ஒரு தாயின் குரல்!

எழுவர் விடுதலை
ஒரு தாயின் குரல்!
Published on

விசாரணை என்று அழைத்துச் சென்ற என் மகனை விடுதலை செய்யுங்கள்...

பொய்வழக்கு புனைந்திருக்கிறீர்கள், என் மகனை விடுதலை செய்யுங்கள்..

குற்றமற்ற அப்பாவியை தண்டித்திருக்கிறீர்கள், என் மகனை விடுதலை செய்யுங்கள...

என்மகனின் மரண தண்டனையை ரத்து செய்யுங்கள்...

ஆயுள்தண்டனைக்கான காலம் முடிந்தும் என் மகனை சிறையில் வைத்திருக்கிறீர்கள், என் மகனை விடுதலை செய்யுங்கள்...

குற்றம்சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்திருந்தால், அவர் விடுவிக்கப்பட்டிருப்பார், நான்தான் அதனை மாற்றி பதிவு செய்துவிட்டேன் என்று விசாரணை அதிகாரியே சொல்லிவிட்டார், என் மகனை விடுதலை செய்யுங்கள்..

செய்யாத குற்றத்திற்காக இருபத்தியெட்டு ஆண்டுகளாக சிறையிலிருக்கிறான், இதுபோதாதா.. அவனை விடுதலை செய்யுங்கள்...

என் மகன் விடுதலையில் மாநில அரசே முடிவெடுக் கலாம் என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டதே, அவனை விடுதலை செய்யுங்கள்...

என் மகன் உள்ளிட்ட ஏழுதமிழர்களை விடுதலை செய்ய சட்டமன்றமே தீர்மானம் நிறைவேற்றிவிட்டதே, விடுதலை செய்யுங்கள்...

அந்தந்த சூழலுக்கேற்றவாறான கோரிக்கையோடு இருபத்தியொன்பது ஆண்டுகளாக நியாயம் கேட்டு நடந்துகொண்டிருக்கிறார் அற்புதம்மாள். நியாயப்படி விடுதலை கிடைப்பதற்கான கால அவகாசங்களெல்லாம் முடிந்துவிட்டன. குற்றமே செய்திருந்தாலும் அனுபவிக்க வேண்டிய தண்டனைக் காலத்தைவிடவும் அதிகமாக என் மகன் சிறையிலிருந்திருக்கிறான், கருணை கூர்ந்தாவது விடுதலை செய்யுங்கள் என்று தளர்ந்த வயதில், தளராத உறுதியுடன் அவர் தொடர்புடைய எல்லாக்கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கிறார்.. ஆனால் இதுவரை அவருக்கு நீதியும் கிடைக்க வில்லை, கருணையும் கிடைக்கவில்லை.

விகடன் நிறுவனத்தின் சார்பில் சன் தொலைக்காட்சியில் வெளியான பிரியமானவள் தொடரில் அற்புதம்மாள்பற்றி ஒரு காட்சியில் குறிப்பிட்டிருந்தோம். அந்தம்மாவின்மீது கருணை கொண்டாவது அவர் மகனை விடுதலை செய்யலாமே, அதில் என்ன தடை என்று மாமியார் கேட்க, அதில் கொஞ்சம் சட்டச்சிக்கலும், நெறைய அரசியலும் இருக்கு அத்தே என்று மருமகள் பதில் சொல்வாள் உண்மையும் அதுதான்.

போன நாட்களைத் திரும்பப்பெற முடியாது, தன் மகனின் இளமைக்காலத்தை அந்தத் தாயால் மீட்டுத் தர முடியாது, அவர் அடுத்த பிறவியின்மீதும் நம்பிக்கையற்றவர். கணவர் உடல்நலமில்லாமல் படுக்கையில் வீழ்ந்து கிடக்கிறார், நானும் என் முதுமைக்காலத்தில் இருக்கிறேன், எங்கள் கடைசி காலத்தில் எங்கள் மகன் அருகில் இருக்கவேண்டுமென விரும்புகிறோம், அவனை விடுதலை செய்யுங்கள் என்று கேட்கும் ஒரு தாயின் எளிய கோரிக்கையை ஏற்பதில் என்ன சிக்கல்.. இப்படி அடைத்து வைத்துக்கொடுமைப்படுத்துவதற்கு நீங்கள் அவனை தூக்கிலேயே போட்டிருக்கலாமே என்று மனம்வெதும்பிச் சொல்லும் தாயை இன்னும் ஏன் அலைக்கழிக்கிறீர்கள்.

எமனிடம் போராடி தன் கணவனின் உயிரை மீட்டவள் சத்தியவான் சாவித்திரி எனக்கொண்டாடும் நாட்டில் மகனை மீட்கப்போராடும் ஒரு தாயின்குரல் ஏன் மறுக்கப்படுகிறது.. இப்போது அவர் கேட்பது மன்னிப்போ, சலுகையோ அல்ல, வரையறுக்கப்பட்ட தண்டனைக்காலம் முடிந்தபிறகும் அடைத்துவைக்கப்பட்டிருப்பதற்கான நீதி. ஆளுநர் கையெழுத்திட்டால் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுதமிழர் விடுதலை காண்பர்.. அதில் கையெழுத்திடுவதில் ஆளுநருக்கு என்ன தடை..?

 மகனின் விடுதலையொன்றுதான் அற்புதம்மாள் வேண்டிநிற்கும் அற்புதம்.. அது விரைவில் நிகழட்டும்..

டிசம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com