ஊருண்டு,காணியுண்டு, உறவும் உண்டு!

சிறு பிராயத்தில் ஊரில் பலரையும் தாத்தா, போத்தி, பாட்டா என விளித்திருக்கிறேன். ‘கானாங் கோழிக்குக் கழுத்திலே வெள்ளை, கடுக்கரைப் போத்திக்குப் புடுக்கிலே வெள்ளை' என்று பாடியும் நடந்திருக்கிறோம்.  கறுத்த போத்தி,  சோளாங்காடிப் பாட்டா, பழவூர்த் தாத்தா என்று, அவர்களின் பிதுரார்ஜிதப் பெயரறியாமல் சுய ஆர்ஜிதப் பெயராலேயே விளித்திருக்கிறோம். ஆனால் சொந்தமாகத் தாத்தா என்று எவரையும் அழைக்கும் பேறு எனக்கு வாய்த்ததில்லை.

அப்பாவுக்குக் கல்யாணம் ஆகும் முன்பே, அப்பா வழித் தாத்தா போய்ச் சேர்ந்து விட்டார், தனது ஆட்டத்தை அவசரமாய் முடித்துக் கொண்டு. எனது மூன்றாவது நாவல் ‘மாமிசப் படைப்பு' கதாநாயகன் கந்தையா அவர்தான். மூன்று பாகங்களில் நானோர் நாவல் எழுதக் கூடுமானால், முதல் பாகம் அவர்க்கானது என நான் நேர்ந்திருக்கிறேன். அவர் பற்றி நான் அறிந்தவை எல்லாம், அப்பா, சித்தப்பா, இரண்டு அத்தைகள், பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை ஆத்தா மூலமாகவே! அப்பாவை விட மூத்த பெரியப்பா, மாமா அல்லது பாட்டா என முறை வைத்து அழைத்த சிலர் மூலமாகவும் சில யாம் செவிப்பட்டிருக்கலாம். எனது இந்த வாய் பார்க்கும் கல்வி, பத்துப் பன்னிரண்டு பிராயத்திலேயே ஆரம்பித்து விட்டது. அதாவது 1957& ஆண்டில் இருந்தே!

அம்மா வழித் தாத்தாவையும் அறிந்தவனில்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்து, நெய்யாற்றின்கரை ஜில்லாவின், நெடுமங்காடு தாலுகாவின், ஆரியநாடு வழி, குற்றிச்சல் கிராமத்து என் அம்மையின் தாலிகெட்டுக்கு முன்பே அம்மையின் அப்பாவும் பொக்கென ஓர் கணத்தே போய்த் தொலைந்து விட்டார்.

இன்னுமொரு ஆச்சரியம், என் அப்பாவின் அம்மையும், அம்மாவும் அம்மையுமே அவர்களின் தந்தையருக்கு இரண்டாம் கட்டு. இரண்டாம் கட்டு என்றால் இரண்டாவது தாரம். முதல் தாரம் இரண்டு பிள்ளைகள் பெற்று இறந்து போனபின் தாலி கட்டிக் கொணர்ந்த மனைவியர். இரண்டாந்தாரம் என்பதால் வைப்பாட்டி என்று பொருள் அல்ல.

சில சமயம் எனக்குத் தோன்றும், அம்மாவும் அப்பாவுமே இரண்டாம் தாரத்து மக்கள் என்பதினால்தானோ, அவர்களின் கல்யாணம் தீர்மானமாயிற்றோ என்னவோ? எனில் இந்தக் கட்டுரை ஆசிரியன் எங்கே? தற்செயலா, முன் தீர்மானமா, முந்தை விதிப்பயனா, பகவத்  சங்கல்பமா? கருமுட்டையைத் துளைக்கும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான விந்தணுக்களின் பந்தயத்தில் எது முந்தும் எது பிந்தும்? இதில் செல்வம் என்பது சிந்தையின் நிறைவா, இலட்சக்கணக்கான கோடிப் பணம் களவா?

எதுவாகினும் இஃதோர் ஆன்மீகக் கட்டுரை அல்ல. புறப்பட்ட இடத்துக்குத் திரும்புவோம்!

அப்பா வழித் தாத்தாவின் மூத்த தாரத்துக்கு இரண்டு ஆண்மக்கள். அப்பாவுக்கு அண்ணன்கள். எனக்குப் பெரியப்பாக்கள். நான் வாலிபன் ஆகும்வரை அவர்கள் வாழ்ந்திருந்ததால், நல்லவண்ணம் அறிவேன். அவருள் இளையவர், எனது, ‘மிதவை' நாவலின் முன்பகுதியில் ஒரு கதாபாத்திரம்.

அம்மாவின் அப்பாவின் மூத்த தாரத்துக்கும் இரண்டு ஆண்மக்கள். அம்மாவின் மூத்த சேட்டன்மார், எனக்குத் தாய்வழி மாமன்மார். அவர்களைச்

சிறுபருவத்தில் ஓரிருமுறை பார்த்த நினைவு. எனக்கு அவர் முகங்கள் இன்று நினைவு அடுக்குகளில் இல்லை. அவர்கள் வாரிசுகள் எவருடனும் தொடர்பு இல்லை. என்னுடைய இரண்டாவது நாவல், ‘என்பிலதனை வெயில் காயும்' வாசிக்கப் பெற்றவர், அதன் இறுதிப் பகுதியை நினைவு கூரலாம்.

எனது தங்கைகளின் மகன்களின், மகள்களின் வழி எனக்கு நிறையப் பேரன் பேத்திகள் உண்டு. என் மகள் வழி, இரு பேரன்கள். ஒருவன் முதல் வகுப்பிலும் இளையவன் எல்.கே.ஜி.யிலும். என் வீடிருக்கும் தெருவில் இரண்டாம் வீட்டில் அவர்கள், ஐந்தாம் வீட்டில் நாங்கள். இருவருமே என் சீடர்களும் ஆசான்களும் ஆவர்.

முப்பதாண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் வாழ்ந்த காலத்தில், முதன் முறையாகப் பள்ளிச்சிறுமி ஒருத்தி என்னை ‘அங்கிள்' என்று விளித்தபோது, சற்றுத் திடுக்கிட இருந்தது. வீட்டுக்குப் போய் கண்ணாடி பார்த்தலின் திகைப்பு மாறிக் கிட்டியது. இன்று எந்தச் சிறுவனோ, சிறுமியோ என்னைத் தாத்தா என்றழைக்கும்போது பெருமிதமாக இருக்கிறது. அந்த விளி எனக்கின்று வயதை நினைவூட்டுவதில்லை. மாறாக என் முதிர்ச்சியை அடையாளப்படுத்துகிறது.

என் பேரன்களை நினைக்கும்போது மனதில் பேராசை ஒன்றுண்டு. தாத்தாக்களை அறிந்திராத ஒரு தாத்தாவின் கனவு. 1972& முதல்  பம்பாயில் நான் வாழத் தலைப்பட்டதன் பின்பு, ஆண்டுதோறும் விக்டோரியா டெர்மினஸ் இரயில்வே ஸ்டேஷனின் வலப்பக்க சாலையைத் தாண்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடம் தாண்டி, மஜ்ஜித் பந்தர் போகும் வழியில்  இஸ்லாமியப் பள்ளி வளாகத்தில் அருளாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி  உரையாற்றுவார் ஒரு கிழமை. ஆங்கிலத்தில்தான். தவறாது போய்க் கேட்பேன். ஒருநாள் மரணம் குறித்த உரை. இன்றும் நெஞ்சில் பசுமையாக இருக்கும் செய்தி ஒன்றுண்டு. உலகின் கடைசி மனிதன் எண்ணத்தில் ஒருவனைப் பற்றிய நினைவு இருக்கும்வரை அவனுக்கு மரணமில்லை எனும் செய்தி அது.

ஒரு இலக்கியவாதி எனும் ரீதியில் இன்னுமோர் நூறாண்டு காலம் நான் எண்ணப்படலாம். சரி, உங்களுக்கு அதில் உவப்பில்லை என்றால், இன்னுமோர் ஐம்பதாண்டு காலம். இலக்கியவாதி எனும் நினைப்பை நீக்கிவிட்டுப் பார்த்தால், எனக்குத் தோன்றும், என் பேரன்களுக்குப் பதினைந்து அல்லது பதினாறு வயது ஆகும்வரை, நான் உயிர்வாழ நேர்ந்தால் & நேரக்கூடாது என்று இல்லை & அவர்களின் மனதில், தாத்தா என நான் தங்குவேன்தானே! என்றாவது என்னை நினைப்பார்கள் அல்லவா?

போன மாதம், ஒரு பள்ளி விடுமுறை நாளில், அடுக்களையில் நின்று, அடுப்பில் கிடந்த சீனிச் சட்டியில் வெண்டைக்காய் வதக்கிக் கொண்டிருந்த என் மனைவியின் புறங்கழுத்துச் சரிவில் முத்தமிட்டேன். அடுக்களையில் வேறேதோ தேடிக் கொண்டிருந்த என் பெரிய பேரன் காணும்படி. ஓடிவந்து, உன்னி நின்று, நான் முத்தம் கொடுத்த இடத்தைக் கையினால் அழித்தான்.

சின்னாட்கள் முன்பு, எனது நான்கு வயது  சின்னப் பேரன் என் மனைவியைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தபோது நான் அவனை மிரட்டினேன், ‘‘டேய்  அசத்து... நானும் ஒன் பொண்டாட்டிக்கு முத்தம் குடுப்பேன்டா....'' அவன் மூர்க்கத்துடன் எதிர்த்தான், ‘‘குடாது... குடாது...'' என்று.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்  செல்வேந்திரன்  - திருக்குறள் அரசி தம்பதியரின் மக்கள் இளவெயினியும், இளம்பிறையும் என் பேத்திகள். வீட்டுக்கு வந்தார்களேயானால், அவர்களும் மகள்வழிப் பேரன்கள் இருவருமாக, எனது நூலக முறியில், விசயலட்சுமி நவநீத கிருஷ்ணன்  அல்லது புஷ்பவனம் குப்புசாமி பாட்டுக்கு ஆடுவோம்.

செப்டம்பர் மாதம், 2019&ம் ஆண்டில் ஆஸ்திரேலியா போயிருந்தபோது, மெல்பர்ன் நகரில் நான்கு நாட்கள் கலாவதி & பால சண்முகன் வீட்டிலும், எட்டு நாட்கள் சாந்தி & சிவகுமார் வீட்டிலும் தங்கினேன். ஊர் சுற்றுவதிலும் உண்டாட்டிலும் கொண்டாட்டமான நாட்கள் அவை. ஒரு முன்னிரவில், நண்பர்களின் குடும்பங்களுடன் கூடி அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். சம்ரக்ஷ்ணா என்றொரு சிறுபெண். அண்மையில் மணமானவள். நாட்டியம் பயின்றவள். கர்நாடக இசையும் பயின்றவள். ‘‘தாத்தா, ஒரு பாரதியார் பாட்டுப் பாடவா?'' என்றாள்.

‘எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தனை?' என்று கேட்டது போலிருந்தது எனக்கு!

2020 பிறந்த பின்பு ஒருநாள், ஓவியர் ஜீவா வீட்டுக்குப் போய்விட்டுப் பொடிநடையாக நடந்து, ரங்கே கவுடர் வீதியில் முப்பதாண்டு காலமாக மளிகைச் சாமான்கள் வாங்கும் ஆறுமுக நாடார் & சன்ஸ் கடைக்குப் போனேன். சிறுபயிறு, முழு உளுந்து, கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, உருட்டு உளுந்து தலா ஒரு கிலோ. தட்டைப் பயிறு, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, ராஜ்மா, நிலக்கடலை தலா அரைக்கிலோ. மொத்தம் ஏழரைக் கிலோ துணிப்பையில் வாங்கிச் சுமந்து நடந்து வைசியர் வீதி நிறுத்தத்தில்  பேருந்துக்கு நின்றேன்.

யோசித்துப் பார்க்கும்போது, நான் வாசிக்க எழுத எடுத்துக் கொண்ட நேரங்களை விடவும் பேருந்து நிறுத்தங்களில் காத்துக் கிடந்த, பயணம் செய்த நேரங்கள் அதிகம். தாமதமாக, இருபத்து மூன்று பணம் பயணக் கட்டணம் வாங்கும் தாழ்தள லொடக்குப்  பேருந்து ஒன்று வந்தது. லொடக்கு அரசாங்கம், லொடக்குப் பேருந்துகள்தாம் இயக்கும். தமிழனுக்கு அதுவே விதிப்பயன்.

உட்கார இடம் இல்லை. முன்னகர்ந்து வாகாக நின்று கொண்டேன். நமக்கது வழக்கம்தான். அந்தத் தைரியம் இல்லாவிட்டால், ஏழரைக்கிலோ கடைச் சாமான் பையுடன் பயணம் செய்யத் துணிந்திருக்க மாட்டேன். வலது கையில் பலவெஞ்சன  சாமான்கள் பை. இடது கையால் பேருந்தின் மேல்கம்பி பற்றியிருந்தேன். எனது இடப்பக்கமாக, இருக்கையில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க, நல்ல உடற்கட்டுள்ள இளைஞன் சாவகாசமாக அமர்ந்து தொடுதிரை ஸ்மார்ட் ஃபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.

நமக்குப் பாரம்பரியத் தமிழ் மரபு பற்றிய போதம் உண்டு. 2019 அக்டோபர் மாதம், பாரிசு மாநகரில் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் தங்கியிருந்தபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட முறை நகரப் பேருந்துகளிலும், ரயில்களிலும், டிராம்களிலும் அவருடன் பயணித்திருப்பேன். நெரிசல் மிகுந்த பயண நேரங்கள். நாங்கள் நிற்பதைக் கண்டால் எவரேனும் ஒரு இளைஞர் எழுந்து இடம் தருவார்.

ஆனால் தமிழ்நாட்டில், கையில் மளிகைச் சாமான்கள் நிறைந்த பையுடன் நின்றுகொண்டு பயணம் செய்யும் எனக்கு எவரும் எழுந்து இடம் தருவார் என்ற எதிர்பார்ப்போ மூட நம்பிக்கையோ இல்லை. ‘மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி!' மறுதலையும் தகும். நான் ஏறிய பேருந்துத் தரிப்பில் இருந்து இருபத்திரண்டாவது நிறுத்தத்தில் இறங்க வேண்டும். உட்கார இடம் இல்லை என்றாலும்  சாமான் பையைப் பிடித்துக்கொண்டு நின்றவாறு பயணம் செய்யும் தன்திடம் உண்டு. நம்மையே நினைத்துத்தானே வாழ்க்கையெனும் இந்நெடும்பாரம் ஏற்றுக் கொண்டோம்!

தொடுதிரையில் இளைஞர் ஏதேதோ தப்பிக் கொண்டிருந்தார். வைசியர் வீதி, செட்டிவீதி, செல்வபுரம் கடந்து ஏகிக் கொண்டிருந்தது பேருந்து. எவனோ ஒரு பொறுக்கிக் கதாபாத்திரம், பொறுக்கித்தரத்து இசையில், பொறுக்கித்தனமான சொற்களில் காமம் செப்பிக் கொண்டிருந்தான். பாடலின் திரண்ட கருத்து, உன் கவுட்டுக்கிடையில் இருப்பதை எனக்கு எப்போது தருவாய் என் கன்னித்தமிழ் மகளே என்பது. நான் நற்சிந்தையுடன், யாவற்றையும் அனுபவித்தபடி, கைப்பாரம் துயர் தராமல், சூழலில் ஒன்றியபடி பயணம் செய்து கொண்டிருந்தேன்.

தெலுங்குபாளையம் பிரிவு என்றோர் நிறுத்தம் வந்தது. பிற்பகல், பள்ளி விடும் நேரம். எனக்குப் பசி நேரம். நிறையப் பள்ளி மாணவியர் பேருந்தினுள் அடித்துப் பிடித்துப் பாய்ந்தனர். முதுகில் கல்விப் பாரம். இந்த முதுகுப் பை பற்றித் தனியே எழுத வேண்டும். பேரூர், செட்டிபாளையம், ஆறுமுகக் கவுண்டனூர், ராமச்செட்டிப்பாளையம், சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம், கோவைப்புதூர் எனப் பயணம் செய்யும் மாணவியர்.

என் பக்கம் சில சிறுமியர் வந்து நின்றனர். ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு மாணவியர் எனக் கணித்தேன். என்னருகே நெருங்கி வந்து நின்ற மாணவியிடம், செல்ஃபோன் நோண்டிக் கொண்டிருந்த செம்மல் சொன்னார், ‘‘பேக் குடும்மா, வெச்சுக்கிறேன்''. அந்த மாணவி, ‘‘வேண்டாம்'' என்றாள்.

‘‘நான் வேணும்னா எந்திரிச்சு நிக்கிறேன். உக்காரும்மா...'' என்றான் வாலிபன். அந்த மாணவி என்னைக் காட்டிச் சொன்னார், ‘‘இந்தத் தாத்தா கையிலே பையோட நிண்ணுக்கிட்டிருக்காருல்ல... அவரை உக்காரச்  சொல்லலாம்ல...'' என்று.

நம்புவதும், நம்பாமற் போவதும் உம் மனோபாவம். என் மனதில் உஸ்தாத் பிஸ்மில்லா கான் ஷெனாய் கேட்கும்போது, அபூர்வமான சங்கதி ஒன்று வந்து விழுந்தாற்போல மனது ‘‘சபாஷ்'' என்றது. உட்புகுந்து உரையாடப் பிரியப்படவில்லை நான். வம்பாகிப் போகும். நம் வயதுக்குத் தோதும் அல்ல. எனினும் பெருமிதத்தால் மார்பு விம்மிப் பூரித்த மெய்ப்பாடு. சாண்டில்யனின் கதாநாயகிக்கு மட்டுமே மார்பு விம்மிப் பருத்துக் கனத்துப் பூரிக்குமா என்ன?

யாவற்றுக்கும் மேலே அந்தச் சிறுமி என்னைத் தாத்தா என விளித்தது நமக்கு என்றுமே வாய்க்க வாய்ப்பில்லாத ஞான பீட விருதைவிடப் பெரிதாகத் தோன்றியது. அந்தச் சிறுமியின் மதமறியேன், இனமறியேன், ஊரறியேன், பெயரறியேன், வாசிக்கும் பள்ளியோ வகுப்போ அறியேன்.

தான் தாத்தா என விளித்தது நாஞ்சில்நாடன் எனும் பெயரிய மொழியின் முதல் தரத்து மூத்த எழுத்தாளனை என்றும் அச்சிறுமி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

பதிற்றுப் பத்தில் அரிசில்கிழார் வாழ்த்துவதைப் போன்று, ‘‘வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், தெய்வமும்'' அச்சிறுமிகளுக்கு வாய்க்கட்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

ஏப்ரல், 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com