தொ.ப என்னும் பெருமழை  - தேவேந்திர பூபதி

தொ.ப என்னும் பெருமழை  - தேவேந்திர பூபதி

தமிழில் இலக்கிய ஆய்வுக்கென தனித்த பொதுவான ஆய்வு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை மறுக்கவியலாது. நம் ஆய்வுமுறைகள் அனைத்திலும் மேற்கத்திய ஆய்முறைகளின் நெறிகளையே பயன்படுத்துகிறோம். பொதுவாக அறிவியல் ஆய்வுமுறைக்கும் சமூக ஆய்வுமுறைக்கும் நிறைய ஒற்றுமை வேற்றுமைகள் பகுத்துப்பார்க்க வல்லவை. எனவே தமிழின் ஆய்வுமுறைகள் அனைத்தும் மேற்கத்திய அறிஞர்கள், அல்லது கல்விப் புலத்தாரால் எப்போதும் ஐயப்பாடுகள் உடையதாகவே விமர்சிக்கப்படுகின்றன. அந்தவகையில் இதுவரை அறுதியிட்டுக் கூறமுடியாத தமிழ் ஆய்வுமுறைக்கு தொ.ப.வையே கூட ஓர் ஆய்வு முன்னோடியாகக் கொள்ளலாம். ’ தேவியின் திருப்பணியாளர்கள்’ என்ற ஃபுல்லரின் ஆய்வுக்குப் பின் தொ.ப.வின் அழகர்கோவில் தான் சமூக ஆய்வுக்கான தரநிர்ணயமாக மதிப்பிடப்பட்டு வருகிறது.

தமிழ் மரபில் காலமுறையைச் சொல்லும்போதுகூட பார்த்தால் பழங்கால அரசர்களின் கல்வெட்டுகளில் அரசனின் ஆட்சி ஆண்டுதான் குறிக்கப்படுமே ஒழிய, அவனது வயது குறிக்கப்படுவது வழக்கத்தில் இல்லை. இது மேற்கத்திய வழக்கம் அன்று. மேற்கத்திய ஆய்வுமுறைப்படி ஒரு முன் ஆய்வு, செய்யப்பட்டு, அவ்வாறு செய்யப்பட்டதன் பேரில் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட கருதுகோள்கள், ஆய்வுசெய்யப்பட்டு, கிடைத்த தரவுகளின் அடிப்படையில் சரியா, தவறா? எத்தனை சதவீதம் இது சரி போன்ற முடிவுகள் நிறுவப்படும்.

இதுபோன்ற பல ஆய்வுக்களுக்கான கருதுகோள்களை தமிழுக்கு வழங்கிச் சென்றிருப்பதுதான் அறிஞர் தொ.பரமசிவன் அவர்கள் நமக்களித்த முக்கிய பங்களிப்பாகக் கருதுகிறேன். தொ.ப.அவர்கள் அதிரடியாக ஆய்வுக்கருத்துக்களை போகிறபோக்கில் முன்வைப்பவர் என்கிறமாதிரியான கருத்துக்கள் கல்விப்புலத்தாராலும் இலக்கியவாதிகள் சிலராலும் கூறப்படுகின்றன. அவர் கூறும் கருத்துகள் எல்லா சனாதன முன்முடிவுகளுக்கும், இதுவரை கடைபிடிக்கப்பட்ட மக்கள் விரோத போக்குகளுக்கும் எதிராக இருப்பதாலும் அவர்கள் இந்த கருத்துகளை கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.

இவர் காட்டும் ஆதாரங்கள் பெரும்பாலும் அடித்தள மக்களை வாசித்து, படித்து அவர்களின் வழக்காறுகளில் இருந்தும் சமய சடங்குகளில் கடைபிடிக்கப்படும் செயல்களில் இருந்தும் திரட்டப்பட்ட தரவுகளாகவே இருப்பவை. இதற்குள் மேற்கத்திய அறிஞர்களுடைய வழிமுறைகளை உட்புகுத்தமுடியாத நிலை இருப்பதாலும் நம் ஆய்வாளர்கள் சிலருக்கு இக்கருத்துகளை அங்கீகரிப்பதில் மனத்தடை நிலவுகிறது.

தொ.ப அவர்களின் கருத்துகள் ஏற்கெனவே நிறுவப்பட்ட கருத்தாக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன; மறுக்கின்றன. புதிய திறப்புகளை உருவாக்குகின்றன. எனவே முற்றாக நிராகரிப்பதில் சனாதனிகளும் கல்வியாளர்களும் அறிஞர்களும்(?) ஒன்றுசேர்கிறார்கள். அவர் கூறிய அனைத்துமே கருதுகோள்கள். இவற்றை தமிழ் ஆய்வாளர்கள் கையிலெடுத்து ஆய்வுகள் மூலம் நிரூபிக்கவோ சரிபார்க்கவோ வேண்டும். பலவேளைகளில் கருதுகோள்கள் நாம் நினைப்பதற்கு முரணாக இருக்கவும் அல்லது ஒத்துப்போகவும் வாய்ப்புகள் உண்டு. அவரது கருத்துகள் அனைத்துமே ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவையே அன்றி முற்றாக மறுக்கப்பட வேண்டியவை அல்ல. அவர் ஆசிரிய மாணக்க உறவைப் பேணியவர், அறிவைத் தடையின்றி பகிர்வதில் ஆர்வம் காட்டியவர். ஒட்டுமொத்தமாக மனித வாசிப்பைப் பரவலாக்க வேண்டும் என எண்ணியவர். தற்போதைய நெருக்கடியான சூழலும் ஒருமை நோக்கி நகரக்கூடிய பன்னாட்டு நிறுவனமயமாக்கலும் தொ.ப. அவர்களை தன்னெழுச்சியாக ஒரு திராவிட அடையாளமாக உருவாக்கி உள்ளது.

அவருடனான என்னுடைய சந்திப்புகள் ஒவ்வொன்றும், அறிவுத்தளத்தில் குறிப்பாக அறிவியல், கலை, இலக்கியம், வட்டெழுத்து, தொல்லியல், பக்தி இலக்கியம் என பல்வேறு துறை சார்ந்து நுணுக்கமான செய்திகளைப் பெற்றுக்கொள்வதாகவே இருந்துள்ளது. குறிப்பாக பாசுபத சைவமே கல்விக்கடவுளாக வாமதேவியாகக் கொண்டுவந்தது, சொக்கநாச்சியார் அம்மன் கோவிலில் கொற்றவையே மூலதெய்வம், திருநெல்வேலி மாவட்ட மானூர் உக்கிரன்கோட்டையைக் கட்டிய பராந்தக வீரநாராயணன் தான் பாளையங்கோட்டை கட்டியவர், பிரமாண்டமும் துல்லியமும் ஏகாதிபத்தியத்தின் பண்புகள், சேக்கிழார் தஞ்சைப் பெரியகோவிலைப் பற்றி குறிப்பிடாததற்குக் காரணம் அது பாசுபத சைவக் கோவில் என்பதால்தான்.. என்பதுபோன்ற பல தகவல்களைக் கொட்டிக்கொண்டே இருப்பார். ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த நதி இப்போது நின்றுவிட்டது. அதன் நினைவுச்சாரலில் நனைந்துகொண்டிருக்கிறோம்!

பிப்ரவரி, 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com