாள் எங்க வாழ்க்கய வாழ்ந்து பாருங்க..
பெண்ணா
எத்தன பிரச்னை
எத்தன நெருக்கடிகள்
எத்தன தடைகள்
எத்தன ஒடுக்குமுறை
குழுமூர் கிராமத்துல ஒரு பொண்ணு படிச்சு பிளஸ்டூவுல 1176 மார்க் எடுத்துச்சு. அப்புறம் என்னாச்சு நீட்டுன்னு கொண்டுவந்து மரணத்தை பரிசா கொடுத்தாங்க.
கடன் பிரச்னை நடுத்தெருவில் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி நெருக்கடி கொடுக்கும் தண்டல்காரன்.
...
காதலிச்சு கல்யாணம் பண்ணா கணவனை ஆணவக் கொலை செஞ்சிட்டு சந்தோசமா இருன்னு வாழ்த்துறாங்க வாழந்திடுவியான்னு சவால்விடறாங்க...
வேலை செய்ற எடத்துல நெருக்கடி எத்தன பிரச்சனைகள்... யார்கிட்டயாவது போய் பேசுறிங்கீங்களா... மாடு மாதிரி வேல வாங்குறது, தப்பா பேசுறது, தப்பா நடந்துக்கிறது எல்லாம் தாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தா, தினமும் குடிச்சிட்டு வந்து அடிச்சு உதைக்கும் வீட்டுக்காரன்... மனம் உடைஞ்சு, போக வழியில்லாமல் திக்குத் தெரியாமல் இருக்கிறவளுக்கு தூக்கு கயிறுதான் தெரியுது.
பசி பசி... நேரத்துக்கு சாப்பிடாம சோறு கெடைக்காம வயிறு நோவுது. அந்த வலி தெரியுமா? அப்ப மனசும் வலிக்கும் தெரியுமா?
யாருக்குமே புரியாதா அந்த வலி?
கூட்டத்துல தனியா இருக்கோம்.
ஒதுக்கப்பட்டு அவமானப்பட்டு அசிக்கப்பட்டு மனம் நொந்து உடைஞ்சு போய் நிக்கிறோம்.
எவ்வளவு சுலபமா தீர்ப்பு எழுதிட்டுப் போயிட்றீங்க...
நேரமாயிடிச்சு..
விடிஞ்சிடுச்சு
நான் ஏன் தற்கொலை செஞ்சிக்கிட்டேன்னு
சொல்லாமலே போறேன்னு கேக்கிறீங்களா?
யோசிங்க
கண்டுபிடிங்க
யோசிங்க
யோசிங்க...!
(சொன்னபடியே திரும்ப ஸ்ட்ரெச்சரில் ஏறி படுத்துக் கொள்கிறார்)
--------