கடலில் தவிக்கும் மக்கள்

கடலில் தவிக்கும் மக்கள்
Published on

கடற்கரைகளில் வந்து சேரும் அகதிகளின் எண்ணிக்கை சில மாதங்களில் அதிகரித்திருப்பது உலக நாடுகளின் பார்வையை தெற்காசியா பக்கம் திருப்பியிருக்கிறது.

மியான்மார் நாட்டில் வாழும் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் அந்நாட்டின் பௌத்த பெரும்பான்மையினரால் ஒடுக்கப்படுவது நமக்குத் தெரிந்த கதைதான். அந்நாட்டில் சுமார் 11 லட்சம் ரோஹிங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாரம்பரியமாக அங்கு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அருகில் உள்ள வங்கதேசத் தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லி அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அமைதியே உருவான புத்தரின் மதத்தைச் சேர்ந்தவர்கள் 2012-ல் நிகழ்த்திய வன்முறையில் ஒன்றரை லட்சம் ரோகிங்கியாக்கள் இடம் பெயர்ந்தனர். அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு, நாடில்லாத மக்களாக ஆகியிருக்கிறார்கள்.

இப்போது அந்நாட்டில் ரோஹிங்கியாக்களை குறிவைத்து கொண்டுவரப்பட்ட ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையே மூன்றாண்டுகள் இடைவெளி விடவேண்டும் என்ற சட்டமும் இயற்றப்பட்டிருக்கிறது. இவர்களின் வாக்குரிமையும் இந்த ஆண்டு பிடுங்கப்பட்டது. மியான்மரின் புகழ்பெற்ற போராளித் தலைவரான ஆங் சூ கி இந்தப் பிரச்னையை எழுப்பவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் ரோஹிங்கியாக்களும் சரி; வங்க தேசத்தவர்களும் சரி தங்கள் நாட்டின் வறுமை மற்றும் வாய்ப்பின்மையின் கோரப்பிடியிலிருந்து தப்ப படகுகளில் ஏறி இந்தோசீனா, தாய்லாந்து, மலேசியாவுக்கு அந்தமான் கடல்வழியாக செல்கிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களில் பல்லாயிரம் பேர் இப்படிச் சென்றார்கள். ஐ.நா.சபையின் கணக்குப்படி ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் இப்படி படகுகள் ஏறி தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்நாட்டு அரசுகள் இப்படி ஆட்களைக் கடத்திக்கொண்டுவருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அகதிகளை உள்ளே விடுவதில்லை என்று முடிவெடுத்துவிட்டன. நான்கு மாதங்களாக படகுகள் நடுக்கடலில் தத்தளித்தன. இதையடுத்து இந்தோனேசிய கடற்கரையில் ஒதுங்கிய ஒரு படகிலிருந்த அகதிகள் பசியிலும் பட்டினியிலும் வாடியது அகில உலகக் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் அந்நாட்டு அரசு அவர்களை உள்ளூர் முகாம்களில் அனுமதித்தது. இதற்கிடையில் இப்படி ரகசியமாக எல்லை தாண்டி தாய்லாந்தின் தெற்கு எல்லை வழியாக மலேசியாவில் நுழையும் இடத்தில் பலபேர் செத்துப்போய் கும்பல்கும்பலாகப் புதைக்கப்பட்ட இடத்தை மலேசிய காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்நாடுகள் ஆட்களைக் கடத்திவருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததால் மியான்மரில் இருந்து ஆட்களை ஏற்றி படகுகள் கிளம்புவது தற்காலிகமாக நின்றது. ஆனால் ஏற்கெனவே கிளம்பிவிட்ட படகுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள் நடுக்கடலில் தடுமாறி நிற்பதாகத் தெரியவந்தது. இப்படி சுமார் 6000 பேர் வரைக்கும் கடலில் தவித்துக்கொண்டிருப்பதாகச்  சொல்லப்படுகிறது. உணவு இன்றி, வசதியற்ற படகுகளில் தவிக்கும் இவர்களை அப்படியே சாக விட்டுவிடாதீர்கள் என்பது உலக மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.  வங்கக்கடலில் கடுமையான மழைவேறு. தாய்லாந்து கடற்படையும் விமானப்படையும் இவர்களை மீட்பதற்காகத் தேடிக்கொண்டிருப்பது கடைசித்தகவல்.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது மியான்மரின் கையில்தான் இருக்கிறது. ரோஹிங்கியாக்களுக்கு உரிமைகள் அளித்து தக்க வைத்தால் அவர்கள் ஏன் கடலில் மிதந்து மலேசியாவுக்கும் தாய்லாந்துக்கும் போகப்போகிறார்கள்? இப்பிரச்னையில் உலகநாடுகள் மியான்மருக்கு அழுத்தம் தர முயற்சிக்கின்றன. ஆனால் அங்கு இருக்கும் ராணுவ அரசு எதற்கும் செவிசாய்ப்பதாக இல்லை!

ஜூன், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com