டிஜிடலில் செதுக்கிய குரலா?
எலிசபெத் டெய்லர் மகளா
சாகீர் உசேன் தபலா இவள் தானா?
இந்த வரி 1996ல் வெளியான இந்தியன் படத்தின் ‘டெலஃபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா’ பாடலில் இடம்பெற்றதை நாம் அறிவோம். அதில் தபலா என்றுதான் வைரமுத்து எழுதினார். தமிழில் வழக்கமாக தபேலா என்று எழுதுகிறோம். ஆனால் அக்கருவியின் சரியான பெயர் தப்லா. பாடலில் அக்கலைஞனின் பெயரை சாகீர் உசேன் என்றுதான் எழுதினார். நாம் ஜாஹிர் உசைன், சாகிர் ஹுசைன், ஜாகிர் உசைன் என்றெல்லாம் எழுதுகிறோம். உச்சரிப்பின் அடிப்படையில் அது zaa -kir hu-sen. ஆதலால் சாக்கிர் ஹுசேன் என்றுதான் எழுத வேண்டும். சாக்கிர் அல்லா ரக்கா குரேஷி எனும் அவரது இயர் பெயர் கொண்ட சாக்கிர் ஹுசேன் தப்லா இசைக்கருவியின் எக்காலத்திற்குமான ஓர் அதிசயம். அவருடனான எனது உறவு ஆரம்பித்தது 1992ஆம் ஆண்டில். அதற்குக் காரணமாகயிருந்தவர் கஸல் பாடகர் ஹரிஹரன்.
ஹரிஹரனின் கஸல் இசைக்கு பல ஆண்டுகளாக நான் தீவிர ரசிகனாக இருந்தேன். அவரது பல கேசட்டுகள் எனது அன்றாட நுகர்வுப் பட்டியலில் இருந்தவை. அவரது அடுத்த கஸலிசைத் தொகுப்பு எப்போது வெளிவரும் என்று தேடிக்கொண்டே இருப்பேன். அப்போது நான் வசித்து வந்த ஹைதராபாத்தின் ஆபிட்ஸ் பகுதியில் உள்ள ஒரு இசைக் கடையின் கண்ணாடி வாசலில் ‘ஹாசிர்’ எனும் புது இசைத்தொகுப்பின் விளம்பரம் ஒட்டியிருப்பதைக் கண்டேன். சூரியகாந்தி வண்ணத்திலான அந்த சுவரொட்டியில் ஹரிஹரனுடன் உஸ்தாத் சாக்கிர் ஹுசேன் இணைந்துள்ளார் என்று எழுதியிருந்தது.
சாக்கிர் ஹுசேன் புகழ்பெற்ற செவ்வியல் இசை தப்லா கலைஞர் என்பது அப்போதே எனக்குத் தெரியும். ஆனால் செவ்வியல் இசையிலிருந்து சற்றே விலகி ஜனரஞ்சகத் தன்மை அதிகமுள்ள ஒரு தொகுப்பில் அவர் வாசித்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்றால் 99 சதவிகிதம் செவ்வியல் இசைக் கலைஞர்கள் அப்படி இறங்கி வரமாட்டார்கள். ஹாசிர் கேசட்டைக் கேட்கையில் மிரண்டுபோனேன் என்றே சொல்லவேண்டும். ஹரிஹரன் மிகப் பிரமாதமாகப் பாடிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் அவரது பாட்டுக்கு சில படி மேலேயே சென்று தப்லா வாசித்திருந்தார் சாக்கிர் ஹுசேன். மனிதக்குரலை மிஞ்சும் அளவுக்கு தனித்துவமான வெளிப்பாடும் உணர்வும் அந்த தப்லா இசையில் இருந்தது. அதுவரை இந்திய இசையில் கேட்டிராத அளவுக்கு தப்லா ஒரு பாடகனின் குரலுக்கு சவால் விட்டுப் பயணித்த பாடல்கள் அவை. கந்தேகம் இருக்கிறதா? ஜியா ஜியா ன ஜியா, கோயி சாயா சில்மிலாயா, ஃபூல் ஹே சாந்த் ஹே, ஷஹர் தர் ஷஹர் போன்ற அத்தொகுப்பின் பாடல்களை இப்போதே இணையத்தில் கேட்டுப் பாருங்கள்.
இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற தாள வாத்தியக்கருவி தப்லா. பல்லாயிரக்கணக்கான கலைஞர்கள் அன்றாடம் வாசிப்பது. ஆனால் அதை உஸ்தாத் சாக்கிர் ஹுசேன் வாசிக்கும்போது எழும் தொனியானது நாம் அது வரைக்கும் கேட்டிராதது. சாக்கிர் ஹுசேன் என்ற பெயருடன் வெளிவந்த அனைத்து இசைத் தொகுப்புகளையும் தேடிப்பிடித்துக் கேட்கவும் சேகரிக்கவும் ஆரம்பித்தேன். அவர் பேட்டிகளை வாசிப்பது, அவரைப்பற்றியான தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பது, அவரது இசைத் தொகுப்புகளின் அட்டைக் குறிப்புகளை (sleeve notes) விரிவாகப் படிப்பது என்று அவருடைய பெரும் விசிறியாகவே மாறிவிட்டேன். அதே காலத்தில், சரியாச் சொன்னால் 1993இன் தொடக்கத்தில் அந்த ஹாசிர் இசைத் தொகுப்பை வெளியிட்ட மேக்னாசௌண்ட் நிறுவனத்தின் இசைப்பதிவு மேலாளராக நான் சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன் என்பது இன்றும் எனக்கு ஆச்சரியமளிக்கும் விஷயம்.
இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு பக்கவாத்தியமாக காலங்காலமாக வாசிக்கப்பட்டு வந்த தப்லா இசைக்கருவிக்கு ஒரு பக்கவாத்தியம் என்கிற இடத்தைத்தாண்டி எந்தவொரு முக்கியத்துவமும் இருந்ததில்லை. அதற்கு முக்கியமான ஓர் இடத்தை முதன்முதலில் அமைத்துக் கொடுத்தவர் உஸ்தாத் அஹம்மது ஜான் திரக்வா (1892-1976). தப்லா இசைக்கருவியின் உண்மையான முன்னோடி அவர் தான். மேடையின் ஓர் ஓரத்தில் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்த தப்லாவை பாடகருக்கோ முக்கிய இசைக்கருவிக்கோ பக்கத்தில் கொண்டுவந்தவர் அவர். ஆனால் அவரால்கூட தப்லா இசையை மைய இசையாக மாற்ற முடியவில்லை.
அவருக்கு அடுத்து நாம் கேட்ட உன்னதமான தப்லா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா (1919-2000). தப்லாவின் இசைக்கும் தொனியையே அவர் முழுவதும் மாற்றி அமைத்தார். அவரது ஆறு குழந்தைகளில் ஒருவர் சாக்கிர் ஹுசேன். அஹம்மது ஜான் திரக்வா மற்றும் அல்லா ரக்காவின் அனைத்து சிறப்புகளையும் ஒருசேரப்பெற்றிருந்தவர் சாக்கிர் ஹுசேன். அதோடு தனது தனித்துவமான தப்லா தொனியாலும் இசைக்கும் முறையாலும் அவர்களையும் தாண்டிச்சென்றார்.
பிறவியிலேயே தாளத்தில் ஊறி வளர்ந்தவர். தான் பிறந்தபோது தனது காதில் குர் ஆன் வாசகங்களுக்குப் பதிலாக சகல கலைகளின் தேவியான தாய் சரசுவதியின் பெயரையும் தப்லாவின் தாளக்கட்டுச் சொற்களையும் தாம் தனது தந்தை ஓதினார் என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். இளமையில் பல்வேறு இசைக்கருவிகளைப் பயிலும் சாத்தியங்கள் அவருக்கு இருந்தன. மட்டுமல்லாது அழகான தோற்றம் கொண்டவர். கூட்டத்தைக் கவரும் ஒரு பரப்பிசை மேடைப்பாடகாராக அவர் ஆகியிருக்கலாம். ஆனால் அவரது அக்கறைகள் அனைத்தும் தாள வாத்தியக் கருவிகளின் மேலையே இருந்தன. ஒருமுறை அவர் லண்டன் சென்று பீட்டில்ஸ் இசைக்குழுவின் ஜார்ஜ் ஹாரிசனைச் சந்திக்கிறார். இந்திய இசைக்கும் அமெரிக்க பரப்பிசைசைக்கும் இடையே பாலத்தை அமைத்தவர்களில் முக்கியமானவர் அவர். ஜார்ஜ் ஹாரிசனிடம் தான் மேற்கத்திய கூட்டு முழவான ஜாஸ் ட்ரம்மை கற்றுக்கொண்டு உலகப் புகழ்பெற்ற ஒரு ட்ரம்மர் ஆகவேண்டும் என விரும்புவதாக சாக்கிர் ஹுசேன் சொன்னார்.
பதிலாக ஜார்ஜ் ஹாரிசன், ’எனக்கு நேரடியாகத் தெரிந்த மிகச் சிறந்த ட்ரம்மர்கள் 1000 பேர் உள்ளனர். நேரடியாகத் தெரியாதவர்கள் ஒரு 5000 பேர் இருக்கும். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் சிறப்பாக ட்ரம் வாசிக்கக்கூடிய 10000 பேர் இருப்பார்கள். ஆனால் உங்கள் கையில் தப்லா எனும் தனித்துவமான தாளக்கருவி இருக்கிறது. அதன் தொனி மேற்கத்திய உலகில் புதுமையாக இருக்கும். அதையே நீங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள். அதில் உங்கள் முன்னோடிகள் செய்யாத விஷயங்களை கையாண்டு உங்களுக்கு என்று ஓர் இடத்தை உருவாக்குங்கள்’ என்று சொன்னார். அவர் சொன்ன வார்த்தையை இதயத்தில் நிறுத்திய சாக்கிர் ஹுசைன் அன்றிலிருந்து தப்லாவை உலக அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இயங்கத் தொடங்கினார். உலகப் பரப்பிசைக்கு தப்லாக் கருவியை அறிமுகம் செய்தார்.
அதற்கு முன்னர் வரை மேலைநாட்டவர் தப்லாவை ஓர் இந்தியப் பழங்குடி தாள வாத்தியமாகத்தான் கருதி இருந்தனர். சாக்கிர் ஹுசைனின் விரல்கள் வழியாக பிறந்த தப்லாத் தாளத்தின் தொனி அவர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஏராளமான அமெரிக்க, இங்கிலாந்து இசைக் கலைஞர்கள் சாக்கிர் ஹுசேனுடன் சேர்ந்தியங்க முன்வந்தனர். தப்லாவை தமது பாடல்களில் அதிகமாக பயன்படுத்தவும் ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்புகழ் பெற்ற அமெரிக்க பாப் பாடகர் பால் சைமன் எனது நண்பராக இருந்த சென்னையின் தப்லாக் கலைஞன் மதுசூதன் என்கிற மதுவை அமேரிக்கா அழைத்துச் சென்று தனது பாடல் ஒன்றில் பிரமாதமான முறையில் தப்லாவை ஒலிப்பதிவு செய்தார். இன்று எங்கும் ஏற்கப்பட்ட ஓர் உலக இசைக்கருவி தப்லா. அதை சாத்தியப்படுத்தியவர் உஸ்தாத் சாக்கிர் ஹுசேன்.
தாஜ்மஹால் டீ விளம்பரம் அவரது அழகான தோற்றத்தையும் தப்லா இசைக்கும் தனித்துவமான உடல்மொழியையும் பயன்படுத்திக்கொண்டதை நாம் அறிவோம். தப்லா வாசிக்கும்போது அவர் வெளிப்படுத்தும் முக பாவனைகளும் உடல்மொழியும் நமது கண்ணுக்கும் விருந்தளிப்பவை. அவருடைய இசைக்கும் அந்தத் தோற்றத்திற்கும் மயங்கிய இத்தாலிய அமெரிக்கப் பெண்மணி அன்டோனியா மின்னகோலா (Antonia Minnecola) அவரைத் துரத்திக் காதலித்து தான் திருமணம் செய்தார்.
தப்லாவில் சாக்கிர் ஹுசேன் அளவுக்கு ஆதிக்கம் செலுத்திய இன்னொரு கலைஞன் உலகத்தில் இல்லை. ஆனால் அவர் தன்னைப் பற்றிய கர்வம் கொண்டவராக இருந்தவரல்ல. ‘என்னை உஸ்தாத் என்று அழைக்காதீர்கள். அது பெரிய வார்த்தை. தப்லாவில் என்னைவிட பெரிய ஆட்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்’ என்றே தன்னடக்கத்துடன் சொல்லி வந்தார். ஆனால் அவரது தப்லாவுக்கு நாம் என்றைக்குமே ‘வாஹ் உஸ்தாத் வாஹ்’ என்றே சொல்லி வந்திருக்கிறோம். சென்ற டிசம்பர் 15 அன்று அமேரிக்காவில் வைத்து மரணிக்கும்போது உஸ்தாத் சாக்கிர் ஹுசேனுக்கு 73 வயதுதான். தப்லாவின் அந்த இசையழகனுக்கு எனது இதய அஞ்சலி.