உண்மையை பேசுவது குற்றமா?

உண்மையை பேசுவது குற்றமா?

அவர் ஒரு பிரபலமான சர்வதேச பத்திரிகையாளர். தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு அனுமதி வாங்கும் பொருட்டு துருக்கி நாட்டின் தலைநகரம் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய தூதரகத்திற்குள் 2 அக்டோபர் 2018 அன்று காலை

செல்கிறார். அங்கிருந்து  அவர் திரும்பிவரவேயில்லை. வெளியே காத்திருந்த அவரது வருங்கால மனைவி கதீஜா, நண்பர்களுக்கு பதட்டத்துடன் செய்தி சொல்ல, உலகம் முழுக்க பத்திரிகைகள், செய்தி சானல்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி பெரிய களேபரம்.

இந்தப் பத்திரிகையாளர் பெயர் ஜமால் கசோகி. சௌதி அரேபியாவில் பிரபலமானவர். அல் வாட்டன் பத்திரிகை மற்றும் அல் அராப் நியூஸ் சானலின் ஆசிரியராக இருந்தவர். அரசுடனான மன விலக்கத்தால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதியும் வந்தவர்.

அவருக்கு சௌதி அரேபிய தூதரக அலுவலகத்தில் நடந்தது என்ன? இதை விவரிக்கிறது ‘தி டிஸ்ஸிடெண்ட்(The Dissident) ஆவணப்படம்.

ஜமாலுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஓமர் அப்துல் அஸீஸ் என்கிற செயல்பாட்டாளர் பேசுவதிலிருந்து ஆவணப்படம் தொடங்குகிறது. அவர் தன் கதையைச் சொல்கிறார். சௌதி அரசை தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் விமர்சிக் கும் ஓமரை அழைத்து வருமாறு அதிகாரிகள் அவரின் அப்பாவிற்கு செய்தி அனுப்புகிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை ஊகிக்கும் அவர், ஓமரை கனடாவிற்கு அனுப்பி வைக்கிறார்.  அவர் அங்கிருந்து அரசை இன்னும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்குகிறார். யூ ட்யூப்

சேனலையும் தொடங்குகிறார்.

சில மாதங்களுக்கு பிறகு சௌதியிலிருந்து இரண்டு நபர்கள் ஓமரை சந்திக்க அவரது சகோதரர் அகமதுவை உடன் அழைத்துக் கொண்டு கனடா வருகிறார்கள்; அந்த சந்திப்பில் நாட்டுக்கு திரும்பி வர அவர்கள் ஓமரை வற்புறுத்துகிறார்கள். குறைந்தபட்சம் கனடாவில் உள்ள தூதரகத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சொல்கிறார்கள். ஆனால் ஓமர் எதையும் கேட்பதாக இல்லை. இது நடந்து சில மாதங்களில் ஓமரின் சகோதரர், நண்பர்கள் என 23 பேரை சௌதி அரசு கைது செய்துவிடுகிறது.

உலகின் எண்ணெய் பயன்பாட்டில் பாதிக்குமேல் கையில் வைத்திருக்கும் சௌதியின் அரசை விமர்சிப்பதென்பது அதன் மன்னர் குடும்பத்தை விமர்சிப்பது தான். அமெரிக்காவிலேயே 20 சதவீத மக்கள் மட்டுமே பயன்படுத்தும் டிவிட்டரை சௌதியில் 80 சதவீதம் உபயோகிக்கிறார்கள். ஊடகங்களை கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சௌதி அரசாங்கம் இந்த தொழில் நுட்பப் புரட்சியில் விழி பிதுங்கி நிற்கிறது. டிவிட்டர் போரை சமாளிக்க பெரிய அமைப்பு ஒன்றை உருவாக்குகிறது. இந்த அமைப்பு எதிர்ப்பாளர்கள் மீது அவதூறு பரப்புவது, அரசாங்கத்தைப் பற்றி ‘நல்ல' பொய்ச் செய்திகளைப் பரப்புவது போன்ற செயல்பாடுகளுடன் பெகாசஸ் மென்பொருள் மூலம் சந்தேகிக்கும் பலரின் தொலைபேசிகளை ஊடுருவி அத்தனை தகவல்களையும் சேகரிக்கிறது. ஓமரும் பதிலுக்கு எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து ட்விட்டர் தாக்குதல்களை கனடாவில் இருந்தே தொடர்கிறார், இந்த இடத்தில்தான் ஜமால்  உள்ளே வருகிறார். ஓமருக்கு உதவி செய்கிறார். அவரது ஆதரவு குழுவினருக்கு பண உதவிகளும் செய்கிறார்.

ஜமாலுக்கும், சௌதி அரசர் முகமது பின் சல்மானுக்கும் அப்படி என்னதான் பிரச்னை? எகிப்தில் 2011 இல் முப்பதாண்டு கால முபாரக் ஆட்சியை எதிர்த்து அரபு வசந்தம் போராட்டம் வெடிக்கிறது. வெளிப்படையாக இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார் ஜமால். அடுத்தடுத்து பரவும் இந்த போராட்டம் அரபு நாடுகளை அச்சம் கொள்ள வைக்கிறது. 2013இல் இந்த போராட்டம் இராணுவத்தால் கடுமையாக ஒடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் சௌதி அரசர் இருப்பதை தெரிந்து கொண்டு, கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறார் ஜமால். இதுதான் பிரச்னையின் தொடக்கப் புள்ளி. அடுத்ததாக, ‘ஊழலை ஒழிப்போம், அடிப்படைவாத கொள்கைகளை தளர்த்துவோம்' என்ற சல்மானின் முழக்கத்தை ஆதரிக்கும் ஜமால், அதே சமயத்தில் எதிர்ப்புக் குரல்களை அவர் நசுக்குவதையும் கண்டிக்கிறார். டொனால்ட் ட்ரம்புடன் நெருக்கத்தை காட்டும் அரசரின் போக்கையும் விமர்சிக்கிறார். ‘சௌதியை பாதுகாப்பதாக சொல்லி அமெரிக்கா நம்மை சுரண்டுகிறது. யாரிடமிருந்து எங்களை பாதுகாக்கிறீர்கள்?' என்கிறார் அவர். விஷயம் கை மீறி செல்வதை உணர்ந்த அரசு அவரை எச்சரிக்கிறது. விமர்சிப்பவர்களை பயமுறுத்துதல், கைது செய்தல் என்று முடக்குகிறது. பிரச்னைகள் அதிகரிக்கவே அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்று குடிபுகுகிறார். குடும்பத்திற்கு சிக்கல் வரக்கூடாதென்று முதல் மனைவியை விவாகரத்து செய்கிறார். இரண்டாவது திருமணத்தை பதிவு செய்யப்போகும் போதுதான் இந்த அசம்பாவிதம் நடக்கிறது. ஜமால் மாயமாகிறார்!

ஜமால் காணாமல் போனபின் 13 நாள் கழித்துத்தான் தூதரகத்திற்குள் சென்று சோதனை நடத்த துருக்கி அரசுக்கு அனுமதி கிடைக்கிறது. பிரச்னை நடந்ததாக சந்தேகப்படும் அந்த அறை, அத்தனை சுத்தமாக உள்ளதாக துருக்கி போலீஸ் சொல்கிறார்கள்.(பாபநாசம் படத்தில் வரும் போலீஸ் அதிகாரி ‘அத்தனையும் கச்சிதமாக இருக்கிறது. அதனால் தான் சந்தேகம் வருகிறது' என்பாரே அது மாதிரி). அந்த அறையின் மையத்தில் தந்தூரி அடுப்பு ஒன்றுள்ளது. ஜமால் காணாமல் போன அன்று முப்பது கிலோ கறி வாங்கியுள்ளார்கள். ஜமாலின் உடலை அப்புறப்படுத்தும்போது ஏற்படும் நாற்றத்தை சமாளிக்க இந்த ஏற்பாடு என்கிறார்கள் துருக்கி போலீஸார்.

இதைத் தொடர்ந்து சௌதி அரசு பொய் மூட்டைகளை வரிசையாக அவிழ்த்து விடுகிறது. முதலில் அவர் அப்போதே தூதரகத்திலிருந்து வெளியேறி விட்டார் என்று சொல்லி, ஜமாலின் உடைகளை அணிந்து அவரைபோலவே தோற்றமளிக்கும் ஒருவரை கண்காணிப்பு கேமராவில் உலவவிட்டது, பிறகு அவர் திடீரென்று மயங்கி விழுந்து இறந்து விட்டார், கை கலப்பில் ஈடுபட்டு மரணமடைந்தார் என்று வரிசையாக ஏறுக்கு மாறாக

சொல்லிக்கொண்டேயிருந்தது. உண்மையில் ஜமாலை திட்டமிட்டு கொன்று, உடலை தனித்தனியாக வெட்டி பிறகு அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்!

கடைசியில் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்ட சௌதி அரசு குற்றம்சாட்டப்பட்ட முக்கியமான நபர்களை விட்டு விட்டு சிலரை மட்டும் ஒப்புக்கு கைது செய்திருப்பதாக அறிவித்தது. இந்த விஷயங்களை வரிசையாகப் பதிவு செய்துள்ளது ஆவணப்படம்.

இந்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்புக் குரல்களும் எழாமல் இல்லை. ‘அரசியல் காரணங்களுக்காக ஒருதலைப் பட்சமாக சௌதி அரசை வில்லனாக சித்தரிக்க முயலுகிறார்கள். ஜமாலின் குடும்பத்தார் யாரும் இந்த ஆவணப்படத்தில் பேசவில்லையே,ஏன்?' என்று அந்த தரப்பு குற்றம் சாட்டுகிறது. ஆனாலும் ஜமால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதை யாராலும் மறுக்கமுடியவில்லை.

அல் ஜசீரா சேனலின் நிர்வாக அதிகாரியான வாதா கன்பார் ‘இங்கு பத்திரிகையாளாராக இருப்பதென்பது, மேற்குலக நாடுகளைப் போல எளிமையானதல்ல. அரசு என்ன பேச நினைக்கிறதோ அதைதான் நீங்கள் பேச வேண்டும். அதை மீறி நீங்கள் எதாவது செய்ய நினைத்தால் உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. ஜமால் உண்மையான பத்திரிகையாளராக இருக்க விரும்பினார். அதுதான் பிரச்னை' என்கிறார்.

பிரைன் போகல் என்ற அமெரிக்க இயக்குநர் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார். WWW.documentaryarea.tv தளத்தில் கட்டணமின்றியே பார்க்கலாம்.

ஜமால் படுகொலை செய்யப்பட்டது அதிகார மையங்களுக்கு எதிரான ஊடகவிலாளர்களின் போரில் தொடர்ந்து நடக்கும் களப்பலி நிகழ்வுகளில் ஒன்று.  ஆனால், அச்சுறுத்தல்களுக்கிடையே பேனா முனைகள் மழுங்காமல் மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டேதான் உள்ளன!

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com