ஏற்றத்தாழ்வுகள்

ஏற்றத்தாழ்வுகள்
Published on

காரில் தமிழக நண்பருடன் பயணித்துகொண்டிருந்த போது பிரம்மாண்டமான அந்த தங்கும் விடுதியை கடந்தோம். விடுதி நண்பரை கவர்ந்து விட்டது. இங்கே தங்குவதற்கு ஒரு நாள் வாடகை எவ்வளவு?  என்றார், ஒவ்வொரு விதமான அறைக்கும் ஒரு விதமான வாடகை என்று பதிலளித்தேன். அதிகபட்சமான வாடகை எவ்வளவு என்று தொடர்ந்தவரிடம், இந்த தங்கு விடுதியின் விசேஷ சூட்டின் ஒரு நாள் வாடகை ரூபாய் ஏழு லட்சம் என்றதும், நம்ப மறுக்கும் பார்வையுடன் உண்மையாகவா என்றார். ஒரு கணம் அமைதியாக இருந்த நண்பர் வண்டியை அந்த தங்கு விடுதிக்கு மீண்டும் திரும்பச் சொன்னார். விடுதியின் சற்று தொலைவில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். அரபிக்கடலின் காற்று எங்களை கடந்து சென்றது. புறாக்கள் பறப்பதும் தரையிரங்குவதுமாக இருந்தது. கேட் வே ஆப் இந்தியாவின் பிரம்மாண்டம் இது எதுவும் நண்பரின் கவனத்தில் பதிய மறுத்தது. ‘விசேஷ  சூட்’ பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.   தாஜ்மகால் பாலஸ் என்ற அந்த  சூட் 5000 சதுர அடி விஸ்தாரத்தில் பல அறைகளைக் கொண்டது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர 13 பணியாளர்கள், தனியான செப், அறை சுவர்களில் எம் எப் ஹுசைன்  போன்ற பிரபல ஓவியர்களின் மாஸ்டர் பீஸ் ஓவியங்கள், யோகா சொல்லித் தர யோகா மாஸ்டர் என்று அதன் வசதிகளை கூறினேன். சிறிது தூரம் பேசாமலிருந்த நண்பர், பின் நம்ம கிராமங்களில் பத்து பதினைந்து குடும்பங்களின் ஒரு வருட மொத்த செலவே ஏழு லட்சத்தில் முடிச்சிறலாம். இது ரொம்ப அநியாயம் என்றார்.

ஜனவரி மாத இறுதியில் ஆக்ஸ்பாம் (OXFAM) என்ற சர்வதேச அமைப்பில் செயல் இயக்குநர் வெளியிட்ட ஆய்வு அறிக்கை உலகின் ஏற்ற தாழ்வுகளை மிக துல்லியமாக வெளிப்படுத்தியது. “உலகின் முதல் 80 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 1.9 டிரில்லியன் டாலர்கள். உலகின் பாதி ஜனத்தொகை அதாவது 350 கோடி மக்களின் கூட்டு சொத்து மதிப்பு இந்த 80 பணக்காரர்களின் சொத்திற்கு சமமானது. இந்த 80 பணக்காரர்களின் சொத்து மதிப்பு இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியைவிட (GDP)யை விட அதிகம். கடந்த 2010ல் எடுத்த கணக்கெடுப்படி 388 நபர்களின்  சொத்து தான் உலக ஜனத்தொகையில் 50 சதவீத மக்களின் சொத்திற்கு சமமாக இருந்தது. 2009க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த முதல் கட்ட பணக்காரர்களின் சொத்து இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.

எப்போதும் இல்லாத அளவுக்கு பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. இது இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தற்போதுள்ள நிலை தொடரும் போது 2016ல் உலகின் முதல் 1 சதவீத மக்களின் சொத்து மீதமுள்ள 99 சதவீத மக்களின் சொத்திற்கு சமமானதாக இருக்கும். மற்றொரு பக்கம் உலகில் ஒன்பதுபேருக்கு ஒரு நபர் போதுமான உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இது  ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வின்னி பயானினிமா வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி.

மன்னராட்சிகள் ஒழிந்து ஜனநாயக அரசுகள் அதிகம் தலையெடுத்த கடந்த 100 ஆண்டுகளில் தான் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துள்ளன என்று சொல்லலாம். “ஒரு சுதந்தரமான சமூகம் ஏழைகளாக இருக்கிற பலருக்கு உதவ முடியாவிட்டால், அதனால் பணக்காரர்களாக இருக்கிற சிலரைக் காப்பாற்ற இயலாது” ” என்று சொன்னார் ஜான் எஃப் கென்னடி. ஆனால் இவரது காலத்திலும் அதற்கு பின்னும் தான் பணக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக வளர்ந்ததாக தரவுகள் கூறுகின்றன. உலக முழுவதுள்ள அரசுகளுக்கு ஏழைகளைவிட பணக்காரர்களின் தயவு தான் எப்போதும் தேவைப்படுகிறது.

பணக்காரர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மற்றவர்களைப்பற்றி கவலை கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். வெளிநாட்டில் நடக்கும் சுஷி பெண் விருந்து(Sushi girl Party) க்காக சில நாட்களில் கோடிக் கணக்கான ரூபாயை  செலவழிக்கும் நபர்கள் உள்ளனர். (சுஷி ன்பது மீனில் செய்யப்படும் ஒரு வகையான ஜப்பானிய உணவு வகை. சுஷி பெண் விருந்தின் சிறப்பம்சமென்பது உணவு பரிமாறப்படும் டேபிள்களில் அழகான இளம் பெண்கள் நிர்வாணமாக படுக்க வைக்கப்பட்டு அவர்களின் உடலின் மேல் சுஷி வகை உணவு பதார்த்தங்கள் பறிமாறப்படுமாம். இது தொடக்கம், இதன் பின் இன்ன பிற விஷயங்கள்.)

      சில பணக்காரர்கள் ஏற்றத் தாழ்வின் விபரீதத்தை புரிந்தே உள்ளனர்.  “நாம் ஏழைகளின் மீது முதலீடு செய்தால்தான் எதிர்காலத்தை நம்பகமாக்க முடியும். அவர்களின் துயரங்களை நீடிக்கச் செய்கையில் அல்ல” என்கிற பில்கேட்ஸின் வார்த்தைகள் அதன் வெளிப்பாடு.

 கல்வி ஏழ்மையை ஒழிக்கும் என்ற கருதுகோளும் கொஞ்சம் கொஞ்சமாக நம்பகத்தன்மையை இழக்கிறது. ப்ராதம் (Pratham) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுப்படி இந்தியாவில் 58.3 சதவீத ஐந்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை வசிக்க முடியவில்லை.

தற்போதைய உலக டாப் 80 பணக்காரர்கள் லிஸ்டில் 3 பேர் இந்தியர்கள். அவர்களில் ஒருவரான அஜிம் பிரேம்ஜி  (விப்ரோ நிறுவன அதிபர்) இது வரை 4.4 பில்லியன் டாலர்கள் ஏழைகளின் படிப்பிற்காக செலவிட்டிருக்கிறார். அவரது தொண்டு நிறுவனம் எட்டு மாநிலங்களில் உள்ள 350000 பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக செலவழிக்கப்படுகிறது. அஜிம் பிரேம்ஜியின் மனோநிலை மற்ற அனைவருக்கும் வந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது நடக்குமா?

ஏற்றத்தாழ்வின் கொடுங்கரங்களில் சிக்கி அடுத்த வேளை உணவிற்கு வழியின்றி வாடும் மனிதர்களை அரசுகளோ, இட ஒதுக்கீடுகளோ, இசங்களோ காப்பாற்ற முடியுமென்ற நம்பிக்கைகள் மெல்ல பொய்த்து வருகின்றன. ஏழ்மையின் கொடுமையைவிட அதிலிருந்து வெளியேறும் விருப்பமின்றி வாழ்வது தான் கொடுமையானது. தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என்ற நம்பிக்கை விடுதலையை என்றும் பெற்றுத்தராது.

 ஒரு காலத்தில் வறுமையின் கோரப்பிடியில் வாடிய ஓப்ரா வின்ப்ரே,“ நான் என்னை சேரியிலிருந்து வந்த வென்ற ஓர் ஏழைப்பெண்ணாகக் கருதவில்லை. நான் என்னை சிறுவயதிலிருந்தே என்னுடைய நிலைக்கு நானே பொறுப்பு. நானே வெல்ல வேண்டும் என்று கருதியவளாகக் நினைக்கிறேன்” என்று சொல்கிறார். இந்த வார்த்தைகளின் நம்பிக்கை அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளைவிட பலம் வாய்ந்தது.

ஏழ்மையை விட்டு வெளியேறுவது என்ற கனவுகளும், அதை நிறைவேற்ற சரியான செயல் திட்டமும் இருந்தால் ஒருவர் தனது ஏழ்மையை ஒழிக்க முடியும். அதற்கான சாத்தியம் உலகில் எல்லா பகுதிகளிலும் உள்ளது, எல்லாரிடமும் உள்ளது. இது லாஜிக் இல்லாத வாசகமாக இருக்கலாம். ஆனால் உண்மையான வார்த்தைகள். இதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்,“ தர்க்க ரீதியிலான வார்த்தைகள் உங்களை ‘அ’ விலிருந்து ‘ஆ’ வுக்கு அழைத்துச் செல்லும். ஆனால் கற்பனைத்திறனோ எங்குவேண்டுமானாலும் அழைத்துச் செல்லும்” என்றார்.                 

1. பில் கேட்ஸ் (மைக்ரோசாப்ட்) - சொத்துமதிப்பு 76 பில்.(பில்லியன் டாலர்)        

2.கார்லஸ் ஸ்லிம் ஹெலு மற்றும் குடும்பம் (டெலிகாம்) - சொத்துமதிப்பு 72 பில்.

3.அமான்சியோ ஆர்டேகா (சில்லறை வணிகம்) - சொத்துமதிப்பு 64 பில்.       

4.வாரன் பஃபெட் (பெர்க்ஷயர் ஹாத்வே) - சொத்துமதிப்பு 58.2 பில்.  

5.லாரி எலிசன் (ஆரக்கிள்) - சொத்துமதிப்பு 48 பில்.

6.சார்லஸ் காச் (பல்வேறு தொழில்கள்) - சொத்துமதிப்பு 40 பில்.     

7.டேவிட் காச் (பல்வேறு தொழில்கள்) - சொத்துமதிப்பு 40 பில்.

8.ஷெல்டன் அடெல்சன் (சூதாட்ட விடுதிகள்) - சொத்து மதிப்பு 38 பில்.

9.கிறிஸ்டி வால்டன் (வால்மார்ட்) - சொத்துமதிப்பு 36.7 பில்.

10.ஜிம் வால்டன் (வால் மார்ட்) - சொத்துமதிப்பு 34.7 பில்.

11.லில்லியன் பெத்தன்கூர் - குடும்பம் (ல’ஓரில்) - சொத்து மதிப்பு 34.5 பில்.

12.ஸ்டீபன் பெர்சன் (ஹெச் - எம்) - சொத்துமதிப்பு 34.4 பில்.

13.ஆலிஸ் வால்டன் (வால்மார்ட்) - சொத்துமதிப்பு 34.3 பில்.  

14.எஸ்.ராப்சன் வால்டன் (வால்மார்ட்) - சொத்துமதிப்பு 34.2 பில்.

15.பெர்னார்ட் அர்னால்ட் - குடும்பம் (எல்விஎம்ஹெச்) -  சொத்துமதிப்பு 33.5 பில். 

16.மைக்கெல் ப்ளூம்பெர்க் (ப்ளூம்பெர்க் எல்பி) - சொத்து மதிப்பு 33 பில்.

17.லாரி பேஜ் (கூகுள்) - சொத்துமதிப்பு 32.3 பில்.          

18.ஜெஃப் பெஜோஸ் (அமேசான்.காம்) - சொத்துமதிப்பு 32 பில்.

19.செர்ஜி பிரின் (கூகுள்) - சொத்துமதிப்பு 31.8 பில்.

20.லி கா - ஷிங் (பல்வேறு தொழில்கள்) - சொத்துமதிப்பு 31 பில்.

21.மார்க் ஜுக்கர்பெர்க் (முகநூல்) - சொத்துமதிப்பு 28.5 பில்.

22.மிஷெல் பெரேரோ - குடும்பம் (சாக்லெட்) - சொத்து மதிப்பு 26.5 பில்.

23.அலிகோ டேங்கோட் (சிமெண்ட், சர்க்கரை, மாவு) சொத்து மதிப்பு 25 பில்.

24.கார்ல் அலிபிரெக்ட் (சில்லறை வணிகம்) -  சொத்துமதிப்பு 25 பில்.

25.கார்ல் ஐகான் (முதலீடுகள்) - சொத்துமதிப்பு 24.5 பில்.

 26.ஜார்ஜ் சோரோஸ் (ஹெட்ஜ் நிதி) - சொத்துமதிப்பு 23 பில்.

27.டேவிட் தாம்சன் - குடும்பம் (ஊடகம்) - சொத்துமதிப்பு 22.6 பில்.  

28.லூயி ஷி வூ (சூதாட்டம்) - சொத்துமதிப்பு 22 பில்.

29.டைடெர் ஸ்குவார்ஷ் (சில்லறை வணிகம்) - சொத்துமதிப்பு 21.1 பில்.  

30.பிரின்ஸ் அல்வாலீட் பின் தலால் அல்சத் (முதலீடுகள்) - சொத்துமதிப்பு 20.4 பில்.         

31.பாரெஸ்ட் மார்ஸ் ஜேர (சாக்லெட்) - சொத்து மதிப்பு 20 பில்.

32.ஜாக்குயிலின் மார்ஸ் (சாக்லெட்) - சொத்து மதிப்பு 20 பில்.

33.ஜான் மார்ஸ் (சாக்லெட்) - சொத்துமதிப்பு 20 பில்.

34.ஜார்ஜ் பால் லீமன் (பீர்) - சொத்துமதிப்பு 19.7 பில்.

35.லீ ஷா கீ (பல்வேறு தொழில்கள்) - சொத்து மதிப்பு 19.6 பில்.

36.ஸ்டீவ் பால்மெர் (மைக்ரோசாப்ட்) - சொத்து மதிப்பு 19.3 பில்.

37.தி அல்பெரெக்ட் ஜேஆர் - குடும்பம் (அல்டி, ட்ரேடர் ஜோஸ்) - சொத்துமதிப்பு 19.3 பில்.

38.லியோனார்டோ டெல் வெச்சியோ (மூக்கு கண்ணாடி) - சொத்துமதிப்பு 19.2 பில்.

39.லென் பிலேவட்ங்க் (பல்வேறு தொழில்கள்) - சொத்துமதிப்பு 18.7 பில்.  

40.முகேஷ் அம்பானி (பெட்ரோகெமிக்கல், ஆயில், எரிவாயு) - சொத்துமதிப்பு 18.6 பில்.

41.அலிசர் உஸ்மானவ் (எஃகு,டெலிகாம்,முதலீடு) - சொத்துமதிப்பு 18.6 பில்.

42.மைக்கெல் ஓட்டோ-குடும்பம் (சில்லறை வணிகம்,ரியல் எஸ்டேட்) - சொத்துமதிப்பு 18.4 பில்.

43.மசயோசி சன் (இணையம்,டெலிகாம்) - சொத்து மதிப்பு 18.4 பில்.

44.பில் நைட் (நைக்) - சொத்துமதிப்பு 18.4 பில்.

45.டடாஷி யனை - குடும்பம்(சில்லறை வணிகம்) - சொத்துமதிப்பு 17.9 பில்.

46.ஜினா ரைன்ஹர்ட் (சுரங்கம்) - சொத்துமதிப்பு 17.7 பில்.

47.மிகைல் ஃபிரிட்மேன் (எண்ணெய், வங்கி, டெலிகாம்) - சொத்துமதிப்பு 17.6 பில்.          

48.மைக்கெல் டெல் (டெல்) -சொத்துமதிப்பு 17.5 பில்.

49.சுசானே கிலாட்டன் (பிஎம்டபிள்யு, மருந்துகள்) - சொத்துமதிப்பு 17.4 பில்.

50.அபிகாய்ல் ஜான்சன் (பணம் மேலாண்மை) - சொத்துமதிப்பு 17.3 பில்.

51.விக்டர் வெக்செல்பெர்க் (உலோகங்கள், மின்சாரம்) - சொத்துமதிப்பு 17.2 பில்.

52.லக்ஷ்மி மிட்டல் (எஃகு) - சொத்துமதிப்பு 16.7 பில்.

53.விலாடிமிர் லிசின் (எஃகு, போக்குவரத்து) - சொத்து மதிப்பு 16.6 பில்.

54.செங் யு-துங் (பல்வேறு தொழில்கள்) - சொத்து மதிப்பு 16.2 பில்.

55.ஜோசப் சஃப்ரா (வங்கி) - சொத்துமதிப்பு 16 பில்.

56.பால் அலேன் (மைக்ரோசாப்ட், முதலீடு) -   சொத்து மதிப்பு 15.9 பில்.

57.லியோனிட் மிக்கெல்சன் (எரிவாயு ,இரசாயனப் பொருட்கள்) - சொத்துமதிப்பு 15.6 பில்.

58.ஐரிஸ் ஃபாண்ட்போனா - குடும்பம் (சுரங்கம்) - சொத்துமதிப்பு 15.5 பில்.

59.அன்னே காக்ஸ் சேம்பர்ஸ் (ஊடகம்) - சொத்துமதிப்பு 15.5 பில்.

60.பிரான்கோஸ் பினால்ட் (சில்லறை வணிகம்) - சொத்துமதிப்பு 15.5 பில்.

61.கென்னடி டிம்செங்கோ (எண்ணெய் - எரிவாயு) - சொத்துமதிப்பு 15.3 பில்.

62.அஸிம் பிரேம்ஜி (மென்பொருள்) - சொத்துமதிப்பு 15.3 பில்.

63.மொகம்மது அல் அமௌதி (எண்ணெய், டைவெர்சிஃபையிடு) - சொத்துமதிப்பு 15.3 பில்.       

64.வாங் ஜியான்லின் (ரியல் எஸ்டேட்) - சொத்துமதிப்பு 15.1 பில்.

65.சார்லஸ் எர்கென் (டிஷ் நெட்வொர்க்) - சொத்துமதிப்பு 15 பில்.

66.ஸ்டீபன் குவாண்ட் (பிஎம்டபள்யு) - சொத்துமதிப்பு 14.9 பில்.

67.ஜேர்மன் லார்ரியா மோட்டா வேலாஸ்கோ - குடும்பம்(சுரங்கம்) - சொத்துமதிப்பு 14.7 பில்.

68.ஹரோல்ட் ஹேம் (எண்ணெய் - எரிவாயு) - சொத்துமதிப்பு 14.6 பில்.

69.டொனால்ட் பிரேன் (ரியல் எஸ்டேட்) - சொத்துமதிப்பு 14.4 பில்.

70.ரே டேலியோ (ஹெட்ஜ் நிதி) - சொத்துமதிப்பு 14.4 பில்.  

71.ஜியார்ஜ் ஷாப்ளர் (பால் பியரிங்ஸ்) - சொத்துமதிப்பு 14.3 பில்.

72.லூயிஸ் கார்லோஸ் (வங்கி) - சொத்துமதிப்பு 14.2 பில்.

73.ரொனால்ட் பேரெல்மேன் (அன்னிய முதலீடு)-  சொத்துமதிப்பு 14 பில்.

74.லாரென் பவல் தொழில்கள் - குடும்பம் (ஆப்பிள் , டிஸ்னி) - சொத்துமதிப்பு 14 பில்.

75.செர்ஜ் டஸ்ஸால்ட் - குடும்பம்(விமான போக்குவரத்து) - சொத்துமதிப்பு 14 பில்.

76.வகிட் அலேப்ரவ் (லுகோயில்) - சொத்துமதிப்பு 13.6 பில்.

77.ஜான் ஃப்ரெடிர்க்சென் (கப்பல்) - சொத்துமதிப்பு 13.6 பில்.

78.ரூபர்ட் முர்டோக் மற்றும் குடும்பம் (ஊடகம்) - சொத்துமதிப்பு 13.5 பில்.    

79.ஜான் பால்சன் (ஹெட்ஜ் நிதி) -  சொத்துமதிப்பு 13.5 பில்.

80.மா ஹடேங் (இணைய ஊடகம்) - சொத்துமதிப்பு 13.4 பில்.

(சொத்துமதிப்புபில்லியன்டாலரில்கொடுக்கப்பட்டுள்ளது)

மார்ச், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com