கதை எழுதி
1900 கோடி சம்பாதித்தவர்!

கதை எழுதி 1900 கோடி சம்பாதித்தவர்!

ஆங்கிலக் கதையுலகின் மாஸ்டரான ஜெப்ரே ஆர்ச்சர் The Traitors Gate என்ற தன்னுடைய புதிய நாவலை வெளியிட்டுள்ளார். லண்டனில்  ஹாட்சர்ட்ஸ் என்கிற புத்தகக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. பிரிட்டனில் உள்ள மிக வயதான புத்தகக் கடை இது. 1797இல் இருந்து இயங்குகிறதாம்.

‘கதை எழுத விரும்புகிறவர்கள், சுவாரசியமான ஒருவரை சந்தித்து அவர் கதையைக் கேட்டபிறகு எழுதலாம் எனத் தள்ளிப்போடுவார்கள். ஒரு கதையை எழுதவேண்டுமானால், அதை உடனே எழுதுங்கள். வாசகர்கள் அதை ஆதரிப்பர். நிஜமான மனிதர்களிடம் இருந்துதான் சிறந்த சிறுகதைக்கான கருக்கள் கிடைக்கும்' என்றார் அந்நிகழ்ச்சியில் உரையாடிய ஜெப்ரே ஆர்ச்சர். அவரது முதல் புத்தகம் Not a Penny More, Not a Penny Less பதினேழு பதிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டது. 18வது பதிப்பாளர் சுமார் 3000 பிரதிகள் அடிக்க முன்வந்தார். இன்று ஆர்ச்சர் கதை எழுதியே இந்திய மதிப்பில் 1900 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தனிப்பட்ட எழுது முறை உண்டு. இதில் சில பகுதிகளை அவர்கள் பெரிய எழுத்தாளர்களைப் பார்த்து உருவாக்கி இருப்பர். பெரும்பகுதி தாங்களே தங்களுக்கு ஏற்ப உருவாக்கி இருப்பர்.

ஆர்ச்சருடைய முதல் வெற்றிகரமான புத்தகம் கேன் அண்ட் ஏபல். அது அவருடைய 39 வது வயதில் எழுதப்பட்டது. இப்போது 83 வயதாகும் ஆர்ச்சர் தன் நாவலின் முதல் வடிவத்தை எழுத 50 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். காலை 6-8, 10 - 12, மதியம் 2-4, மாலை 6-8 என இரு மணி நேர இடைவெளி எடுத்துக்கொண்டு எழுதுவார். நிறைவு செய்து வெளியிடுவதற்கு முன்பாக ஒவ்வொரு புத்தகத்தையும் 17 முறை செப்பனிடுவார். தன் நூல்களுக்காக ஆழமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆர்ச்சர், சாமானிய மனிதர்களிடமும் சுவாரசியமான மனிதர்களிடமும் உரையாடி அவர்களின் கதைகளையும் கேட்பதில் ஆர்வமுள்ளவர். அந்த மாலை நேர நிகழ்ச்சி முடியும் தருவாயில் அவர் பார்வையாளர்களிடம் 104 வயதான ஒரு மனிதரின் சுவாரசியமான கதையைப் பகிர்ந்துகொண்டார். ஆர்ச்சர் நியூசிலாந்துக்குப் போயிருந்தபோது அந்த மனிதர் இவரிடம் வந்து சொன்ன கதையாம் இது. அவருக்கு 100 வயது ஆனபோது பிரிட்டனின் மகாராணியிடம் இருந்து வாழ்த்துதந்தி வந்திருந்தது. அவர் தனக்கு 104 வயதாகும்போது தன் மனைவிக்கு 100 வயது ஆகும். அப்போதும் மகாராணி ஒரு தந்தி அனுப்புவார். இந்த இரண்டு தந்திகளையும் ப்ரேம் செய்து மாட்டிக்கொள்ளலாம். ராணியிடம் இருந்து இரு வாழ்த்து தந்திகள் பெற்ற ஒரே தம்பதி என்ற புகழ் கிடைக்கும் என நினைத்தார்.

அவருக்கு 104 வயதும் ஆனது. மனைவிக்கு 100 வயது கொண்டாடினார்கள். ஆனாலும் மகாராணியிடம் இருந்து தந்தி வரவில்லை. சோர்ந்துபோன அவர் பக்கிங்காம் அரண்மனைக்குப் போன் செய்து ஏன் தன் மனைவிக்கு தந்தி அனுப்பவில்லை எனக் கேட்டார். அந்த தொலைபேசியை எடுத்த மேஜர், திரும்ப அழைப்பதாகக் கூறினார். 104 வயதான அந்த மனிதர், ஆவலுடன் அரண்மனையில் இருந்து வரப்போகும் அழைப்புக்காகக் காத்திருந்தார்.

சொன்னமாதிரியே மேஜர் திரும்ப அழைத்தார். ‘உங்கள் மனைவியின் தகவல்களை சரிபார்த்தேன். மகாராணி ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்த்துத் தந்தி அனுப்பியிருக்கிறாரே,' என்றார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com