சிரியாவில் கால் வைக்கும் ரஷ்யா: மேற்காசியாவில் விடிவு ஏற்படுமா?

சிரியாவில் கால் வைக்கும் ரஷ்யா: மேற்காசியாவில் விடிவு ஏற்படுமா?

அமெரிக்கா உள்பட பலநாடுகள் ஏண்டா இங்கே வந்து சிக்கினோம் என்று மேற்குஆசியாவில் தலையால் தண்ணி குடித்துக்கொண்டிருக்க, கடந்த சிலநாட்கள் முன்பாக நேரடியாக அங்கே கால்பதித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது ரஷ்யா. சிரியாவில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளின் நிலைகளை ஏவுகணைகள் மூலம் கடலில் இருந்து தாக்கி, ஒரு நீண்ட யுத்தத்தில் குதித்துவிட்டது ரஷ்யா.

ஏற்கெனவே அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 65 நாடுகளின் கூட்டுப்படையினர் ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து விலகிவிடும் வழியைப் பார்க்கின்றன. இதில் ஏன் ரஷ்யா குதித்தது?

சுருக்கமான முன்வரலாறைப் பார்க்கவேண்டுமானால் சிரிய அதிபரான  பஷார் அல் அசாத்திடம் இருந்து தொடங்கவேண்டும். இவரது அப்பா ஹபீஸ் ராணுவ தளபதியாக இருந்தவர். ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர்.  இவர் இறந்தபின் தேர்தல் மூலம் 2000-வது ஆண்டில் அதிபர் ஆனவர் பஷார் அல் ஆசாத்.

சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் எப்போதுமே ஆகாது. அதனுடன் நடந்த போர்களில் பழைய சோவியத் யூனியன் ஆயுதங்கள் அளித்து உதவி செய்திருக்கிறது.  2011-ல் அரபு வசந்தம் தொடங்கி லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் மக்கள் புரட்சி, சர்வாதிகாரத்துக்கு எதிராக நடைபெற்றபோது, சிரியாவிலும் பஷாரின் ஆட்சியை எதிர்த்து அமைதிப்போராட்டத்தில் மக்கள் குதித்தனர். இவர்களை அரசு ஒடுக்க முயன்றபோது உள்நாட்டுப்போர் தொடங்கியது.  அல்காய்தா மேற்குஆசியாவில் ஒடுக்கப்பட்ட நிலையில் உருவான ஐஎஸ் என்கிற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு சிரியாவிலும் ஈராக்கிலும் பல இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஐஎஸ் அமைப்பு பெரும் வெற்றிகளைத் தொடர்ந்து பெற்றுவருகிறது.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்று சொல்லி உள்ளே நுழைந்த அமெரிக்கக் கூட்டுப்படைகள் சதாம்ஹுசைனை ஆட்சியை விட்டு அகற்றி, அங்கே ஒரு அரசை நிறுவின. அதன்பின்னர் அங்கிருந்து மெல்ல படைகளை அமெரிக்கா அகற்றிக்கொள்ள ஆரம்பித்தது. ஈராக் ராணுவத்தால் ஐ.எஸ். அமைப்பை சமாளிக்க முடியவில்லை. அமெரிக்க கூட்டுப்படைகள் உதவி செய்தாலும் அதுபோதுமானதாக இல்லை. தன்னுடைய நிதி உதவியையும் கிட்டத்தட்ட 80 சதவீதம் அளவுக்குக் ஒபாமா குறைத்துவிட்டார்.

லிபியாவில் அதிபராக இருந்த கடாபியை மேற்குலகம் அரபு வசந்தத்தையொட்டி ’கடாசி’ எறிந்தது. எகிப்திலும்  முப்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாராக் புரட்சியைத் தொடர்ந்து பதவி விலகி, விசாரணைக்குப் பின் சிறைத்தண்டனை பெற்றார்.  சிரியா மட்டும் விதிவிலக்காக இருக்கவேண்டுமா என்ன?

பஷார் பதவியை விட்டு விலகினால் அந்நாட்டுக்குள் அமைதியைக் கொண்டுவருவோம் என்பது இப்போதைய மேற்குலக நிலைப்பாடு. அதனால் பஷாருக்கு எதிரான புரட்சி அமைப்புகளுக்கு அமெரிக்காவின் சிஐஏ உதவி வருகிறது. ஆனால் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான  தாக்குதல் நடவடிக்கைகளையும் அது செய்யவேண்டியிருக்கிறது.

ஆனால் ரஷ்யா செய்திருப்பது என்ன? மேற்காசியாவில் அதற்கு நண்பர்கள் என்று எந்த நாடும் இல்லை. சிரியாவின் பஷாருக்கு உதவுவதன் மூலம் ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தை அங்கிருந்து குறைக்க விரும்புகிறது.  சிரியாவில் பஷார்தான் அதிபர். அவருக்கு எதிரான ஐஎஸ் அமைப்பு மட்டுமல்லாமல்  பிற புரட்சி அமைப்புகளையும் தாக்குவோம் என்பது அதன் நிலைப்பாடு.

 சிரியாவில்  மட்டுமல்லாமல் ஈராக்கில் உள்ள அரசுக்கும் ரஷ்யா ராணுவ உதவி செய்கிறது. அமெரிக்காவிடம் இருந்து போதுமான உதவி கிடைக் காததால் ரஷ்ய ராணுவ உதவியை ஈராக் பெற்று அதன் படைகள் ஐஎஸ் அமைப்புடன் மோதுகின்றன.

லிபியாவிலும் ஈராக்கிலும் செய்ததுபோல ஆட்சி மாற்றத்தை சிரியாவில் நடத்த ரஷ்யா அனுமதிக்காது என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது.  பஷாரை நீக்கிவிட்டால் அவருக்குப் பதிலாக சிரியாவில் அமையும் அரசு இப்போதிருப்பதை விட மோசமாக அமையும். அதற்கு பஷாரே பரவாயில்லை. அவர் இடைக்கால அரசுக்குப் பொறுப்பாக இருந்து மெதுவாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று மேற்குலகம் இப்போது  சொல்ல ஆரம்பித்துள்ளது.

இந்த அரசியலில் இன்னொரு முக்கிய சூத்திரதாரி ஈரான்.  இந்நாடு சிரியா,  ஐஎஸ் அமைப்பு மற்றும் புரட்சிப்படைகளுக்கு எதிராக நடத்தும் போருக்கு பேருதவி செய்துவருகிறது. இந்நிலையில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்குமான நெடுங்கால உறவுச் சிக்கல் சமீபகாலமாகச் சீரடைந்திருப்பது ஒரு முக்கிய மாற்றமாகும். இதையடுத்து  அமெரிக்கா பேச்சைக் கேட்டு ஈரான் சிரியாவில் செய்யும்  உதவிகளைக் குறைத்துக்கொண்டால் எல்லாம் ரஷ்யாவின் தலையில் தான் விடியும்.

ரஷ்யாவும் சரி; மேற்குலகும் சரி ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சுகின்றன. ரஷ்யாவில் 15 சதவீத மக்கள் இஸ்லாமியர்கள். ரஷ்ய மொழி பேசும் பல இஸ்லாமியப் போராளிகள் ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்து  சிரியாவில் போராடுகிறார்கள்.  இவர்கள் ரஷ்யாவுக்குள் வந்தால் தீவிரவாதம் மேலும் வளருமே என்று ரஷ்ய அதிபர் புதின் கவலைப்படுவதும் சிரியாவில் தலையிடுவதற்குக் காரணம்.

ரஷ்யா என்றால் ஆப்கானிஸ்தான் பற்றிப் பேசா மால் இருக்கமுடியாது. சோவியத் யூனியன் படைகள் 1969-லிருந்து 1989-வரை இங்கு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. சுமார் 15,000 பேரை பலிகொடுத்துவிட்டு, சோவியத் படைகள் விலகின. பின்னர் சோவியத் யூனியன் சிதறிப்போனது.  அதன் பின்னர் தாலிபான், அல்காய்தாவுக்கு எதிராக மேற்குலகு ஆப்கனில் களம் இறங்கியது. இப்போது  அங்கிருந்து அமெரிக்கப்படைகள் குறைக்கப்பட்டுவரும் நிலையில் தாலிபன்கள் சக்திபெற்றுவருகிறார்கள். இதுவும் தலைவலியை ஏற்படுத்த, ஆப்கனுக்கும் ராணுவ உதவிகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது ரஷ்யா.

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் என மூன்று பிரச்னை பூமிகளிலும் புதின் காலடி  வைத்திருக்கிறார். ரஷ்யா இஸ்லாமிய நாடுகளில் செய்யும் இந்த ராணுவ நடவடிக்கை, அந்நாட்டிலும் சரி, பிற இஸ்லாமிய நாடுகளிலும் மேலும் பல இளைஞர்களை இஸ்லாமியத் தீவிரவாதம் நோக்கித் தள்ளும் அபாயமும் உள்ளது. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போரால் ஏராளமான அகதிகள் வெளியேறிச் சென்றுகொண்டிருப்பது இன்னொரு பெரும் பிரச்னை.

புதின் புதிய வழி காட்டுவாரா?

நவம்பர், 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com