ஆணையம்,அறிக்கை,அரசியல்!

ஆணையம்,அறிக்கை,அரசியல்!

ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் அருணா ஜெகதீசன் ஆணையம். தமிழ்நாட்டின் சமகால அரசியல் வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் சர்ச்சைக் குள்ளான விசாரணை ஆணையங்கள். இரண்டுமே முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை. பெரும்பகுதி விசாரணை அதிமுக ஆட்சியில் நடந்திருந்தாலும், அவற்றின் அறிக்கைகள் வெளியானது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

இரண்டு ஆணைய அறிக்கைகள் வெளியாவதிலும் அதிகபட்ச தாமதம் உருவானது அல்லது உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக அவற்றின் மீதான எதிர்பார்ப்பும் கூடியது. அருணா ஜெகதீசன் அறிக்கை என்ன சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டிலும், ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை என்ன சொல்லப்போகிறது என்ற கேள்வி தமிழ்நாட்டுக்கு அப்பாலும் உருவாகியிருந்தது.

தமிழ்நாட்டை உலுக்கிய இருபெரும் நிகழ்வுகள் தொடர்பாக மக்களும் ஊடகங்களும் எழுப்பிய கேள்விகளுக்கு எப்படியான பதிலைக் கொடுக்கப் போகின்றன ஆணைய அறிக்கைகள் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எழுந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், இரண்டு ஆணையங்களின் அறிக்கைகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டு,சட்டமன்றத்தில் வைக்கப்பட்டன.

அந்த ஆணையங்களின் அறிக்கைகள் என்ன சொல்லியிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் இந்த ஆணையங்கள் எந்தச் சூழலில் அமைக்கப்பட்டன என்பதைப் பார்த்துவிடுவது ஆணைய அறிக்கைகளையும் அதன் அம்சங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும்.

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 75 நாள் சிகிசைக்குப் பிறகு மரணமடைந்தார். அந்த மரணத்தில் மக்களுக்குச் சந்தேகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

பிறகு நடந்த அரசியல் காட்சி மாற்றங்களைத் தொடர்ந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்பு முயற்சிகள் வேகமெடுத்தன. அதன் ஒருபகுதியாக, ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்மத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அந்த ஆணையத்தில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் நேரிலும் பிரமாணப் பத்திரங்கள் மூலமும் சாட்சியம் அளித்தனர். சுமார் நான்காண்டுகால விசாரணைக்குப் பிறகு ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்கிற தனிநபரின் மரணம், அதைச் சுற்றி எழுந்த மர்மங்கள் தொடர்பானது.

ஆனால் அருணா ஜெகதீசன் ஆணையம் என்பது மக்கள் நடத்திய போராட்டம், அப்போது எழுந்த வன்முறை, அதன் நீட்சியாக நடந்த துப்பாக்கிச்சூடு நடவடிக்கை தொடர்பானது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக அந்தப் பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் நூறாவது நாளன்று ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்கே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்குக் காயம் ஏற்பட்டது.

அந்தத் துப்பாக்கிச்சூடு தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், சட்டம் ஒழுங்கு சார்ந்த அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் நீண்ட நெடிய விசாரணைக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது. முற்றிலும் மாறுபட்ட சம்பவங்களுக்காக, வெவ்வேறு காலகட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த இரண்டு விசாரணை ஆணையங்களும் ஒரே சமயத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தன. ஆனால் அந்த ஆணையங்களின் பரிந்துரைகளும் அவற்றின் தன்மையும் அவைமீதான பார்வையும் விமர்சனங்களும் விவாதங்களும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை.

ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மங்களை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் கண்டறிந்த அம்சங்களைவிட அது எழுப்பிய கேள்விகளும் சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் மிக அதிகம். குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ என்கிற இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்ற மருத்துவர்களின் பரிந்துரை ஏன் ஏற்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய ஆறுமுகசாமி  ஆணையம், அவருக்குத் தரப்படும் சிகிச்சையை மாற்றும் உரிமை மருத்துவர்களைத் தவிர சசிகலாவுக்கும் இருந்ததாகக் குறிப்பிட்டதோடு, நெருக்கடி நேரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் கார்டியோ தொராசிக் சிகிச்சையைத் தொடராமல் தவறிழைத்திருக்கலாம். அந்த அறுவை சிகிச்சை ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பை உருவாக்கியிருக்கலாம் என்று கூறியிருக்கிறது. இது மிக முக்கியமான, கவனிக்கத்தக்க அம்சம். ஜெயலலிதா எப்போது இறந்தார் என்ற கேள்வி அந்தக் காலகட்டத்தில் பரவலாக எழுப்பப்பட்டது. ஜெயலலிதா இறந்த நேரம் 5 டிசம்பர் 2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறியதைக் கேள்வி எழுப்பியுள்ள ஆறுமுகசாமி ஆணையம், 4 டிசம்பர் 2016 பிற்பகல் 3 முதல் 3.50க்குள் ஜெயலலிதா மரணம் அடைந்திருக்கிறார் என்று சாட்சியங்களின் பதிவுகள் மூலம் தெரியவருவதாகக் கூறியிருக்கிறது. ஒருவரின் மரணம் எப்போது நிகழ்ந்தது என்பதை மருத்துவர்கள்தான் துல்லியமாகக் கண்டறியமுடியுமே தவிர சாட்சியத்தின் மூலம் கண்டறியமுடியுமா என்ற கேள்வியைப் பலரும் எழுப்பியிருக்கின்றனர்.

ஜெயலலிதா மயக்கமடைந்த நிலையிலேயே வேதா நிலையம் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் கூறியிருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, அவர் மயக்கமடைந்த பிறகு நடந்த நிகழ்வுகள் எல்லாம் சசிகலாவால் ரகசியமாக வைக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியிருக்கிறது. அதன்மூலம், சசிகலா மீதான சந்தேக வலையை விரிவுபடுத்தும் அறிக்கை, 2012 முதல் ஜெயலலிதா & சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என்றும் பதிவுசெய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

எம்ஜிஆரை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தது போல ஏன் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லவில்லை என்ற கேள்வி ஊடகங்களில் அப்போதே எழுப்பப்பட்டது. அந்தக் கேள்வியை ஆறுமுகசாமி ஆணையமும் எழுப்பியிருக்கிறது. அது தொடர்பாக சசிகலா, டாக்டர் சிவகுமார், அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அத்தோடு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் ஒய்விசி ரெட்டி, பாபு ஆப்ரஹாம், அந்தக் காலகட்டத்தில் முக்கியமான படிவங்களில் கையெழுத்திட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவரது டிஸ்சார்ஜ் குறித்தும் உண்மைத் தகவல்களை மறைத்த பிரதாப் சி ரெட்டி ஆகியோரை விசாரிக்கவேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அத்தோடு, ஆறுமுகசாமி ஆணையத்திடம் சாட்சியம் அளித்தவர்கள், அவர்கள் அளித்த சாட்சியங்கள் பலவும் ஆணைய அறிக்கையில் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் சில சாட்சியங்கள் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கின்றன. குறிப்பாக, ஜெயலலிதா ரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்று ராமமோகன் ராவ் கொடுத்த சாட்சியம் அதிர்வுகளைக் கிளப்பியது.

என்றாலும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீதும், அதன் பரிந்துரைகள் மீதும் பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், நீண்ட நெடிய ஆய்வுக்கும் பெரும் நிதிச்செலவுக்கும் பிறகு சிலரை மட்டும் குறிப்பிட்டு அவர்கள் மீது விசாரிக்கவேண்டும் என்று சொல்வது எந்த வகையில் சரி என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தெளிவற்றதாக உள்ளது, அரசியல்வாதியின் அறிக்கை போல உள்ளது, மக்களின் வரிப்பணம் வீண் என்பன போன்ற விமர்சனங்களைக் கிளப்பிய நிலையில், ஜெயலலிதா மரணத்தின் மீது மக்கள் மனங்களில் எழுந்த சில கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடைகொடுக்க முயன்றுள்ளது என்பதை முழுமையாக நிராகரிக்கமுடியாது.

அதேசமயம், இந்த விசாரணை அறிக்கையின் அம்சங்கள் அரசியல் ரீதியாக, குறிப்பாக, அதிமுகவுக்கு உள்ளும் புறமும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை, ஜெயலலிதா மரணத்தை வைத்து ஈபிஎஸ் - ஓபிஎஸ் - சசிகலா - தினகரன் இடையிலான சர்ச்சைகளை மேலும் நீட்டிக்கக்கூடியவை என்பதில் சந்தேகமில்லை.

ஆறுமுகசாமி ஆணையத்தின் கண்டுபிடிப்புகளும் கருத்துகளும் பரிந்துரைகளும் ஒருவகையிலானவை என்றால், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கண்டுபிடிப்புகளும் பரிந்துரைகளும் முற்றிலும் வேறு வகையிலானவை. உண்மையில், துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துப்பாக்கிச்சூட்டுக்கான சூழல், அந்தச் சூழலை காவல்துறை அணுகிய விதம், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்களை மையப்படுத்தியே ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது வன்முறை வெடிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உளவுத்துறை மூலம் டிஐஜி தொடங்கி ஐஜி வரை கொண்டுசெல்லப்பட்டிருந்தும், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய அவசியம் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தும், எந்தவொரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அருணா ஜெகதீசன் அறிக்கையின் முதன்மையான குற்றச்சாட்டு.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளைக் கணித்து, குழப்பம் விளைவிக்கத் தயாராக இருந்தவர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை எடுக்காததே வன்முறை வெடிக்கக் காரணம் என்று கூறியிருக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கை, இந்த விஷயத்தில் காவல்துறையினரின் குறைபாடு, மாவட்ட நிர்வாகத்தில் அலட்சியம், செயலின்மை ஆகியன தெளிவாகத் தெரிவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறது.

போராட்டக்காரர்கள் ஊர்வலம் நடத்த மாவட்ட நிர்வாகம் விதித்த தடை போராட்டக்காரர்களுக்கு முறைப்படி கொண்டுசெல்லப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் ஆணையம், போராட்டக்காரர்கள் தடையை மீறி ஊர்வலம் சென்றார்கள் என்பதையே ஏற்கமுடியாது என்று கூறியிருக்கிறது. அத்தோடு, காவல்துறை தனது அதிகாரவரம்பை மீறியிருப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் ஆணைய அறிக்கை, செய்யத்தக்க விஷயங்களைச் செய்யாமல், செய்யத் தகாத காரியங்களை காவல்துறை செய்திருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஊடகங்களைப் பார்த்தே தெரிந்துகொண்டதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக அந்தக் காலகட்டத்தில் விமர்சனங்கள் எழுந்தன. அவர் பேசியதை ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால் அந்தக் கருத்தை அடியோடு நிராகரித்திருக்கும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, தூத்துக்குடி போராட்டம் தொடர்பான ஒவ்வொரு நகர்வும் முதலமைச்சருக்குப் பல்வேறு வழிகளில் சொல்லப்பட்டதென்று குறிப்பிட்டிருக்கிறது.

குறிப்பாக, சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாகப் பதிவுசெய்துள்ள அருணா ஜெகதீசன் ஆணையம், ரஜினி போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அதற்கான ஆதாரத்தை உறுதிசெய்திருக்கவேண்டும், பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பல கண்டுபிடிப்புகளையும் கருத்துகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கை, தனது பரிந்துரைகளை மூன்று பகுதிகளாகக் கொடுத்திருக்கிறது. முதல் பகுதி, காவல்துறை ஐ.ஜி முதல் சாதாரண காவல் அதிகாரிகள் வரையிலான 17 பேர் மீதான துறைசார் நடவடிக்கை தொடர்பானது. குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குக் குந்தகம் ஏற்படாமல், துறை சார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஆணையத்தின் பரிந்துரைக்குள் உள்ள முக்கியமான கூறு.

இரண்டாம் பகுதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்த உத்தரவிட்ட சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட மூன்று வருவாய்த்துறை அதிகாரிகள் மீதான துறைசார் நடவடிக்கை தொடர்பானது. மூன்றாம் பகுதி, துப்பாக்கிச்சூட்டில் பாதிப்புக்கு உள்ளானோருக்குத் தரப்படவேண்டிய நிவாரணத்தொகை தொடர்பானது. துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உறவினர்கள்/சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படவேண்டும் என்பது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரை.

ஆறுமுகசாமி ஆணையம், அருணா ஜெகதீசன் ஆணையம் என்ற இரண்டு ஆணையங்களின் அறிக்கைகளும் வெளியாகி, அரசியல் களத்திலும் மக்கள் மத்தியிலும் விவாதப்பொருளாகியிருக்கின்றன. இப்போது எழுகின்ற கேள்வி, இரண்டு ஆணையங்களில் பரிந்துரைகள் எப்படி செயல்வடிவம் பெறப்போகின்றன என்பதுதான்.

ஏனென்றால், கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள், அவற்றின் பரிந்துரைகள் பெரிய அளவில் அமலுக்கு வரவில்லை. என்றாலும், இந்த விசாரணை ஆணைய அறிக்கைகள் அந்தப் பாதையில் செல்லாமல், ஆக்கப்பூர்வ பாதையில் செல்லும் பட்சத்தில் விசாரணை ஆணையங்கள் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கும். பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று!

நவம்பர், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com