சாத்தான் ஆட்டம்: மூன்று காட்சிகள்
ரவி பேலட்

சாத்தான் ஆட்டம்: மூன்று காட்சிகள்

முள்ளரும்பு மரங்கள் -10

சாத்தான் எனும் பட்டப்பெயரைக் கொண்டவன் எனது சொந்தக்காரப் பையன். நல்லவர்களைக் கூட தவறான வழியில் இழுத்துக்கொண்டுப் போகிறவன் என்ற பொருளில் அவனுக்கு அப்பெயரை சூட்டிவிட்டவர் எங்கள் தாத்தா. என்னைவிட மூன்று வயது அதிகமிருந்த சாத்தான்தான் அக்காலத்தில் எனது சினிமாச் சோதனைக் குற்றங்களின் முக்கியக் கூட்டுக் களவாணி. பள்ளிக்கூடங்களை ஏறெடுத்துப் பார்க்கப் பிடிக்காத சாத்தான் ஒரு பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தால் அன்றைக்கு அங்கே ஏதோ சினிமாத் திரையிடல் உண்டு என்று அர்த்தம்.

பள்ளிகளில் அரங்கேறும் பதினாறு எம் எம் சினிமாக் காட்சிகள் எங்களூர்களின் முக்கிய கலைநிகழ்ச்சியாக மாறியிருந்த காலமது. கிராமப் பள்ளிகள் போட்டி போட்டுத் திரைப் படங்களைக் கொண்டுவந்தன. எதாவது ஒரு பள்ளியில் மாதம் ஒரு படமாவது இருக்கும். சினிமாக் கொட்டகைகளுக்குச் சென்று படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட சாத்தானுக்கும் எனக்கும் அந்தப் பள்ளிக்கூடப் படங்கள் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தன.

செம்பகப்பாற அரசு நடுநிலைப் பள்ளியில் ‘செம்பரத்தி‘ படத்திற்கு மூன்று காட்சிகள். சாத்தானும் நானும் மூன்றையும் பார்த்தோம். அப்படத்தில் வந்த சோபனா (தமிழின் ரோஜா ரமணி) எனும் இளவயது நடிகையின் மேல் எனக்குக் கொள்ளைப் பிரியம் வந்தது. பதினாறு வயது கடக்காத அந்தப் பிஞ்சிளம் பேரழகியை சுதீர் எனும் நடிகன் கொட்டும் மழையினூடாக விரட்டிப் பிடித்து நாசமாக்குகிறான். எனக்குள் இனம்புரியாத பெரும் வலி. ‘இது சரிக்கும் உள்ளதாடா? இப்படியெல்லாம் ஒண்ணு நடக்குமா?' என்று சாத்தானிடம் கேட்டபோது ‘அது பிலீன் ஓட்டும்போது ஆட்டறது தான்டா. சும்மா க்யாமரா ரிக்கு' என்றான். சிறு ஆசுவாசம். ஆனால் அந்தக் காட்சி வரும்போதெல்லாம் பள்ளியின் தலைமை ஆசிரியர் படம் ஓட்டுபவரிடம் “சீக்கிரம் ஓட்டி விடு.. சீக்கிரம் ஓட்டி விடு' என்று சொல்வது எதற்கு என்று எனக்குப் புரியவில்லை.

அது ஒரு ‘கருப்பு அளிப்பு' காட்சி என்றும் நம்மைப் போன்ற பொடிப் பயல்கள் அதைப் பார்த்துக் கெட்டுப்போகாமல் வாத்தியார் தடுக்கிறார் என்றும் சாத்தான் விளக்கினான். ஒரு செம்பருத்திப் பூவைப்போல் அழகாய், அப்பாவியாய் இருந்த சோபனாவின் வாயையும் மூக்கையும் அழுத்திப்பிடித்து அவளை மூச்சு முட்டவைத்து கொன்று கிணற்றுக்குள் தள்ளுகிறான் அந்த கொடியவன். படம் முடிந்து வெளியே வரும்போது எனது இதயத்தில் பெரும் பாறாங்கல் ஒன்று இறங்கியதுபோலவே உணர்ந்தேன்.

பிரேம் நஸீர், ஜெயபாரதி நடித்த குடும்ப சித்திரம் ‘சம்மானம்'. சாத்தானும் நானும் சரியான நேரத்தில் பள்ளிக்கூடம் சென்றோம். ஆனால் சிக்கல் இருந்தது. படம் பார்க்கப் பணமில்லை. இரண்டு வாசல்கள் வழியாக ஆட்கள் உள்ளே செல்லத் தொடங்கினார்கள். முன்வாசலில் சீட்டுக்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு சிறுவர்கள் முண்டியடித்தனர். சாத்தான் அங்கேயே சுற்றிச் சுற்றி வந்தான். ஓலிக்கல் ரகு எனும் மந்தமான பையன் கையில் சீட்டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உள்ளே செல்ல உந்தித்தள்ளுகிறான். நெரிசலில் பின்தள்ளப்படுகிறான். அவன் பின்னால் ஒட்டியொட்டி நின்றுகொண்டு ரகுவின் சீட்டை திடீரென பறித்தெடுத்தான் சாத்தான். என்ன நடந்ததென்று ரகுவுக்குத் தெரியும்முன்னே சீட்டைக் காட்டி லாகவமாக உள்ளே போய்விட்டான். ‘என்னோட ரிக்கெட்டு காணாமப் போச்சே.. எவனோ திருடிட்டானே.. என்டெ அம்மச்சியே...' என்று கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டு ரகு நாலாபக்கமும் ஓடுகிறான்.

நானில்லாமல் சாத்தான் மட்டும் படம் பார்ப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒருவகைப் பதற்றத்திற்கே ஆளானேன். வாசலில் நெருக்கியடிக்கும் சிறுவர்களின் இடை முறிவினூடாக உள்ளே தள்ளிக்கடக்க முயன்ற என்னை சீட்டைக் கிழிக்கும் சேட்டன் கையும் களவுமாகப் பிடித்தார். எனது குண்டிமேட்டில் தடதடவென அடி விழுந்தது. இரண்டு பேர் சேர்ந்து பிடித்து இழுத்து என்னைப் பள்ளிக்கூட அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர். இடையே நழுவி ஓடித் தப்பிக்க முயன்றபோது நடந்த கைகலப்பில் எனது சட்டையின் கழுத்துப் பட்டை கிழிந்து தொங்கியது. ‘சம்மானம்' பார்க்க வந்தவனுக்கு கிடைத்த சன்மானம்! நான் ஓ.. என்று அழத் தொடங்கினேன்.

முதன்மை ஆசிரியையான கன்னிகா ஸ்திரீ வெளியே வந்தார். அம்மா என்று ஊர்க்காரர்கள் மரியாதையுடன் அழைக்கும் அவர் என்னைப் பார்த்ததும் ‘அட! நீயாடா டிக்கெட் இல்லாம உள்ளே போகப் பாத்தே? என்னாச்சுடா செறுக்கா ஒனக்கு?' என்று மென்மையாகவே கேட்டார். எனது அழுகை மேலும் அதிகரித்தது. நான் நல்ல பையன் என்று நம்பி என்மேல் அன்பு வைத்திருக்கும் பெண்மணி. அடியும் வாங்கி சட்டையும் கிழிந்து ஒரு திருட்டுப் பையன் மாதிரி அவர் முன் நின்றுகொண்டிருப்பதை நினைத்து விம்மி விம்மி அழுதேன். அவர் எனது சட்டையை சரிசெய்தார். தலைவிரி கோலமாகிப்போன எனது முடியை கையால் வாரினார். என் கையைப் பிடித்துக்கொண்டே அழைத்து பள்ளிக்கூடத்திற்கு சென்று ‘நீ உள்ளே போய் ஒக்காந்து சினிமா பாத்துக்கோடா..' என்று சொல்லி வாசலைத் திறந்து என்னை ஏற்றி விட்டார். படத்துக்குள்ளே கொண்டாட்டப் பாட்டு ஒன்று களைகட்டுகிறது. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஊர்களில் மின்சார வசதி வந்தபோது அங்கு சினிமாக் கொட்டகைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பள்ளிக்கூடங்களில் காட்டப்படும் பதினாறங்குலப் படங்களின்மேல் எங்களுக்கிருந்த நாட்டம் குறைந்துபோனது. பள்ளிக்கூடப் படங்கள் குழந்தைகளுக்கானவை. நாங்களோ வேகமாக வாலிபத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆண்கள் அல்லவா? ஆண் ஒருத்தன் கொட்டகையில்தானே படம் பார்ப்பான்? ஆனால் பள்ளிக்கூடப் படங்களைப் பார்க்கத் தேவயானதைவிட இரண்டு மடங்குப் பணம் கொட்டகைப் படங்களைப் பார்க்கத் தேவைப்பட்டது. எமது நிலத்தில் விளைந்து நிற்கும் பழுக்காய்ப் பாக்கு, மூங்கில் பாயில் வெய்யில் காயும் மிளகு, பச்சை ஏலக்காய் போன்றவற்றை யாருக்கும் தெரியாமல் சுருட்டினால் படம் பார்க்கப் பணம் கிடைக்குமே என்று சாத்தான் ஆலோசனை வழங்கினான்.

‘திருடறது தப்பில்லையாடா?' என்று கேட்ட என்னை ‘நம்ம நெலத்திலேந்து நாம எதாச்சும் எடுத்தா அது திருட்டாடா மண்டு?' என்ற மறுகேள்வியால் வாய் பொத்தினான். சாகசக் காரியங்களுக்கு சற்றும் தைரியமில்லாதவன் நான். மரங்களில் ஏறும்போதும் சின்னச் சின்னத் திருட்டுத்தனங்கள் செய்யும்போதும் ஒரே தாளத்தில்தான் எனது கால்கள் நடுங்கின. ஆனால் அடிதடி சினிமாக்களை நேசித்த சாத்தானுக்கு ஆரோக்கியமும் தைரியமும் இருந்தது. மரம் ஏறுதல், திருட்டுப் பொருட்களை மறைத்தல் என அனைத்துமே அவன் ஏற்றுக்கொண்டான். நான் உடனிருந்தால் மட்டும் போதும். அக்காலத்தில் எமது பக்கத்து ஊரில் நவீன வசதிகளுடன் சாகரா எனும் புதுக்கொட்டகை கட்டப்பட்டது. முதல் படம் பிரேம் நஸீரும் ஜெயனும் எம்ஜிஆர் லதாவும் நடிக்கும் ‘லவ் இன் சிங்கப்பூர்'. சிங்கப்பூரைப் பார்த்தே ஆகவேண்டும்.

பாக்கு மரங்கள் மழைத்தண்ணியில் பாசிக் காளான் பிடித்து வழுவழுத்துக் கிடந்தன. பழுக்காய்ப் பாக்கை பறித்தெடுக்க வழியில்லை. நிழற்காடு மூடிய எங்களது ஏலத்தோட்டத்திற்குள் சாத்தானும் நானும் புகுந்து பதுங்கினோம். ‘இது பொட்டு, இது காய், இது கருங்காய், இது பளம்' எனச் சொல்லிக்கொண்டு ஓர் ஏலக்காய் நிபுணரைப்போல் மெதுவாக எண்ணியெண்ணிக் காய் எடுக்கிறான் சாத்தான். அருகிலுள்ள வயல்களிலும் தோட்டங்களிலும் ஆட்கள் வேலை செய்கிறார்கள். யாராவது எங்களைப் பார்த்தால் எல்லாமே முடிந்துவிடும். விரைவில் அந்த வேலையை செய்து முடிக்க எனக்கு ஒரு வழி தெளிந்தது. ஏலச் செடியின் சரங்களை அடியோடு அறுத்து எடுப்பது.

ஆண்டு முழுவதும் ஏலம் பூப்பூத்து காய்கள் ஆவது அந்தச் சரங்களின்மேல்தான். ஆனால் அது எதுவுமே யோசிக்காமல் ஏலச் சரங்களை மொத்தமாகப் பறித்தெடுத்து சாத்தானின் வீட்டுப் பக்கம் உள்ள எழுகுப்புல் காட்டிற்குள் பதுக்கினோம். பூவும் பிஞ்சும் எல்லாம் சேர்ந்த காய்களை அறுத்து செட்டிக்கடையில் கொண்டுசென்று விற்றோம். எங்களைப்போன்ற திருட்டுப் பயல்கள் தமது வீடுகளிலிருந்து சுட்டுக்கொண்டு வரும் மலை நறுமணச் சரக்குகளைக் குறைந்த விலையில் ஏமாற்றி வாங்கும் நம்பிக்கையான ஒரே நிறுவனம் அது.

கிடைத்த காசை வாங்கிக்கொண்டு கொட்டகைக்குப் பறந்தோம். வாழ்க்கையில் முதன்முதலாகக் காரைச் சுவர்களும் காரை மேற்கூரையும் கொண்ட ஒரு திரையரங்கைப் பார்த்தோம். அதைக் கொட்டகை என்றல்ல தியேட்டர் என்றுதான் சொல்லவேண்டுமாம். வெள்ளித் திரைக்கு முன்னால் ஜிமிக்கி விளக்குகள் தொங்கும் சிவப்புத் திரைச்சீலை. படம் தொடங்கும்முன் ஆங்கிலப்பாடலின் தாளத்தில் அத்திரைச்சீலை விலகி மேலே செல்கிறது. நுரைமெத்தைப் போன்ற இருக்கைகள். புகைப் பிடித்தல் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. சங்கர் கணேஷின் இசையில் ‘சாம் சச்ச சோம் சச்ச சும்மரு சச்ச சாம்' என்ற ‘கவித்துவமான' பாடலுக்கு ஜெயனும் ஒரு சிங்கப்பூர் நடிகையும் கால்தூக்கி ஆடும் பாடலுடன் தொடங்கிய லவ் இன் சிங்கப்பூரை நாங்கள் விழுந்து விழுந்துப் பார்த்து ரசிக்கும்போது எங்கள் கிராமத்தில் ஒரு பெருங்குழப்பம் நிலவியது.

ஏலத் தோட்டங்களிலிருந்து சரம் அறுத்து காய் திருடும் ஈவு இரக்கமில்லாத திருடர்களைப் பற்றியான பேச்சுதான் அங்கு ஓடியது. சில நாட்களுக்குள் சாத்தானின் வீட்டுப் பக்கம் எழுகுப்புல் காட்டில் கருகிக் கிடந்த ஏலச் சரங்கள் கண்டெடுக்கப்பட்டன. உடனடியாகப் பிடிபட்டான். முதல் அடியிலே எல்லாவற்றுக்கும் காரணம் ‘சாஜி'தான் என்று என்னைக் காட்டிக்கொடுத்தான். கொடூரமான அடிஉதைகளுக்கு ஆளானோம். ‘சாத்தானும் சாஜியும்.. ஆகா.. நல்ல தங்கமான பசங்க' என்ற எங்களின் நற்பெயர் ஊரெல்லாம் பரவியது.

இருபது வயது கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த ‘ஈற்றா' (நாணல் மூங்கில்) எனும் படம் யாருடனோ சென்று பார்த்து வந்த சாத்தான் ‘பயங்கரமான

சாகசப் படம் டா.. பூரா ரத்தம் தெறிக்கும் அடிதடி.. அப்றம் அந்தக் ‘கமலாதாஸன்' கொளுக்கொளுத்த சரக்கு ஷீலாவே புறம் தேச்சு குளிப்பாட்டி விடறான். காமெடிக்காரன் பப்பு ஒரு காட்டு யானைய, பாறைன்னு நெனச்சு அதுமேலே அடுப்பு வெச்சு கஞ்சி காச்சுறா...' என்றெல்லாம் சொல்லி என்னை உசுப்பேற்றினான். என்னையும் கூட்டிச் செல்லாததற்கு நான் சத்தம் போட்டபோது மீண்டும் ஒருமுறை எனக்காக ஈற்றா பார்க்கலாம் என்றான். ஆனால் அதற்கான பணம்?

கூரான ஒரு கத்தியுடன் பழுக்காய் பறிக்க அவர்களது நிலத்தில் உள்ள மிக உயரமான ஒரு பாக்கு மரத்தின்மேல் வலிந்து ஏறினான் சாத்தான். வளைந்து ஆடும் ஒல்லியான மரத்தடியில் இடது கையால் அள்ளிப் பிடித்துக்கொண்டு வலது கையிலுள்ள கத்தியால் பாக்குக் குலையை அறுத்து அதை இழுத்தான். சரியாக வெட்டப்படாத குலை மரத்தின்மேல் இறுகப் பற்றி நின்றது. தன்னையறியாமல் மரத்திலிருந்து கைவிட்ட சாத்தான் இரண்டு கைகளாலும் பாக்குக் குலையைப் பிடித்து இழுத்தான். சட்டென்று பிரிந்துவந்த அந்தக் குலையுடன் அய்யோஓஓஓஓஓ... அம்மோஓஓஓஓஓஓ... என்ற நீண்ட அலறலோடு கீழ்நோக்கி வந்து ‘பொதுக்கோ' என்று தரையில் அடித்து விழுந்தான்.

சற்றே தள்ளி நின்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த நான் கதறியபடி ஓடி வருவதற்குள் சாத்தானின் அப்பாவும் அம்மாவும் அழுதுகொண்டு ஓடி வந்தனர். ஒரு வெட்டப்பட்ட மரத்தின் நடுத்தண்டு கூரிய வேல்போல் துருத்தி நிற்பதை ஒட்டியவண்ணம் சலனமற்றுக் கிடந்தான் சாத்தான். அவனது உடம்பிலும் சுற்றுமுற்றும் ரத்தமும் தண்ணீரும் கலந்தமாதிரியான திரவம் தெறித்திருந்தது. திடீரென்று வழிந்த ஒரு சிரிப்புடன் ‘எனக்கு ஒண்ணுமே ஆகலியே' என்று எழுந்து அமர்ந்தான். பூக்குலை விழுந்து அழுகியதால் ரத்த வண்ணமாகிப்போன மழைத் தண்ணீர் தேங்கியிருந்த ஒரு பாக்குமரப் பாளை மேல்தான் வந்து விழுந்திருந்தான். ‘பாக்குமரம்' என்று பெயர் வைக்கக் கூடிய ஒரு சாகசப் படத்தையே எடுத்து விட்டானே இந்தச் சாத்தான்! 

(வளரும்...)

ஜூன், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com