தேர்தல் கணிப்புகள்
தேர்தல் கணிப்புகள்அந்திமழை

உளவு அமைப்பினரின் தேர்தல் கணிப்புகள்!

ஒரு தேசியக் கட்சியின் வேட்பாளருடன் 2009  நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி  உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

''எப்படி இருக்கும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு?'' என்றார். அது ஈழத்தில் மோதல் முடிந்து ஏராளமான இழப்புகள் ஏற்பட்டிருந்த காலம். இதைச் சுட்டிக்காட்டி, ''உங்களுக்கெல்லாம் கஷ்டம்தான்'' என்றேன். அவர் பலமாகச் சிரித்தார். ''வேட்பாளராக என் பெயர் அறிவிக்கப்பட்ட பின் டெல்லியில் ஓர் உளவுத்துறை மேலதிகாரியை சந்தித்தேன். நீங்கள் சொல்லும் பிரச்னை இந்த தேர்தலில் பிரதிபலிக்காது,'' என்றார்.

''எப்படிச் சொன்னார்?''

'' அவர் ஒரு ஆடியோவை ஓடவிட்டார். அதில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில் தமிழக ஈழ ஆதரவுத்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பார்வையாளர்கள் இரண்டுபேர், ஏன் சம்பந்தமில்லாத விஷயத்தை இந்த தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ஆடியோ அது''

''அப்படியா?'' என்றவாறு நான் வேறு விடயங்களுக்கு நகர்ந்துவிட்டேன். அந்த தேர்தலில் அந்த பிரச்னை பெரிதாக விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அவரும் வென்று நாடாளுமன்றம் சென்றார்.

இங்கே மட்டும் இல்லை. வெளிநாடுகளிலும் உளவுப்பிரிவினர் தேர்தல் கணிப்புகளில் ஈடுபடுகிறார்கள். சிஐஏ எந்தெந்தத நாடுகளில் எல்லாம் தேர்தல் அரசியல் நடத்தியது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில் அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்வான தேர்தலில் ரஷ்ய உளவுப்பிரிவின் கை இருக்கிறது என்று
விசாரணையே நடக்கிறது.

1977 - ல் எமெர்ஜென்சி காலகட்டத்தில் அதை விலக்கிக் கொண்டு இந்திரா காந்தி தேர்தலை அறிவித்தார். அதற்குப் பின்னணியில் இருந்தது இந்திய உளவு அமைப்புகள், இந்திராவுக்கு மக்களிடம் மிகுந்த செல்வாக்கு இருப்பதாகவும் இப்போது தேர்தல் நடத்தினால் வெற்றி நிச்சயம் என்று சொன்னதுதான் காரணம் எனச்
சொல்லப்படுகிறது. ஆனால் இந்திரா படுதோல்வி அடைந்தார். தங்கள் தவறான கணிப்பின் மூலமாக உளவுத்துறையினர் இந்திய ஜனநாயகத்தை மலரச் செய்தார்கள்.

இதே போல்தான் 1996 - லும் நடந்தது. நரசிம்மராவ் தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவிரும்பினார். ஆனால் தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரான மூப்பனாரும் அவரைச்
சேர்ந்தவர்களும் அதை விரும்பவில்லை. ஆனாலும் அதை மீறி நரசிம்மராவ் அதிமுகவுடன் கூட்டணி அறிவிக்க, தமிழ்மாநில காங்கிரஸ் பிறந்தது. தமிழ்நாட்டில் திமுக தமாகா கூட்டணி 39 இடங்களையும் வென்று அமோக வெற்றிபெற்றது. மத்தியில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜக காங்கிரசை விட 22 இடங்கள் அதிகம் பெற்றது. எல்லாவற்றையும் மிகவும் யோசித்து செய்யும் நரசிம்மராவ் தவறியது எப்படி?

''அவருக்கு மத்திய நுண்ணறிவுப்பிரிவினர் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுடன் கூட்டணி
வைத்தால் அதிக இடங்களைப் பிடிக்கலாம் என்று கொடுத்த அறிக்கைதான் காரணம்,'' என்று கூறுகிறார் விவரம் அறிந்த  பத்திரிகையாளர் ஒருவர்.

''ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையே இந்த பிரிவில் போட்டுவைப்பார்கள். எனவே அவர்கள் தலைமைக்குப் பிடிக்காத அறிக்கை எதையும் கொடுக்க மாட்டார்கள். உண்மையான தகவல் போய்ச்சேராது. பாஜக ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்குவந்தவுடன்  நுண்ணறிவுப் பிரிவுகளில் தங்கள் ஆதரவாளர்களைக் கொண்டே நிரப்பியது. இவர்கள் தலைமைக்கு எதிர்மறையான செய்திகளை அளிப்பார்களா என்று சந்தேகம்தான்,'' என்றார் அவர். ஆகவே, இந்த தேர்தலில் புலனாய்வுப் பிரிவினர் என்ன அறிக்கை கொடுத்திருப்பார்கள் என்பதை
 நீங்களே யோசித்துக் கொள்ளவேண்டியதுதான்!

மே, 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com