சந்தைப் பொருளான தமிழ்க் கவிதை!

இரண்டாயிரத்துக்குப் பிறகான தமிழ்க்கவிதை

கவிதை என்பது ஒரு தொடர் செயல்பாடு. ஒரு கவிதை தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறது என்பது புனைவென பட்டாலும் அதன் தர்க்கரீதியான உண்மையை கருத்தில் கொள்ள வேண்டியே இருக்கிறது.

ஏனெனில் ஒரு கவிதை முழுமை பெற பல காலம் ஆகலாம் . அதேவேளை, இமைக்கும் நொடிக்குள் நல்ல கவிதைகளை எழுதிய பலரும் நம் தமிழ் மரபின் வரலாறு நிறைய விரவிக்கிடக்கிறார்கள் என்பதும் உண்மைதான். போகிறபோக்கில் தெரிப்புகளை அள்ளித்தெளித்து அதைப்பற்றியே அக்கறையே இன்றி அலைந்த காளமேகமும் மூவாயிரம் ஆண்டுகள் ஆண்டுக்கொரு  பாயிரம் எழுதிய திருமூலரும் புனைவா  நனவா என பிரிக்கவியலா தமிழின் அடையாளங்கள்.

சங்ககாலத்திற்கு பின் தமிழர் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்க் கவிதை காலத்திற்கு ஏற்ப வடிவத்திலும் பாடு பொருள்களிலும் பல சமய, இன, மொழிகளின் தாக்கங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. அதுபோலவே  ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட இலக்கியவகை தன் செல்வாக்கு குறையாமல் வளர்ச்சியடைந்தே வந்திருக்கிறது. இது வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. அகத்திணை, புறத்திணை என்ற வகைப்பாட்டிலிருந்து இன்று வந்தடைந்திருக்கும் நிலை முற்றிலும் வேறுபாடானது.

 தமிழ் மொழி செய்யுள் மரபு சார்ந்து ஒரு கட்டமைப்பிற்குள் வார்த்தெடுக்கப்பட்டமொழி. அதனாலேயே சுவடி, காகிதம்  போன்ற பயன்பாடுகளுக்கு முன்பிருந்தே தன் பரிணாமத்தின் நீட்சியை நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் தன் எழுத்துமுறையை மாற்றிக்கொண்டு உரைநடை  என்ற மேற்கத்திய பாணியையும் கையாளத் தொடங்கியது. இந்நிலையில் நமது மரபே கர்ணபரம்பரையை அடிப்படையாகக் கொண்டு மொழியை இலக்கியத்தை கடத்தி வந்ததை நினைவில் கொள்ள வேண்டிய அவசியமும் எழுகிறது.  தற்கால கவிதையின் பரிணாமத்தை கண்டடைய அதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கிய மாற்றத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

தற்கால நவீன கவிதையை பாரதியின் கவிதை முயற்சியிலிருந்து தொடங்குவதுதான் இப்போதைக்கு சரியாக இருக்கும். கவிதை தன்னை செய்யுள் வடிவத்திலிருந்து உரைநடை வடிவத்திற்கு மாற்றிகொண்டபோது எதிர் கொண்ட விமர்சனங்கள் பல. அவற்றை வசனகவிதை, யாப்பில்லா கவிதை, இலகு கவிதை, கட்டிலடங்கா கவிதை என பல பெயர் சொல்லி விமர்சித்தார்கள்.

வசதிக்காக  மரபு  நிலையிலிருந்து புதிய வடிவம் கண்டதால் புதுக்கவிதை என பெயரிட்டு அழைக்கலானார்கள். புதுக்கவிதையிலும்  கவிஞர்கள் பல்வேறு  குழுக்களாக பல்வேறு பாணிகளில் எழுதிவந்தனர்.  இந்தக்குழுக்கள்தான் தங்களுக்குள்ளே விவாதித்து  அயல்நாட்டு அறிஞர்களின் கவிதைப் பாணியை தமிழில் கொண்டு வந்தவர்கள் என்பதும் மறக்கவியலாது. பாரதியார் தன்னுடைய எல்லாக் கவிதைகளையுமே ‘புதுக் கவிதை' என்றுதான் குறிப்பிடுகிறார் என வல்லிக்கண்ணன் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். புதுக்கவிதையில் சிறுபத்திரிகை மரபு சார்ந்தவர்கள் அதன் பொருளடக்கத்தையும் கட்டுமானத்தையும் மாற்றி மாற்றி தற்போதுள்ள நவீன கவிதை  என்ற வடிவிற்கு கொண்டு சேர்த்துள்ளனர். நவீன கவிதை என்பது  அதன் பொருளடக்கத்திலும் உத்தியாலும் இயம்பும் விதத் தாலும் தன்னை மாறுபடுத்திக்காட்டுகிறது. இந்தக் காலக்கட்டத்தில்தான் கவிதைக்கு மொழி இல்லை; கவிதையை வெளிப்படுத்தும் கருவிதான் மொழி என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. தற்போதுள்ள நவீன கவிதை வடிவத்திற்கான முன்னோடிகள் என அவரவர் பாணியில் ந. பிச்சமூர்த்தி, கா.நா.சு, தி.சோ, வேணுகோபாலன், எஸ். வைத்தீஸ்வரன், பிரமிள், ஞானக்கூத்தன். பசுவய்யா, நகுலன்,  சி. மணி, பிரம்மராஜன், தேவதச்சன், ஆனந்த், தேவதேவன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன், சுகுமாரன், கல்யாண்ஜி போன்றோரைக் குறிப்பிடலாம்.  அவர்களின் பங்களிப்பால் தமிழ்க்கவிதை ஓர் இயக்கமாகவே வளர்ந்து வந்துள்ளது. வேறு எந்தமொழிக்கும் வாய்க்காத பாய்ச்சல், தமிழுக்கு வாய்க்க இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த பாணி அவரவர் நோக்கில் மிக முக்கியமானது. பிரம்மராஜனின்  மீட்சியும் மற்ற முன்னோடிகளின் சிற்றிதழ்களும் தமிழ் கவிதைக்கு ஏற்படுத்திக்கொடுத்த ராஜபாட்டை சிலாகிக்கத்தக்கது. இந்தக்காலகட்டம், குறிப்பாக 1990&இன் முற்பகுதிவரை நிகழ்ந்த கவிதை குறித்த உரையாடல்கள், கூட்டங்கள், பயிற்சிப்பட்டறைகள், தனிப்பட்ட உரையாடல்கள் நவீன கவிதையின் கட்டுமானம் மிக்க கச்சிதமான வடிவத்தை உறுதி செய்தன. அவரவர் சிந்தனைப்பள்ளிகளின் தாக்கத்துக்கேற்ப ஒவ்வொருவரும் தங்களுக்கென்று  தனி இடத்தைப் பெறவும் தவறவில்லை.

இதன் தொடர்ச்சியாக இரண்டாயிரத்துக்குப் பிறகு  முன்னெப்போதுமில்லாத அங்கீகாரம்  நவீன கவிதைக்கு கிடைத்தது.  நவீன கவிஞர்களை அறிவாளிகள் என்று பார்க்கிற மனோபாவமும் உருவானது. இது நவீன கவிஞர்களுக்குப் பின்னால் ஒளிவட்டத்தை உருவாக்கி படித்த இளைஞர்களை  ஈர்த்தது. இந்த வேளையில்  கவிஞர்களும் தங்களது ஏதாவதொரு கவிதைத் தொகுதியின் மூலமாக இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டனர். காலச்சுவடு, கணையாழி, உயிர்மை, உயிர் எழுத்து போன்ற நவீன இலக்கியத்திற்கென

சிறு பத்திரிகை மரபிலிருந்து விலகி, மத்தியதர இதழ்கள் உருவானதும் இவர்களுக்குப் பெரிதும் உதவியது. இவற்றின் பதிப்பகங்கள் கவிதைகளுக்கு கொடுத்த முக்கியத்துவமும் பல புதிய கவிஞர்களை உருவாக்கியது. தொண்ணூறுகளுக்கு முன்னிருந்தவர்களைக்காட்டிலும் அதன் பின்னர் எழுதவந்த யூமா வாசுகி, மனுஷ்யபுத்திரன், யுவன் சந்திரசேகர், பெருந்தேவி, பா. வெங்கடேசன், ஷாஆ, ரமேஷ் & பிரேம், யவனிகா ஸ்ரீராம், பிரான்ஸிஸ் கிருபா, ஸ்ரீநேசன், ஷங்கர ராமசுப்ரமணியன், கரிகாலன், பழனிவேள், தேவேந்திரபூபதி, அய்யப்பமாதவன், ராணிதிலக், மோகனரங்கன், மாலதிமைத்ரி, குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி, லட்சுமிமணிவண்ணன், பாலை நிலவன் என பலரும் தத்தம் கவிதை பாணிகளில் பரவலாக அறியப்பட்டனர்.

இவர்களின் கவிதை சார்ந்த தொடர் செயல்பாடுகளுக்கு கிடைத்த அறிவாளி பிம்பமும், வெகுஜன ஊடகங்களின் வெளிச்சமும் மற்ற இளைஞர்களை இவற்றை சார்ந்து மேலும் ஈர்க்கத்தொடங்கியது. 2010 வரையிலான கவிதை வளர்ச்சி என்பது,  முறையான கண்காணிப்போடுகூடிய, தன் முன்னோர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்ட அல்லது மற்ற மொழி அறிஞர்களுடன்/மொழிகளுடன்கூடிய ஒட்டுமொத்த மாற்றத்தை கருத்தில்கொண்ட வளர்ச்சியாக காணப்பட்டது.

அப்பாஸ், சுயம்புலிங்கம், சமயவேல்,  கைலாஷ் சிவன், ரிஷி போன்றோரின் கவிதைகளும் பரவலாக அறியப்பட்டன. (நினைவின் அடிப்படையில் எழுதுவதால் இது கறாரான மதிப்பீடு அல்ல. வசதி யின்பொருட்டு நினைவின் அடிப்படையில் திரும்பி பார்க்கும் முயற்சி என எடுத்துக்கொள்ளவும்,) குறிப்பாக 2010 வரையிலான காலகட்டத்தில் விருது பெறுவது ஒரு பாவச்செயல் என்ற மனோபாவம் நிறைய கவிஞர்களிடையே உலவி வந்தது. வெகுஜன பத்திரிகைகளில் தங்களது கவிதை வெளிவருவது தம் செயல்பாடுகளுக்கு எதிரானது என்ற போக்கு இருந்தது.  உத்தியோகத்தில் இருப்பவனால் உருப்படியான கவிதை எழுதமுடியாது என்ற  விக்கிரமாதித்யன் நம்பியின் கூற்று உண்மையென உலவிவந்ததும் கருத்தில் கொள்ளவேண்டியது.

2010-க்கு பிறகான கவிதை, குறிப்பாக நவீன கவிதை வளர்ச்சி, சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கவிதை எழுதிவிட்டு அதன் விமர்சனத்தை எதிர்நோக்கி பலகாலம் காத்திருந்தநிலை மாறி உடனுக்குடன் இதயங்களையும் விருப்பங்களையும் பெறும் நிலையும் கவிதைப்போக்கை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. மென்பொருள் துறை வல்லுநர்கள் வரவு கவிதை எழுதுவதில் பல வளர்சிதை மாற்றங்களை உருவாக்கியது. ஆரம்பத்தில் சமூக ஊடகங்களின் அங்கீகாரத்திற்கென எழுத ஆரம்பித்து பின்னர் அதுவொரு பாணியாக மாறியது. வெகுசன ஊடகங்கள் கவிதைகளின்பால், கவிஞர்களின்பால் காட்டிய அதீத அக்கறை, கவிஞர் என்ற காரணத்திற்காய் அவர்களுக்கு அளிக்கபட்ட அங்கீகாரம், நவீன தமிழ் கவிதையை சந்தை சார் பொருளாக்கிவிட்டது. இன்றைக்கு குறிப்பாக 2020 -இல் காணக்கிடைக்கும் கவிதைகளில் பெரும்பாலானவை கவிதை கட்டுமானத்திலும், தன்மையிலும் கவிதையென அதற்கான அனைத்து சோதனைகளிலும் தேர்வாகிவிட்டாலும் இப்போதைக்கு அது ஒரு மொழிவிளையாட்டு மட்டுமே. கவிதைக்கு மொழியில்லை. கவிதை தன் மொழியை, கவிஞரை தேர்வுசெய்துகொள்ளும் என்கிற நிலையும் மாறியுள்ளது. இது கவிதைக்கான வளர்ச்சியா என காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

குழு அமைத்து ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்துகொள்வது, ஒருவருகொருவர்விருது கொடுத்துக்கொள்வது, பாராட்டுக் கூட்டம் நடத்தி ஆட்களை கவருவது, என ஓர் இயக்கமாக மாறியிருக்கிறது இப்போதைய கவிதை. இக்கவிதை இயக்கத்தில் யாருடைய கவிதை காலத்தை கடந்து நிற்கும் என்பதை யாராலும் தீர்மானிக்க இயலாது.

மேலும் இப்போது கவிதை எழுத வரும் இளைஞர்கள் உயர்ந்த லட்சியவாதிகள். கவிதை எழுதி, திரைப்பட வசனம் எழுதி, கதாநாயகனாகி முதல்வராகி இச்சமூகத்தைக் காப்பதற்காக கவிதை எழுத வந்துள்ளனர்.  ஒரு கவிதைக்கு ஐம்பது கசையடிகள் என்பதுபோன்ற வெகுமதிகளே கவிதைகளை, காத்திரமான  அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சிறந்த வழியாக இருக்குமென எண்ணுகிறேன்.  ஏனெனில் அவர்களின் கவிதை மாதிரி கவிதைக்கான  அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது.

1,0, என்கின்ற இருமத்தின் (பைனரி) அடிப்படையாக எந்த கருத்தினையும் கூராய்வு செய்து, அதன் மாதிரிகளை உடனே தயாரிக்கக்கூடிய வல்லமை பொருந்திய, அறிவுசார் இளைஞர் கூட்டத்தின் கவிதை தயாரிப்புகளை, அவ்வளவு சீக்கிரம் நிராகரிக்கவியலாது. அவர்கள் தயாரித்து அனுப்புகிற தயாரிப்புகளில் கவிதையின் அனைத்து கூறுகளும் இருக்கும். ஆனால் கவிதை இருக்குமா என்பதை காலம்தான் உறுதிசெய்ய வேண்டும். ஆரவார காலத்தில், மனக்குமுறலுடன் இருக்கும், அங்கீகாரம் தேடும் மனத்தின் கண்டடைவாக கவிதை மாறிப்போனதாலும், அதன் நோய்த்தாக்கம் பிற துறைகளையும், (சிறுகதை, நாவல்) பீடிக்க ஆரம்பித்தது. இலக்கியம் ஒரு பொழுதுபோக்காய் மாறிப்போனது.

எப்படியாயினும் காலம் எதையும் மாற்றவல்லது. நல்ல கவிதை அனைத்தையும் கடந்து நிற்கும். விருதுகளோ, விளம்பரங்களோ, குரு பீடங்களின் அங்கீகாரமோ நாளிதழ்களின் புகைப்படங்களோ அதற்கு தேவையில்லை.  எத்தனை மாற்றங்கண்டாலும் கவிதையாய் நிலைத்திருப்பதால்தான் அது கவிதை.

பிப்ரவரி, 2020.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com