”என் வாழ்க்கையை மாற்றப்போகும் பெயர் அது என்பது அப்போது எனக்கு தெரியாது!”

ஆர் கே லட்சுமண் நூற்றாண்டு
”என் வாழ்க்கையை மாற்றப்போகும் பெயர் அது என்பது அப்போது எனக்கு தெரியாது!”
Published on

முதன் முதலாக எழுத்தாளர் யெஸ். பாலபாரதியின் வாயிலிருந்துதான் அந்த மனிதரின் பெயரை கேள்விப்படுகிறேன்.

2000&ஆம் ஆண்டின் தொடக்க நாட்கள் அவை. மும்பையிலிருந்து வெளிவந்த ‘மும்பை தமிழ் டைம்ஸ்' நாளிதழில் டீன் ஏஜ் ஆர்வக்கோளாறுகளின்படி கதை, கவிதை, அதற்கு ஓவியம் என்று ஒரு வாசகனாக மொக்கையாக கிறுக்கித் தள்ளிக் கொண்டிருந்தேன்.

அந்த கோயிந்துத் தனங்களைப் பார்த்து கடுப்பாகிப்போனதாலோ என்னவோ,  பாலபாரதி என்னை சந்திக்க வரச்சொன்னார். அவரை சந்திக்கப் போகும்போது, எதுக்கும் இருக்கட்டுமே என்று என் கிறுக்கல்கள் இருந்த நோட்டு புத்தகத்தையும் எடுத்து சென்றிருந்தேன்.

அதை அவரிடம் காட்டியபோது, ‘உனக்குப் படமே வரையத் தெரியல..' என்று சொன்னார். நாலு வார்த்தை நல்ல விதமாக சொல்வார் என்று நினைத்து காட்டினால் இந்த மனுசன் இப்படிச்

சொல்றாரே என்று கொஞ்சம் கடுப்பாகப் பார்த்தபோது, அவர் சிரித்துக் கொண்டு, ‘உன் ஸ்ட்ரோக்ஸ் ஓவியனுடையது அல்ல.. ஒரு கார்ட்டூனிஸ்ட்டுக்கான ஸ்ட்ரோக்ஸ்.. நீ நினைச்சா ஆர்.கே.லக்‌ஷ்மண்  மாதிரி கார்ட்டூனிஸ்ட்டா வரலாம். ஏன்னா இந்தியாவில் அரசியல் கார்ட்டூன் வரைய ஆளே இல்ல.. லட்சுமண், மதன், மதி மாதிரி கொஞ்சம் பேர்தான் இருக்காங்க..'என்றார்.

அப்போதுதான் முதன் முதலாக ஆர்.கே.லட்சுமண் என்ற  பெயரையும் அரசியல் கார்ட்டூனிஸ்ட் என்றொரு பத்திரிகை பணியும் அதில் குறைவான ஆட்களே இருக்கிறார்கள் என்பதை கேள்விப்படுகிறேன். ஆட்களே இல்லை என்று பாலபாரதி சொன்ன ஒன் லைன் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது.

'You Said it' என்ற லட்சுமணின் கார்ட்டூன் தொகுப்பு புத்தகத்தை கொடுத்து ‘புரட்டிப்பார்' என்றார்.

அந்த புத்தகத்தை புரட்டிப் பார்த்து முடித்தபோது எனக்குள் ஒரு கார்ட்டூனிஸ்ட் உதயமாகிக் கொண்டிருந்தான்.

இப்படியாக ‘ராசிபுரம் கிருஷ்ணசாமி லட்சுமண்'  என்ற  மனிதர், கணக்காளரிடம் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த என்  வாழ்வில் நுழைந்து என்னை கார்ட்டூனிஸ்ட்டாக செதுக்க ஆரம்பித்தார்.

அவர் பெயரைக் கேள்விப்பட்ட தினத்திலிருந்து தினமும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை அவர் வரைந்த கார்ட்டூனை பார்ப்பதற்காகவே வாங்க ஆரம்பித்தேன். அதிகமாக பார்த்து வரைந்து பழகியது லட்சுமணின் கோடுகளைதான்.

நான் மட்டுமல்ல.. இந்தியாவில் அவரது தாக்கம் இல்லாமல் ஒரு கார்ட்டூனிஸ்ட் உதயமாக முடியாது. ஒவ்வொரு கார்ட்டூனிஸ்ட்டுக்கும் இப்படி ஒரு கதை இருக்கும். அவர் ஒரு வரலாறு. அவருக்கே தெரியாமல் அவர் துரோணாச்சாரியாராக இருந்து பல ஏகலைவன்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

எங்களுக்கு லட்சுமண் எப்படி துரோணராக இருந்தாரோ அதுபோல் அவருக்கு டேவிட் லோ என்ற பிரிட்டிஷ் கார்ட்டூனிஸ்ட் துரோணராக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

 24 அக்டோபர் 1921&இல் பிறந்த லட்சுமணின் நூற்றாண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்டாக பணியில் சேர்ந்து  ‘காமன் மேன்' எனும் பொதுஜனத்தின் கதாபாத்திரத்தை உருவாக்குகிறார்.

இந்திய ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுவதை தன் பொதுஜனத்தின் மௌனத்தின் மூலம் எள்ளல் செய்வதுதான் 'You Said it' சிறப்பு.

அந்த பக்கத்தில் வரும் கார்ட்டூன்கள் அதிகார மையங்களில் பல தாக்கத்தை உண்டு பண்ணின.

வாசகர்கள் அந்தப் பொதுஜனத்தைக் கொண்டாடினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து அவரது கோடுகள் பேசிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல்வாதிகள் எப்படி இருந்தார்கள் என்பதற்கான வரலாற்று ஆவணமாக இருக்கின்றன அந்த கோடுகள்.  நேருவை விமர்சித்தார். இந்திராவை விமர்சித்தார். ராஜீவை விமர்சித்தார். சோனியாவை, ராகுலை, பிரியங்காவை என இந்திய அரசியலின் ஒவ்வொரு காலகட்டத்தின் கண்ணாடியாக இருப்பவை அவர் வரைந்த கோடுகள். 

பொதுவாகவே கார்ட்டூன்களை அனைவருமே ரசிப்பார்கள், தாங்கள் கார்ட்டூனில் விமர்சிக்கப்படாதவரை.

லட்சுமணின் கார்ட்டூன்கள் இந்திரா உட்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பிடித்தமானதாகவே இருந்திருக்கிறது, மொரார்ஜி தேசாயை தவிர. தன்னை லட்சுமணின் கார்ட்டூனில் விமர்சிப்பதை வெறுத்து வந்திருக்கிறார்.

ஸ்ட்ரோக்ஸ் வந்து பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட நிற்காத லட்சுமணின் கோடுகள் எமெர்ஜென்ஸி காலத்தில் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்திராவை நேரடியாக சந்தித்து, ‘எனக்கு கார்ட்டூன் வரையும் உரிமை உண்டு' என்று அவர் கூறியிருக்கிறார். சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான்.. என்று கார்ட்டூன் வெளியிட கூடாது என்று இந்திரா மறுத்துவிடவே அந்தக் காலத்தில் அவரது கோடுகள் மௌனிக்கப்பட்டன.

கலவர காலமொன்றில் ‘ஒரு மோட்டார் சைக்கிளைக் கூட எரிக்கத் தெரியாத நீ எல்லாம் என்னடா ராம பக்தன்' என்று ஒரு கார்ட்டூனில் அவர் வைத்த விமர்சனம் அவரை நீதிமன்றப் படியேற வைத்தது.

சச்சினுக்கு வழங்கப்பட்ட வரி தள்ளுபடி குறித்து வரைந்த கார்ட்டூன், சச்சினுக்கு சிக்கலை உண்டு பண்ணியது. இப்படி இவரது கோடுகள் உண்டு பண்ணிய தாக்கத்தின் வரலாறுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதன் சாட்சியாக அவரது ‘பொது ஜனம்'  பாத்திரம் மும்பையிலும் பூனேயிலும் சிலையாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. உலகிலே  அரசியல் கார்ட்டூனில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கு

சிலை அமைக்கப்பட்டது இவரது பொதுஜனத்திற்கு மட்டுமே. ஒவ்வொரு கார்ட்டூனிஸ்ட்டுகளும் பெருமையாகக் கருதும் விசயம் அது.

அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் அரசியல்வாதிகளின்

மிரட்டல்களுக்கு நடுவில்  இந்திய அரசியல் கார்ட்டூன் உலகிற்கு முக்கியத்துவத்தையும் பொதுதளத்தில் பாதுகாப்பையும் பெற்றுத் தருவது அவரது தூரிகை போட்ட  ‘லட்சுமண ரேகை' தான்.

டிசம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com