கேள்வி : கோல்ஃபுக்கு அடுத்தபடியாக உங்களுக்கு மிகப் பிடித்தமான விஷயம் எது?
டைகர் வுட்ஸ் : ஸ்கூபா டைவிங். ஏனென்றால் கடலுக்கு அடியில் மிக அமைதியாக உணர்கிறேன். அங்குள்ள மீன்களுக்கு நான் யாரென்று தெரியாது.
உலகின் மிகப் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் சொன்ன இந்த பதில் நமக்கு ஆச்சர்யமாகவும், ஏன் போலியானதாகவும் கூட படலாம். நாம் எல்லோரும் வெற்றியாளராக, பிரபலமானவர்களாக ஆகவே விருப்பப்படுகிறோம். ஆனால் அதற்கும் ஒரு விலை உள்ளது. சூப்பர் ஸ்டாராக இருப்பதன் சங்கடமும் பிரச்னையும் சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே தெரியும். கோல்ஃப் விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள் கூட அறிந்த பெயராக இருக்கும் இவரின் வாழ்க்கை ‘டைகர்‘ என்ற பெயரில் இரு பாகங்கள் கொண்ட ஆவணப்படமாக ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது.
டைகர் வுட்ஸ்சின் தந்தையின் பெயர் யேர்ல் வுட்ஸ். இவர் வியட்னாம் போரில் பங்கேற்றவர். டைகர் வுட்ஸை கோல்ஃப் வீரராக ஆக்கியவர் இவர்தான்! இரண்டு மாத குழந்தையாக இருக்கும்போதே டைகருக்கு கோல்ஃப் விளையாட்டை அறிமுகப்படுத்தி விடுகிறார். வீட்டின் காரேஜில் டைகரை குழந்தைகள் அமரும் சேரில் அமரவைத்துவிட்டு யேர்ல் கோல்ஃப் பயிற்சி செய்கிறார். டைகர் நடக்கத் தொடங்கியதும் முதலில் செய்தது கோல்ஃப் ஷாட் பயிற்சிதான். இரண்டு வயதில் அமெரிக்க டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பிரமாதமாக கோல்ஃப் ஷாட்டை அடித்துக் காண்பிக்கிறார். குழந்தைகளை பூங்காக்களுக்கு மற்றவர்கள் அழைத்து செல்லும் வயதில் டைகரை கோல்ஃப் மைதானத்திற்கு அழைத்துச்
சென்றதாக அவரது அம்மா டினா கூறுகிறார்.
டைகரின் வாழ்க்கையில் வேறு எதுவுமே இல்லை... கோல்ஃப்...கோல்ஃப்... கோல்ஃப் மட்டுமே.
ஆப்பிரிக்க அமெரிக்கரான யேர்லுக்கு ஒரு கனவிருந்தது. வெள்ளையர்கள் மட்டுமே கோலோச்சும் கோல்ஃப் உலகில், உலகைத் திரும்பிப்பார்க்க வைக்கும் கருப்பின விளையாட்டு வீரன் ஒருவன் வருவான், அது தன்னுடைய மகன் டைகர் தானென்று உறுதியாக நம்பினார். அதற்கான அத்தனை தயாரிப்புகளையும் செய்தார். டைகரும் அப்பாவை ஏமாற்றவில்லை. 19 வயதில் அமெரிக்க அமெச்சூர் கோல்ஃப் பட்டத்தை வென்று மிக இள வயதில் அப்பட்டத்தை வென்றவர், முக்கியமாக கருப்பின அமெரிக்கக்காரர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு அடுத்த வருடத்தில் 1995இல் அமெரிக்க மாஸ்டர் கோல்ஃப் பட்டத்தையும் வென்று உலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதன் பிறகு ஏறக்குறைய 12 வருடங்களில் டைகர் கோல்ஃப் உலகில் முடி சூடா மன்னனாகவே வலம் வந்தார். அடுத்த மைக்கேல் ஜார்டன் யார் என்று தேடிக்கொண்டிருந்த நைக்கி நிறுவனம் டைகரை வளைத்து போட்டதோடல்லாமல் நிற பாகுபாட்டை உடைத்தெறிந்த வீரராக விளம்பரமும் செய்தது. இளைஞர்களுக்கு கொண்டாட கதாநாயகன் கிடைத்துவிட்டார். ஆனால் இவ்வளவு சிறு வயதில் பெற்ற புகழையும் பேரையும் டைகர் காப்பாற்றுவாரா என்ற கேள்வியும் கூடவே இருந்தது. டைகர் எங்கே சறுக்குவார் என்று கழுகுப்பார்வையில் காத்துக் கொண்டிருந்தன ஊடகங்கள்.
டைகருக்கும் அவரை உருவாக்கிய தந்தைக்குமான உறவு சற்று வித்தியாசமானது. ஆரம்ப காலங்களில் நல்ல வழிகாட்டியாக இருந்த யேர்ல், பின்னாட்களில் குடி, பெண்கள் என்ற பாதையில் செல்வதை அறிந்த டைகர் முதலில் அதிர்ச்சி அடைகிறார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவை விட்டு விலகத் தொடங்குகிறார். டைகரின் முதல் காதலி டைனா பாரை விட்டு விலகுவதற்கும் அவரின் பெற்றோரின் நெருக்கடியே காரணமாக இருக்கிறது. டைகர் வுட்ஸ் என்கிற பிம்பம் எக்காரணம் கொண்டும் சிதைந்துவிடக்கூடாது என்பது அவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம். ஆனால் டைகரை ஓர் இயந்திரத்தை உருவாக்குவது போல அவர்கள் செயல்பட்டதன் விளைவு பின்வரும் காலங்களில் தெரிகிறது.
தந்தையின் மறைவிற்குப் பிறகு மிகவும் உடைந்துபோய் காணப்பட்டாலும் மைதானத்தில் அவருடைய விளையாட்டு எந்த மாற்றமுமின்றி சிறப்பானதாகவே இருக்கிறது.
எலினை மணந்து கொண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக செல்கிறது டைகரின் வாழ்க்கை. அதே சமயத்தில் அடிக்கடி லாஸ் வெகாஸ் நகருக்கு சென்று வருகிறார் அவர். லாஸ் வெகாஸ் சூதாட்டம், குடி, பெண்கள் என்று அனைத்தும் கிடைக்கும் இடம். நேஷனல் என்கொயரர் என்ற பத்திரிகை பிரபலமானவர்களின் இன்னொரு பக்கத்தை வெளியிட்டே பிரபலமான பத்திரிகை. அந்த பத்திரிகைக்கு லாஸ் வெகாஸில் டைகருக்கு பல பெண்களுடன் தொடர்பிருக்கிறது என்ற செய்தி கிடைக்கிறது. காத்துக் கிடந்த ஊடகங்களுக்கு அல்வா போல வாய்ப்பு. தோண்டத் தொடங்குகிறார்கள்.
முதலில் தன்னுடைய வீட்டிற்குப் பக்கத்திலுள்ள உணவகத்தில் வேலை செய்யும் மிண்டி லாடன் என்ற பெண்ணுடன் அவருக்குத் தொடர்பிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் விஷ்யம் வெளி வருவதற்கு முன்பே டைகர் முந்திக் கொண்டு அதை அப்படியே அமுக்கி விடுகிறார். ஆனால் லாஸ் வெகாஸ் விஷயத்தை அவரால் மறைக்க முடியவில்லை. நியூயார்க்கில் கிளப் நடத்திவரும் ரேச்சல், லாஸ் வெகாஸ் பெண்கள் என்று டைகரின் பட்டியல் பெரிய பூகம்பத்தை கிளப்புகிறது. இதைத் தொடர்ந்து மனைவி எலின் விவாகரத்து பெறுகிறார்.
பொது வெளியில் மன்னிப்பு கேட்கும் டைகர், அனைத்திலிருந்தும் மீண்டு வருகிறார். அத்தனையையும் மீறி 2010 இல் மீண்டும் மாஸ்டர் பட்டத்தை வெல்கிறார். மிகப்பெரிய சரிவிற்கு பிறகு மீண்டெழுந்த டைகரின் பயணம் 2017இல் போதை மருந்து உபயோகத்திற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் பிரச்னைக்குள்ளாகிறது. அதே வருடத்தின் இறுதியில் மீண்டெழுந்து வருகிறார், பட்டம் வெல்கிறார்.
2021 பிப்ரவரியில் கார் விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் டைகர் திரும்பவும் பீனிக்ஸ் பறவை போல கோல்ஃப் உலகில் தடம் பதிப்பார் என்று நிச்சயம் நம்பலாம்!
சாதாரண மனிதன் வெற்றியடைந்த கதை என்று இல்லாமல் டைகர் வுட்ஸ்சின் நிறை, குறை என்று அனைத்தையும் பேசியிருப்பது இந்த ஆவணப்படத்தின் சிறப்பு.
ஏப்ரல், 2021