அறிஞர் அறிவோம் : வஞ்சிப்பா வடித்தவர்

அறிஞர் அறிவோம் : வஞ்சிப்பா வடித்தவர்
Published on

சமீப காலத்தில்  தமிழகம் கண்ட மிகச்சிறந்த தமிழறிஞர்களில் மொழிஞாயிறு பாவாணரின் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ் சித்திர-னார் மிக முக்கியமானவர்.

பெருஞ்சித்திரனார் தமிழகத்தில் நடைபெற்ற தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவான பல போராட்டங்களில் கலந்து-கொண்டு சிறையையே வாழ்-விடமாகக்கொண்டிருந்தவர். படுக்கையறை முனகல்களைப் பாட்டாக வடிக்கும் இன்றையப் போலிப்பாவலர்கள் கோடம்பாக்கத்தைவிட்டு வெளியே வரப் பல இலட்சம் வசூலிக்கும் நிலையில், தனித்தமிழில் எழுதுவதற்கு ஒப்புமைசொல்லமுடியாத உயர்புலமை வாய்த்த பெருஞ்சித்திரனார் தம் வாழ்நாள் முழுவதும் சுற்றிச்சுழன்று பணியாற்றி, வறுமையிலும் சிறையிலுமாகக் கழித்தார் என்பதே அவர்தம் வரலாற்றுப் பெருமை. காலம் முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என நினைத்து உழைத்த பெருஞ்சித்திரனாருக்குத் தமிழகம் அளித்த சிறப்புப் பரிசில் வறுமைதான்.

 பெருஞ்சித்திரனார், சேலம் மாவட்டம் சமுத்திரம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த துரைசாமி-குஞ்சம்மாள் ஆகியோரின் மகனாக 10.03.1933 இல் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் இராசமாணிக்கம். பின்னர் துரை.மாணிக்கம் என்று குறிக்கப்பட்டார். ஆனால் பெருஞ்சித்திரனார் என்ற புனைப்பெயரே தமிழகத்தில் நிலைபெற்றது.

கல்லூரிக் கல்விக்குப் பிறகு புதுச்சேரியில்  ஐந்து ஆண்டுகள் அஞ்சலகத்தில் பணியாற்றினார். 1959 இல் கடலூருக்குப் பணிமாற்றல் அமைந்தது. தமிழ் வளர்ச்சிக்கு  ஓர் இதழ் தொடங்கி நடத்த விரும்பினார்.  பெருஞ்சித்திரனார் தொடங்க இருந்த இதழுக்குத் தென்மொழி என்னும் பெயரைப் பாவாணர் சூட்டினார். பெருஞ்சித்திரனாரைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு இதழ் வெளிவந்தது. பதினாறு இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச்செறிவுடனும் புதுப்பொலிவுடனும் இதழ் மீண்டும் வெளிவந்தது.

தமிழ்ப்பற்றுடனும் கொள்கை உறுதியுடனும் தென்-மொழியை நடத்திய சூழலில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு உணர்வு மிகுதியாக இருந்தது. தம் கொள்கையை வெளியிடவும், செயல்படவும் அரசுப் பணி தடையாக இருந்த-தால் அரசுப்பணியிலிருந்து பெருஞ்சித்திரனார் விலகினார். இவர் எழுதிய இருமாத(1965, மார்ச்சு,ஏப்பிரல்) இதழ்களின் ஆசிரிய உரை அரசைத் தாக்குவதாக இருந்ததால் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாகக் குற்றம் சாற்றப்பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் சிறைவாழ்க்கையில் ஐயை என்னும் பாவியத்தின் முதல்பகுதியை எழுதினார்.

சிறையிலிருந்து வெளி வந்தவுடன் தமிழ்ச் சிட்டு என்ற இதழினை நடத்தினார். தென்மொழி ஏட்டின் வழியாகத் தமிழகம் முழுவதும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனார் 1972 இல் திருச்சிராப்பள்ளியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டை நடத்தினார். 1973 இல் மதுரையில் இத்தகு மாநாடு நடத்த முயன்றபொழுதுச் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பாட்டு உணர்வால் தமிழகத்தில் தமிழ் உணர்வு தழைத்தோங்கப் பாடுபடுவதை நினைத்துப் பாவாணர், “பாவலரேறு” என்னும் மதிப்புமிக்கப் பட்டத்தை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

 இவரின் படைப்பில் முனை மழுங்காத யாப்பு அமைப்புகள், எதுகை, மோனைக்கு வறுமையில்லாத சொல்லாட்சிகள் அமைந்திருக்கின்றன. எடுத்துக்கொண்ட பொருளை இனிதின் விளக்கும் பாத்திறம் இவருக்கு நிகராக இந்த நூற்றாண்டில் யாருக்கும் வாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு காவிரியைப் பற்றி:

“பூவிரித்தாய்; வண்ணப் பொழில்விரித்தாய்; தென்னைத்-தேன்

மாவிரித்தாய்; வாழைப் பலாவிரித்தாய் - நாவரிக்கப்

பாவிரித்தேன் பண்டைப் புகழ்பாடும் வண்டினஞ்சூழ்

காவிரித்தாய் காவிரித்தாய் என்று ”

அறுபருவத் திருக்கூத்து என்னும் பெயரில் இவர் வரைந்துள்ள நூலில், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் ஆறு பருவத்திலும் நடைபெறும் இயற்கை மாற்றங்களையும் கூர்ந்து நோக்கிப் பாடல் வடித்துள்ள பாங்கு போற்றத்தக்கது.

சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு இயற்கையைக் கூர்ந்து நோக்கி நுட்பமாகப் பதிவுசெய்துள்ளவர் பெருஞ்

சித்திரனார் என்றே கூறலாம். சங்கப் புலவர்களும் தாம் பாடும் இடத்திற்குத்தக இயற்கையை வரைந்துள்ளனரே அன்றி, பெருஞ்சித்திரனார் போல் அறுபருவத்தின் நிகழ்வு-களையும் ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்தவர் தமிழ் உலகில் இல்லை எனலாம். வடமொழியில் காளிதாசர் ‘இருதுசம்காரம்’ என்ற நூலில் இயற்கையைப் பாடியுள்ளார். இதுபோல் நூல் தமிழில் இல்லை என்னும் குறையைச் சரிசெய்ய அறுபருவத் திருக்கூத்து உதவும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முழுவதும் வஞ்சிப் பாவில் அமைந்த நூல் இதுவரை வெளிவர-வில்லை. அக்குறையை நீக்கியவர் பெருஞ்சித்திரனார்.  மகபுகுவஞ்சி என்ற பெயரில் இவர் வரைந்த பா நூல்  சிறப்பிற்கு உரியது. இந்நூல் முப்பது பாடல்களைக் கொண்டுள்ளதுடன் அப்பாடல்களுக்கு நூலாசிரியரே தெளிந்த, விரிந்த உரையும்  வரைந்துள்ளதால் நூல் கூறும் பொருளை மயக்கமின்றி உணரமுடிகின்றது. மகபுகுவஞ்சி அகவியல், புறவியல், பொதுவியல் என்னும் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. இயலுக்குப் பத்துப்பாடல்கள் என்ற முறையில் முப்பதுபாடல்கள் உள்ளன.

“கணவற்றழூஉம் கழைமென்றோளீ!

உணவாய்ந்திடு; உடலோம்பிடு;

குடிகாப்பிடு; குறைதாழ்ந்திரி;

வடிநீர்தவிர்; வளர்புன்னகை

வரினே,

ஒருநாள் ஒருநாள் உறுகொண் கனொடு

திருநாள் காண்குவை தலைநாட் டகவே!”

என வரும் மகபுகுவஞ்சியின் பாடல் வஞ்சிப்பாடலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

“நூறாசிரியம்” என்ற பெயரில் இவர் வரைந்த பாட்டும் உரையுமான நூல்

சங்கப் புலவருக்கு நிகரானவராக  இவரை அடையாளப்படுத்தும். பாட்டும் உரையும் ஒன்றுக்கு ஒன்று போட்டியிட்டு அறிவுவளம் காட்டும்.

பல்வேறு காலங்களில் பாடப்பெற்ற  பெருஞ்சித்திரனாரின் பாடல்களைத் தென்மொழி அன்பர்களின் முயற்சியால் கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். இதில் இடம்-பெற்றுள்ள பாடல்கள் தமிழகக்

கல்வி நிறுவனங்கள் போற்றிக்-கொண்டாடப்பட வேண்டிய பாடல்கள் ஆகும்.

திருக்குறளுக்குப் பெருஞ்சித்திரனார் வரைந்துள்ள மெய்ப்பொருளுரை அரிய புலமை நலம் காட்டும் சான்றாகும். பெருஞ்சித்திரனாரின் முதல்

நூல் கொய்யாக்கனி 1955 இல் பாவேந்தரின் அணிந்துரையுடன் வெளிவந்தது. ஐயை, 1968-ல் (முதல்-தொகுதி) வெளியிடப்பெற்றது. பாவியக்கொத்து, எண்சுவை எண்பது, கற்பனையூற்று, பள்ளிப்பறவைகள், மகபுகுவஞ்சி என்பன அடுத்தடுத்து வெளிவந்தன. திருக்குறளுக்குப்

பெருஞ்சித்திரனார் வரைந்துள்ள மெய்ப்-பொருளுரை அரிய புலமை நலம் காட்டும் சான்றாகும். பெண்ணின் சிறப்புரைக்கும் காதல் காப்பியமான பெருஞ்சித்திரனாரின் ஐயை பல பல்கலைக்கழகங்களில் பாட நூலாக இருந்த பெருமைக்குரியது.

தமிழைச் செழுமைப்படுத்த  தம் வாழ்நாள் முழுவதும் பணிபுரிந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1995 இல்  இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலத்தில் ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு 12 கல்தொலைவு நடந்து வந்தனர்.

சென்னை மேடவாக்கத்தில்  பெருஞ்சித்திரனாருக்குத் தமிழ்க்களம் என்னும் பெயரில் நினைவிடம் அமைக்கப்-பெற்று ஐயாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. தமிழக வரலாற்றில் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ் பல்லாயிரம் மொழி-மறவர்களை உருவாக்கிய பாசறை எனில் அது மிகையன்று.

டிசம்பர், 2012.

logo
Andhimazhai
www.andhimazhai.com