சினிமாவுக்கு வந்த போலீஸ்

சினிமாவுக்கு வந்த போலீஸ்

ஜெ ய் பீம்‘ திரைப்படத்தில் குருமூர்த்தி என்ற போலீஸ் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பவர் தமிழ். இவர் இயக்குநரும் கூட. விக்ரம் பிரபுவை வைத்து ‘டாணாக்காரன்‘ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். தமிழ் பற்று காரணமாக ராஜா என்ற தன்னுடைய இயற்பெயரை தமிழ் என மாற்றிக் கொண்டவர்.

 இனி தமிழ்...

 ‘‘ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவன் நான். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு இரண்டு வருடம் மீன் பிடி தொழிலுக்குச் சென்றேன். இலங்கை பிரச்னையையொட்டி ராமேஸ்வரம் பகுதிகளில் நெருக்கடி இருக்கும் என்பதால், அந்த தொழிலுக்குச் செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுத்துவிட்டனர். சின்ன சின்ன வேலைகள் செய்துகொண்டே மீன் வியாபாரம் செய்தேன்.

 என்னுடைய அண்ணன் கடை ஒன்று வைத்திருந்தார். அங்கு ‘புதிய தடம்'என்ற இதழ் வரும். ஒருமுறை அந்த இதழை எடுத்து படித்துப் பார்த்தேன், அதில் ராமேஸ்வரம் பற்றிய புதிய தகவல்கள், நவீன கவிதைகள் போன்ற பல விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. இதழ் பிடித்திருந்ததால், முதல் முறையாக கவிதை ஒன்று எழுதி அனுப்பினேன்.  அந்த கவிதையைப் படித்த முருகதாஸ், முருகேசன், நல்லதம்பி ஆகிய மூன்று அண்ணன்கள் என்னைத் தேடி வந்தனர். மூன்று பேரும் ராமேஸ்வரத்தில் ‘சமூகவிஞ்ஞான பயிலகம்‘ என்ற வாசிப்பு மையத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ‘புதிய தடம்‘ என்ற கையெழுத்து பிரதியை ஆரம்பித்து, அதை  இதழாகமாற்றினர். ராமேஸ்வரத்தில் அரசியல் தொடர்பான விவாதங்களை அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்தனர். அவர்களுடனான பழக்கம் எனக்கு அரசியல் பற்றிய ஒரு தெளிவான பார்வையை ஏற்படுத்தியது. எழுத்துப் பயிற்சியையும் அளித்தது. அதுதான் சினிமா மீதான ஆர்வத்தையும் உருவாக்கியது.

ஆனால் பத்தாவது படித்திருந்ததாலும், நல்ல உயரம் என்பதாலும் என்னை போலீஸ் வேலைக்கு அனுப்பிவிட வேண்டும் என வீட்டில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் போலீஸ் வேலைக்கான முயற்சியில் தேர்வானேன். அப்போது திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி தொடங்கியதால், பல்வேறு காரணங்களைக் கூறி போஸ்டிங் போடுவது தாமதமானது. இதனால் சினிமாவிற்கு போகலாம் என்று முடிவெடுத்து சென்னைக்கு வந்தேன். அப்போது என்னுடைய நண்பன் பாலா, அவனுக்கு நண்பராக இருந்த பாலகுருவை அறிமுகப்படுத்தி வைத்தான். அவருடைய அறையில் தங்கிதான் சினிமா வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினேன். 

ஆரம்பத்தில் நான் கஷ்டப்படுவதைப் பார்த்த பாலா, வேலு மிலிட்டரி ஓட்டலில் வேலைக்குச் சேர்த்துவிட்டான். காலையில் எட்டு மணிக்கு வேலைக்கு போவேன். காலையிலும், மதியமும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு நூறு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு, இரண்டு மணிக்குக் கிளம்பி வடபழனிக்கு செல்வேன். அங்கு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு சினிமா அலுவலகங்களுக்கு  செல்வேன். இரவு அறைக்கு வந்தால் பாலா  சாப்பாடு செய்து வைத்திருப்பான். ஆகவே சாப்பாடு பிரச்னை இல்லை.

கொஞ்ச நாள் கழித்து பாலா அறையிலிருந்து ரமேஷ் அண்ணன் என்பவர் அறைக்கு வந்துவிட்டேன். ஒருநாள் வெளியே சென்ற ரமேஷ் இரண்டு நாட்களாக அறைக்கு வரவேயில்லை. என்னுடைய கையிலும் பணம் இல்லை. பாலா அறைக்குப் போனால், அவனும் ஆள் இல்லை. அவன் டிரைவர் வேலை செய்துகொண்டிருந்தான். அன்றைக்கு இரவு அந்த அறையிலேயே தங்கிவிட்டேன். தொடர்ச்சியாக மூன்றாவது நாள் பட்டினி.  காலையில் பாலா வந்து சேர்ந்தான்.

உடனே ஒரு ஓட்டலுக்குக் கூட்டிப் போய்  அங்கிருந்த எல்லாவற்றையும் ஆர்டர் செய்தான். நான் மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்தது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது.  “இவ்வளவு சாப்பாடு வாங்கி தர்றீயே, அதை காசாக் கொடுத்தா ரெண்டு நாளைக்கு செலவுக்கு வச்சிக்குவேண்டா,' என்றேன். அதற்கு, “செலவுக்கு தனியா தர்றேன், இப்ப எவ்வளவு வேணுமோ சாப்பிடு,' என்றான்.

அன்றைக்கு அவன்  சாப்பாடு வாங்கிக் கொடுத்ததை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. நான் சினிமாவில் பெரிய ஆளாக வந்து, ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த ஒரு நபர் பாலா. அவன் இன்று உயிருடன் இல்லை என்பது பெரிய சோகம்.

 இப்படி சென்னையில் சினிமா வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கும் போதே, பழைய போலீஸ் வேலைக்கு வருமாறு அழைப்பு வந்தது. அதில் சேரச்

சொல்லி வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள். பயிற்சி முடிந்து வேலைக்கு சேர்ந்ததால் வீட்டில் இருந்த சில பொருளாதார சிக்கல்களும் முடிவுக்கு வந்தன.

அதேபோல், எனக்கு எதாவது நல்லது நடந்தால்தான், திருமணம் செய்துகொள்வேன் என என்னுடைய அக்கா உறுதியாக இருந்தார். அவர் டீச்சராக வேலை பார்த்துக் கொண்டே தம்பி, தங்கைகளுடைய திருமணத்தை நடத்தி வைத்தார். அக்கா குடும்பத்திற்காக நிற்கும் போது, நாம் அக்காவுக்காக நிற்போம் என முடிவெடுத்து. அக்காவின் திருமணத்தை நானே நடத்தி முடித்தேன்.

பயிற்சி முடித்ததும் டெல்லி திகார் ஜெயிலில் வேலை.  அங்கே மூன்று வருடம் வேலை பார்த்தேன். பிறகு அங்கிருந்து வேலூருக்கு இடமாறுதலாகி வந்தேன். எங்கு வேலை பார்த்தாலும் சினிமா தொடர்புகளை விட்டது கிடையாது. எப்படியாவது சென்னைக்கு வந்துவிட வேண்டும் என நினைப்பேன். அப்புறம்  ஆறு வருடம் கழித்துத்தான் இடமாறுதலாகி

சென்னைக்கு வந்தேன்.

சென்னை வந்த பிறகு சினிமா தொடர்பான தேடல் தீவிரமானது. வேலைக்கு போய்ட்டுவந்து சட்டையைக் கழட்டினேன் என்றால், அடுத்த நிமிடம் வடபழனியில் தான் நிற்பேன்.

இதற்கிடையே எனக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்தனர்.  திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டு கழிந்தபின் 2014-இல் பன்னிரெண்டு ஆண்டாக பார்த்துவந்த போலீஸ் வேலையை விட்டுவிட்டேன். வேலையை விட்டது என்னுடைய மனைவிக்கு ஒன்றரை வருடம் தெரியவே தெரியாது. மாதா மாதம் வீட்டுக்கு பணம் அனுப்பாததால், சந்தேகம் ஏற்பட்டு, கூப்பிட்டுப் பேசினார்கள். அப்போது தான் தெரியும். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. 

பிறகு, மனைவியிடம் மட்டும் சொன்னேன், ஒரு வருடம் சினிமாவில் இருக்கிறேன், அதன் பிறகு வேண்டுமானால் போலீஸ் வேலைக்குத் திரும்பிவிடுகிறேன் என்று. கொஞ்சம் நாள் கழித்து விசாரணை படம் வந்தது. அதில் என்னுடைய பெயரும் இடம்பெற்றிருந்ததால் வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்தது என்பதை இங்கே சொல்லவேண்டும்.

விசாரணை படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.  போலீஸ் வேலையை விட்டநிலையில் மீண்டும் நண்பர்களுடன் அறையில் தங்கி சினிமா வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தேன். அப்போது யோகி பாபு, முத்துக்குமாரன் (தர்மபிரபு படத்தின் இயக்குநர்), ஜானகிராமன் (தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் இயக்குநர்) போன்றவர்கள் என்னுடைய அறை நண்பர்கள்.

 அந்த சமயத்தில் வெற்றிமாறன், ‘விசாரணை' திரைப்படத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும், அதற்கு போலீஸ்காரர் யாராவது இருந்தால் நல்லா இருக்கும் என்று கேட்பதை கேள்விப்பட்டு, அவரிடம் சென்றேன். அவரும் என்னிடம் ஒரு மணி நேரம் பேசிய பின்னர் சேர்த்துக்கொண்டார்.

பிறகு அடுத்த படமான ‘வடசென்னை'யில் வரும்  குணா கதாபாத்திரத்தில் என்னை நடிக்கவும் வைத்தார். தயக்கத்துடன் தான் அதை ஏற்றுக்கொண்டேன். மனமெல்லாம் திரைப்படம் இயக்குவதில்தான் எனக்கு இருந்தது. 

 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, ‘விசாரணை‘ திரைப்படம் ஆஸ்கர் விருதிற்காகப் பரிந்துரைக்கப்பட்டது. இதனால் வெற்றிமாறன்  அமெரிக்கா சென்றுவிட்டார். இதற்கிடையே, தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்து கதை சொன்னேன்.  படம் பண்ண வாய்ப்பும் கிடைத்துவிட்டது.  இயக்குநரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன். அந்த குணா வேடத்தில் சமுத்திரகனி  நடித்தார். 

 நானும் வெளியே வந்து முதல் படத்தின் வேலைகளைத் தொடங்கினேன். தயாரிப்பாளருக்குப் பொருளாதார சிக்கல் இருந்ததால், படம் எடுக்கமுடியாமல் போய்விட்டது.  மீண்டும் வெற்றிமாறனிடமே வந்தேன்.

 இதற்கிடையே, செல்வராகவனின்  உதவி இயக்குநராக இருந்த மணிகண்டன் , ட்ரீம்வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தியை வைத்து ஒரு படம் எடுப்பதற்கான முயற்சியில் இருந்தார். அந்த படத்தில் வேலை பார்ப்பதற்காக நான் அவரிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்தேன். அவர் சொன்னதால்தான் விக்ரம் பிரபு நடிக்க, நான் இயக்கி தயாராக இருக்கும் ‘டாணாக்காரன்' வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்த படப்பிடிப்பு நடத்துவதில் ஒரு சிக்கல் இருந்தது. நடிகர்கள் அனைவரும் போலீஸ் கட்டிங் வெட்ட வேண்டும். அவர்களுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருந்தால், படப்பிடிப்பை இடைவெளியே இல்லாமல் ஐம்பதுநாட்களில் முடித்தேன். அதில் இருபது நாள் இரவில் படப்பிடிப்பை நடத்தினேன். தயாரிப்பு நிறுவனம் தேவையான வசதிகளை செய்து கொடுத்ததால் ‘டாணாக்காரன்' படத்தை எடுத்து முடிப்பது எளிதானது.

‘அசுரன்' படத்தை பார்த்துவிட்டு தான் இயக்குநர்  த.செ.ஞானவேல் என்னை அழைத்தார் ‘ஜெய் பீம்‘ படத்தின் கதையை படிக்கக் கொடுத்தார். வாங்கி வந்து படித்துப் பார்த்தேன். படிக்கும் போதே நான்கைந்து முறை அழுதுவிட்டேன். மதியம் இரண்டு மணிக்கு வாங்கிய ஸ்கிரிப்டை மாலை ஐந்து மணிக்கெல்லாம் படித்து முடித்துவிட்டேன். உடனே ஞானவேலை பார்ப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன். ‘ ஒரு போலீஸ்காரனாக இந்தபடத்துக்குள்ள வாங்க' என்றார். அப்படித்தான் அந்த பாத்திரம் கிடைத்தது.

‘ஜெய் பீம்‘ படத்தில் நடித்த பிறகு சாதாரணமாக ரோட்டில் நடந்து சொல்பவர்கள் கூட என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுகின்றனர்,'' என்றார் புன்னகையுடன்.

டிசம்பர், 2021.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com