ஓவியம்
ஓவியம்ரவி பேலட்

கஞ்சா வியாபாரி

முள்ளரும்பு மரங்கள் -7

குழந்தைப் பருவத்தின் இறுதி நாள்கள். ஒரு கோடை விடுமுறைக்காலம். அறுவடை முடிந்து காய்ந்துகிடந்த நெல் வயலில் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்தோம். வேலையோ விளையாட்டோ, எப்போதுமே எதாவது பாடிக்கொண்டிருப்பேன். பக்கத்து ஊரில் தமிழர்கள் நடத்தும் உணவுக்கடையிலிருந்து கேட்டு மனப்பாடமான ‘ரோஸீ, மை டார்லிங் ரோஸீ.. நேசி நீ என்னை நேசி' எனும் புதிய தமிழ் திரைப் பாடலை உரத்த குரலில் பாடிக்கொண்டுதான் ஓடியாடினேன். அப்போது அதோ கைலியை மடித்துக் கட்டி கக்கத்தில் சுருட்டி வைத்த கோணிப்பைகளும் கையில் தொங்கும் மஞ்சப்பைகளுமாக நான்கைந்து பேர் நடந்து வருகிறார்கள். கஞ்சா வாங்க வந்தவர்கள்.

இடுக்கியின் குன்றோரங்களிலும் தாழ்வாரங்களிலும் நீலச்சடயன் கஞ்சா தழைத்து வளர்ந்த காலம் அது. மது அருந்துதல், புகைப்பிடித்தல் என எந்தவொரு கெட்ட பழக்கமுமே இல்லாமல் பூஜை புனஸ்காரங்களும் ஜெபங்களுமாக வாழ்ந்துவந்தவர்கள் கூட கஞ்சாவைப் பயிரிட்டு வளர்த்த நாள்கள். நெல், வாழை, இஞ்சி, கப்பை போல்   கஞ்சாவையும் பேணி வளர்த்தனர். காலை மாலை தண்ணீர் கொடுத்து சிறுகுழந்தைகளைப் போல் கஞ்சாச் செடிகளை அடைகாத்தனர். சாணியும் கடலைப் பிண்ணாக்கும் கரைத்து ஊற்றி அவற்றைப் போஷித்தனர்.

ஆறுமாதத்தில் விளைந்து முற்றிக் கிளைதொங்கும் கஞ்சாத் தோட்டங்களுக்கிடையே நடந்துபோன குழைந்தைகளுக்குக் கூட லேசாக போதை ஏறியது. அடியோடு வெட்டியெடுத்து, கிளையறுத்து, பெரிய இலைகளைப் பிடுங்கிக் களைந்து, சடை பறித்தெடுத்து வெய்யிலில் உலர்த்தி, ராப்பனியில் நனைத்து, மீண்டும் வெய்யிலில் உலர்த்தி, மீண்டும் பனியில் நனைத்துப் பதப்படுத்தி, பெரிய கோணிப்பைகளில் அழுத்தி நிறைத்துத் தைத்து வைத்த அந்த 'இடுக்கி கோல்ட்' ஐ தேடி தொலைதூர ஊர்களிலிருந்தகெல்லாம் கஞ்சா வியாபாரிகள் வருவார்கள். அப்படி தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்தாம் இந்தக் குழு.

அவர்களில் ஓர் இளைஞர் என்னையும் எனது பாட்டையும் கூர்ந்து கவனிக்கிறார் எனப்பட்டது. அவர் உடலுக்கு நிலக்கரியின் வண்ணம். நல்ல உயரம். உருட்டுக் கட்டையைப் போன்ற திடகாத்திரம். ஆனால் சிரிப்பும் முகபாவனைகளும் சிறுகுழந்தைகளைப் போன்றது. என்னுடன் விளையாடிக்கொண்டிருந்த நண்பன்

‘சாத்தான்' அவரைப் பார்த்து தான் தமிழ் பேசுவதாக நினைத்துக்கொண்டு ‘‘அண்ணாச்சீ.. பாத்துக்களாமா போத்துக்களாமா'' என்று வாயில் வந்த எதையோ உளறினான். தமிழர்களுக்கு முன்னால் தமிழ்ப் பாடலைப் பாடி

அசத்தி விடலாம் என்று நான் எனது பாட்டை மேலும் வலுவாக்கினேன்.

‘பள்ளிக்கூடப் பையனுக்கும்

பல்லுபோன பாட்டனுக்கும் ஏக்கம்,

உன்னைப்போல சின்னப்பொண்ணு

ஆடும்போதும் பாடும்போதும் தாக்கம்...'.

 ‘‘அட! இந்தத் தம்பி புதூப் பாட்டு அட்டகாசமா பாடுறானே! என்னப்பா ஓம்பேரு? இந்தத் தமிள் பாட்டெல்லாம் ஒனக்கெப்டித் தெரியும்?'' என்று கேட்டவாறு அவர் என்னிடம் வந்தார். ‘‘இது எந்தப் படத்தோட பாட்டு தெரியுமா? இதோட மூஜிக் யார்ன்னு தெரியுமா?'' அவர் கேட்கிறார்! அது எதுவுமே எனக்குத் தெரியவில்லை என்பதை மறைக்க நான் அடுத்த பாட்டைப் பாடத் தொடங்கினேன்.

‘என்னை யாரும் தொட்டதில்லை

தொட்டவனை விட்டதில்லை பாம்... பாம்...'

நான் பாடிய இரண்டு பாடல்களுமே சமீபத்தில் வந்த 'அபூர்வ சகோதரிகள்' எனும் படத்தில் இடம்பெற்றவை என்றும் அதன் இசை டிஸ்கோ டான்சர் இந்திப்படத்தின் பாடல்கள் வழியாக இந்தியாவையே கலக்கிய பப்பி லஹிரி என்றும் பூவராகவன் எனும் பெயர்கொண்ட அந்த இளைஞர் எனக்குச் சொல்லித்தந்தார். பாடல்கள் பிரமாதம். ஆனால் படம் ஓடவில்லையாம். ஒரு சாதாரண சினிமாப் பாட்டைப் பற்றி இவ்வளவு தகவல்கள்! அடுத்து அவர் என்னிடம் ரகசியமாக ‘பதப்படுத்தப்பட்ட கஞ்சா குறைந்த விலையில் எங்கே கிடைக்கும்? தெரியுமா?' என்று கேட்டார். நான் சாத்தானைக் கைகாட்டினேன். அவனுக்குத்தானே ஊரின் விவகாரங்கள் அனைத்தும் தெரியும். தரமான ‘இடுக்கித் தங்கம்' அவர்களுக்குக் கிடைத்தது. அதைப் பொதி கட்டும் சடங்குகளுக்கு நடுவேயும் பல தமிழ் பாடல்களை என்னைப் பாடவைத்தார் பூவராகவன்.

அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. பாடல்களையும் சினிமாவையும் பெரிய விஷயமாக நினைக்கும் ரசனையுள்ள ஆள். அவர் ஒரு கஞ்சா வியாபாரி என்பதெல்லாம் என்னை அலட்டவேயில்லை. கஞ்சா வளர்ப்பதும் விற்பதும் தவறு என்று எங்களூரில் யாருமே நினைக்கவில்லையே! அப்போது கஞ்சா வாங்குவது மட்டும் எப்படித் தவறாகும்? தோள்களில் பொதிகளைச் சுமந்து மதுரைக்குப் புறப்பட்ட அந்தக் குழுவுடன் பாடியும் பேசியும் கொஞ்சநேரம் நானும் நடந்தேன். புதிதாக அறிமுகமாகும் அனைவரிடமும் முகவரியைக் கேட்டு வாங்கும் ‘கெட்ட' பழக்கம் அப்போது எனக்கிருந்தது. பூவராகவனிடமும் முகவரியைக் கேட்டேன். அவர் சொல்லித்தந்ததை எழுதியெடுத்தேன். அதே காகிதத்தின் ஒரு பகுதியைக் கிழித்து எனது முகவரியை எழுதி அவரிடம் கொடுக்க நீட்டும்போது திடீரென்று எங்கள் முன்னே வந்து நின்றார் எனது அப்பா.

‘‘யாருடா இவனுங்க?'' பூவராகவனையும் குழுவையும் அடிமுடி பார்த்த அப்பா எனது கையிலிருந்த காகிதத்தைப் பிடுங்கி படித்தார். அதிர்ச்சியாகி அதைத் துகள் துகளாகக் கிழித்து எறிந்தார். ‘‘என்ன காரியத்த பண்ணே நீ, அறிவுகெட்ட முண்டம்? கஞ்சா வாங்க வந்த பாண்டிக்காரன் கைல ஓன் அட்ரஸ் எழுதிக் கொடுப்பியாடா? இவனுங்க 'அந்தி அறுப்பனோ முந்தி அறுப்பனோ' இல்லன்னு ஒனக்கெப்டிடா தெரியும்?'' அப்பா என்னைச் சரமாரியாக அடித்தார். வலியில் கதறிக்கொண்டு நான் திரும்பிப் பார்ப்பதற்குள் பூவராகவனும் குழுவும் வளைவுப் பாதைக்குப் பின்னால் நடந்து மறைந்திருந்தனர்.

சில ஆண்டுகள் கழித்து ஒருநாள் அப்பாவிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு மதுரைக்கு ஓடிப்போனேன். முன்பு ஊரில் ஒரு கிருஸ்தவ இசை நிகழ்ச்சியில் பாடும்போது அறிமுகமான மதுரைக்காரர் இசைக் கலைஞரின் வீட்டைத் தேடிப்பிடித்து அங்கே தஞ்சம் புகுந்தேன். அதற்குள்ளே ஒரு முழுநேர கிருஸ்தவப் போதகரும் கிருஸ்தவ இசைக் குழு நடத்துனருமாக மாறிவிட்டிருந்த அவர் என்னையும் ஒரு ‘கர்த்தரின் பிள்ளை'யாக்கி ஒரு கிருஸ்தவ மேடைப்பாடகராக மாற்றுவதற்கு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். அதை எண்ணி  பீதியில் தூக்கம் வராமல் புரண்ட ஒரு நள்ளிரவில் ஆறாண்டுகளுக்கு முன்பு பூவராகவன் சொல்லித்தந்த அவரது முகவரியை நினைவிலிருந்து திரட்டியெடுத்தேன். 

கோம்படி எனும் ஊரில் எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார் என்றும் அவரை ஒருமுறை சந்தித்து வருகிறேன் என்றும் போதகரிடம் சொன்னேன். அந்த ஊர் பத்து பதினைந்து மைல் தொலைவில் இருப்பதாகச் சொல்லி இரவாகும் முன் திரும்பி வரவேண்டும் என்கின்ற நிபந்தனையுடன் தனது இரு சக்கர வாகனத்தில் அவர் என்னைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டார். அவ்வாறாக ஒரு ‘கர்த்தரின் பிள்ளை'யின் வண்டியிலேறி ஒரு கஞ்சா வியாபாரியின் வீட்டிற்குப் பயணமானேன்.

ஒற்றாலங்குளம் எனும் ஊரில் பேருந்திறங்கி அங்கிருந்து ஒரு காய்கறி வண்டியின் பின்னால் தொங்கி கோம்படியில் சென்று இறங்கினேன்.

நீர்ப்பற்றும் இலைப் பச்சைகளுமில்லாமல் வாடி வறண்ட ஊர்கள். ஆங்காங்கே தென்படும் தொன்மையான புளியமர நிழற்களைத் தவிர்த்தால் வெய்யிலில் வெந்து கிடக்கும் மண். இங்கேயெல்லாம் எப்படித்தான் மக்கள் வாழ்கிறார்களோ! கஞ்சா வியாபாரம் போன்ற தொழில்களுக்கு இவர்கள் இறங்காமலிருந்தால்தானே வியக்கவேண்டும்?

பூவராகவனின் முகவரி கேட்டு முச்சந்தியில் நின்றுகொண்டிருந்த என்னை ஒரு பையன் அவனது பழகித் துருப்பிடித்த மிதிவண்டியின் பின்னால் அமர வைத்து அவரிடம் கொண்டு சேர்த்தான். வழியோரத்தில் ஒரு புளிய மரத்தடி நிழலில் படுத்து விசாலமாய்த் தூங்கிக்கொண்டிருந்தார் மாயாண்டி மகன் பூவராகவன். தூக்கக் கலைப்பின் அனிச்சையில் தலையைத் தூக்கிய அவர் ஒன்றுமே புரியாமல் கண் விழித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கஞ்சா வாங்க எங்களூருக்கு வந்ததும் அங்கே நிகழ்ந்த எனதுப் பாட்டுப் பாடலும் அவரது முகவரியை நான் எழுதி வாங்கியதும் அதைப் பார்த்த அப்பா என்னை தரும அடி அடித்ததும் என நிகழ்ச்சி விவரணைகளிலிருந்து பூவராகவன் என்னை அடையாளம் கண்டார். இவ்வளவு காலத்திற்குப் பிறகு அவரைத்தேடி மாநிலம் தாண்டி நான் வருவேன் என்பதை ஒருபோதும் எதிர்பாராததால் வியந்துபோனார்.

தனது வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லும் வழியில் மாறிப்போன வாழ்க்கையைப் பற்றிப் பேசினார் பூவராகவன். கஞ்சா வியாபாரமெல்லாம் பலகாலத்திற்கு முன்னரே விட்டுவிட்டார். அதில் சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம். இரண்டுமுறை கைதானார். ஓரிருமாதம் சிறைவாசமும் அனுபவித்தார். தற்போது அம்மாவும் மனைவியும் இரண்டு குழந்தைகளுமாகப் பணமில்லை பட்டினியும் இல்லை என்று வாழ்ந்து வருகிறார். சிறிய நிலத்தில் கொஞ்சம்

விவசாய வேலை, பகலில் புளியமரத்தடிகளில் தூக்கம், வார இறுதிகளில் சீட்டுக்கான வசூல் வேலை என வாழ்க்கையை ஓட்டுகிறார். போகும் வழியில் பூவராகவன் ஒரு வெடக்கோழியை வாங்கினார்.

கோழிக்குடல் வறுவல், நல்லெண்ணெய் ஊற்றிக் கொழுத்த கோழிக்குழம்பு, பண்ணைக்கீரைத் துவையல், மிளகு ரசம் எனப் பிரமாதமான விருந்தை மூச்சு முட்டச் சாப்பிட்டுக் களைத்துபோய் வசதிகளேதுமில்லாத அவ்வீட்டின் தரையில் விரித்த பாயில் படுத்து அசந்து தூங்கிப்போனேன். நடுஜாமத்தில் விழித்தெழுந்தபோதுதான் அந்தியாகும்முன்னே திரும்பிவருவேன் என்று போதகருக்கு அளித்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அடுத்தநாள் அதிகாலையில் அங்கிருந்து புறப்படும்போது

‘‘சாஜிக்கு மதுரைய சுற்றிப் பார்க்கவேண்டாமா?''  என்று பூவராகவனும் என்னுடன் வந்தார். பூவராகவனைக் கூட்டிக்கொண்டு போதகரின் வீட்டிற்குச் செல்ல எனக்கு மனம் வரவில்லை. மீனாட்சியம்மன் கோவில், ஆயிரங்கால் மண்டபம், அழகர் கோவில் எனப் பலவற்றைப் பூவராகவன் எனக்குக் காட்டித்தந்தார். மிதிவண்டி ரிக்‌ஷாக்களிலும் மதுரை மாநகரப் பேருந்துகளிலும் ஏறியிறங்கி மதுரையைச் சுற்றிப் பார்த்தோம்.

அவசியம் பார்க்கவேண்டிய இடம் என்று சொல்லி திருமலை நாயக்கர் மஹால் பார்க்கக் கொண்டு சென்றார். ஆனால் அன்றைக்கு அங்கே ஏதோ பெரிய நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. வெளி ஆள்கள் யாரையும் உள்ளே விட முடியாது என்று எங்களை தடுத்து நிறுத்தினார்கள். திருமலை நாயக்கரின் அரண்மனையை எனக்குக் காட்டியே தீருவேன் என்று வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயன்றார் பூவராகவன். காவலர்கள் எங்களை இழுத்து வெளியே தள்ளினர். என்னைக் கழுத்தை நெரித்துத் தள்ளிவிட்டு பூவராகவனை லட்டியால் அடித்தார்கள்.

கோபம் தலைக்கேறிய பூவராகவன் கொஞ்சம் தள்ளி நின்று அவர்களைக் கடுமையாகத் திட்டினார். ஒரு காவலாளி காதுகூசும் கெட்ட வார்த்தைகளைக் கூவிக்கொண்டு பூவராகவனை நோக்கிப் பாய்ந்து வந்தார். ஒரே அடியில் அவரைக் கீழே விழவைத்து கால்தூக்கி மிதி மிதி என்று மிதிக்கத் தொடங்கினார் பூவராகவன். ‘‘அய்யோ.. அம்மா.. ஓடி வாங்க.. என்னைக் கொல்லப் போறாய்ங்களே'' என்று அவர் காட்டுக் கத்தல் கத்த ஒரு போலீஸ்காரரும் மற்றொரு காவலாளியும் எங்களை நோக்கிப் பாய்ந்து வருவதைக் கண்டேன்.

‘‘பூவராகவா.. நம்பளப் பிடிக்க போலீஸ் வர்றாங்க...'' என்று நான் கத்த ‘‘ஓடிக்கோ சாஜீ.. என் பின்னால வேகமா ஓடிக்கோ...'' என்று சொல்லிக்கொண்டு பூவராகவன் ஓடத்தொடங்கினார். நானும் பின்னால் ஓடினேன். காவலாளியும் போலீஸ்காரரும் எங்கள் பின்னால் சரசரவென ஓடி வருகிறார்கள். பயந்து அரண்டு கால்கள் துளியளவும் நகராததுபோன்ற பீதியோடு ஓடினேன். கொஞ்சநேரம் ஓடியபின் திரும்பிப் பார்க்கையில் பின்னால் யாருமில்லை! ஆசுவாசமடைந்தேன். திரும்பியே பார்க்காமல் ஓடிக்கொண்டிருந்த பூவராகவன் மீண்டும்

சற்றுநேரம் ஓடிய பின்தான் நின்றார். ‘‘இனி ஒரு தாயளியும் வரமாட்டான்.. வந்தா அவன அடிச்சு கிழிப்பேன்ல!..'' மூச்சு வாங்கியபடி பூவராகவன் சொன்னார்.

ஒரு குளிர்பானக் கடையிலிருந்து எலுமிச்சை கலந்த வெட்டிவேர் சர்பத்தைப் பல குவளைகள் வாங்கிக் குடித்தோம். கடையின்முன் தெருவில் அமர்ந்து இளைப்பாறினோம். பூவராகவன் இயல்பு நிலைக்குத் திரும்பினார். ஆனால் எனது நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டேயிருந்தது. அவர்கள் துரத்தி வருகிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தேன். அப்போது பூவராகவன் என்னிடம் ‘‘பயந்திட்டியா? இதெல்லாம் சும்மா! ஒங்க ஊருல வெச்சு நாம மீட் பண்னப்ப சாஜி பாடிய பாட்ட மறந்திட்டியா? ‘என்னை யாரும் தொட்டதில்லை, தொட்டவனை விட்டதில்லை' அவ்ளொதா''

ஒரு மிதிரிக்‌ஷாவில் காக்காத்தோப்புத் தெருவில் வந்திறங்கினோம். அங்கிருக்கும் தங்கம் திரையரங்கை எனக்குக் காட்டுவதுதான் பூவராகவனின் நோக்கம். ஒரு பிரதேசம் முழுவதும் பரந்து கிடக்கும் ஒரு நெடுங்கட்டடம். பூதாகரமான தூண்களும் சித்திர வேலைப்பாடுகள் உள்ள பெரும் முகப்பும்கொண்ட ஒரு பழங்கால அரண்மனை. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்காம் அது. இருக்கைகளிலும் தரையிலுமாக ஒரே நேரத்தில் நான்காயிரம் பேர் வரைக்கும் அமர்ந்து படம் பார்த்த வரலாறுடைய உலகின் ஒரே சினிமா அரங்கம் அது! ஆனால் அதெல்லாம் அந்தக்காலக் கதை. பேணிப் பராமரிக்காமல் முற்றிலும் மங்கிப்போன தங்கத்தில் இப்போது பெரிய படங்கள் எதுவுமே வருவதில்லை. வந்தாலும் பார்க்க மக்கள் வருவதில்லை. குழந்தைப் பருவம் முதல் தான் எத்தனையோ படங்களை ஆர்ப்பரித்துப் பார்த்த தங்கம் 'தேட்டரின்' தற்போதைய அவலநிலை பூவராகவனை வருத்தமடையச் செய்தது.

தங்கத்தின் உள்ளே சென்று அந்த அதிசயத் திரையரங்கின் உள்புறத்தை உற்றுப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் உள்ளே மேட்னி ஓடுகிறது. அடுத்த காட்சி ஆரம்பிக்கும் வரை காத்திருக்கவும் முடியாது. இருட்டாகும் முன் போதகரின் வீடு சேரவேண்டும். இடைவேளை நேரத்தில் உள்ளே போக வழியிருக்கிறதா என்று பார்ப்போம் என்கிறார் பூவராகவன். அப்போதுதான் அந்தத் திடுக்கிடும் காட்சியைப் பார்த்தேன். திரையரங்கிற்கு எதிரே உள்ள சாலையில் இருக்கும் கிருஸ்துவ இலக்கியக் கடைக்குமுன் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறார்கள் போதகரும் அவரது மனைவியும்.

எனது நெஞ்சினூடாக ஒரு மின்னல் பாய்ந்தது. கிருஸ்தவ பக்திப் பாடல்களைத் தவிர மற்ற அனைத்துக் கலைகளுமே கர்த்தருக்கு எதிரானவை, அவை சாத்தானின் திறவுகோல்கள் என்று ஆழமாக நம்புகிறவர்கள். அப்போது ‘சகல தீமைகளின் விளைநில'மாகயிருக்கும் சினிமாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? திரையரங்கின் முன்னால் நான் நிற்பதை அவர்கள் பார்த்தால் எல்லாமே முடிந்துவிடும். பூவராகவனைத் திசை திருப்பி வேறு வழியில் அங்கிருந்து தலைமறைவானோம்.

எனக்குப் போவதற்கான பேருந்தை எதிர்நோக்கி நிற்கும்பொழுது ‘‘ஓரிரு மாசத்துல நான் ஓங்க ஊருக்கு வாரேன். ஒன்னைப் பார்க்க'' என்று சொன்னார் பூவராகவன். எனக்குக் கண் கலங்கியது. ஊரை விட்டு ஓடிவந்தேன் என்றும் இனி திரும்பிப்போக மாட்டேன் என்றும் அவரிடம் சொன்னேன். எனது கதை கேட்டுக்கொண்டிருந்த பூவராகவனின் முகத்தில் எனக்கு உதவ வழியெதுவுமில்லையே எனும் கையறுநிலை வெளிப்பட்டது. எனது கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு சில நொடிகள் நின்றபின் எதுவுமே பேசாமல் பேருந்தில் ஏறிப்போன பூவராகவனின் கண்கள் பனித்திருந்தன.

அந்திநேரத்தில் போதகரின் வீட்டை அடையும்போது அவர் வெளியே நின்றுகொண்டிருந்தார். ''நேற்றிரவு நீ எங்கே இருந்தே?'' வெறுப்பும் சந்தேகமும் கலந்த கடுமையான குரலில் கேட்கிறார். ‘இன்னிக்கு நீ சினிமா பாக்கப் போனியா?'' தங்கம் திரையரங்கின் முன்னால் நின்றுகொண்டிருந்த என்னையும் பூவராகவனையும் அவர்கள் பார்த்துவிட்டிருந்தனர்! ஒங்கூட இருந்த அந்த ஆளு யாருடா?'' இடி இடிப்பதுபோல் அடுத்த கேள்வி. ‘‘நேத்து நைட்டுல நீ எங்கே இருந்தே? ஓங்கூட இருந்த ஆளு யாரு? இதச் சொல்லாம இங்கேர்ந்து நீ நகர முடியாது''. ஒன்றுவிடாமல் எல்லாமே சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன். பூவராகவன் கஞ்சா வியாபாரியாக இருந்தது உட்பட. ‘‘யேசுவே.. கஞ்சா விக்கிற ஒருத்தனுக்கு எங்க வீட்டுல சோறு போட்டோமே... தூங்க எடங்கொடுத்திட்டோமே...'' போதகி அம்மாவின் அழுகுரல் ஓங்கி ஒலிக்கையில் எனது பையையும் துணிமணிகளையும் அள்ளியெடுத்துக்கொண்டு இருட்டில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

(வளரும்..)    

Shaajichennai@gmail.com

பிப்ரவரி, 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com