நியூட்ரினோபுரத்துக்கு
ஒரு பயணம்

நியூட்ரினோபுரத்துக்கு ஒரு பயணம்

சமீபகாலமாக இந்தியா முழுவதும் பிரபலமாகி வரும்  ஒரு கிராமம், தேவாரம் பொட்டிப்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட புதுக்கோட்டை கிராமம். தமிழகத்தின் தெற்குப்பகுதியில் - கேரள எல்லையை ஒட்டிய கிராமம். நியூட்ரினோ திட்டம் தொடங்கி உள்ள இடம். போடி பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே ‘பொட்டிபுரத்தைப் போர்க்களமாக்குவோம்’ என்ற சிகப்பு வாசகங்கள் சுவரெழுத்துக்களாய் நம்மை வரவேற்றன.

“முல்லைப்பெரியாறு அணை இடிப்பு விவகாரத்திலிருந்து இப்பகுதிமக்கள் மண்சார்ந்த பிரச்சனைக்கு ஆதரவு காட்டுவதோடு நில்லாமல் களத்தில் வந்து நின்று போராடவும் ஆரம்பிச்சிட் டாங்க சார்!” என்றபடி நம்மை வரவேற்றார், கேபிள் டி.வி. ஒளிபரப்பாளர் நண்பர் சுரேஷ்குமார். பேருந்தைவிட்டு கீழிறங்கியதுமே தேனீர் அருந்தக்கூட இடந்தராமல் தனது இருசக்கர வாகனத்தைக் கொணர்ந்து நம்மை அதில் ஏற்றிக்கொண்டார். பிரதான வழியில் செல்லாமல் காட்டுப்பாதையில் - கிராமங்களுக்கூடாக பயணத்தை அமைத்தார் நண்பர். “இதெல்லாம் யாருமே சீண்டாத ஏரியாவா கெடந்தது சார். இப்ப பாருங்க எந்தநேரமும் ஜீப்பும், காரும், பைக்குமா போய் வந்தமானைக்கிதே இருக்கு”

“அப்படின்னா ஆய்வுக்கூடம் அமஞ்சிட்டா நெரிசலான ஏரியாவா மாறிடுமோ . .” என்றவாறு பார்வையை பக்கவாட்டில் செலுத்தினோம். பூமிக்கு கரை கட்டியது போல மேற்குத்தொடர்ச்சிமலை பிரும்மாண்டமாக நிற்கிறது. சாலையில் இருமருங்கும் காடுகள் உழுது பயிரிட்டுள்ளது தெரிந்தது. அனேக நிலங்களில் ஆமணக்கு பயிர்தான் ஆள் உயரத்திற்கு வளர்ந்து கிடந்தன. சில இடங்களில் மட்டும் துவரையும், ஓரிரு நிலத்தில் பருத்தியும் கண்ணுக்குத் தெரிந்தது.

ஆமணக்குச் செடிகளுக்கு நீர்பாய்ச்சிக்கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழிகேட்பதுபோல பேச்சுக் கொடுத்தோம். ”என்னாச்சு ஒங்க ஊரு ? இம்புட்டு கம்முன்னு கெடக்கு ? ”

“அதேம் பாக்குறீகள்ல. இப்பதக்கி எந்த அசங் களையுங் காணாம். ஆறப்போட்ருக்காக போல, எப்பவந்து வழிமறிக்கப் போறாங்கன்னு தெரியல” என்றார்.

“நீங்க என்னா நெனைக்கிறீங்க ?”

“நாங்க என்னா செயப்போறம் ? படிச்சவகளே தும்பவிட்டு வாலப்பிடிக்கிற கதையா இன்னிக்கிவந்து வீட்டுக்கு ஒராள் அனுப்புங்கன்னு கூப்புடுறாக. ஆரம்பிக்கிறப்ப அசால்ட்டா இருந்துட்டாக”.

ஆனால் தேவாரத்தில் வசிக்கும் வைகை பதிப்பகம் வைத்து நடத்தும் எழுத்தாளர் மு.தனராசு அப்பெண்ணின் பேச்சை மறுத்தார். இத்திட்டம் துவங்கிய காலத்திலிருந்தே அதனை எதிர்த்து நடத்திய போராட்டங்களை ஆதாரத்துடன் நம்மிடம் காண்பித்தார். நியூட்ரினோவுக்கான இடம் தேர்வு செய்தவுடனே ‘சுருளியாறு விவசாயிகள் சங்கம்’ அதனை எதிர்த்து நின்றதும், அதைத் தொடர்ந்து ’தேவாரம் விவசாயிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சங்கம்’ துவக்கப்பட்டதும், அதுமட்டுமல்லாது முப்பதுவகையான அமைப்புக்கள் இப்பிரச்சனையில் ஈடுபட்டு சுவரொட்டியாகவும், துண்டு அறிக்கைகள் மூலமாகவும், உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பாட்டம் என போராட்டங்களின் வாயிலாகவும் நடத்திய எதிர்ப்பியக்கத்தை கோப்பாக்கி வைத்திருந்தார். “அன்னையிலிருந்து இன்னைவரைக்கும் கடுமையான எதிர்ப்ப காட்டிக்கிட்டுத்தான் வரோம்.”

பொட்டிப்புரம் சென்றதும் ஊரின் முகப்பிலிருந்த ஒருகோயிலின் படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்களிடம் அம்பரப்பர் கோவில் பற்றி விசாரித்தோம்.

“சாமி கும்பிடப்போனப்ப மறிச்சாகளாமே . .? தள்ளுமுள்ளு ஆனதா பேப்பர்ல படிச்சோம். “

“தள்ளுமுள்ளு நடக்கல. மறிச்சாக. ஆனா அது எதோ கச்சிக்கூட்டம்னு நெனச்சி தடுத்ததா சொன்னாக. ஊர்க்காரவுகன்னதும் உட்டுட்டாக. ஆரா இருந்தாலும் ஒரு கோயிலுக்குப் போறத மறிக்கக்குடாதுல்ல சார். “

அவர்களிடம் அந்தக்கோயிலுக்கு வழிகேட்டோம்.

“போற வழிலதான். ஒத்த ஆலமரம் நிக்கிம். குடுச போல மேக்கூரை தெரியும்”

பாதை ஓடைப்பகுதியாக இருந்தது. கார் போகலாம். லாரிகூட போக வாய்ப்புண்டு. இருபுறமும் அடர்த்தியான சீமைக்கருவேல மரங்கள். காடு. போகிறபாதையிலேயே உயர்ந்து நின்ற ஒரு பனைமரத்துக்கு மாலை போட்டு சாமியாக்கியிருந்தனர் மரத்தைச் சுற்றி ஹாலோபிளாக் கற்கள் கொண்டு சுற்றுச் சுவரெழுப்பி கோவிலாகி இருந்தது. “ பனமரத்துக் கருப்பு.”

கருவேலங்காட்டைக் கடந்ததும் இதுவரையிலும் எண்ணிப் பார்க்காத அளவிலான பெரிய சாலை ஒன்று அங்கே அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அறுபதடி அகலமிருக்கலாம். அதனைக்கண்டதும் மிரண்டுபோன நண்பர், “போனமுறை நான் வந்தபோது இந்தரோடு இல்லியேசார். ரெண்டு மாசத் துக்குள்ளதான் போட்டிருக்கணும்” என்றவர்,  “இதோட நீட்சி ஊருக்குள்ள போனா எப்பிடிசார் இருக்கும்.? கருவக்காடு, பனமரக்கோயிலு, ஊருக்குள்ள எத்தன வீடு  அழியும் .! ” என அவர் பதறியபோது தேவையில்லாமல் எனக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டம் வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது.

நியுட்ரினோ ஆய்வுக்கூடத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்துக்குச் செல்லும் அந்த அகலச்சாலை வலதுபுறமாய்த் திரும்புகிற இடத்தின் இடதுபக்கமாய் அம்பரப்பர் கோயிலைக் கண்டோம்.

முழுக்க வெட்டவெளியில் அமைந்திருந்தது. நாட்டார் தெய்வங்களின் அமைப்புதான். நன்கு உயர்ந்து வளர்ந்த ஆலமரம். அதன் அடிப்பகுதியில் மரத்தின் பட்டையை ஆபரேசன் செய்து ஒதுக்கிவிட்டது போல மரத்தின் தண்டுப்பகுதி தெரிகிற வண்ணம் இயற்கையாய் அமைந்த மடிப்பு நான்கடி உயரத்துக்கு இருந்தது.  கூம்புவடிவத்தில் ஆறேழு சிறுகற்கள் மண்ணில் ஊன்றப்பட்டிருந்தன. ஒவ்வொன்றுக்கும் சந்தன குங்கும தீற்றல்கள். தெற்கே சற்றுத்தள்ளி உருட்டு மூங்கிலால் அமைக்கப்பட்ட குடிசை. அதனுள்ளும் கூம்பு வடிவ தெய்வங்கள்.(!)

பக்கவாட்டிலும் முன்புறமுமாக இன்னும் நாலைந்து மரங்கள். அவைகளின் நிழலடியில்தான் பொங்கல் வைத்ததற்கான அடையாளமாய் கல் அடுப்புக்கள் கரிபிடித்துக்கிடந்தன.

“அம்பரப்பர்ங்கறது ஐம்பது கிராம மக்களின் தெய்வம்ங்கறதுக்கான அர்த்தம். தேனிக்கு அந்தப்பக்கமா பாலக்கோம்பை, ஆண்டிபட்டிலருந்து இந்த சுத்து வட்டாரம் வரையிலும் உள்ள மக்கள் வழிபடுற ஒரு நடுகல் சாமி. நாயக்கர், கவுண்டர்னு அத்தனசாதியும் கும்பிடுவாங்க. இதோட இன்னொரு கோயில் நியூட்ரினோ பாறைக்குப் பக்கத்தில இருக்கு. ‘மதிகெட்டான் கானல்’ன்னு அதச்சொல்வாங்க.. உள்ள நுழஞ்சா பாதை மறந்து போகுமாம். அத்தனை அடர்த்தியான மரங்கள் நிறைஞ்ச கானல் (காடு). ” என எழுத்தாளர் மு.தனராசு விளக்கினார்.

“இவெம்பாட்டுக்கு இப்ப ஆடுமேய்க்கப் போகாதங்கறவெ, நாளைக்கி மதிகெட்டாங் கானல மறிக்கமாட்டான்னு என்னா நிச்சியம்? “ 

“முன்னமாதரியே இப்பவும் கும்பிடு நடக்குதா ?”

“எப்பவும் அப்பிடித்தான்”. 

“இவர்தான் ஊரின் முக்கியபுள்ளியோட மகன்” என ஒரு இளைஞரை அறிமுகம் செய்வித்தார் சுரேஷ். (பெயரெல்லாம் வேணாமே) “ ஊர்லயே மொதல்ல இவர்தான் கலெக்டர்கிட்டப் போய் இது தேவையில்லன்னு பேசிருக்கார். அதனால இவர் இப்பவும் உளவுத்துறை கண்காணிப்பில இருக்கார்” மிரட்சியுடன்தான்  அவர் நம்பக்கம் வந்து அமர்ந்தார்.

 சற்றுப்பேசிய பின்னர் நியூட்ரினோ திட்டத்துக்கு நீதிமன்ற இடைக்காலத் தடையாணை பற்றிப் பேச்சுவந்தது.

“நாங்க விட்டாலும் கும்பிடுற சாமி விடாதுங்க. .  ந்தா இப்ப ஆச்சா!”  ஒரு விடுதலை அடைந்த உணர்வும் ஒரு சந்தேகத்தின் நிழலும் அவர்களிடம் பதிவாகி உள்ளதை உணரமுடிந்தது.

நாம் கண்ணில் கண்ட காட்சிகள் அதாவது பணிகள் :

1.பாறையைச் சுற்றிலும் பன்னிரண்டு கி.மீ. சுற்றளவில் இரும்புவேலி அமைக்கப்பட்டு  இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

2.முதற்கட்ட தண்ணீர்ச் செலவுகளுக்காக முல்லையாற்றிலிருந்து குழாய் பதிக்கப்பட்டுள்ளது.  தண்ணீர்தொட்டி ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. (மூன்று ஆள்மட்டம் உயரம்)

3.பாறையை ஒட்டிய ஓடையில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது.

4.கனரகவாகனங்கள் வருமளவு அகலமான சாலைபோடும் பணி ஆரம்பமாகியுள்ளது.

மே, 2015.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com