’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’

’யோகா தமிழருடையது- அடித்துச் சொல்லும் சித்த மருத்துவ வல்லுநர்’
Published on

நாடு முழுவதும் இன்று யோகா நாள் கடைப்பிடிக்கப்பட்டு, ஏராளமானவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். அண்மை சில ஆண்டுகளாக மத்திய அரசும் யோகாவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தப் பின்னணியில் யோகா முறையே தமிழர் மரபு நெறி என்கிற குரலும் வலுத்துவருகிறது. ஓகம் எனத் தமிழில் கூறப்பட்டதே யோகம் என வடமொழியில் திரிக்கப்பட்டுவிட்டது என்றும் சித்த மருத்துவம் ஆயுர்வேதம்போல மாற்றப்பட்டுவிட்டது என்கிற வாதமும் முன்னைவிட வலுவாக முன்வைக்கப்படுகிறது. தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பொழிலனின் ’ஓகம் பயில்வோம்’ எனும் புத்தகம், யோகா தமிழ் மரபு முறைதான் என அடித்துச்சொல்கிறது. பெரியார்கூட யோகா கற்றுக்கொண்டார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால், இதைப் பற்றி மருத்துவக் கல்லூரிகள் போன்ற ஆய்வுமட்ட அளவில் துறைசார்ந்த வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

கர்நாடக மாநிலம், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அருள் அமுதனிடம் பேசினோம்.

அந்த உரையாடலிலிருந்து...

பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம்
பேராசிரியர் சித்த மருத்துவர் அருள் அமுதன், மணிப்பால் பல்கலைக்கழகம்

யோகாவை வடமொழிசார்ந்த- வடக்கத்திய ஒன்றாகவும் இன்னொரு பக்கம் தமிழர் சொத்தாகவும் வேறுவேறாகச் சொல்கிறார்களே?

உடலுக்கு வெளியில் இறைவனைத் தேடுபவர்கள், ஒரு வகையினர். மனிதன் முற்பிறவியில் செய்த வினையை முன்னிட்டு பிறக்கிறான்; நோய், துன்பங்கள் வருவது முன்வினைப் பலன் என்பது கர்மா... வேதாந்தம். இப்படிக் கருத்துடைய ஒருவருக்கு, தன்னுடைய பிரச்னையைத் தீர்க்க வேறு வழியே இல்லை; பூசையோ யாகமோ சோதிடப்படி பரிகாரமோ செய்யவேண்டும். இதற்கு அறிவியல் தேவையே இல்லை. வேதாந்திகள் இதைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிவருகிறார்கள்.

இன்னொரு பக்கம், மக்களுடைய கஷ்டங்களைப் பார்த்து, அவர்களின் நோய்களைத் தீர்க்க முடியும்; அறிவியல்பூர்வமாக எதையும் செய்யவேண்டும் என்று முயன்றவர்கள் சித்தாந்திகள். வேதாந்தம்- சித்தாந்தம் இரண்டும் நேர் மாறானவை.

நம் நாட்டில் கௌதம புத்தர், மகாவீரர், கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் வள்ளலார்... இவர்கள் எல்லாரும் சித்தாந்திகள். வேதாந்தத்துக்கு எதிரானவர்கள்; மெய்ஞானம், விஞ்ஞானம், ஆன்மிகம் எனப் பேசியவர்கள்.

வேதாந்திகளுக்கு மதம்தான் எல்லாம். கடவுளை வெளியில் தேடினால் வியாபாரம்; உண்மையில் உனக்குள் கடவுளைத் தேடு என்கிறபடி சித்தர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் யோகம். புத்த மதம், ஜைன மதம் யோகா தியானத்தைக் கற்பிக்கிறார்கள், செய்கிறார்கள். வேதாத்ரி மகரிஷியின் ’வாழ்க வளமுடன்’ வழியினரும், வள்ளலார் வழியினர் தியானம் செய்கிறார்கள். ஐயா வைகுந்தர் வழியில் ஒரு கண்ணாடி முன் தியானம் செய்யச் சொல்கிறார்கள். அதாவது கண்ணாடி முன்னால் நின்று பார்த்தால் நீதான் இறைவன். இவர்களை ஒரு குடையில் வைத்தால், கடவுளை உனக்குள்ளே தேடு என மனதுக்குள்ளே பயணம் (Inner Journey) செய்யச் சொல்கிறவர்கள், சித்தாந்திகள்.

இந்த சித்தாந்திகள் யோகாவில் எட்டு வகைப் படிநிலைகளைப் பயிற்சிசெய்து, கடைசியாக சமாதி நிலையை அடையும்போது அவர்களுக்கு எல்லையில்லா அதிசக்தி கிடைக்கிறது. பெரிய மேஜிக்கல் பவர் கிடைக்கிறது. அவர்களுக்குப் பெயர் அஷ்டமகா சித்திகள்... இவர்கள்தான் சித்தர்கள். வட இந்தியா, தென் இந்தியாவில் யோகிகள் எத்தனையோ பேர் இருந்தாலும் கடைசி நிலைக்குப் போய் சித்தர்கள் ஆவதில்லை. கடவுளை அடைய முயல்பவன் பக்தன்; அடைந்தவன் சித்தன்.

சமாதி என்றால் இறந்துவிடுவார்களா?

இல்லை, உயிரோடுதான் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்களுக்கு அதிதீவிரமான சக்தி கிடைத்திருக்கும். தெளிவாக பிரச்னைக்குத் தீர்வைக் காண அவர்களால் முடியும். அந்த அளவுக்கு மனத் திட்பம் உருவாகியிருக்கும். சித்தர்கள் என்பவர்கள் ஒருபக்கம் மருந்துகளைச் செய்தாலும், காயகற்பம்- அதாவது காயம் என்றால் உடல், கற்பம் என்றால் உடலை கல்லைப் போல வலுவாக வைத்துக்கொள்வது; அதில் உள்ள ஒரு பயிற்சியான யோகாவை உருவாக்கினார்கள். இது முற்காலத்தில் துறவு வாழ்க்கைக்குப் போகிறவர்களுக்கான பயிற்சி, பொது மக்களுக்கானது அல்ல. அதனால்தான் இது எல்லாருக்கும் சொல்லித்தரப்படவில்லை. மரணமில்லாப் பெருவாழ்வு என வாழ முற்படுவோருக்கு, உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு சித்தர்கள் கண்டுபிடித்ததுதான் காயகற்பம். அதைப் பயிற்சிசெய்ய எண்ணம், சொல், செயல் தூய்மையாக இருக்கவேண்டும்; உணவுக் கட்டுப்பாடு உள்ளது. உன்னையே நீ அறி- நமக்குள்ளேயே பயணம்... தியானம்..அதுதான் யோகா.

சரி. ஏராளமானவர்கள் இப்போது யோகா செய்கிறார்கள். முற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்த அளவினரிடம் மட்டுமே இருந்ததாகச் சொல்கிறீர்கள். இப்படி என்றால், சித்த மருத்துவத்தின் அங்கமாக யோகா என்னதான் செய்தது?

யோகம் நம்முடைய கலைதான்; உடல், உள்ளத்துக்கான ஒரு முறைதான். திருமூலரின் திருமந்திரத்தில் நிறைய பாடல்கள்... இதைப் பற்றி மட்டும் 300 பாடல்கள் இருக்கின்றன.

திருமந்திரத்தில் ஒரு அதிகாரம் முழுவதுமே அட்டாங்க யோகம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. போகர் என்ற சித்தரின் நூலில் இருக்கிறது. அகத்தியரின் நூலில் இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட மூலநூல்களில் இருக்கிறது. யோகத்தின் தந்தை எனச் சொல்லப்படக்கூடிய பதஞ்சலி முனிவர், இராமேசுவரத்தில் யோகாவைக் கற்றுக்கொண்டு சமாதி நிலையை அடைந்ததாக நம்முடைய சித்த நூல்கள் சொல்கின்றன.

திருமூலர், பதஞ்சலியும் தானும் உட்பட மொத்தம் எட்டு பேர் ஓர் ஆசிரியரிடம் யோகத்தைக் கற்றுக்கொண்டதாக திருமந்திரத்தில் எழுதியுள்ளார். தமிழர் ஆன்மிகத்தில் யோகம் இருக்கிறது. பதஞ்சலி தமிழிலிருந்து கற்றுக்கொண்டு போய் சமஸ்கிருதத்தில் எழுதிவைத்திருக்கிறார்.

கைகால் நோவு ஏற்படும்போது வர்ம சிகிச்சை அளித்தபிறகு, நோயாளிகளே தங்களின் வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடும்வகையிலான வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிதான் இந்த ஆசனங்கள்.

சித்த மருத்துவர்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சில நோயாளிகள் நீண்ட காலம் வாழவேண்டும் என விரும்பிக் கேட்கும்போது சிகிச்சையாக கற்றுத்தருவோம். ஆனால், காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்குக் கற்றுத்தரப்படுவதில்லை. எல்லாரையும் கூட்டத்தைக் கூட்டி சொல்லித்தரப்படவில்லை.

உடலுக்கும் மனதுக்கும் தெம்பு வேண்டும் என்றால், பூசை, பரிகாரம் செய்ய வேண்டும் என வேதாந்திகள் சொல்லிக்கொண்டு இருந்தபோது, அதற்கு மாற்றாக சித்தர்கள் யோகாவைக் கண்டுபிடித்தார்கள். நியமம், இயமம், யோகம், பிராணயாமம் செய்தால் அவ்வளவு பயன்களும் கிடைக்கும் என்றார்கள். கிடைத்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவாமி சிவானந்தா என்பவர் அல்லோபதி மருத்துவர். வெளிநாடுகளுக்கெல்லாம் போய்வந்தவர். அவர் யோகத்தை நன்கு அறிந்தவர். நோயாளிகளுக்குக் கற்றுத்தந்து இது நன்றாக இருக்கிறது என ஒரு சிகிச்சையாக மாற்றினார்.

இன்னொரு பக்கம், இந்த யோகாவை தமிழ்ச் சமூகத்தில் கடவுள் மறுப்பாளர்கள் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; தேவை இல்லை என தள்ளிநிற்கிறார்கள்...

கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரியர்கள், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாரும் யோகா செய்யலாம். இவர்களுக்கு இதைப் பற்றி போதிய விழிப்புணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்ப்பக்கம் வேதாந்திகள் இதைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள்.

உனக்கு நீதான் கடவுள்- அதை உணர்வதற்குத்தான் யோக மார்க்கம் என்கிறார்கள் சித்தர்கள். ஆனால் வேதாந்திகள் பூசை புனஸ்காரம் செய் என்கிறார்கள். அவர்களே யோகாவையும் வலியுறுத்துவதால் பகுத்தறிவாளர்கள் மதம்சார்ந்த ஒன்றாக ஒதுக்கிவைக்கிறார்கள்.

புற்றுநோய் வந்த ஒருவரிடம் மருத்துவர், இனி ஒரு மாதம்தான், நீ இறந்துவிடுவாய் எனச் சொல்லிவிட்டார். இனி குழந்தையே பிறக்காது என ஒருவரிடம் சொல்லிவிட்டார்... இவர்களுக்கெல்லாம் ஒரு ஆன்மிகப் பிடிப்பு வேண்டும் அல்லவா? இதற்கு யோகா உதவியாக இருக்கிறது. வேதாந்திகள் சொல்வதை வைத்து இவர்கள் புறக்கணிப்பதால், யோகம் கூடாது எனச் சொல்லிவிட முடியாது. உண்மையில் யோகத்தைக் கற்றுக்கொண்டு பரப்பவேண்டியது, கடவுள் மறுப்பாளர்கள், பகுத்தறிவாளர்களின் பணி. அப்போதுதான் அறிவியல்பூர்வமாக பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பது நடக்கும். மருத்துவரீதியாக எல்லாவற்றையும் குணப்படுத்த முடியாதபோது, உளவியலாக பணமில்லாத மருத்துவ முறையாக யோகா பயன்படுகிறது!

எத்தனையோ பேர் யோகா ஆசிரியர் என விளம்பரம் செய்துகொள்கிறார்கள். சரியான பயிற்சியாளரைக் கண்டறிவதே சவாலாக இருக்கிறது. சரியான முறையில் எப்படி இதைக் கற்றுக்கொள்வது?

தமிழ்நாட்டில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் யோகாவுக்கென தனித் துறைகள் உள்ளன. அங்கு யோகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நோய் வரும்முன் காப்போம் என்பதற்காகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறமுறையில், அந்தக் கல்லூரிகளில் யோகத்தை முறையாகக் கற்றுக்கொடுக்கிறார்கள். சென்னை, நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், யோகா கல்லூரிகளில் இதற்கான வாய்ப்பு உண்டு. இதைத் தாண்டி நீங்களே யோகத்தை முறையாகக் கற்றுக்கொண்டு பயிற்சியாளர் ஆகவேண்டுமென்றால், விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையான படிப்புகள் உள்ளன. அப்படிக் கற்றுக்கொண்டவர்கள் தகுதியான ஆசிரியர்கள்தான். மேலும், வாழ்க வளமுடன், பாபாஜி கிரியா யோகா வழியினர் முதலியவர்கள் முறையான யோகப் பயிற்சியைத் தருகிறார்கள்.

எச்சரிக்கையாக இருக்கவேண்டியது, பணத்துக்காக இதைச் சொல்லித்தரும் கார்ப்பரேட் சாமியார்களிடம்தான். அவர்கள் வேதாந்தம், சித்தாந்தம் இரண்டையும் சேர்த்து குழப்பியடிக்கிறார்கள்; அது தவறு. இந்த மாதிரியான இடங்களில்தான் யோகாவை வியாபாரம் ஆக்குவதைப் பார்க்கமுடியும்.

யோகாவை முறையாகக் கற்காமல், வீடியோவைப் பார்த்து சுயவைத்தியம்போல தானாகச் செய்துகொள்கிறார்கள். அதை அப்படியான பயிற்சி தருவோரும் ஊக்குவிக்கிறார்கள். அதனால் சிக்கல்களும் உண்டாகும் என்கிறார்களே...

இப்படியான வீடியோக்களை விழிப்புணர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எப்போதும் யோகம் செய்யும்போது உடலில் உள்ள வர்மப்புள்ளிகள் தூண்டப்படும். தவறாகச் செய்தால் நிச்சயமாக சிக்கல் வரும். மூச்சுப் பயிற்சியைச் சரியாகச் செய்யாவிட்டால் ஆஸ்துமா, வயிற்றுப்புண் போன்றவை வருகின்றன. கூடுதலான நிலையில் உள்ள பயிற்சிகளில் சிக்கலாகிவிட்டால் மூலநோய் வரலாம். தவறாக யோகா செய்து மனநோய் வந்தவர்களைக்கூட பார்த்திருக்கிறேன்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மூளையின் பல மையங்களைப் பட்டை தீட்டுவதுதான் யோகத்தின் நோக்கம். இதைத் தவறாகச் செய்தால் மூளையில் பாதிப்புகளை உண்டுபண்ணும். அரிதாக மோசமான பாதிப்புகளும்கூட ஏற்படும். எனவே, நேரடிப் பயிற்சிதான் சரியானதாக இருக்கும்.

கடைசியாக, நான் சொல்லவருவது, தமிழர்களின் கண்டுபிடிப்பாகிய சித்தர்களின் யோக முறையை இன்னும் ஆராய்ச்சிசெய்து பரப்பவேண்டியது தமிழர்களின் கடமை.

logo
Andhimazhai
www.andhimazhai.com