ஆடைகள் சொல்லும் சேதி

முப்பதாண்டுகளுக்கு முன்னால் நான் சிங்கப்பெருமாள் கோவிலில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு கட்டட வேலையில், இருபதடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சவுக்கு மர சாரத்தில் முழு பேண்ட்டும், டி-சட்டையும் போட்டுக் கொண்டு இரண்டு இளங்கொத்தனார்கள் குதிகாலிட்டுக் குந்திய-படி கையில் கரணையும், கலவையுமாய் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த வேலைக்கு அந்த உடை அசௌகரியமானதாகவும், அவசியமற்றதாகவும் தோன்றியது. கோவணத்துக்கு மேல் வேட்டியைக் கீழ்ப்பாச்சாகக் கட்டிக் கொண்டு சௌகரியமாக வேலை பார்த்த எங்கள் பக்கத்து கொத்தனார்கள் அப்போது நினைவுக்கு வந்தார்கள். இந்த இளங்கொத்தனார்கள் குறைந்த பட்சம் அரைக்கால்

சட்டையும் பனியனும் போட்டுக் கொண்டிருந்தால் சௌகரியமாகவும் அதே நேரம் ஸ்டைல் குறைவில்லாமலும் இருந்திருக்குமே என்று அப்போதே தோன்றியது.

சௌகரியத்தை புறந்தள்ளி விட்டு, சங்கடத்தைச் சகித்துக் கொண்டு, அவர்களை பேண்டும், டி சர்ட்டையும் போட்டுக் கொண்டு கொத்து வேலை செய்யத் தூண்டியது எது?

 ஆனாலும் கடந்த காலத்தில் சில நல்ல விஷயங்களும் நடந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை. முண்டியடித்து வண்டி ஏறும்போதும், பேருந்து நெருக்கலில் பயணிக்கும் போதும், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போதும், வேட்டி, சேலையை விட பேண்ட் சட்டையும், சுடிதாரும் சல்வாரும், சௌகரியமாக இருப்பதை மறுக்க முடியாது. இருசக்கர வாகனத்தில் சுடிதாரில் இருபக்கமும் கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு தம்பதிகள் அணைத்தபடி பயணிப்பது அன்பான விஷயம்தான். வேலை முடித்து அலுத்துப் போக வீட்டுக்குத் திரும்புவர்களுக்கு ஆடை மாற்றி கைலி(லுங்கி)யையும், நைட்டியையும் மாட்டிக் கொள்கிறபோது, காற்றோட்டமாக, “அப்பாடா” என்றுதான் இருக்கிறது.

அப்போதெல்லாம் கைலி கட்டுபவர்கள் ஊருக்கு இரண்டு மூன்று பேர் தான் இருப்பார்கள். ஊரார் பார்வையில் அவர்கள் புரட்சிக்காரர்கள் போல் தோற்றமளிப்பார்கள். நான் கல்லூரி நாட்களில் கைலி கட்டத் தொடங்கியபோது, “என்னடா இது சாய்பு மாதிரி?” என்று கேட்டார் என் தாத்தா.

அப்போது ஆடுகள் வாங்குவதற்காக எங்கள் கிராமத்துக்கு வரும் ‘கமால் பா#’ கைலி கட்டிக் கொண்டு சௌகரியமாக சைக்கிளில் வந்து போவார். எங்கள் செட்டு பசங்கள் பெரியவன்கள் ஆனபிறகு எல்லோரும் வீட்டில் கைலிதான். கைலியும், நைட்டியும் வீட்டில் ஓய்வெடுப்பதற்கும் இரவைக் கழிப்பதற்கும் மிக சௌகரியமானவை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது இப்போது.

கைலிக்கும் இப்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் என் நண்பர் தன் இளைய மகனுடன் என் வீட்டுக்கு வந்திருந்தார். “என்ன அங்கிள், பைஜாமா போடாம லுங்கி கட்டிக்கிட்டு இருக்கிறீங்க?” என்றான் அந்தப் பையன். அவனது அப்பா வீட்டிலே அரைக்கால் சட்டையோட நடமாடுகிறவர். என் மகனைப் போல அவனும் நைட் பேண்ட்காரன்.

வேட்டியை இப்போதெல்லாம் கோவில்களில், கல்யாண வீடுகளில் தான் காண முடிகிறது. நானும் இரண்டு பட்டு வேட்டியும், இரண்டு கைத்தறி வேட்டியும் பத்திரமாக வைத்திருக்கிறேன் ஏதாவது கோவில் தரிசனம், விழா, விசேஷ காலங்களில் கட்டிக் கொள்வதற்கு. ஒரே ஒரு தடவை, என்னுடைய இருபத்தெட்டு வயது மகனை வற்புறுத்தியதில் ஒரு கோவிலில் வேண்டாவெறுப்புடன் வேட்டி கட்டினான். என் மகன் இதுவரை கைலி கட்டியதே இல்லை. டாக்டர் படிக்கிற எனது மகளை ஒரு முறை கூட பாவாடை, தாவணியில் பார்க்கிற வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. பூ வைத்துக் கொள்வதும் இல்லை. இப்போதெல்லாம் பட்டிக்காட்டில் கூட பாவாடை தாவணியை பார்க்க முடிவதில்லை. எல்லாம் சுடிதாரும், சல்வார் கம்மீஸூம் தான்.

எப்போதாவது கல்யாண வீட்டிலும், கோவில் விழாக்களின் போதும், சின்னக் குழந்தைகள் பட்டுப் பாவாடை, சட்டையோடு இரட்டை ஜடை போட்டுக்கொண்டு, ஜிமிக்கி குலுங்க கொலுசுக் கால்களோடு ஓடியாடி விளையாடும் போது, ஒரு நிமிஷம் நின்று பார்க்கத் தோன்றும். நம்ம பேத்தி வருகிற காலம் வரையிலாவது இந்த பாவாடை, சட்டையும், இரட்டை ஜடையும் நீடிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

அக்டோபர், 2012.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com