துப்பாக்கிகளை சமாளிக்கும் பூக்கள்

பாரிஸ் நகர பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் ஒரு தந்தைக்கும்  சின்ன குழந்தைக்குமான உரையாடல் உலகெங்கும் பலரால் பார்க்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த பூங்கொத்துகளும் மெழுகுவர்த்திகளும் வைக்கப்படும் ஓரிடத்தில்  அளிக்கும் பேட்டியில்  உலகம் அறியாத தன் மகனுக்கு 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதலை விளக்குகிறார் அந்த பிரெஞ்சு தந்தை.

தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி கேட்கும் செய்தியாளரிடம் சிறுவன்:  அவங்க கெட்டவங்க நல்லவங்க இல்ல.. நாங்க வீடு மாறிப்போகணும்.

தந்தை: இல்லப்பா..நாம் எங்கயும் போகப்போறதில்ல.  பிரான்ஸ் தான் நம்ம வீடு.

சிறுவன்: ஆனா.. அவங்க கெட்டவங்க அப்பா.

தந்தை: கெட்டவங்க எல்லா இடத்திலயும் இருக்காங்க.

சிறுவன்: ஆனால் இவங்க துப்பாக்கி வெச்சிருக்காங்க. நம்மைச் சுடுவாங்க

தந்தை: அவங்ககிட்ட துப்பாக்கி இருக்கலாம்.  நம்மிடம் பூங்கொத்துகள் உள்ளன.

சிறுவன்: பூக்கள் ஒண்ணும் செய்யமுடியாதே..

தந்தை: அவை செய்யக்கூடியவை. அதனால்தான் எல்லோரும் பூக்களை வைக்கிறார்கள். பாரு..

பூங்கொத்துகளைப் பார்க்கும் சிறுவன்: நம்மைப் பாதுகாக்கவா இவை?

தந்தை: ஆமா

சிறுவன்: இந்த மெழுகுவர்த்திகளும் கூடவா?

தந்தை: நேற்று தாக்குதலில்

செத்துப்போனவர்களை நினைவுகூர

சிறுவன்: இந்த பூக்களும் மெழுகுவர்த்திகளும் நம்மைக் காப்பாத்தும்.

தந்தை: ஆமா

இந்த உருக்கமான உரையாடலுக்கு வந்து குவிந்திருக்கும் ஆதரவுக்கு அந்த தந்தை முகநூல் பக்கத்தில் பின்னர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் 13 அன்று நடந்திருக்கும் பாரிஸ் நகர தாக்குதல் ஐரோப்பாவின் முகத்தையே மாற்றிவிட்டது. பல நகரங்களும் இதையடுத்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஐஎஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலை ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் மேற்கு ஆசியாவில் தீவிரப்படுத்திய நிலையில் ஐ.நா.சபை வெளிப்படையாக போரை அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த போரில் ரஷ்யா சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகளில் தாக்குதல்கள் நடத்திவருகிறது. பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர் அந்நாட்டு விமானங்கள் வீசிய குண்டுகளில் பாரிஸுக்காக இது என்று எழுதப்பட்டு  வீசப்பட்டன. ரஷ்ய அதிபர் புடின், ‘’ தவறு செய்தவர்களை கடவுள் தண்டிப்பார். ஆனால் அவரிடம்  அவர்களை நாங்கள் அனுப்பி வைப்போம்”” என்று கூறினார். இந்த சொற்கள் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக மேற்குலகும் ரஷ்யாவும் எவ்வளவு கடுமையான தாக்குதலைச் செய்ய இருக்கின்றன என்பதையே உணர்த்துகின்றன. இந்நிலையில் துருக்கி மீது பறந்த ரஷ்யபோர் விமானத்தை அந்நாடு சுட்டுவிட,  சூழல் அல்லோலல கல்லோலப்பட்டது.

அதெல்லாம் சரி? ஐஎஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது? ஆயுதம் கிடைக்கிறது?

ஆரம்பத்தில் ஐஎஸ் அமைப்புக்கு சவுதி அரேபியா, குவைத்,  கதார் போன்ற நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள் பணம் அளித்தார்கள். இப்போது 80 லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஐஎஸ் தனக்கான நிதியை தானே வசூலித்துக்கொள்கிறது. அதன் கட்டுப்பாடில் உள்ள எண்ணெய் வயல்கள், ஆட்கடத்தல் வசூல்கள், வரிகள்,  கொள்ளை, வங்கிக்கொள்ளைகள் போன்றவற்றின் மூலம் திரட்டிக்கொள்கிறது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். பாரசீக வளைகுடா அரசுகள் ஒரு காலத்தில் சிரிய அதிபர் அசாத்துக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு பணம் அளித்தன. அவற்றில் ஒன்றாக ஐஎஸ்சும் இருந்தது.

பால்கன் பகுதியில் இருந்துதான் ஐஎஸ் அமைப்புக்கு பெரும் அளவில் ஆயுதங்கள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. அவை பயன்படுத்தும் ஆயுதங்கள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாட்டுத் தயாரிப்புதான். கள்ளச்சந்தையில் எண்ணெய் விற்று, கள்ளச்சந்தையிலேயே ஆயுதங்களை வாங்கி போருக்குப் பயன்படுத்துகின்றனர். எண்ணெய் வயல்கள், வரி, இத்யாதி மூலம் ஆண்டுக்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த அமைப்புக்குக் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

உலகெங்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பரப்ப, ஆள்பிடிக்க தன் வலையை விரித்திருக்கும் ஐஎஸ் இன்று உலகே அஞ்சும் அமைப்பு. ஆனால் என்ன செய்ய முடியும்? சிரியாவில் குண்டுகளை வீசுவதன் மூலம் இந்த அமைப்பை அழிக்க முடியுமா? இதன் வேர்களைக் களையாமல் உயிர்களைப் பறிமுதல் செய்வதில் இது மேலும் மேலும் வளர்ந்துகொண்டே செல்லும். இந்த தீவிரவாதத்தை வளரச்செய்ததில் தங்களுக்குப் பங்கில்லையா என மேற்குலகம் முதலில் தன்னையே கேட்டுக்கொள்ளவேண்டும்.

டிசம்பர், 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com